கத்தார்:இஸ்ரேலுடன் தகவல் பகிர்ந்த இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை 

அல் தஹ்ரா நிறுவனத்தைச் சேர்ந்த 8 இந்திய ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் கத்தார் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதாக முதல்கட்டத் தகவல் கிடைத்துள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், விரிவான தீர்ப்புக்காகக் காத்திருப்பதாகவும் வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

கத்தாரில் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை: மத்திய அரசு என்ன சொல்கிறது?

கத்தாரில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

தண்டனைக்கு உள்ளானவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் தொடர்ந்து செயல்படுவதுடன், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், “இந்த வழக்குக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். அது குறித்து நெருக்கமாகக் கவனித்து வருகிறோம். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தூதரக மற்றும் சட்ட உதவிகளை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். கத்தார் அரசிடமும் இது குறித்து பேச்சு நடத்துவோம்,” என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரம், இந்த வழக்கு தொடர்பான நடவடிக்கைகள் ரகசியமாக இருப்பதால், தற்போது மேற்கொண்டு எந்தக் கருத்தையும் கூறுவது சரியாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படை வீரர்கள் ஏன் கத்தாரில் கைது செய்யப்பட்டனர்?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு, கத்தாரில் பணியாற்றி வந்த 8 முன்னாள் இந்திய கடற்படையினர், உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த திடீர் நடவடிக்கைப் பிறகு அவர்கள் அனைவரும் தோஹாவில் உள்ள சிறையில் மற்ற கைதிகளிடமிருந்து தனியாக வைக்கப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்ட இந்த இந்தியர்கள், கத்தார் கடற்படைக்காக வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் உயர் பதவிகளை வகித்தவர்கள்.

இந்த இந்தியர்களில் மூன்று பேர் ஓய்வு பெற்ற கேப்டன்கள், நான்கு பேர் கமாண்டர்கள் மற்றும் ஒருவர் மாலுமி. இவர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ‘கடும் குற்றவாளிகளைப்’ போல தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று ஒரு முன்னாள் இந்திய தூதாண்மை அதிகாரி கூறினார்.

முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை

கத்தாரில் பணியாற்றிய இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் முக்கிய ரகசியங்களை இஸ்ரேலுக்கு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

ஆனால் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் தோஹாவில் பணிபுரிந்த போது நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் குறித்து முக்கியமான தகவல்களை இஸ்ரேலுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கத்தாரில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் சட்டம் உள்ளது.

சிறையில் உள்ள இந்த இந்தியர்கள் தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் சர்வீசஸில் பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிறுவனம் கத்தார் கடற்படைக்காக நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் பணியாற்றி வந்தது. ரேடாரை தவிர்க்கும் ஹைடெக் இத்தாலிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

கடந்த மே மாதம் இந்த நிறுவனத்தை மூட கத்தார் உத்தரவிட்டது. அதன் ஊழியர்களில் சுமார் 70 பேர் மே மாத இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடற்படையின் முன்னாள் பணியாளர்கள்.

இதுபோன்ற சர்வதேச விவகாரங்களில் இதற்கு முன்பு என்ன நடந்தது?

முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை

குல்பூஷண் ஜாதவ் வழக்கு

பயங்கரவாதம் மற்றும் உளவு பார்த்ததாக பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட குல்பூஷணுக்கு பாகிஸ்தானின் ராணுவ நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

குல்பூஷண் ஜாதவ் இந்தியாவுக்காக உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. ஒரு பிஸினெஸ் பயணத்திற்காக சென்றிருந்த குல்பூஷண் ஜாதவ் இரானில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சாட்டியது.

சர்வதேச நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய இந்தியா, பாகிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றது. குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவி மற்றும் சந்திப்பு வாய்ப்புகளை வழங்குமாறு பாகிஸ்தானை சர்வதேச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இராக்கில் பிணைக் கைதிகளாக இருந்த இரண்டு இந்தியர்களின் விடுதலை: ”1990களில் இராக்கில் இரண்டு இந்தியர்கள் கடத்தப்பட்டபோது, ​​கத்தாரில் உள்ள ஷரியா நீதிமன்றத்தின் தலைவர் தலையிட்டு இரு இந்தியர்களையும் விடுதலை செய்தார் என்பது எனக்கு நினைவிருக்கிறது” என்று கராச்சியில் இந்திய தூதரக அதிகாரியாக இருந்த ராஜீவ் டோக்ரா கூறுகிறார்.

பிரிட்டனின் செவிலியர்கள் நாடு திரும்பிய விவகாரம்: 1997ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய செவிலியர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக செளதி அரேபியாவில் இரண்டு பிரிட்டிஷ் செவிலியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

Qatar Shocks India; Sentences Eight Indian Navy Officers To Death In Spying Case | Watch | Hindustan Times

பின்னர் செளதி அரசு பிரிட்டிஷ் அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்து செவிலியர்களை விடுவித்தது. அவர்கள் பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிக்கித் தவிக்கும் குடிமக்கள் தாயகம் திரும்புதல்: பிரச்னைகளின் போது தனது குடிமக்களை நாட்டிற்குத் திரும்ப அழைத்து வந்த இந்தியாவின் சாதனை பாராட்டுக்குரியது.

குவைத் மீதான இராக்கின் 1990-91 படையெடுப்பின்போது அங்கு சிக்கித் தவித்த இந்தியர்களாக இருந்தாலும் சரி அல்லது யுக்ரேனில் சிக்கித் தவித்த மாணவர்களாக இருந்தாலும் சரி அல்லது சமீபத்தில் சூடானில் சிக்கியவர்களாக இருந்தாலும் சரி, இந்தியா அவர்களை வெற்றிகரமாக தாயகம் அழைத்து வந்துள்ளது.

முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை

தூதரக மற்றும் சட்ட உதவிகளை அளிக்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சட்ட உதவி மற்றும் தூதரக உதவி போதுமா?

நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க சிறையில் இருக்கும் தனது குடிமக்களுக்கு நல்ல வழக்கறிஞர்களை இந்தியா வழங்குவது முக்கியம் என்று தூதாண்மை அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் இதுமட்டும் போதாது.

“27 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை

கொண்ட நாடான கத்தார், இந்தியாவுடன்

ஒப்பிடும்போது நிச்சயமாக ஒரு சிறிய நாடுதான்.

ஆனால் இது பலவீனமானவர்களுக்கும் வலிமையானவர்களுக்கும்

இடையிலான போட்டி அல்ல. செளதி அரேபியா போன்ற

பெரிய மற்றும் சக்திவாய்ந்த

அண்டை நாடுகளுடன் கத்தார் மோதியுள்ளது.

செளதி அரேபியா அமெரிக்காவிற்கு மிக நெருக்கமாக

இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருந்தபோதிலும் கத்தார் தனது சக்திவாய்ந்த

அண்டை நாட்டிடம் பயப்படவில்லை.”

கடந்த 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் படையெடுப்பின்போது, ​​அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், கத்தார் அரசின் ஆதரவு பெற்ற ஒரு கூட்டமைப்பால் இயக்கப்படும் அரபு தொலைக்காட்சியான ‘அல் ஜசீரா’ குறித்து கத்தார் அமிரிடம் (கத்தார் தலைவர்) புகார் செய்தார்.

இதற்கு பதிலளித்த கத்தார் அமிர், ‘அமெரிக்க அதிபர் சி.என்.என் ஊடகத்தின் நிர்வாகத்தில் தலையிட முடியாததைப் போல், ‘அல் ஜசீரா’-வின் நிர்வாகத்தில் தானும் தலையிட முடியாது எனக் கூறிவிட்டார்.

இந்தியாவிற்கு வேறு என்ன வழி இருக்கிறது?

இந்திய அரசு இரு முனை உத்தியைச் செயல்படுத்த வேண்டும். முதலாவது சட்டம், இரண்டாவது அரசியல். இந்த இரண்டையும் ஒன்றாகச் செயல்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது குறித்துக் கடந்த சில மாதங்களுக்கு முன் பிபிசியிடம் பேசிய முன்னாள் தூதரக அதிகாரி அச்சல் மல்ஹோத்ரா, “முதல் கட்டமாக சட்டம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தக் கட்டத்தில் சிறந்த சட்ட உதவியை வழங்கி அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க முயல வேண்டும்,” என்றார்.

இதனுடன் ஏதாவது விஷயம் தொடர்பாக நாம் கத்தாருக்கு உதவ முடியுமா, எதற்காவது அவர்களுக்கு ஆதரவளிக்க முடியுமா என்பதைக் கண்டறிய வேண்டும். அப்படியானால், இந்த விருப்பவழியை நாம் கவனிக்க வேண்டும். ஏனென்றால் நாம் அதைச் செய்தால், அவர்கள் இந்தியர்களை விடுவிக்கக்கூடும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களின் விடுதலையைப் பெறுவதற்கு மாற்றாக அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யமுடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்.”

கத்தார் தனது பெரிய அளவிலான வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பைப் பாராட்ட வேண்டும் என்றும் சிறையில் உள்ள இந்தியர்களின் விஷயத்தில் அதிக நெகிழ்வுத்தன்மையைக் காட்ட வேண்டும் என்றும் முன்னாள் தூதரக அதிகாரி ராஜீவ் டோக்ரா விரும்புகிறார்.

“இந்தியா-கத்தார் உறவுகள், கத்தாரின் வெற்றிக்கு இந்தியர்களின் பங்களிப்பு ஆகியவற்றை முக்கியமாகப் பார்க்குமாறு கத்தார் தலைவர்களிடம் நான் பரிந்துரைக்கிறேன். கத்தார் இவற்றைப் புறக்கணிக்க முடியுமா, கத்தார் பிடிவாதமாக இருக்க முடியுமா?” என்று அவர் வினவினார்.

இந்த முழு அத்தியாயமும் இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளைக் கெடுக்கும் சதி என்று ராஜீவ் டோக்ரா சந்தேகிக்கிறார்.

“அந்த நாடு பிரபலமடையத் தொடங்கிய காலத்தில் நான் கத்தார் நாட்டில் இந்திய தூதரக அதிகாரியாகப் பணியாற்றினேன். அது 80களின் பிற்பகுதியில் நடந்தது. ஷரியா நீதிமன்றத்தின் தலைவர் முதல் நாட்டின் தலைவர் (அமீர்) வரை அனைவரையும் என்னால் அணுக முடிந்தது.

அப்போது இரு நாடுகளுக்கிடையே வலுவான உறவுகள் இருந்தன. ஆனால் அந்த உறவுகள் இந்த அளவுக்குப் பலவீனமடைந்தது எப்படி என்று நான் ஆச்சரியப்படுகிறேன். இந்தியாவுக்கு எதிராக கத்தார் அமீரிடம் யாராவது ஏதாவது சொல்லியிருப்பார்களோ!,” என்று அவர் சந்தேகம் எழுப்பினார்.

“கத்தாரில் ஒரு முக்கியமான திட்டத்தில் இந்தியர்கள் வேலை செய்வதை விரும்பாதவர்கள் உள்ளனர். ஆகவே, இந்தியர்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர் என்ற கோணத்தைப் புறக்கணிக்க முடியாது.”

Previous Story

குவைத்+ஓமனுடன் கைகோர்த்த சீனா!  திசைமாறும் போர்?

Next Story

ரணிலைப் பற்றித் தெரியாதா?