கரு ஜனாதிபதி  டலஸ் பிரதமர்!

-நஜீப் பின் கபூர்-

 தலைவர்கள் பதுங்கு குழிகளில் குடிகள் படுகுழியில்

இப்படி இன்னும் எவ்வளவு காலம்தான் நாடு நகரும்

இன்று நாட்டு மக்களிடம் பல கேள்விகள் காணப்படுகின்றன. அடுத்து நடக்கப் போவது என்ன? ராஜபக்ஸாக்கள் ஓடி விடுவார்களா? அப்படியானால் யார் அதிகாரத்துக்கு வருவார்கள் என்ற அரசியலுடன் தொடர்புடைய கேள்விகளும் அடுத்தது  வரலாறு காணாத இந்த பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து நாம் எப்போது மீளப் போகின்றோம்.

அதற்கு இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும் அது வரைக்கும் எமது பிள்ளை குட்டிகளை எப்படி வாழ வைப்பது? எமது அடிப்படைத் தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்வது என்பதாகத்தான் இருக்கின்றது மக்களது எதிர்பார்ப்புக்கள். அரசியலில் நிரந்திர நண்பனுமில்லை நிரந்த பகைவனும் இல்லை என்பது போல எந்த நிமிடம் வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம்.

இந்த ராஜபக்ஸாக்களை மக்கள் இவ்வளவு கீழ்தரமாக சந்தியில் நின்று ஏசுகின்ற ஒரு காலம் வருமா என்று இந்த நாட்டில் எவராவது சிந்தித்திருந்தார்களா.? ராஜபக்ஸாக்கள் என்னதான் அட்டகாசங்களைப் பண்ணிக் கொண்டிருந்தாலும் அவர்களுடன் ஒட்டி உறவாடி அரசியல் செய்து பிழைக்கத்தான் அனேகமானவர்கள் துடித்துக் கொண்டிருந்தார்கள். அதனால்தான் பலர் பல்டி அடித்திருந்தார்கள். சில சிறுபான்மை தலைவர்கள் ராஜபக்ஸாக்களுடன் இரகசிய உடனபடுகளை செய்து கொண்டிருந்தார்கள் என்ற தகவல்கள் தற்போது பகிரங்கமாகி இருக்கின்றது.

இந்த நாட்டில் ராஜபக்ஸாக்களின் தேவைகளுக்காக இனங்களிடையே ஏற்படுத்தப்பட்ட பிளவுகள் இந்த வேகத்தில் கலைந்து போகும் என்று எவராவது நம்பி இருப்பார்களா.? இன்று அனைத்து இனங்களும் ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் போல் ஓரணியில். ஒரு கல்லில் குழையோடு மாங்காய் விழுந்தது போல ராஜபக்ஸாக்களின் குடும்பமே அரசியலில் இருந்து வெளியே போ, துரோகி, அத்துடன் கொள்ளையடித்த எங்கள் பணத்தையும் தந்து விட்டுத்தான் போக வேண்டும் என்று  நாட்டில் கோஷங்கள்.

இந்த நாட்டில் இனவாதத்தை பேசி சிறுபான்மை சமூகங்களை அச்சுறுத்திப்-பயமுறுத்திக் கொண்டிருந்த அந்தக் காவிகளும் ராஜபக்ஸாக்களுடன் கூடவே  தலைமறைவு நிலை. அதில் சிலர் மக்கள் போராட்டங்களில் நுழைந்து கொள்ள ஆர்வமாக இருந்தாலும் அவர்களை இணைத்துக் கொள்ள இளசுகள் தயாராக இல்லை. ஒருதாய் பெற்ற பிள்ளைகள் போல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த எம்மை பிளவு படுத்திய துரோகிகளே தள்ளி நில்லு கிட்ட வரதே என்று என்று அவர்கள் ஊர் பேர்வாரியாக விரட்டியடிக்கப் பட்டிருகின்றார்கள்.

இந்த நாட்டில் பெரும் இனவாத ஊடகங்களாக கடந்த காலங்களில் வேலை பார்த்த சில நிறுவனங்களை போராட்டகாரர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்த்து விட்டிருக்கின்றார்கள். இப்போது அவர்கள் அரச எதிர்பாளர்களின் செய்திகளையும் ஆர்வத்துடன் வெளியிட்டு ஏதோ தாம் நடு நிலையாக நடந்து கௌ;ள முனைகின்றோம் என்று தமது கெட்டுப் போன இமேஜை மீளவும் கட்டி எழுப்பப் பார்க்கின்றார்கள். ஆனாலும் ராஜபக்ஸாக்களினால் நல்ல வருமானங்களை கடந்த காலங்களில் ஈட்டிக் கொண்டதால் அவர்கள் ராஜபக்ஸாக்களை விட்டு முற்றாக வெளியேயும் வர முடியாத ஒரு நிலையும் இருக்கின்றது.

அரசுக்கு ஆதரவாக செயலாற்றிக் கொண்டிருந்த பாதுகாப்பு மற்றும் நீதித்துறையினர் நிலமையை புரிந்து கொண்டு இதன் பின்னர் ராஜபக்ஸாக்களை காப்பாற்றப் போய் தான் கம்பி எண்ண வேண்டி வரும் என்ற அச்சத்தில் கடமைகளைச் செய்வது போல் தெரிகின்றது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஆளும் தரப்பில் இருந்த மொட்டுக் கட்சியினரே ராஜபக்ஸாக்களுக்கு ஆப்பு வைக்கும் சம்பவங்களை நாம் தற்போது பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அரசியல் ரீதியில் ராஜபக்ஸாக்கள் இதன் பின்னரும் எவ்வளவு நாட்களுக்கு மணித்தியாலங்களுக்கு அதிகாரத்தில் இருக்கலாம் என்பது சந்தேகம். ராஜபக்ஸ குடும்பம் மட்டுமல்ல அவர்களுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருப்போரும் பொது அரங்கிலிருந்து இன்று தலைறைவு நிலை.

மற்றுமொரு விதத்தில் இதனைப் பார்ப்பதாக இருந்தால்  ஏற்கெனவே மக்கள் ராஜபக்ஸாக்களை வீட்டுக் காவலில் வைத்து விட்டார்கள். இப்போது அவர்களுடைய எந்த ஒரு கட்டளையும் நாட்டில் அமுலாவதில்லை என்பதுதான் யதார்த்தம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதிதாக நியமானம் பெற்ற அமைச்சரவை மக்களுக்கு சலுகைகள் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடியதாக செய்திகள் வந்தன.

அடுத்த நாளே சமயல் எரிவாயுவின் விலை ஒரு மடங்கு அதாவது 2500 ரூபாவில் இருந்து 5200 ரூபா என்று கூடியது. சிமேந்து மேலும் 500 அதிகரிப்பு. பார்த்தீர்களா மக்களுக்கு கிடைத்த சலுகையை இது போல ஏனைய பொருட்களின் விலையேற்றங்களை நாம் இங்கு பட்டியிலிட வேண்டியதில்லை. அதனை நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு பிரசையும் கண்ணீருடன் அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இந்த அரசியல் பொருளாதார நெருக்கடிகளை நாம் நெடுங்காலமாக தொடர் கதைகள் போல் சொல்லி வந்திருக்கின்றோம். அது நமது வாசகர்களுக்கும் தெரியும். இந்த வாரம் நாம் இதன் அடுத்த கட்டம் என்னவாக இருக்க முடியும் என்பது பற்றிப் பேசலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.

மக்களிடத்தில் இது பற்றி மிகுந்த எதிர்பார்ப்புக்கள் பரவலாக இருக்கின்றது என்பதும் நமக்கு உணர முடிகின்றது. ஆனால் இந்த விளக்கங்களைச் சொல்வதற்கு முன்னர் நமது வாசகர்களுக்கு சில ஆலோசனைகளையும் எத்திவைக்க வேண்டும் போல் தோன்றுகின்றது.

காரணம், எந்த அடிப்படையும் இல்லாது சில ஊடகங்கள் குறிப்பாக சமூக ஊடகங்கள் மக்களைப் பெய்யான செய்திகளைச் சொல்லி பிழையாக வழி நடாத்துகின்றன. அந்த செய்திகளை நீங்கள் உள்ளீர்த்துக் கொள்ளும் முன்னர் அதன் நம்பக்தன்மை பற்றி பல முறை யோசித்துப் பார்க்க வேண்டும்.

இப்படியான ஒரு சில செய்திகளை உதாரணத்துக்காக நாம் இங்கு சுட்டிக் காட்டுகின்றோம். ரணில் பிரதமராகப் போகின்றார் என்ற செய்தி. இது முற்றிலும் அவரே ஆள் வைத்து செய்து கொண்ட பரப்புரை. இதனை நாம் முன்பும் சொல்லி இருகின்றோம். தற்போது  சிலர் இடைக்கால அரசுக்கு சஜித் பிரதமர் என்று கதை அளக்கின்றார்கள் அதுவும் எந்த அடிப்படையும் இல்லாத ஒரு செய்தி.

இதே போன்று ஆளும் தரப்பினர் இந்த வாரம் பொருளாதார நெருக்கடி தீருகின்றது. அடுத்த வாரம் தீருகின்றது என்று வரும் அனைத்துக் கதைகளும் போலியானது உண்மைக்குப் புறம்பானது. நமக்குத் தெரிந்த  கணக்குப்படி இந்த பொருளாதார நெருக்கடி தீர குறைந்தது இன்னும் மூன்று வருடங்களாவது செல்லும்.

ஐஎம்எப் என்ற விடயத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அவர்களும் நீங்கள் ஏற்கெனவே பெற்றிருக்கின்ற கடன்களை திருப்பி ஒப்படைக்க எப்படி நிகழ்ச்சி நிரல்களைத் தயாரித்திருக்கின்றீர்கள்? அத்துடன் நாம் தருவதாக இருந்தால் அந்தப் பணம் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் உங்களது ஏற்பாடுகள் என்ன என்ற கேள்விகளை எழுப்புகின்றனர்

இதற்குப் பின்னர்தான் அது பற்றிய நிகழ்ச்சி நிரலை நாங்கள் திட்டமிட இருக்கின்றோம் என்பதுதான் நமது நிதி அமைச்சர் சப்ரியின் பதிலாக இருந்தது. இதிலிருந்து அந்தக் கடனை பொறுவதற்காக இலங்கை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள் எத்தனையோ இருக்கிறது என்பது புரிந்து கொள்ளக் கூடியதே, எனவேதான் நிதி அமைச்சர் துவக்கப் பேச்சுக்களை மட்டுமே அங்கு நடத்த முடிந்தது என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பில்லியன் கணக்கில் எமக்குத் தேவைகள் இருக்கின்ற போது உலக வங்கிய, ஆசிய வங்கி போன்றவை சில அத்தியவசிய குறிப்பாக மருந்துப் பொருட்களை கௌ;வனவு செய்ய சில நூறு மில்லியன்களைக் கொடுக்க முன்வந்திருக்கின்றது. இந்திய பிச்சைக்காரன் ஒருவன் எமது பஞ்சம் போக்க தனது பங்களிப்பை வழங்கி இருந்தார். அதே போன்று சீனத்து முன்பள்ளி சிறுவர்கள் நாம் உயிர்வாழ அவர்களால் முடிந்த பங்களிப்பை வழங்கி இருந்தனர். நமது வரலாற்றில் இப்படியான கதைகளை நாம் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கின்றோமா?

இந்தியா மற்றும் சீனா மேலும் நமக்கு சில கடன்களைத் தர இருக்கின்றன என்று அரசாங்கம் நம்பிக்கையுடன் கூறுகின்றது. அந்தக் கடன்களுக்குப் பின்னால் மிகப் பெரிய ஆபத்துக்கள் இருக்கின்றன என்பது தெரிந்ததே. மேலும் அப்படிக் கிடைக்கும் பணமோ பொருளோ யானைப் பசிக்கு சோளப் பொரி என்ற அளவில்தான் அமைய முடியும்.

முன்னாள் நிதி அமைச்சர் பீ.ஆர். இந்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தது தெரிந்ததே இன்று அந்த 2022 வரவு செலவுத் திட்டம் செல்லுபடியற்ற ஒரு குப்பை அறிக்கை என்ற நிலைக்கு போய் விட்டது. எனவே அதிலிருந்து எந்த நண்மைகளும் வரப்போவதில்லை.

இந்த இடத்தில் நாட்டு நிலையைத் தெளிவுபடுத்த நமது பொருளாதா வல்லுனர் பந்துல குணவர்தன சில தினங்களுக்கு முன்னர் சொல்லி இருந்த ஒரு கதையை இங்கு நினைவு படுத்தலாம் என்று தோன்றுகின்றது. கடந்த நாடாளுமன்ற அமர்வில் பேசும் போது சோமாலியாவில் ஒரு வாரத்துக்கு ஒரு முறைதான் சமயல் எரிவாயு விநியோகம் நடக்கின்றது.

நாங்கள் அதனை விட நல்ல நிலையில் தானே இருக்கின்றோம் என்பது அவர் கதை. சோமாலியாதான் இப்போது நமக்கு உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ள இருக்கும் ஒரே நாடு.  இதிலிருந்து தெரிகின்றது நமது அவலம். ஒட்டு மொத்தமாகப் பார்க்கின்ற போது நாட்டு மக்களின் அன்றட நிலமைகள் மிகவும் கொடூரமாகும் காட்சிகளைத்தான் எதிர் வரும் நாட்களில் நாம் பார்க்க-அனுபவிக்க இருக்கின்றோம்.

இனியும் நகர முடியாது

ராஜபக்ஸாக்கள் நாம் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் எங்களை எவரும் வெளியே போகும்படி கூறுவதற்கு உரிமை இல்லை என்று தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசினாலும் அவர்கள் இந்த மக்கள் எழுர்ச்சி கண்டு குழை நடுங்கி நிற்க்கின்றார்கள் என்பது மிகத் தெளிவு.

நான் ஒரு போதும் பதவி விழக மாட்டேன் என்று தம்முடன் எஞ்சி இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களுடனான சந்திப்பில் மஹிந்த பேசி இருந்தார். கடைசி வரை தன்னுடன் நிற்பவர்களைத் தைரியமாக இருக்கப் பண்ணுவதற்காக அவர் விட்ட டயல் அது. இந்தக் கட்டுரையைத் தயாரித்துக் கொண்டிருக்கின்ற நேரத்திலோ அல்லது சில நாட்கள் கழித்தோ பிரதமர் பதவியை விட்டு ஓடித்தான் ஆகவேண்டும் என்பது எமது கணிப்பு.

பிரதமர் எம்.ஆர். பதவியை இராஜினாமாச் செய்தோ அல்லது தன்மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவுகின்ற போதோ இது நடக்க இடமிருக்கின்றது. அதன் பின்னர் என்ன நடக்க முடியும் என்பது மக்களிடத்தில் இருக்கும் அடுத்த கேள்வி. அரசியல் யாப்புப்படி புதிய ஒருவரை பிரதமராக நியமித்துக் கொள்ள இடமிருக்கின்றது.

குறிப்பிட்ட தினம் நாடாளுமன்றில் இருக்கின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த தெரிவை செய்து கொள்ள முடியும். புதிய பிரதமர் அல்லது எல்லோரும் ஒண்றிணைந்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை நிருவ முடியும். இந்த இடைக்கால அரசு தொடர்பில் நமக்கு நம்பகத் தன்மை அல்லது தெளிவில்லாத ஒரு நிலைதான் இருக்கின்றது. அதற்காக காரணங்களை நாம் கட்டுரையின் முடிவில் சுருக்கமாக இங்கு பதிய இருக்கின்றோம்.

அப்படியானால் ஜனாதிபதி ஜீ.ஆர்.தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பாரா? இருக்க முடியுமா? இருக்க முடியாது என்பதுதான் எமது கருத்து. நாடாளுமன்றதின் பெரும்பான்மை அடிப்படையில் வேண்டுமானால் பிரதமரை ஜனாதிபதியாக நியமித்துக் கொள்ளவும் இடமிருக்கின்றது. அப்போது மீண்டும் புதிய ஒருவர் பிரதமராக நியமனம் செய்த கொள்ள வேண்டி வரும்.

அப்போது தற்போதய ஜனாதிபதி எங்கு போவார். அவர் தனது மகனுடன் அமெரிக்க போய் சேர்வதற்கு போராட்டக்காரர்கள் இடம் கொடுப்பார்களா அல்லது வேறு எங்காவது அவர் போய் நிற்க வேண்டி வருமா பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். எப்படியும் ராஜபக்ஸாக்களுக்கு நெருக்கடியான ஒரு நிலைதான் இன்று நாட்டில் தெளிவாகத் தெரிகின்றது.

இடைக்கால அரசு தொடர்ப்பில் நமக்கு நம்பகத் தன்மையில்லை என்று முன்பு சொல்லி இருந்தோம் அதற்கான எமது வாதங்கள்.! ஆளும் தரப்பு வட்டாரங்களின் படி இன்று ராஜாபக்ஸாக்களுக்கு விசுவாசமாக இருக்கின்ற புதிய அமைச்சர்கள் இராஜங்க அமைச்சர்கள் உறுப்பினர்கள்கள் என மொத்தம் 60 பேர் வரையில் தான் சமைகின்றது.

சஜித் தரப்பு, ஆளும் தரப்பில் இருந்து தற்போது மஹிந்தாவை எதிர்க்கின்ற 40 பேர் வரையில் இருக்கின்றனர். இந்தத் தொகை மேலும் 20 பேர்வரை அதிகரித்திருக்கின்றது. கூட்டணி, இருபதற்குக் கைதூக்கி மீண்டும் பல்டியத்திருக்கின்ற நாலு பேர்வரை மஹிந்தாவுக்கு-ராஜபக்ஸாக்களுக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்பு என்றும் தெரிகின்றது. காசுக்காக விலைப்பட்டவர்களையும் அவர்களது தலைவர்களையும் கடைசி வரை நம்ப முடியாது.!

அரசுக்கு எதிரானவர்கள் பல்வேறு  குழுக்களைச் சேர்ந்தவர்கள். இடக்கால அரசு பற்றி பேசுகின்ற அதே நேரம்  சஜித் எம்பிலிபிட்டியவில் சில தினங்களுக்கு முன்னர் போய் பேசுகின்ற போது இந்த இடைக்கால அரசியல் இணைவதற்கு எங்களுக்கு என்ன மூளைக் கோலாறு இருக்கின்றதா என்று கேட்டிருந்தார்.

அதே போன்று ஜேவிபி.யும் இந்த இடைக்கால அரசில் இணைந்து கொள்ளும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. எனவே இந்த இடைக்கால அரசும் ஜனாதிபதி நியமிக்கின்ற புதிய அமைச்சரவை மாற்றம் போல் ஆயுல் கம்மியாக இருக்க இடமிருக்கின்றது. அதே நேரம் காசை வீசிப் பொரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிலை நாட்டிக் கொண்டாலும்.

இந்த அரசு இதற்கு மேல் நகர முடியாது. எனவேதான் அரச தலைவர்கள் பதுங்கு குழிகளிலும் குடிமக்கள் படுகுழிகளிலும் இன்னும் எத்தனை நாட்களுக்கு வாழமுடியும். புதிய பிரதமர் பற்றி தற்போது இரு சிபார்சுகள். முதலாமாவர் கரு ஜெயசூரிய அடுத்தவர் டலஸ் அலகப்பெரும. பின்னர் கரு ஜனாதிபதி டலஸ் பிரதமராகவும் வாய்ப்புக்கள் என நாம் நம்புகின்றோம்.

நன்றி: 01.05.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பதவி விலக தயார் - அருந்திக

Next Story

சர்வதேச அதிசயம் பாருங்கள்!