கர்நாடகா: தொங்கு சட்டசபை? 

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (மே 10) மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்திய பல்வேறு தனியார் அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் அவற்றின் முடிவுகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றன. அதன் விவரம்:

இந்த கருத்துக் கணிப்புகளை இந்தியா டுடே தொலைக்காட்சி, ரிப்பப்ளிக் தொலைக்காட்சி, டிவி9, ஜீ நியூஸ், ஏபிபி நியூஸ் உள்ளிட்ட ஊடகங்கள் தனியார் ஆய்வு அமைப்புகளுடன் சேர்ந்து நடத்தியுள்ளன.

கர்நாடகா தேர்தல் 2023

ரிபப்ளிக் டிவி – பி மார்க்

ரிபப்ளிக் டிவி – பி மார்க் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி 85 முதல் 100 இடங்களை வெல்லலாம் என்றும் காங்கிரஸ் கூட்டணி 94 முதல் 108 இடங்கள் வரையிலும் வெல்லலாம் என்றும் மதசார்பற்ற ஜனதா தளம் 24 முதல் 32 இடங்கள் வரையிலும் வெல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 2 முதல் 6 இடங்கள் வரை வெல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

டிவி9 பாரத்வர்ஷ் – போல்ஸ்ட்ராட்

டிவி9 பாரத்வர்ஷ் – போல்ஸ்ட்ராட் உடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், பாரதிய ஜனதா கட்சி 88 முதல் 98 இடங்கள் வரையிலும் காங்கிரஸ் கூட்டணி 99 முதல் 109 இடங்கள் வரையிலும் வெல்லலாம் என்றும் மதசார்பற்ற ஜனதா தளம் 21 முதல் 26 இடங்கள் வரையிலும் வெல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 0-4 இடங்கள் வரை வெல்லாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா தேர்தல் 2023

ஜீ நியூஸ் – மேட்ரிஸ் ஏஜென்சி

ஜீ நியூஸ் – மேட்ரிஸ் ஏஜென்சியுடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி 79 – 94 இடங்கள் வரையிலும் காங்கிரஸ் 103 முதல் 118 இடங்கள் வரையிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 25-33 இடங்கள் வரையிலும் வெல்லலாம். பிற கட்சிகள் 2-5 இடங்களை பெறலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் நடத்திய கருத்துக் கணிப்புகளின்படி பார்த்தால், கர்நாடகாவில் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பலத்தை நெருங்கும் அளவிலான இடங்களை பெறக்கூடும் என்று தெரிகிறது.

ஆனால், ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் ஏறத்தாழ அதே அளவிலான இடங்களைப் பெறலாம் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறுவதால், மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவைப் பெறும் கட்சிகளே பெரும்பான்மை பலத்தைப் பெறலாம் என்கிறது இந்த கருத்துக் கணிப்புகள்.

இந்த மாநிலத்தில் தொங்கு சட்டசபைக்கான சூழல் ஏற்படுமானால், மதசார்பற்ற ஜனதா தளம், பிற பெரிய கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம் அல்லது அந்த கட்சி தெரிவிக்கும் ஆதரவைப் பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும்.

கர்நாடகா தேர்தலில் மேலும் சில ஊடகங்களும் அவற்றின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

ஸ்வர்ணா நியூஸ் – ஜன் கி பாத்

கர்நாடகா தேர்தல் 2023

ஸ்வர்ணா நியூஸ் – ஜன் கி பாத் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி 94 முதல் 117 இடங்கள் வரையிலும் காங்கிரஸ் கூட்டணி 91 முதல் 106 இடங்கள் வரையிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 14 முதல் 24 இடங்கள் வரையிலும் பெறலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 0-2 இடங்கள் வரை பெறக்கூடம் என்றும் கூறுகிறது இந்த நிறுவனங்களின் கணிப்பு.

நியூஸ் நேஷன் – சிஜிஎஸ்

நியூஸ் நேஷன் – சிஜிஎஸ் கருத்துக் கணிப்பின்படி, பாரதிய ஜனதா கட்சிக்கு 114 இடங்கள் வரை கிடைக்கலாம். காங்கிரஸுக்கு 86, மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 21, பிற கட்சிகளுக்கு 3 இடங்கள் வரை கிடைக்கலாம்.

ஏபிபி நியூஸ் – சி வோட்டர்

ஏபிபி நியூஸ் – சி வோட்டர் கருத்துக் கணிப்பின்படி பாரதிய ஜனதா கட்சிக்கு 83 – 95 இடங்கள் வரையும் காங்கிரஸ் கூட்டணிக்கு 100 – 112 இடங்கள் வரையும் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 21 – 29 இடங்கள் வரையிலும் பிற கட்சிகளுக்கு 2 – 6 இடங்கள் வரையிலும் கிடைக்கலாம்.

டைம்ஸ் நவ் – இடிஜி

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி – இடிஜி இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதா கட்சிக்கு 85, காங்கிரஸுக்கு 113, மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 23, பிற கட்சிகளுக்கு 3 இடங்கல் வரை கிடைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநில சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கான தேர்தல் மே 10ஆம் தேதி நடந்தது. இங்கு ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை.

இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி உளிட்ட சில கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன.

இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே தேர்தல் முடிவு அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்.

Previous Story

மே தினம் சொல்லும் செய்திகள்

Next Story

சில மணி நேரத்தில் தீர்வு!