கடனுக்கு விழா நடாத்தும்  தேசம்!

-நஜீப் பின் கபூர்-

சமூகக் கலாச்சாரங்கள் காலத்தால் மாற்றமடைந்து வருவது பற்றி வரலாற்றில் நிறையவே சம்பவங்கள் கதைகள் உதாரணங்கள் நம் முன்னே இருக்கின்றன. மற்றுமொரு வகையில் இதனை மனித நாகரிகங்கள் என்றவகையிலும் பார்க்கின்றார்கள். அந்த வகையில் மனித வாழ்வில் துன்பங்கள் துயரங்கள் மாறுதல்கள் என்று வருவதும் இயல்பானதுதான். நமக்குத் தெரிந்த வரை இன்று வரை பிச்சை எடுப்பது கடன் வாங்குவது என்ற விடயங்களும் சமூகத்தில் தலைகுனிவாகத்தான் பார்க்கப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் இந்த ஐஎம்எப் விவகாரத்துடன் கடன் வாங்குவதற்கும் அது கிடைக்கின்ற போதும் அதற்குக் கொண்டாட்டங்கள் விழாக்கள் நமது நாட்டிலிருந்து தான் புதிதாக ஆரம்பித்திருக்கின்றது என்று குறிப்பிட வேண்டி இருக்கின்றது.

IMF Loan to Sri Lanka 2023 - YouTube

வழக்கமாக உள்ளாட்சித் தேர்தல் பற்றிய கதைகளை பேசி வந்த நாம் இந்த வாரம் ஐம்எம்எப் மகிழ்வும் கூத்தும் கும்மாலமும் பற்றிய கதைகளைப் பேசலாம் என்று எதிர்பார்க்கின்றோம். அதற்கு முன்னர் இந்த ஐஎம்எப் வரலாறு பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம். சர்வதேச நாணய நிதியம் என்பதைத்தான் ஐஎம்எப் என்று சுருக்கமாக உலகம் அழைக்கின்றது. நமக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு ஏறக்குறைய இரு வருடங்களுக்கு முன்னர் அதாவது 1945 திசம்பர் 27ல்தான் இது ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைமையகம் வசிங்டனில்தான் இருக்கின்றது. அமெரிக்க டொலரின் பெறுமானத்தை பாதுகாப்பதுதான் இதன் பிரதான நோக்கம். அதனால்தான் இன்றுவரை அது நாணயங்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கின்றது.

இந்த அமைப்பைக் கட்டுப்படுத்தும் பங்களிப்பில் 18வீதம் ஐக்கிய அமெரிக்காவுக்கு இப்போதும் இருக்கின்றது. இதில் இருக்கின்ற உறுப்பு நாடுகளில் மிக உயர்ந்த விகிதமாக இன்றும் இது இருக்கின்றது. எப்போதுமே ஒரு ஐரோப்பியர்தான் இதற்குத் தலைவராகவும் உலக வங்கிக்குத் தலைவராக  ஒரு அமெரிக்கரும் இருந்து வருகின்றார்கள். துவக்கத்தில் இதில் 29 நாடுகள் இருந்தன. இன்று இந்த எண்ணிக்கை 190 என்று இருக்கின்றது. ஐ.நா.வுக்கும் ஒரு உறுப்புரிமை இதில் இருக்கின்றது. இதனால் இன்றும் இந்த ஐம்எம்எப் மற்றும் உலக வங்கி என்பன தொடர்பான விமர்சனங்கள் இருந்து வருகின்றன.

ஐரோப்பிய நாடுகள் தமக்குள் யூரோ என்ற  நாணயத்தை அறிமுகம் செய்த போதும் அதற்கு அமெரிக்க பல வழிகளில் முட்டுக்கட்டை போட்டது. இன்றும் ரஸ்யா சீனா போன்ற நாடுகள் இந்த அமைப்புக்கள் விவகாரத்தில் திருப்தியுடன் இல்லாத ஒரு நிலையில்தான் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இனி இந்த அமைப்புக்கும் நமக்கும் உள்ள தொடர்புகள் உறவுகள் பற்றிப் பார்ப்போம். நமது நாடும் இதில் அங்கத்துவம் பெற்றிருக்கின்றது. எனவே அதில் கடன் வாங்கும் அடிப்படை உரிமை நமக்கும் இருக்கின்றது. ஆனால் இந்த ஐஎம்எப் அமைப்பில் கடன் வங்குகின்ற போது அதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படுவது வழக்கம்.

இந்த நிபந்தனைகளை அதிகாரத்தில் இருக்கின்ற அரசுகள் கடன் பெறுகின்ற போது பின்பற்ற-நிறைவேற்ற வேண்டும் என்ற விதி முறை இருந்து வருகின்றது. இதனால்தான் இலங்கை ஆட்சியாளர்கள் குடி மக்கள் தலைகளில் சுமைகளைத் தொடர்ச்சியாக  அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கின்றார்கள். மறுபுறத்தில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு  பொருட்களின் விலையேற்றம் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல். உள்நாட்டு வளங்களை இந்த நிறுவனங்களுக்கு அடகுவைப்பது விற்பது எல்லாம் இதன் பின்னணியில்தான் நடந்து கொண்டிருக்கின்றது. இதனால்தான் இன்று பெரும் இலாபமீட்டி கொடுக்கின்ற டெலிகெம் நிறுவனம் கூட விற்பளைக்கு விடப்பட இருக்கின்றது. அத்துடன் ஏயர் லங்க நிறுவனம் போன்ற இன்னும் பல நிறுவனங்கள் விற்பனைக்கு விடப்பட இருக்கின்றன. அவை அப்படி இருக்க..

இந்த நிறுவனத்திடம் கடனைப் பெற்றால்தான் நாம் இந்த நெருக்கடியான பொருளாதாரத்திலிருந்து மீள் எழ முடியும் என்று சிலர் கருத்துக்களை முன்வைத்த போது தற்போது ஆளும் தரப்பில் இருக்கின்ற மொட்டுக் கட்சியினரும் குறிப்பாக அப்போது மத்திய வங்கி ஆளுநராக இருந்த அஜித் கப்ரால் போன்றவர்கள் ஐஎம்பில் கடன் பெறுதை அன்று கடுமையாக எதிர்த்தனர். ஆனால் இன்று வேறு வழியில்லை என்ற நிலையில் அந்த நிறுவனத்திடம் ஆளும் தரப்பினர் மண்டியிட்டிருப்பதுடன் இந்தக் கடன் பெற்றதைப் பெரும் பாக்கியமாகவும் வரப்பிரசாதமாகவும் அவர்கள் கருதி வருகின்றனர்.

எனவேதான் கடன் வாங்குவது பிச்சை எடுப்பது எல்லாம் அவமானங்கள் என்று முன்பு சொல்லி இருந்தோம். ஆனால் இன்று இவையெல்லாம் புனிதமானவை என்றளவுக்கு நாட்டில் சிலரிடம் ஒரு கருத்து உருவாகி இருக்கின்றது-உருவாக்கப்ட்டிருக்கின்றது. இதனால்தான் இந்த கடன் கிடைத்ததும் பல இடங்களில் பட்டாசு கொழுத்தி பாட்சோறும் உண்டு அதற்கு விழா எடுத்து மகிழ்ந்திருக்கின்றார்கள். இதனை நாமும் ஊடகங்களில் பார்க்க முடிந்தது. எனவே கடன் வாங்கி வாழ்கை நடாத்துவது கொண்டாட்ட நிகழ்வுகள் என நாட்டில் சமூக காலச்சாரம் மாற்றம் அடைந்திருக்கின்றது என்று சொல்ல வேண்டி இருக்கின்றது.

இதிலுள்ள அடுத்த வேடிக்கை என்னவென்றால் இந்த ஐஎம்எப் கடனை பெற்றுக் கொள்வதில் உரிமை தொடர்பாகவும் ஒரு போராட்டம் நான் நீ என்று நடந்து கொண்டிருப்பதையும் பார்க்க முடிகின்றது. இதனை நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அவதானிக்க முடிக்கின்றறு. இது ஜனாதிபதி ரணில் சாதனை என்று சிலர் உரிமை கோரும் போது அப்படி இல்லை இது முன்னாள் ஜனாதிபதி கோட்டா பசிலின் துணையுடன் இதற்கு அடித்தளம் போட்டார். அவர்தான் இதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு அப்போதாய நிதி அமைச்சர் அலி சப்ரியை அதில் ஈடுபத்தி இருந்தார் என்று ஆளும் தரப்பினர் சிலர் தர்க்கம் பண்ணுகின்றனர். பெரும்பாலானவர்கள் அவரும் இவரும் சேர்ந்து பெற்ற பிள்ளை இது என்று இருதரப்பையும் சமாளித்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் நமக்குத் தெரிந்த கதைப்படி ஐஎம்எப் கடனை பெறுவதற்கு இலங்கை மிகவும் போராட வேண்டி இருந்தது. எறக்குறைய ஏழு மாதங்களுக் மேல் இலங்கை இந்தக் கடனைப் பெறுவதற்குப் போராடி வந்தது. பலத்த கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன்தான் இந்தக் கடன் நமக்குக் கிடைத்திருக்கின்றது. வெறும் ஏழு நாட்களில் கடனுக்கு விண்ணப்பித்து கிரீஸ் இந்தக் கடனையும் பெற்றிருக்கின்றது. அதேபோன்று  ஆர்ஜெந்தீனா இருபது நாட்களில் அதனைப் பெற்றிருக்கின்றது. இதற்குக் காரணம் இலங்கை தொடர்பில் இருக்கின்ற நம்பகத் தன்மை இல்லாத நிலை முக்கிய காரணமாக இருந்தது. சர்வதேசத்துடன் இலங்கை உறவுகள்  வழக்கம் போல  ஆற்றக் கடக்கும் வரை அண்ணன் தம்பி அதற்குப் பின்னர் நீ யார் நான் யார் என்றுதான் இருந்து வந்திருக்கின்றன. ஆனால் இந்த முறை இந்த நிறுவனங்களை இலங்கை வழமைபோல ஏமாற்ற முடியும் என்று நாம் கருதவில்லை. இது தொடர்பாக மிகுத்த அவதானத்துடன்தான் ஐம்எம்எப் இந்த முறை இருக்கப் போகின்றது என்று உறுதியாகத் தெரிகின்றது.

sri lanka

மறுபுறத்தில் அடுத்தடுத்த கட்டங்களில் இந்தக் கடன்களைப் பெறுவதாக இருந்தால் அதற்கான உறுதி மொழிகளை இலங்கை காப்பாற்ற வேண்டியும் இருக்கின்றது. அப்போதுதான் மக்களுக்கு இதிலுள்ள ஆபத்துக்களும் மறைக்கப்பட்ட பக்கங்களும் தெரிய வரும் என்பது நமது கருத்து. மேலும் இப்படிக் கிடைத்திருக்கின்ற பணத்தை கடந்த காலங்களைப் போல ஊழல் மோசடி செய்யக் கூடாது என்று கண்காணிப்புக்களும் போடப்பட்டிருக்கின்றது. ஆனால் இதிலிருந்து தமது பக்கட்டுக்களுக்கு எப்படி பங்கைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதிலும் நமது அரசியல்வாதிகள் புதிய பாதைகளைக் கண்டுபிடிப்புக்களில் இறங்கவும் வேண்டி இருக்கும். இதில் அவர்கள் எவ்வளவு தூரம் ஐஎம்எப் கண்களில் மண்னைத்தூவப் போகின்றார்கள் என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டி இருக்கின்றது. தேன் எடுக்கும் தொழில் பார்த்தவன் என்ன கையை நக்காமல் விடுவானா?.

இந்தக் கடனைப் பெற்றுக் கொண்டதன் மூலம் இலங்கைளயின் பொருளாதாரம் வீறுகொண்டு எழுந்து நிற்கும் என்று எவரும் கருதக் கூடாது. அதனைத்தான் நாம் கடந்த வாரம் யானைப் பசிக்கு சோளப் பொரி என்று சொல்லி இருந்தோம். அப்படியாக இருந்தால் ஏன் இதற்கு இந்தளவு பெரிய கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றது என்று ஒருவர் யோசிக்கக் கூடும். ஜனாதிபதி ரணில் வார்த்தைகளில் அதற்குப் பதில் சொல்வதாக இருந்தால் நாடு வங்குரோத்து என்ற அவமானத்தில் இருந்து விடுபடுகின்றதாம். ஆனால் யதார்த்தம் அப்படி இல்லை என்பதற்கு நாம் இந்த விவகாரத்தை ஒரு முறை ஞாபகமூட்டுகின்றோம். நீங்கள் ஒருவரிடம் கஷ;டத்துக்காக ஒரு தொகைப் பணத்தை வாங்கி இருந்து அதனை திருப்பத் தரமுடியாது என்று பகிரங்கமாக அறிவித்த பின்னர். அந்த மனிதனிடத்தில் மீண்டும் ஏதாவது உதவிகளை உங்களால் நாட முடியுமா? இது தான் நிலை.

இந்த ஐஎம்எபும் நமக்கு வழங்கி இருப்பதும் ஒரு கடனைத்தான். எனவே நாம் ஏற்கெனவே பெற்ற கடன்களை வழங்குவதற்கு நமக்குக் கடன் தந்தவர்கள் விட்டுக் கொடுப்புக்களை செய்ய வேண்டி இருக்கின்றது. அதனை நாம் அவர்களிடத்தில் இன்று பலத்காரமாகத்தான் வாங்கி இருக்கின்றோம். இந்தப் பின்னணியில் மீண்டும் எவராவது நமக்குக் கடன் வழங்க முன்வருவார்களா? இதற்கான  பதிலை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். இது கல்லில் நார் உரிக்கின்ற ஒரு வேலையாகத்தான் அமையும். எனவே பட்டாசு போட்டவர்களும் இதற்காக ஆடிப்பாடியவர்களும் இதனை எந்தளவுக்கு உணர்ந்திருப்பார்கள் என்று கேட்கத் தோன்றுகின்றது. இந்தக் கடன் இணக்கப்பாட்டில் இன்னும் மறைக்கப்பட்ட பக்கங்கள் நிறையவே இருக்கின்றன. அவை இன்னும் வெளியில் சொல்லப்படவில்லை என்பதனை ஜனாதிபதியே ஒத்துக் கொண்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரகசியமான பக்கங்கள் நிச்சயமாக குடிமக்கள் களுத்தை நெருக்குவதாகத்தான் இருக்க வேண்டும்.

ஐஎம்எப்பிடம் போகாது நாட்டைக் காப்பற்ற வேறு மார்க்கங்கள் ஏதாவது இருந்தால் கூறுங்கள் என்று எதிரணியிடம் ஜனாதிபதி ரணில் கேட்டிருந்தார். அதற்குப் பதில் கொடுத்த பீல்ட் மார்ஷல் கொள்ளையடிக்கும் போதும் ஊழல் பண்ணும் போதும் மட்டும் எங்களிடம் கேட்டுத்தானா இவற்றை நீங்கள் செய்தீர்கள். இப்போது மட்டும் அதற்கான மார்க்கங்கள் பற்றிப் பேசுகின்றீர்கள் நீங்கள் அதிகாரத்தை விட்டுப் போனால் அதற்குத் தேவையான மார்க்கங்களைப் பொது மக்களே பார்த்துக் கொள்வார்கள் என்று அவர் ரணிலுக்குப் பதில் கொடுத்திருந்தார் சரத் பொன்சேக்கா.

அத்துடன் நாம் ஐஎம்எப்பிடம் கடன் வாங்குவது இது முதல் முறையல்ல இதற்கு முன்னரும் பல தடவைகள் நாம் ஐஎம்எபிடம் கடன் வாங்கி இருக்கின்றோம். இது பதினேழாவது முறை. 1965 நாம் முதல் முறையாக இதிலிருந்த கடன் பெற்றிருக்கின்றோம். ஆனால் பட்டாசு கொழுத்தி இந்தக் கடனுக்கு விழா எடுத்திருப்பது ஜனாதிபதி ரணில் அதிகாரத்தில் இருக்கும் போதுதான் என்பது சிறப்பம்சமாகும். இது ஒரு வரலாற்றுப் பதிவும் கூட.

India Writes To IMF Supporting Sri Lanka's Debt Restructuring Plan: Report

இந்த முறை நாம் கடன் வாங்க அங்கு சென்ற போது வெரும் கையுடன்தான் போய் இருந்தோம். அப்போது அவர்கள் எங்கே இந்தக் கடன்கள் தொடர்பான உங்களது வேலைத் திட்டம் என்று கேட்டிருக்கின்றனர். இவர்கள் கைகளில் எந்த வேலைத் திட்டமும் இல்லாததால் அவர்கள் ஒரு வேலைத் திட்டத்தைக் கொடுத்து இதற்கு உங்களால் உடன்பட முடியுமாக இருந்தால் மட்டுமே எம்மால் கடன் தர முடியும் என்று தெளிவாக சொல்லி விட்டார்கள். அதுதான் இப்போது நடக்கின்றது. அவர்கள் கொடுத்த நிகழ்சி நிரல்படிதான் இன்று ஜனாதிபதி மற்றும் மொட்டுக் கட்சியினரும் தொழில் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நேரத்தில் ஐஎம்எப் நமக்கு கசப்பான மருந்தாக இருக்கலாம். ஆனால் ஆட்சியாளர்கள் இதனை மக்களுக்கு நஞ்சாக மாற்றித்தான் இப்போது பருகக் கொடுத்திருக்கின்றார்கள். அதனால்தான் இந்த துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் மக்கள் இலக்காகிக் கொண்டிருக்கின்றார்கள். போர் முடிந்த போது இப்போது நாடு வளம்பெறப் போகின்றது என்று சொன்னவர்கள். அரச சொத்துக்களைக் கொள்ளையடித்து அந்த வாய்ப்பை இழந்து விட்டார்கள். அதற்குப் பின்னர் கொரோனா முடிந்தும் நாட்டை சரி செய்து தருகின்றோம் என்றார்கள். இன்று நாடு எங்கே வந்து நிற்கிக்னறது என்பதனை நாம் அனைவரும் அறிந்தும் புரிந்தும் வைத்திருக்கின்றோம்.

நன்றி: 26.03.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பசிலின் தெரிவுதான் ரணில்!

Next Story

சாரா என்னும் புலஸ்தினி மரணம்! உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ?