கரோனா:ஒரே வாரத்தில் 15 ஆயிரம்  மரணங்கள்

கரோனாவுடன் வாழப்பழகிக் கொள்வதன் உண்மையான அர்த்தம் என்னவென்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ்.

கரோனா தொற்று பரவி மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கரோனாவுடன் வாழ வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். கரோனாவுடன் வாழும்போது நாம் இதுவரை கடைபிடித்துவந்த முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், கூட்டஙக்ளை தவிர்த்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியனவற்றை கைவிடக் கூடாது. இவை நமக்கான பாதுகாப்பு மட்டுமல்ல நம்மைச் சுற்றியவர்களுக்கான பாராட்டும்கூட என்று கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். நம்மிடம் கரோனா தடுப்பு முறைகள் இத்தனை இருந்தும் 15 ஆயிரம் உயிரிழப்பு என்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள இயலாதது. கடந்த 4 வாரங்களில் இறப்புவிகிதம் 35% அதிகரித்துள்ளது.

நாம் எல்லோரும் கரோனா வைரஸ் பரவலால் அயர்ந்துவிட்டோம். பெருந்தொற்று காலம் நீண்டு கொண்டே செல்வதால் சோர்வடைந்துள்ளோம். வைரஸ் சோர்வடையவில்லை. அதனால், நாம் தடுப்பு நடவடிக்கைகளைக் கைவிடக் கூடாது.

நாம் தப்பிப்பிழைக்க வழியில்லாமல் இல்லை. தயவு செய்து நீங்கள் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் உடனே தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இரண்டு தவணை செலுத்திவிட்டிருந்தால் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். முகக்கவசம் அணியுங்கள். சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள். ஒவ்வொரு வாரமும் 15 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்றால் நாம் வைரஸோடு வாழ்வதாகாது என்று அவர் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் இதுவரை 59 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 64 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டு 9.3 கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது அடுத்தபடியாக இந்தியாவில் தான் 4.4 கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது. உலகம் முழுவதும் தடுப்பூசி பயன்பாடு சென்றடைய வேண்டும். அப்போதுதான் புதிய வகை வைரஸ் உருமாற்றங்களைத் தடுக்க முடியும் என்றார்.

Previous Story

 கூட்டு பாலியல் வல்லுறவு கைதிகள் விடுவிக்கப்பட்டனர்!

Next Story

10 குழந்தைகள் பெற்றால் ரூ.59.5 லட்சம் பரிசு