கனடா: கத்திக்குத்து: 10 பேர் பலி

கனடாவில், வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் நடந்த தொடர் கத்திக் குத்து சம்பவங்களில், 10 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்தனர்.

கனடாவில் கத்திக்குத்து: 10 பேர் பலி

வட அமெரிக்க நாடான கனடாவின் தெற்கே உள்ளது, சாஸ்கத்செவான் மாகாணம். அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள இந்த மாகாணத்தில், நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் கத்திக் குத்து சம்பவங்கள் நடந்தன. இந்த தாக்குதலில், 10 பேர் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன், 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை, இரண்டு பேர் நடத்தியதாக கூறப்படுகிறது. அவர்களுடைய பெயர், டேமியன் சேன்டர்சன், 31, மற்றும் மைல்ஸ் சேன்டர்சன், 30, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய இவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

சாஸ்கத்செவான் மாகாணத்தின் பல்வேறு இடங்களில், இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. இதற்கான காரணம் தெரியவில்லை. அவர்கள் மிகவும் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சில இடங்களில், குறிப்பிட்ட சிலரை மட்டும் தேடிப் பிடித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சில இடங்களில், கண்ணில் கண்டவர்களை கொலையாளிகள் தாக்கிஉள்ளனர். இந்த சம்பவத்துக்கு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.

கனடாவின் வரலாற்றில் நடந்துள்ள மிகக் கொடூரமான தொடர் தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. கடந்த 2020ல், நோவா ஸ்கோடியாவில், போலீஸ் அதிகாரி போல் வேடமணிந்த ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில், 22 பேர் கொல்லப்பட்டனர்.கடந்த 2019ல், டொரன்டோவில் ஒருவர் வேனை வேகமாக செலுத்தியதில், பாதசாரிகள், 10 பேர் உயிரிழந்தனர்.

Previous Story

குற்றவாளிகள் போய்விட்டார்கள்!

Next Story

வாங்க வங்கதேச பிரதமரே ! ராணுவ அணிவகுப்பு மரியாதை