கடைசிக் கடிதம் கடவுளுக்கு!

நஜீப் பின் கபூர்

சாகப் போகின்றோம் காப்பாற்றுங்கள்”

‘யதார்த்தத்தைப் புரிகின்ற

நாம் குழம்பிப்போய் இருக்கின்றோம்.

விவரம் புரியாத சிறுசுகளுக்கு

திடீரென ஒரு நேரச் சாப்பாடு

பாசி பட்டணி என்று வந்து

கதறும் போது பெரியவர்கள்

அவர்களுக்கு எப்படித்தான்

நிலமையைப் புரியவைப்பது?

இதயமே நின்று போகும் ஒரு நிலை.

ஆனால் அதிகாரத் திமிர்

இன்னும் விட்டுக் கொடுப்பதாக இல்லை.

கொடூரம் அவர்களுக்கு

முக்குக் கொடுப்பதற்கும்

இன்று ஒரு கூட்டம்

துணைக்கும் போய் நிற்க்கின்றது.’

இந்த வாரம் நமது கட்டுரை சற்று வித்தியாசமாக வாசகர்களுக்குத் தோன்றலாம். மனிதனிடத்தில் முறையிட்டுத் தோற்றுப் போயிருக்கும் நாம் வேறு என்னதான் பண்ணமுடியும்? கதையைப் படித்துப் பாருங்கள்.

எல்லாவற்றையும் தன்னால் சாதித்துக் கொள்ள முடியும் என்று நினைக்கின்ற மனிதர்கள் தனக்கு முடியாமல் போகுமிடங்களில் கடவுளை துனைக்கு அழைப்பதை நாம் பரவலாகப் பார்த்திருக்கின்றோம். குறிப்பாக நோய்வாய்ப்பட்டிருக்கின்ற நேரங்களில் நாஸ்தீகர்கள் கூடத் தன்னை அறியாமல் கடவுளை உதவிக்கு அழைத்த கதைகள் இருக்கின்றன.

என்னதான் பரினாம வளர்ச்சியின் தோற்றம் மனிதன் என்று வீரிட்டாலும் விஞ்ஞானத்தில் உச்சியில் இருக்கின்ற சமூகத்தில்-நாடுகளில் கூட கடவுள்களுக்கு நிறையவே மக்கள் மனங்களில் இடமிருக்கின்றது. நடைமுறையில்  பரினாம வளர்ச்சிக் கதை செல்லாக் காசு.

அங்கெல்லாம் தேவாலங்கள் கோவில்கள் வழிபாட்டுத் தளங்கள் நிறையவே இருக்கின்றன. அதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. இந்தக் கடவுள்களில் சிறிய கடவுள் பெரிய கடவுள் என்று எவரும் இருக்கின்றார்கள் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அவரவருக்கு அவரவர் கடவுள்தான் பெரியவர். ஹீரோ!

உலகத்தில் மிகப் பெரிய சமயங்களும் இருக்கின்றன, அதே நேரம் சில ஆயிரம் பேர் நம்பிக்கை கொண்டிருக்கின்ற கடவுள்களும் இருக்கின்றார்கள். அவர்களின் பட்டியலை நாம் இங்கு பேசவில்லை.

நமக்குத் தெரிந்த தகவல்களின் படி 4000-5000 இடைப்பட்ட மத நம்பிக்கைகள் உலகில் காணப்படுகின்றன. இந்த நம்பிக்கைகள் பற்றி பேசப்போனால் அவை கற்பனைக்கு அப்பால்பட்ட தகவல்களாகவும் இருக்கும். அவை பற்றியும் பேசுவது எமது நோக்கம் அல்ல.

வருமுன் காப்போம் என்ற எதிர்பார்ப்பில் வரவிருக்கும் ஆபத்துகள் பற்றி நமது ஜனாதிபதி கோட்டாவுக்கு நெடுநாளைக்கு முன்னர் ஒரு கடிதம் போட்டோம். வந்த போது காப்பது பற்றி கடந்த வாரம் குடிமக்களுக்கும் நாம் கடிதம் எழுத்தி இருந்தோம். அந்த வரிசையில் இப்போது வந்து விட்டது துயரம்.! எனவே கடவுளைத் துணைக்கு அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றாகிவிட்ட நிலையில் இந்தக் கடிதம்.

அதற்காக இறை நம்பிககைளைக் கடவுள் கொள்கைகளை கேலி செய்யும் நேரக்கிலும் நாம் இந்தக் கடித்ததை கடவுள்களுக்கு வரையவில்லை. இதய சுத்தியுடன்தான் கடிதம் வரையப்படுகின்றது. நம் நாட்டு அரசியல்வாதிகள் தெரிந்து கொண்டே எம்மை பட்டினிச்சாவின் விளிம்பில் கொண்டு வந்து விட்டிருக்கின்றார்கள்.

எனவே குடிமக்களின் இயலாமையையும் ஆதங்கங்களையும் அவரவர் கடவுள்களிடம் முறைப்படுவதைவிட வேறுவழியில்லை என்ற நிலையில், இறுதி மூச்சு என்று சொல்வதைப் போல கடைசி முயற்ச்சியாக இந்தக் கடிதத்தைத் தொடர்கின்றோம். அரசியல்வாதிகள் எம்மை ஏமாற்றிவிட்டார்கள், நமக்குத் துரோகம் பண்ணி விட்டார்கள்.

இன்றும் கூட காசுக்காக அவர்கள் துரோகம் பண்ணிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்கள் காசுக்காக விலைபோகின்றார்கள். எம்மையும் காசு தருவதாக அழைத்தார்கள் என்று செல்வாக்கான ராஜிதவே ஊடகங்களில் பகிரங்கமாகவே சில தினங்களுக்கு முன்னர்  அறிவித்திருந்தார்.

அப்படிக் காசுக்கு விலை போகின்றவர்கள், நாட்டுக்காக சமூக நலனுக்காக என்று தன்னலத்துக்கு இப்போது புதிய வரைவிலக்கணங்கள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே மொழி அகராதிகளில் கூட பெரும் குழப்ப நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அமைச்சராகி இருக்கும் மனுச நாணயக்கார தான் ஒரு போதும் கட்சி மாறமாட்டேன் என்று இதற்கு முன்பு ஒரு சமயம் ஊடகங்கில்; பேசிய வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதனை கேட்கும் போது இப்படியும் பேசிவிட்டு பல்டியடிக்கின்ற மனிதர்கள்-அரசியல்வாதிகள் உலகில் எங்கும் இருப்பார்களா என்று ஒருவர் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அவரது வார்த்தைகள் அமைந்திருந்தன.

இது ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்ற துரோகிகள் பற்றி முறைப்பாடுகளை கடவுளிடத்தில் முன்வைப்பதைத் தவிர வேறு வழிகள் தெரியவில்லை.

கடவுளுக்கு முறைப்பாட்டுக் கடிதம் அனுப்புகின்ற நமக்கு சில குழப்பங்களும் வருகின்றன. கடவுள்களின் முகவரியை எங்கு தேடிப்பிடிப்பது? எல்லாம் அறியக் கூடிவர்கள்தனே கடவுள். அவர் எங்கும் இருப்பவர் என்ற நியதியில், எமது ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் அதை எழுதும் போதே அவர்கள் தெரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை குடிகளுக்கு இருப்பதால் கடிதத்தில் உள்ள வார்த்தைகள் நிச்சயம் தவறாது  உங்களை வந்தடையும் என்ற மிகுந்த நம்பிக்கை நமக்கு இருக்கின்றது.

அடுத்து இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள், குறிப்பாக பௌத்த இந்து இஸ்லாமிய கிருஸ்துவ சமயங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். எனவே இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களை காப்பாற்றுக்கின்ற விடயத்தில் புத்தபெருமான், சிவபெருமான் அல்லாஹ், யேசு அனைவரும் ஐக்கியப்படுவதில் குழப்பங்களுக்கு இடமிருக்காது என்றும் நம்புகின்றோம். அப்படி வந்தாலும் உலகையே ஆள்கின்ற நீங்கள் அதனை சுமுகமாக தீர்த்தக் கொள்வீர்கள்!

இங்குள்ள அரசியல்வாதிகள் தன்னலத்துக்காக மத ரீதியிலும் எம்மை பிளவுபடுத்தி வைத்திருக்கின்றார்கள் என்பதும் அது தொடர்பான அட்டகாசங்களையும் நீங்கள் அறிந்த விடயங்களே. கடந்த காலங்களில் நாட்டில் நடந்த இனக்கலவரங்கள் அடக்கு முறைகள்.

இன ரீதியலான மோதல்கள் என்பதனைவிட அரசியல் வாதிகளின் இருப்புத் தொடர்பான திட்டமிட்ட ஏற்பாடுகளாக இருந்திருக்கின்றன. தனது சமூகத்தினரையே உயிருடன் டயர்களில் போட்டு எரித்தவர்கள் முள்ளிவாயக்கலில் பண்ணிய அட்டகாசங்களுக்கு என்தான் சாட்சிகள் தேட வேண்டி இருக்கின்றது.

எனவே இந்த நாட்டு அரசியல்வாதிகள் விடயத்தில் நீங்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டி இருக்கும். கடவுளுக்கே தண்ணி காட்டக்ககூடிய கில்லாடிகள்தான் நம்ம ஆள்கள். அவர்கள் உங்களைக் கூட கமிஷக்கு விலைபேச வரவும்கூடும்.!

எமது இயலாமையின் துயரங்களைச் சற்றுக் கேளுங்கள், அரசியல்வாதிகள் சமயத்தின் பெயரால் எம்மை பிளவுபடுத்தி இன்று வரை வெற்றிகரமாக பிழைப்பு நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

நமது மக்கள் எதிர்பார்ப்புக்களுக்கு விருப்பு வெருப்புக்களுக்கு முற்றிலும் மாற்றமாக தீர்மானங்களை எடுத்து வருகின்றார்கள.; அதற்கும் சமூக-சமய நலன் என்று சொல்லி உங்களையும் சந்திக்கு இழுக்கின்றார்கள். அவர்களது வார்த்தைகளில் எந்தளவுக்கு இதயசுத்தி இருக்கின்றது என்பது நீங்கள் நன்றாகத் தெரிந்த விடயங்களே!

சில தினங்களுக்கு முன்னர் புகழ் பெற்ற சசேக்ஸ் பல்கலைக்கழகப் பேரசிரியரும் ஆசியா பிரிவின் இலங்கைக்கான பொருளியல் நிபுணருமாக இருந்த மூர் இலங்கை பொருளாதாரா நெருக்கடிக்கு கொரோனா எந்த வகையிலும் காரணம் அல்ல. இது மனிதன் தானே உருவாக்கிக் கொண்ட நெருக்கடி.

அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட இலாபத்துக்காக வருமானம் வந்து சேராத அபிவிருத் திட்டங்களுக்குத் தொடர்ச்சியாக வெளி நாட்டுக கடன்களைப் பாவித்து வந்திருக்கின்றார்கள். அதில் கற்பணைக்கு எட்டாத அளவு பணத்தை மொத்தமாகவும் சில்லறையாகவும் கையாடியும் இருக்கின்றார்கள். இதுதான் இன்றைய நெருக்கடிக்குப் பிரதான காரணம்.

குறைந்தது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நடவடிக்கை எடுத்திருந்தால் கூட ஓரளவுக்கு நிலமையை சரி செய்திருக்கலாம். இப்போது நிலமை மிகவும் மோசமான கட்டத்தில் இருக்கிகன்றது என்று வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார் பேரசிரியர் மூர். ஆனால் நமது அரசியல்வாதிகளோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட எங்களுக்குத் தேவையாக அளவு காசு இருக்கின்றது என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தனர் என்பதும் தெரிந்ததே!

இந்த அழிவுக்கு முக்கிய காரணம் அரசியல் அதிகாரம் முற்றிலும் ஒரு குடும்பத்தின் கைகளுக்கச் சென்றது. 20 திருத்தத்தால் மிகப்பெரிய அட்டகாசங்கள் நடந்தன. இப்போது மீண்டும் 19 ஐ 21 என்ற பெயரில் கொண்டு வந்து அந்த தவறை நீக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஆனால் காசுக்கு விற்பணையாக்கின்ற நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனங்களில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி மக்களுக்கு ஆராக்கியமான தீர்மானம் ஜெயிக்கவும் நீங்கள் உங்களது சக்திகளைப் பாவிக்க வேண்டும். என்று குடிகளில் பேரால் கேட்டுக் கொள்க்கின்றோம்.

நாட்டுக்கு வருமானம் வருவதற்கான எந்தத் திட்டமும் அரசியல்வாதிகளிடம் கிடையாது. தனக்கு பிரதமர் பதவி தந்தால் செய்து கட்டுவேன். தான் அதிகாரத்துக்கு வந்தால் 4-5 பில்லியன் டொலர்கள் உடனே கிடைக்கும். நான் சர்வதேசத் தொடர்ப்பில் இருக்கின்றோன் என்று சொல்லி கதிரையில் அமர்ந்தார் ரணில்.

அவரோ இன்று வருகின்ற நாட்கள் கடந்து போன நாட்களைவிடக் கொடூரமாக இருக்கும் என்று மக்களை எச்சரிக்கை செய்து வருகின்றார். அவர் கொண்டுவருவதாக சொன்ன டொலர்கள் எங்கே? எனவே ஆட்சியாளர்கள் கைவிரித்து விட்hர்கள்-எம்மைக் கை விட்டுவிட்டார்கள் என்பது தெளிவு.

நாம் தெய்வங்களாகிய உங்களிடத்தில் உதவி கேட்டு கடிதம் போடுவதில் யாதொரு தவறும் இருக்க மாடட்hது என்று நம்புகின்றோம். இந்த நாட்டில் நடக்கின்ற கொடூரங்களை இன்னும் எவ்வளவு காலத்துக்குதான் நீங்கள் பார்த்தக் கொண்டிருக்கப் போகின்றீர்கள் என்றும் நமக்குக் கேட்கத் தோன்றுகின்றது.

இந்த நாட்டில் நீதி நேர்மை சட்டம் ஒழுங்கு எல்லாம் அட்டகாசமாக போய்க் கொண்டிருக்கின்றன. இவற்றை நீங்கள் தொடர அனுமதிக்கப் போகின்றீர்களா? நீங்களும் நயவஞ்சகர்கள் பக்கமா அப்பாவிக் குடிகளின் பக்கமா?

அதேவேளை உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய நிறைய விடயங்களும் இருக்கின்றன. இந்த அரசாங்கம் குறைந்தது இன்னும் கால் நூற்றாண்டு கடந்தும் நீடித்து நிலைத்திருக்கும். எனவே முஸ்லிம்கள் யதார்த்தத்தை புரிந்து நடக்க வேண்டும் என்று நீதிக்குப் பொறுப்பான அமைச்சர் சப்ரி தனது சமூகத்தை ஒரு முறை எச்சரித்திருந்தார்.

இரண்டு ஆண்டுகள் கூட கடக்க முன்னர் நிலமையைத் தலைகீழாக புரட்டிப் போட்ட நீங்கள் உங்கள் வல்லமையை காட்சிப்படுத்தியும் இருக்கின்றீர்கள்.

யரெல்லாம் ஹீரோக்கள் என்று சமூகம் வணங்கிக் கொண்டிருந்ததோ அதே ராஜாக்களை சமூகம் சீரோக்களாக்கி சந்தி வழியே விரட்டியடித்தக் கொண்டிருப்பதும், அவர்கள் பதுங்கு குழிகளில் ஓடி ஒழிப்பதும் உங்கள் செயலாகத்தான் இருக்க வேண்டும்.

இந்தியப் பிச்சைக்காரன் சீனத்து முன்பள்ளி மாணவர்கள் தமிழகத்து டீ கடைக்காரர்கள் எல்லோரும் நமக்காக உண்டியல் வாசூல் பண்ணிக் கொண்டிருப்பதும் தாங்கள் அறிந்துதானே இருப்பீர்கள்;. அவர்களே எமக்குக் கருனை காட்டுகின்ற போது சக்தி வாய்ந்த நீங்கள் மட்டும் பார்வையாளர்களாக நிற்பது எந்தவகையில் நியாயம்.?

காலங்கடத்தி எம்மை சாகடிக்கப் போகின்றீர்களா? கருனை காட்டி எம்மை மீட்டெடுக்கப் போகின்றீர்களா? நீங்கள் தாமதிக்கின்ற ஒவ்வொரு நொடியும் அழிவு மிக்கது என்பது உங்களுக்கு என்ன தெரியாதா? புத்தபெருமானே சிவபெரும்hனே இறைவனே ஏசுவே அதிரடியாக கூட்டணி போட்டு நீங்கள் களத்தில் இறங்க வேண்டிய நேரமிது.

நயவஞ்சகர்கள் ஜெய்த்து அதர்மம் தொடர்ந்தும் வெற்றிவாகை சூடினால் கடவுள்கள் கூட குற்றவாளி என்ற நிலை வந்துவிடும். அதற்;கு இடம் வைத்து விடாதீர்கள். கெஞ்சிக் கேட்கின்றோம்.!

யதார்த்தத்தைப் புரிகின்ற நாம் குழம்பிப்போய் இருக்கின்றோம். விவரம் புரியாத சிறுசுகளுக்கு திடீரென ஒரு நேரச் சாப்பாடு பாசி பட்டணி என்று வந்து கதறும் போது பெரியவர்கள் அவர்களுக்கு எப்படித்தான் நிலமையைப் புரியவைப்பது? இதயமே நின்று போகும் ஒரு நிலை. ஆனால் அதிகாரத் திமிர் இன்னும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. கொடூரம் அவர்களுக்கு முக்குக் கொடுப்பதற்கும் இன்று ஒரு கூட்டம் துணைக்கும் போய் நிற்க்கின்றது.

தற்போதய மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்ஹ யதார்த்தமாக தகவல்களைச் சொல்லி வருகின்றார். அவர் கருத்துப்படி ஏற்கெனவே அரசு விட்ட தவறுகளால் இன்று நிலமை மிகமேசமான கட்டத்தை அடைந்து விட்டது.

உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு, அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது கூட நெருக்கடியான நிலையில் இருக்கின்றது. இந்த வாரத்தில் இருந்து நெருக்கடி மேலும் உச்ச கட்டத்தை அடையும் என்பது அவரது எச்சரிக்கை. மேலும் கையிருப்பிலுள்ள அன்னியச் செலவானி  ஒரு வாரத்துக்குக் கூடப் போதுமானதல்ல என்பதும் அவர் கருத்து.

இன்றும் அன்னியச் செலவானியைத் தேடுவது எப்படி என்ற விவாதம்தான் நடந்து கொண்டிருக்கின்றதே அல்லாமல் அன்னியச் செலவானி வருவதற்கான எந்த மார்க்கங்களும் இல்லை என்ற நிலையில் நாட்டில் பட்டினிச்சாவு என்பது உறுதி என்றாகிவிட்டது.  மேலும் இந்த நிலமை சீராவற்கு கொஞ்சக்காலம் எடுக்கும் என்பதும் மத்திய வங்கி ஆளுநர்  கருத்து.

அந்தக் கொஞ்சக் காலத்தக்குள் நாட்டில் என்னவெல்லாம் நடக்க இருக்கின்றது என்பதும் கடவுள்களான தாங்கள்தான் அறிவீர்கள். மேலும் கொஞ்சக் காலம் என்பது ஆறு மாதமா ஆறு வருடமா என்பது கூட எவருக்கும் தெரியாது. அதுவும் கடவுள்களாகிய நீங்கள் மட்டும் அறிந்த விடயம்.

நாம் ஆபத்தான நிலையில் இருக்கின்றோம் நட்பு நாடுகள் நமக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என்று, கடந்த வியாழக்கிழமை ஜப்பானில் நடந்த மா நாட்டில் நமது ஜனாதிபதி கோட்டா பகிரங்கமாகக் கேட்டிருந்தார்.

இலங்கை மக்கள் மீது சர்வதேசத்துக்கு அனுதாபம் வரலாம்-இருக்கலாம். ஜனாதிபதி கோட்டாவைப் பொறுத்தவரை உலகில் நட்பு நாடுகள் என்று ஏதாவது இருக்கின்றதா என்று எமக்குத் தெரியவில்லை. அப்படி இருப்பதாக வைத்துக் கொண்டு அதற்கு கிடைக்கின்ற பதிலையும் பொறுத்துப் பார்ப்போம்.

எமக்கு அதில் நம்பிக்கையில்லை. என்றாலும் அவரது வேண்டுகோளுக்கு என்ன பதில் வரப்போகின்றது என்பதும் கடவுள்களாகிய உங்களுக்கு முன்கூட்டித் தெரிதிருக்கத்தானே வேண்டும்.!

பொது மக்களே நீங்கள் மிகப் பெரிய ஒரு ஆபத்தில் இருக்கின்றீகள். முடிந்த மட்டும் இதிலிருந்த நீங்கள் விடுதலை பெறுவதற்கு உங்களது கடவுள்களிடத்தில் மன்றாடுங்கள். உங்கள் மன்றாட்டங்கள்தான் உங்களைக் காப்பற்றும் என்ற நிலை. வேறு வழிகள் கிடையாது.

புதிய மத்திய வங்கி ஆளுநர் மற்றும் தனக்குத் தந்தால் செய்து காட்டுக்கின்றேன் என்று பதவிக்கு வந்த பிரதமர் ரணில் என்போர் தங்களது இயலாமையைப் பக்கிரங்கமாகவே தற்போது அறிவித்து விட்டார்கள். இப்போது கடவுள் மட்டும்தான் கை கொடுக்க முடியும்.

நன்றி: ஞாயிறு தினக்ககுரல் 29.05.22

Previous Story

திக் திக் பயணம்! கடலில் ரஷ்யா ஆடும் கேம்!

Next Story

ருவன்வெலிசய  கொள்ளை:   சக்தி வாய்ந்த நபர்கள்