ஜனாதிபதி வேட்பாளர் தேடுகின்ற கட்சிகள்!

-நஜீப் பின் கபூர்-

நாட்டில் நிதி நெருக்கடிகளும் பொருளாதார சீரழிவுகளும் அப்படியே நீடிக்கின்ற அதே நேரம் அரசியலிலும்  ஒரு குழப்ப நிலை வழக்கம் போல தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக நிறையவே நாம் கடந்த காலங்களில் பேசியும் வந்திருக்கின்றோம். ஆனால் இந்த வாரம் நாம் இங்கு பேசப் பேவது ஜனாதிபதி ரணில் பற்றிய செய்திகளை அல்ல அவர் பற்றியும் நாம் நிறையவே பேசி இருக்கின்றோம். இன்னும் பேச வேண்டியும் வரும்.

கதை இதுதான் இந்த நாட்டில் அடுத்த வருடம் -2024ல் ஜனாதிபதி தேர்தல் வருகின்றனவோ இல்லையோ இந்த நாட்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களைக் கட்சிகள் தேடிக் கொண்டிருக்கின்றன. அது பற்றிய தகவல்களைத்தான் நாம் பேச முனைகின்றோம். இப்போது அது பற்றிப் பார்ப்போம்.

ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி ஆட்சியாளர்கள் நடாத்துவார்கள் என்ற நம்பிக்கை நமக்குக் கிடையாது. கடைசி நிமிடம் வரை அதனை நடத்தாமல் ஆட்சியைத் தொடர்ந்தும் முன்னெடுக்க தற்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் முனைவர்கள். சர்வதேச பிராந்திய அரசியல் காரணமாக அதற்காக அவர்களுக்கு உதவக்கூடிய நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன என்பதனை நாம் கடைசியாக எழுதிய ஒரு கட்டுரையில் சொல்லி இருந்தோம்.

ஜனாதிபதித் தேர்தல் பற்றிய எதிர்பார்ப்புகள் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றது. அப்படியானால் எந்தப் புத்தியில் இருந்து எந்தப் பாம்பு வெளிப்படும் என்பது தெரியாமல் இருப்பது போல எந்தக் கட்சியில் இருந்து எந்த வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலுக்கு களத்துக்கு வருவார் என்பதில் மிகப் பெரிய ஒரு குழப்பநிலை தெளிவாகத் தெரிகின்றது. அந்த வகையில் ஆளும் தரப்பில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில்தான் என்று அவர் பதவி ஏற்ற நாளில் இருந்து கடந்த சில வாரங்கள் வரை ஒரு நம்பிக்கை அவர்களில் சிலருக்கு இருந்தது. ஆனால் மொட்டுக் கட்சி சார்ப்பில் ஒரு போதும் ரணில் ஜனாதிபதி வேட்பாளராக வர முடியாது என்று அடித்துச் சொல்லி இருந்தோம்.

அதன்படி தமது அணி சார்ப்பில் நிச்சயம் ஒருவர் வேட்பாளராக களத்துக்கு வருவார். என்று மொட்டுக் கட்சி செயலாளர் சாகர காரியவாசம் சில தினங்களுக்கு முன்னர் பகிரங்கமாக அறிவித்திருந்தார். அத்துடன் மஹிந்த ராஜபக்ஸாவும் தமது கட்சிக்காரர்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் தமது வேட்பாளர் என்று ஊடகங்களிடம் பேசுகின்ற அரசியல்வாதிகளுக்கு வாய்க்குப் பூட்டுப் போட்டிருந்ததும் தெரிந்ததே. ஆனால் மொட்டுக் கட்சியில் இருக்கின்ற சில ரணில் விசுவாசிகள் அல்லது அவரை ஜனாதிபதி வேட்பாளர் என்று சொல்லி இன்றும் பிழைத்துக் கொள்ளும் ஒரு தரப்பு இன்றும் அந்த நிலைப்பாட்டில் பேசி வருகின்றார்கள்.

அதே நேரம் கட்சி செயலாளர் சாகர சொல்வது போல அவர்கள் தரப்பில் இருந்து ஒரு வேட்பாளர் வருவாராம் அவர் நிச்சயம் வெற்றி பொறுவார் என்பது அவர் வாதம். அப்படி பேசுவதற்கும் நம்புவதற்றும் அவருக்கு இருக்கின்ற உரிமையை நாம் மறுக்க முடியாது.

பிரதான எதிரணி ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஏற்கெனவே அந்தக் கட்சியினர் தமது வேட்பாளர் சஜித் என்று பிரகடணப்படுத்தி இருக்கின்றது. ஆனால் இந்த முன்கூட்டிய அறிவிப்புத் தொடர்ப்பில் அந்தக் கட்சிக்குள் கடும் கருத்து முரண்பாடுகள் துவக்கம் முதல் இன்றுவரை தெடர்கின்றன. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்னர் அந்தக் கட்சிய் இருக்கின்ற நாடாளுமன்ற  உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி ரணிலும் எதிரணித் தலைவர் சஜித்தும் இணைந்து வருகின்ற ஜனாதபதித் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று ஒரு கருத்தை பகிரங்கமாகச் சொல்லி இருந்தார்கள்.

புதிய தகவல்களின் படி ஜனாதிபதி ரணிலுடன் இருக்கின்ற சிலரும் சஜித் அணியில் இருக்கின்ற சிலரும் இணைந்து ஜனாதிபதி வேட்பாளரைக் களத்தக்குக் கொண்டுவர வேண்டும் என்று சந்தித்துப் பேசி இருக்கின்றார்கள். அதுவும் ரணில் ஜனாதிபதி வேட்பாளர். சஜித் பிரதமர் வேட்பாளர் என்பது அவர்களது முயற்சி. இந்தக் கருத்து தொடர்ப்பில் சஜித் அணியில் இருக்கின்றவர்கள் சிலர் சாதகமாக சிந்தித்தாலும் சஜித் விசுவாசிகள் கடுமையாக இந்த கருத்தை எடுத்த எடுப்பிலே நிராகரித்திருக்கின்றனர். இந்தக் கருத்தில் இருந்து என்ன தெளிவாகின்றது என்பதனை சிந்தித்துப் பார்த்தால் ரணிலுக்கு எந்தப் பிரதான கட்சியில் இருந்தும் வேட்பாளர் வாய்ப்புக் கிடையாது. அதே போன்று ஆளும் மொட்டுத் தரப்பிலும் ஒரு வலுவான வேட்பாளர் இல்லை. தமக்கு வாய்ப்பில்லாத ஒரு தேர்தலில் ராஜபக்ஸாக்கள் அல்லாத ஒருவரை தேர்தலில் இறக்கி தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் ஓரு முயற்சியில் இறங்க அதிக வாய்ப்பு இருக்கின்றன.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா புதியதோர் அணியுடாக ஜனாதிபதி வேட்பாளராக வரும் ஒரு முயற்ச்சியும் நடக்கின்றது. டசன் கணக்கான வேட்பாளர்களில் ஒருவராக தேர்தலில் குதிப்பதை விட ஏதாவது வலுவான ஒரு கட்சி ஊடகாக தேர்தலுக்கு வரவே அவர் முயல்கின்றார். தனது 43வது படை அணியூடாக சம்பிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு வருவதற்கு எதிர்பார்த்திருந்தாலும் கடந்த ஜனாதிபதி தேர்தல்களிலும் டசன் கணக்கான வேட்பாளர்கள் கட்சிகளின் ஊடக தேர்தல் களத்துக்கு வந்தனர். ஆனால் இந்த முறை செல்வாக்கான பலர் இந்த முயற்சியில் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுக்கின்றது.

கோட்டாபாயவை அதிகாரத்துக்கு கொண்டுவர தன்னால் முடியுமான அனைத்து தில்லுமுள்ளுகளையும் செய்த திலித் ஜயவீர அடுத்து வருகின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு வருவதற்கான சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார். தற்போது அவர் தனது கொழும்புப் பல்கலைக்கழக சகாக்களை சந்தித்து அவர்களது ஆதரவைக் கேட்டிருக்கின்றார். இந்த நாட்டில் இனவாத கருத்துக்களை பரப்பி நாட்டில் மிகப் பெரிய இனமுறுகல்ளை ஏற்படுத்தியது தொடர்பாக அவரிடன் சிலர் கேட்டிருக்கின்றார்கள்.

அதற்குப் பதில் கொடுத்த திலித் உண்மைதான் அந்த விவகாரத்தில் பெரும் தவறு நடந்திருக்கின்றது என்பதைத் தானும் ஏற்றுக் கொள்வதாக அவர் பதில் கொடுத்திருப்பதுடன் அதற்கு இப்படி ஒரு நொண்டிக் காரணத்தையும் சொல்லி இருக்கின்றார். ஊடக நிர்வாகிகளிடம் நான் பொறுப்புக்களைக் கொடுத்து அவர்களை சுதந்திரமாக இயங்க விடுவது தனது பாணி, அதனால்தான் இந்த அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன என்பது அவரது நியாயயமாக இருக்கின்றது. செல்வாக்கான பௌத்த தர்ம சித்தாந்தங்களுக்கே திலித்தின் ஊடக நிறுவனங்கள் ஊடாக பெரும் கலங்களங்கள் ஏற்பட்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டு பௌத்த சமூகத்தின் மத்தியில் கூட இருக்கின்றது என்பது குறிப்படத்தக்கது.

தம்மிக்க பெரேரா என்ற பிரபல கோடீஸ்வரருக்கும் இந்தத் தேர்தலில் களமிறங்கும் எண்ணம் இருக்கின்றது. இவரை மொட்டுக் கட்சி களமிறக்கி வேடிக்கை பார்க்கவும் இடமிருக்கின்றது. ஆனால் நாடாளுமன்றத்துக்கு வந்து அவர் தனது இமேஜை கெடுத்துக் கொண்டதால் அவரும் எடுபட மாட்டார்.

நாடாளுமன்றத்தில்  சுதந்திர அணி என்று சொல்லிக் கொள்கின்ற பீரிஸ்-டலஸ் அணியினருக்கிடையில் ஒரு விரிசல் ஏற்பட்டிருக்கின்றது. சஜித் அணி அதிகாரத்துக்கு வந்தால் பேராசிரியர் தான் பிரதமர் என்று ஒரு நம்பிக்கை கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதற்க்கிடையில் அதந்தப் பதவியை டலசுக்கு கொடுத்து சஜித் தமது அணியை சக்திப்படுத்தலாமே என்று ஆலோசனையை எடுத்தக் கொண்டு  டிலான் பெரோரா சஜித்திடம் தூது போக, அப்படியான கோரிக்கைகள் ஏதையும் எடுத்துக் கொண்டு பேரம் பேச வரவேண்டாம். தூய்மையான எண்ணங்கயுடன் ஒரு ஆட்சி மாற்றத்துக்கு எங்களுடன் இணைந்து கொள்ள வருமாறு திலான் முகத்திற்கே சஜித் கூறி இருப்பதாகவும் ஒரு தகவல்.

தற்போது செல்வாக்குடன் இருக்கின்ற ஜேவிபி. அணுரதரப்புடன் பேச்சு வர்த்தைக்கு வாய்ப்புக் கேட்டு டலஸ் பல கடிதங்களை அந்தக் கட்சியின் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு எழுதியும் தூது அணுப்பிக் கொண்டும் இருந்தாலும் அவருக்கு இதுவரை ஜேவிபி எந்தப் பதிலையும் கொடுக்கவில்லை என்பதால், டலஸ் அந்தக் கூட்டணியில் தமக்கு வாய்ப்பை எதிர்பார்க்க முடியாத நிலை. இப்போது புதுக் கதையாக டலஸ் கட்சிகளை இணைக்கின்ற ஒரு பாலமாக அரசியலில் செயல்படத் தான் எதிர்பார்ப்பதாக தனது கம்புறுபிட்டிய தொகுதியில் நடந்த ஒரு சந்திப்பில் பேசி இருக்கின்றார்.

தனது ரணில் ஆதரவு அணியுடன் அறுபது (60) வரையிலான  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக கூறுகின்ற நிமல் லன்சா,  அணுர யாப்பாவுக்கு தமது அணியுடன் வந்து இணைந்து கொண்டால் ரணில் ஜனாதிபதி  தேர்தலில் வெற்றி பெற்றதும்  பிரதமர் பதவி உறுதி என்றும் அழைப்புக் கொடுத்திருக்கின்றார். மேலும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் மிகவும் வேண்டிய மிலிந்த மொரகொட மற்றும் ஜனக ரத்னாயக்க போன்றவர்களும் இந்தத் தேர்தலில் களத்துக்கு வருவது பற்றிய கதைகள் அடிபடுகின்றன.  ஆனால் நாம் முன்பு சொன்ன அனைத்து வேட்பாளர்களிலும் ஜேவிபி.அணுரகுமார திசாநாயக்க இந்தப் பட்டியலில் மிகவும் வலுவாகவும் முன்னணியிலும் இருக்கின்றார். என்பது நமது கணிப்பாக இருக்கின்றது.

சிறுபான்மை தலைமைகள் அவலம்!

இதற்கு முன்னர் ஜனாதிபதி  தேர்தல்கள் என்று வரும் போது இந்த நாட்டிலுள்ள சிறுபான்மைக் கட்சிகள் தாம் தான் இந்த நாட்டில் ஜனாதிபதியைத் தீர்மானப்போம் என்று கதையைச் சொல்லி பிரதான வேட்பாளர்களிடம் அதிகாரத்துக்கு வந்தால் தமக்கு கிடைக்க வேண்டி அமைச்சுக்கள் அதிகாரம் மிக்க பதவிகள் மற்றும் தேர்தலுக்குத் தேவையான காசுகளை மூட்டை மூட்டையாய் வங்கிக் கொண்டு அந்த வேட்பாளருக்கு உதவிய சந்தர்ப்பங்கள் நிறையவே நமது அரசியலில் வழக்கில் இருந்தன.

இந்த இடத்தில் 2015 நடைபெற்ற தேர்தலில் ஒரு தனித்துவத் தலைவர் பிரதான ஒரு வேட்பாளரிடம் கோடிக் கணக்கில் பணத்தை வாங்கி கொண்டு ஆதரவளிக்க இணக்கப்பாடுகளை எட்டி இருந்தாலும் அந்த சமூக மக்கள் தீர்மானம்-உணர்வுகள் அதற்கு மாற்றமாக இருந்ததால் பெற்றுக் கொண்ட அந்தப் பணத்தை குறிப்பிட்ட வேட்பாளரிடம் அந்தத் தனித்துவத் தலைவரின் மணைவி திருப்பிக் கையளித்து அவர்களிடம் மன்னிப்புக் கோட்ட ஒரு நிகழ்வும் இலங்கை அரசியல் பதிவாகி இருக்கின்றது. ஆனால் இந்த முறை அப்படியான தலைமைகளுக்கு வருகின்ற தேர்தல்களின் முன்பு போல பாரிய அளவில் பணம் சம்பதிக்கின்ற ஒரு நிலை தற்போதய அரசியலில் இல்லாமல் போய் இருக்கின்றது என்று தெரிகின்றது.

அதனால் வடக்குக் கிழக்கு அரசியல் தலைமைகள் மற்றும்  முஸ்லிம் தனித்துவதுவம் பேசுகின்றவர்கள் மற்றும் மலையகத் தலைமைகள் அனைத்துமே இந்தத் தேர்தலில் தீர்மானிக்கின்ற சக்தி நாங்கள்தான் என்று சொல்லி அரசியல் வியாபாரத்தை பண்ண முடியாத ஒரு நிலை இருக்கின்றது.  தெற்கில் ஜனாதிபதி வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் கட்சிகள் இன்று ஆட்களை வலை போட்டுத் தேடிக் கொண்டிருக்கின்றன. அப்படி எவரும் வந்தாலும் அவர்தான் தேர்தலில் வெற்றி பெறுவார், அவர் அதிகாரத்துக்கு வந்தால் நாங்கள் சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு தருகின்றோம் என்று கதையை தேர்தல் மேடைகளில் சொல்லி அரசியல் வியாபாரத்தை பண்ணிய காலம் மலையேறிவிட்டது போல் தெரிகின்றது.

இதனால் சிறுபான்மை அரசியல் வியாபாரிகள் 2024 ஜனாதிபதித் தேர்தலில் பெரும் ஏமாற்றத்தில் இருக்கின்றார்கள். எதிர்பார்க்கின்ற தேர்தல் நடந்தால் இவர்கள் இந்த சுற்றில் மக்களிடத்தில் எண்ண கதையைச் சொல்லப் போகின்றார்களோ தெரியாது. பெரும்பான்மை அரசியல் தலைமைகள் நாட்டை சூரையாடி விட்டார்கள். சிறுபான்மை தலைமைகள் தாம் சார்ந்த சமூகங்களை ஏமாற்றி தமது கஜானாக்களை நிறைத்துக் கொண்டார்கள். என்பதனையும் இந்த சுற்றில் சமூகம் தெளிவாக அறிந்தும் வைத்திருக்கின்றது.

நன்றி: 27.08.2023 ஞாயிறு தினக்குரல்

 

-நஜீப்-

தற்போது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கொடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் கடுகதி வேகத்தில் பயணிப்பது போல தெரிகின்றது. அவர் இந்தப் பயணத்தை ஐந்தாம் தலைமுறை விமானத்தின் வேகத்தில் சென்றாலும் எதுவுமே ஆகப் போவதில்லை. அப்படி ஒரு இலக்கு அந்தப் பயணத்தில் கிடையாது. ரணில் தொடர்ந்து அரசியல் களத்தில் இருப்பதானால் இந்தியாவின் உதவி அவருக்குத் தேவை.

அவருக்கு உள்நாட்டில் ஆதரவு கிடையாது. இது யதார்த்தம். அதனால்தான் இந்த வேகம். மொட்டுக் கட்சி வேட்பாளர் ரணில் கிடையாது என்பதனை அதன் செயல்பாட்டாளர்கள் தெளிவாக அறிவித்து விட்டார்கள். அதனால் இங்கு மிகப் பெரிய நாடகமொன்று நடக்கின்றது. இதனை பாமர மக்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் சிறுபான்மைத் தலைமைகள் அறிந்திருக்க வேண்டும்.

ஆனால் அவர்களும் ரணில் நடவடிக்கைகள் தொடர்ப்பில் இன்னும் விசுவாசத்தில் இருக்கின்றார்கள். பொருத்திருந்து பாருங்கள் நடப்பதை. தமது பதவிக் காலத்தில் இறுதி நிமிடங்கள் வரை ரணில் மற்றும் ராஜபக்ஸாக்களின் இந்த ஆட்டங்களை விரும்பியோ விரும்பாமலோ குடிகள் பார்த்துத்தான் ஆகவேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வு நாடகமும் வாக்கு வேட்டைக்கான முதலீடு மட்டுமே!

நன்றி: 13.08.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

நமது அரசியலில் அந்நிய ஊடுவல்!

Next Story