கரப்பான் பூச்சி வீட்டுக்குள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

-முருகேஷ் மாடக்கண்ணு-
கரப்பான் பூச்சி
கொசு, உண்ணி போன்ற பிற பூச்சிகளைப் போல் கரப்பான் பூச்சிகள் நோய்களைப் பரப்புவதில்லை. நமது ரத்தத்தைக் குடிப்பதோ, உடலிலுள்ள தோலைச் சாப்பிடுவதோ கிடையாது.

கரப்பான் பூச்சிகள். நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு அதனுடனான முதல் அனுபவம், மறக்க முடியாத, கிட்டத்தட்ட மோசமான அனுபவமாகவே இருந்திருக்கும்.

எனக்கும் அது மோசமாகவே இருந்தது. அப்போது எனக்கு 5 அல்லது 6 வயது இருக்கும். வீட்டின் சமையலறையில் இருந்த எதோவொரு பொருளை எடுத்தபோது, அதற்குப் பின்னால் ஒட்டிக்கொண்டிருந்த கரப்பான் பூச்சி பறந்துவந்து என் கழுத்தில் ஒட்டிக்கொண்டது.

பயந்து அலறியபடி கையில் இருந்த கண்ணாடி பாட்டிலை தவறவிட்டேன். அது கீழே விழுந்து உடைந்தது. அதற்கு முன்புகூட நான் கரப்பான் பூச்சியை பார்த்திருக்கக் கூடும். ஆனால், அதை நேருக்கு நேர் எதிர்கொண்டது அப்போதுதான்.

பிறகு கரப்பான் பூச்சி என்றாலே ஒருவித அருவெருப்பும் கூடவே தொற்றிக்கொண்டது.

வீட்டின் அருகில் இருக்கும் அண்ணன்கள் கரப்பான் பூச்சியை, அடன் மீசையைப் பிடித்து தூக்கி விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன்.

அதைப் பார்த்து சிறிது தைரியம் வந்து அதைக் கையில் எடுக்க முயன்றாலும், கரப்பான்களின் உருவ அமைப்பு, எதிர்பார்க்காத நேரத்தில் பறந்து வந்து நம் மேலே ஒட்டிக்கொள்வது போன்றவற்றால், கரப்பான் பூச்சிகள் மீதிருந்த அருவருப்பு உணர்வும் அச்சமும் நீங்கப் பல ஆண்டுகள் ஆனது.

கரப்பான் பூச்சி
கரப்பான் பூச்சி மீது பயம் அல்லது அருவருப்பு கொள்வதை கட்சரிடாபோபியா (katsaridaphobia) என்று அழைக்கின்றனர்

சொல்லப்போனால், கரப்பான் பூச்சிகளைப் பார்த்து மனிதர்கள் பயப்படுவதில் அர்த்தமே இல்லை என்று இப்போது தோன்றுகிறது.

கொசு, உண்ணி போன்ற பிற பூச்சிகளைப் போல் கரப்பான் பூச்சிகள் நோய்களைப் பரப்புவதில்லை. நமது ரத்தத்தைக் குடிப்பதோ, உடலிலுள்ள தோலைச் சாப்பிடுவதோ கிடையாது.

நம் ரத்தம் குடித்து நோய்களைப் பரப்பும் உலகின் ஆபத்தான உயிரினமாக இருக்கும் கொசுவை பார்த்துக்கூட நாம் இந்த அளவுக்கு அலறுவதில்லை.

ஆனால், கரப்பான் பூச்சியை பார்த்துவிட்டால் போதும், எங்கிருந்துதான் அத்தகைய பயமும் அருவருப்பும் வருகிறதோ?

கரப்பான் பூச்சி மீதான அருவருப்புக்கு என்ன காரணம்

பொதுவாக மிகவும் அசுத்தமான சூழ்நிலையில் தனது வாழ்வியலை அவை அமைத்துக் கொள்வது அவற்றின் மீது ஏற்படும் அருவருப்புக்கு ஒரு காரணம் என்று கூறுகிறார் ஆரண்யா சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் ஆய்வாளர் ப்ரோனொய் வைத்யா.

கரப்பான் பூச்சி

கரப்பான் பூச்சியின் மலம், தோல், உடல் பாகங்களில் காணப்படும் ஒரு புரதம் மனிதர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது

“கரப்பான் பூச்சிகள் பொதுவாக அசுத்தமான இடங்கள், குப்பைகள் நிறைந்த இடங்கள், கழிவறை போன்ற இடங்களில் அதிகமாக இருக்கின்றன. இதன் காரணமாகவே அதன் மீது ஓர் அருவருப்பு தோன்றிவிடுகிறது,” என்கிறார் அவர்.

கரப்பான் பூச்சிகள் நோயைப் பரப்புகின்றன என்ற அச்சம் பண்டைய கிரேக்க காலத்தில் இருந்தே உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

“பண்டைய கிரேக்கர்களின் காலத்தில் ஒரு நோய் பரவியது. கரப்பான் பூச்சிதான் இதற்குக் காரணம் என்ற அச்சம் அவர்களிடம் ஏற்பட்டது. கரப்பான் பூச்சிகள் உடலில் ட்ரோபோமயோசின் என்ற புரதம் உள்ளது.

கரப்பான் பூச்சியின் மலம், தோல், உடல் பாகங்களில் காணப்படும் இந்தப் புரதம் மனிதர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது,” என்கிறார் ப்ரோனொய் வைத்யா.

பண்டைய எகிப்தியர்கள் கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்காக செம்மறி ஆட்டின் தலையுடன் கூடிய ‘க்னும்’ என்னும் கடவுளை வணங்கி வந்துள்ளனர். பண்டைய ரோம் நகரைச் சேர்ந்த எழுத்தாளர் லினி தி எல்டர், கரப்பான் பூச்சியின் அருவருக்கும் தன்மை குறித்து எழுதியுள்ளார்.

கரப்பான் பூச்சி மீது பயம் அல்லது அருவருப்பு கொள்வதை கட்சரிடாபோபியா (katsaridaphobia) என்று அழைக்கின்றனர்.கரப்பான் பூச்சி

கரப்பான் பூச்சியில் 1300 வகைகள் உள்ளன

பெரிப்ளானெடா அமெரிக்கானா (Periplaneta americana) என்ற வகை கரப்பான் பூச்சிகளைத்தான் நாம் வீடுகளில் அதிகளவு பார்க்கிறோம் என்று கூறுகிறார் ப்ரோனோய் வைத்யா.

ஆனால், “கரப்பான் பூச்சியில் கிட்டத்தட்ட 1,300 வகைகள் உள்ளன. இவற்றில் 30 வகைகள் மட்டுமே தங்களது வாழ்வாதாரத்திற்காக மனிதர்களைச் சார்ந்து உள்ளன. மீதமுள்ளவக காடுகள் போன்ற மனிதரற்ற பகுதிகளில் காணப்படுகின்றன,” என்கிறார் அவர்.

பூமி பல்வேறு பேரழிவுகளைச் சந்தித்தப்போதும் கரப்பான் பூச்சி இனம் அதில் இருந்து தங்களைத் தற்காத்து வந்துள்ளன என்று கூறுகிறார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை இணை பேராசிரியர் முனைவர் செல்வமுத்துக்குமரன் திருநாவுக்கரசு.

“பூமியில் 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே பூச்சிகள் வந்துவிட்டன. அதன்படி, கரப்பான் பூச்சிகள் 300-350 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் உள்ளன.

மனிதர்களை பொறுத்தவரை 10 லட்சம் ஆண்டுகளாகத்தான் பூமியில் உள்ளோம். பூமி நான்கு பெரும் பேரழிவுகளைச் சந்தித்துள்ளது. இதில் மமோத் என்ற பேரானை இனம், டைனோசர்கள் போன்ற பேருயிர்கள் அழிந்துவிட்டாலும், கரப்பான் பூச்சிகள் தப்பியுள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.

கரப்பான் பூச்சி
அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர். செல்வமுத்துக்குமரன் திருநாவுக்கரசு

சுற்றுச்சூழலில் கரப்பான் பூச்சியின் பங்கு என்ன?

கரையான் எந்தளவு சுற்றுச்சூழலுக்கு முக்கியமானவையோ அதேபோல், காட்டுக் கரப்பான் பூச்சிகளும் முக்கியமானவை.

“இறந்துபோன, அழுகிப்போகும் நிலையில் உள்ள சடலங்களை அவை உண்ணுகின்றன. சுற்றுச்சூழலின் ஊட்டச்சத்து சுழற்சியில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஓர் உயிரினம் இறந்துவிட்டால் அதன் உடல் அழுகிப் போகவேண்டும். இதற்கு நிறைய செயல்முறைகள் உள்ளன. இதில், காட்டுக் கரப்பான் பூச்சிகளின் பங்கும் கணிசமாக உள்ளது,” என்று ப்ரோனோய் வைத்யா கூறுகிறார்.

வீணாகும் பொருட்களை மக்கக்கூடியவையாக மாற்றும் செயல்முறையில் பூச்சிகளுக்குப் பிரதான பங்கு உள்ளது.

அதில், “தாவரம் மாமிசம் என அனைத்தையும் உண்ணும் அனைத்துண்ணி வகையைச் சேர்ந்த கரப்பான்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு,” என்கிறார் செல்வமுத்துக்குமரன்.

“உணவுச் சங்கிலியின் முக்கியக் கூறுகளாக இத்தகைய பூச்சிகள் உள்ளன. இந்த உணவுச் சங்கிலியில் எங்காவது தடை ஏற்பட்டுவிட்டால் உணவு மூலக்கூறுக்கான சுழற்சி பூமியில் நடக்காமல் போய்விடும்.

அதனால், பரிணாம வளர்ச்சியடைந்த தாவரங்களுக்கோ, விலங்குகளுக்கோ உணவு கிடைக்காமல் போகும் அபாயமேகூட ஏற்படலாம்,” என்கிறார் செல்வமுத்துக்குமரன்.

மனிதர்களுக்கு கரப்பான் பூச்சிகள் நோயை ஏற்படுத்துகின்றனவா?

கரப்பான் பூச்சிகள்

மலேரியா போன்று நேரடியாக எந்த நோயையும் கரப்பான்கள் மனிதர்களுக்கு ஏற்படுத்துவதில்லை

கரப்பான் பூச்சிகளால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுவது உண்டு.

இருப்பினும் மலேரியா போன்று நேரடியாக எந்த நோயையும் அவை மனிதர்களுக்கு ஏற்படுத்துவதில்லை என்று செல்வமுத்துக்குமரன் கூறுகிறார்.

“கொசுவால் மலேரியா, டெங்கு போன்றவை பரவுகின்றன. ஈக்கள் மூலம் காலரா பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், கரப்பான் பூச்சிகள் மூலம் எந்தக் குறிப்பிட்ட நோயும் மனிதர்களுக்கு ஏற்படுவதில்லை.

அதே நேரம், அவை உண்ணும் அழுகக்கூடிய பொருட்களில் நுண்கிருமிகள் அதிகளவில் இருக்கும். இவற்றை உண்டுவிட்டு நாம் உண்ணும் உணவுகள் மீது அவை நடக்கும்போது, இந்த நுண்கிருமிகள் நமது உணவில் கலந்து நமக்கு நோய் பாதிப்பை ஏற்படுத்துகின்றன,” எனவும் அவர் தெரிவித்தார்.

கரப்பான் பூச்சி
கரப்பான் பூச்சிகளை வீட்டுக்குள் வராமல் எப்படி கட்டுப்படுத்துவது?

அவற்றுக்கான உணவும் ஈரப்பதமான சூழலும் இருக்கும் இடங்களில் கரப்பான் பூச்சிகள் செழித்துப் பெருகுகின்றன.

ஆகவே, அவற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரத்தைப் பேணுவது அவசியம் என்று செல்வமுத்துக்குமரன் வலியுறுத்துகிறார்.

  • சாப்பிட்ட பாத்திரங்களை உடனடியாகக் கழுவி வைத்துவிட வேண்டும். மீதமாகும் உணவுகளை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.
  • வீட்டில் குப்பை அதிகமாகச் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • நீங்கள் பயன்படுத்தும் குப்பைத்தொட்டிகள் மூடக்கூடிய வசதி கொண்டதாக இருக்க வேண்டும். இரவு நேரத்தில் அவற்றை வீட்டுக்குள் வைப்பதற்குப் பதிலாக, வீட்டிற்கு வெளியே வைக்க வேண்டும்.
  • ஜன்னல்கள், கதவு இடுக்கு, துவாரங்கள் வழியாகவும் கரப்பான் பூச்சிகள் வர வாய்ப்பு இருப்பதால் தேவையில்லாத நேரங்களில் இவற்றை அடைத்து வைக்க வேண்டும்.
கரப்பான் பூச்சிகள்
பாத்திரங்களைக் கழுவும் இடங்களில் உள்ள கழிவுநீர் செல்வதற்கான துவாரம் வழியாகவும் கரப்பான் பூச்சிகள் வீட்டுக்குள் வரலாம்.
  • அட்டைப்பெட்டிகள் மீது கவனம் செலுத்த வேண்டும். அட்டைப் பெட்டிகள் மரக்கூழில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை கரப்பான் பூச்சிகளுக்குச் சிறந்த உணவாக இருக்கின்றன.
  • பாத்திரங்களைக் கழுவும் இடங்களில் உள்ள கழிவுநீர் செல்வதற்கான துவாரம் வழியாகவும் கரப்பான் பூச்சிகள் வீட்டுக்குள் வரலாம். எனவே, அவற்றைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் மூடி வைக்க வேண்டும்.
  • கொஞ்சம் தண்ணீர் இருந்தாலும் கரப்பான் பூச்சியால் உயிர் வாழ முடியும் என்பதால் பாத்திரம் கழுவும் சிங்க் இரவு நேரங்களில் ஈரமாக இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • வீட்டுக்குள் இருக்கும் கரப்பான் பூச்சிகளை விரட்ட ஸ்ப்ரே, ஜெல் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. ஏரோசால் போன்றவற்றை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கும் தீங்குதான் ஏற்படும்.

கரப்பான் பூச்சிகள் வீட்டுக்குள் வந்த பிறகு, நமக்கும் கேடாகக்கூடிய வேதிம பொருட்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக, வரும் முன்பே அவற்றைத் தவிர்க்கலாம்.

அதற்கு கரப்பான் பூச்சிகளை வீட்டுக்குள் வராமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்தது என்கிறார் செல்வமுத்துக்குமரன்.

Previous Story

குர்ஆன் எரிப்பதை தடை செய்ய டென்மார்க் பரிசீலனை

Next Story

உடதலவின்ன நூலகத் திறப்பு விழா