நஜீப் பின் கபூர்
(நன்றி 21.09.2025 ஞாயிறு தினக்குரல்)
‘வெற்றிகரமான ஓரண்டு பூர்த்தி
என்று சான்றிதழ் கொடுத்தாலும்
சபாநாயகர் விடயத்தில்
மூக்குடைபட்டதையும் மறைக்காமல்
சொல்லித்தான் ஆக வேண்டும்’
இன்றுடன் அணுரகுமார ஜனாதிபதியாக அதிகாரத்துக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியடைகின்றது. இந்த நாளில் சாதித்ததும் சருக்கியதும் முட்டிக் குனிந்ததும் என்று ஒரு ஆய்வைச் செய்யலாம் என்று எதிர்பார்க்கின்றோம். அதே நேரம் அவர்களின் இந்த வெற்றி குறித்து நமக்கு இப்படி ஒரு கருத்தும் இருக்கின்றது.
இது ஒரு அசாதாரண நிகழ்வு. காலத்தால் முந்திக் கனிந்த ஒரு அருவடை என்பதுதான் எமது கருத்து. அதற்குக் காரணம் நாம் முன்பும் ஒரு முறை குறிப்பிட்டது போல ஒரு மூன்று சதவீத வாக்கு வங்கியை வைத்திருந்த ஜேவிபி-என்பிபி அதிகாரத்துக்கு வந்து ஒரு மாயஜாலம் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.
இன்று அமைச்சராக இருக்கின்ற சமந்த வித்தியாரத்தனவுடன் நாம் நடத்திய ஒரு கலந்துரையாடலின் போது மக்கள் நமக்கு எப்போது பத்து சதவீதமான வாக்கை வழங்குகின்றார்களோ அதனைத் தொடர்ந்து வருகின்ற தேர்தலில்தான் நாம் அதிகாரத்துக்கு வரமுடியுமாக இருக்கும் என்று நம்மிடத்தில் குறிப்பிட்டிருந்தார் சமந்த.
அந்த இடத்தில் கட்சியின் செயலாளர் டில்வினும் பக்கத்தில் நம்முடன் இருந்தார். இந்த சந்திப்பு என்பிபி. அதிகாரத்து வருவதற்கு சில வருடங்களுக்கு முன்னர் இன்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற பலகே என்பவரின் மஹியங்களை வீட்டில் நடைபெற்றது. இதனால்தான் இது அவர்களே எதிர்பார்த்திராத ஒரு அதிர்ஸ்டவசமான நிகழ்வு என்று நாம் சொல்லி வருகின்றோம்.
தேர்தலில் என்பிபி.க்கு இப்படி ஒரு பெரு வெற்றி வரும் என்று சர்வதேச ஊடகங்கள் கூட நம்பவில்லை. நாம் அறிந்த மதிக்கின்ற ஒரு இந்திய அரசியல் ஆய்வலர் வேண்டுமானால் இவர்கள் மூன்றும் மூன்று ஆறு சதவீத வாக்குகள் என்ற அளவுக்கு மேல் ஒருபோதும் தேர்தலில் வாக்குகளைப் பெற மாட்டார்கள் என்று திட்டவட்டமாக சொல்லி இருந்தார்.
அப்போது மனிதன் அணுர விவகாரத்தில் மூக்குடைபடப் போகின்றார் என்று இதே வார இதழில் அவருக்குப் பதிலும் கொடுத்திருந்தோம். மு.கா. ஹக்கீமும் அதனையே எளிய கணக்காக தான் சார்ந்த சமூகத்துக்கு கற்றுக் கொடுத்து அணுராவுக்கு தேர்தலில் வாய்ப்பே கிடையாது என்று போதித்து வந்தார்.
இப்போது அன்று தேர்தல் நேரத்தில் என்பிபி. சந்தித்த சவால்கள் பற்றி சற்றுப் பார்ப்போம். ஜனாதிபதித் தேர்தலில் முதல் சுற்று எண்ணிக்கையில் அணுரவுக்கு ஐம்பது பிளஸ் சதவீத வாக்குகளை பெற முடியாது போனாலும் இரண்டாம் சுற்றில் அணுர சுலபமாக தனது இலக்கை எட்டினார். அதன் பின்னர் நடந்து எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் என்பிபி. அனைத்து வட்டாரங்களையும் போல வெற்றி பெற்றாலும் எதிரணிக்கு சமமான உறுப்புரிமையைத்தான் அங்கு பெற முடிந்தது.
இது நமது நாட்டு உள்ளாட்சி தேர்தல் முறையில் உள்ள ஒரு இயல்பு நிலை. அப்போது அணுரா செல்வாக்கு சரிந்து விட்டது என்று எதிரணியினர் சொல்லி வந்தனர். இதனைத் தொடர்ந்து வந்த பொதுத் தேர்தலில் என்பிபி. அறுபத்து ஒரு சத வீதவாக்குகளைப் பெற்றதுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் பெற்று (159) அதிரடி காட்டியது.
பின்னர் வந்த உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மை உள்ளூராட்சி வட்டாரங்களையும் சபைகளையும் என்பிபி. வெற்றி பெற்றாலும் நாம் முன்பு சொன்ன எல்பிடிய தேர்தல் போல ஒரு நிலைதான் சில சபைகளில் வந்தது. இதனை வைத்து அரசின் செல்வாக்கு சரிவு என்று எதிரணியினர் இன்றும் கதைகளைச் சொல்லி வருகின்றனர்.
மாகாணசபைத் தேர்தல் விரைவில் வருமாக இருந்தால் எதிரணியின் இந்த கணக்குகளுக்கு நல்ல பதில் கிடைக்கும் என்று நாம் முன்கூட்டியே சொல்லி வைக்கின்றோம். அது உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் போல ஒரு போது அமைய மாட்டாது. பொதுத்தேர்தலுக்குச் சமாந்திரமான ஒரு தேர்தல் முடிவுபோலத்தான் அது வரும் என்பது எமது கணிப்பு. வடக்குக் கிழக்கு மாகாணசபைகளில் வேண்டுமானால் முடிவு சற்றுவித்தியாசமாக அமையலாம்.
கடந்த தேர்தலின் போது இப்படியும் சொல்லப்பட்டு வந்தது. என்பிபி. அதிகாரத்துக்கு வந்தாலும் அவர்களுக்கு அனுபவமில்லை அத்துடன் அவர்கள் கொலைகாரர்கள். அதனால் சர்வதேசம் அவர்களை மதிக்காது-நம்பாது.
இதனால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிப்படையும். டொலரின் விலை நானூரைத் (400) தாண்டும் என்றெல்லாம் விமர்சித்தார்கள். மேலும் இவர்கள் இந்திய விரோதிகள். அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் இவர்களை ஒருபோதும் அங்கிகரிக்க மாட்டாது. அணுராவுக்கு ஆங்கிலம் தெரியாதது ஒரு பெரும் குறைபாடு என்றெல்லாம் அப்போது பேசியதை நாம் கேட்டிருந்தோம்.
கம்யூனிஸ்டுக்கள் அதிகாரத்துக்கு வந்தால் பௌத்த கலாச்சாரத்துக்குப் பெரும் பாதிப்பு. விகாரைகளுக்கு நெருக்கடி பௌத்த தேரர்களுக்குத் தானம் கிடையாது. பெரஹர போன்ற நமது கலாச்சாரப் பாரம்பரியங்களுக்கு கடும் பாதிப்பு என்று சிங்கள-பௌத்த மக்களை சம்பிரதாய அரசியல் தலைவர்கள் எச்சரித்தும் பயமுறுத்தியும் வந்தார்கள்.
தனித்துவ தலைவர்களும் இதே பாணியில் குறிப்பாக முஸ்லிம் தலைவர்கள் அணுர அதிகாரத்துக்கு வந்தால் நோன்பு கிடையாது பெருநாள் கிடையாது தமது மார்க்கக் கடமைகளுக்கு பெரும் நெருக்கடிகள் என்றெல்லாம் பரப்புரை செய்து அணுரவுக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பதை தடுக்க முனைந்தனர். ஆனால் அனைத்து பொதுமக்கள் இனம் மதம் என்ற பேதமின்றி வரலாற்றில் என்றுமில்லாத ஒரு வெற்றியை அணுரவுக்கு-என்பிபி.க்குக் கொடுத்திருந்தனர்.
வங்குரோத்து நாடாக இனம்காட்டப்பட்ட நாடு இன்று அதிலிருந்து மீண்டிருக்கின்றது. வீண் விரையங்கள் ஊழல் மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டிருக்கின்றது. அணுர அதிகாரத்து வந்த நாள் முதல் தொடர்ந்தும் டொலர் முன்னூறு (300ரூபா) என்ற எல்லைக் கோட்டைத் தாண்டாதுள்ளது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அது 297 என்ற அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
அனைத்து நாடுகளும் பதவியில் இருக்கின்ற அணுர அரசுடன் மிகவும் நல்லறவுடன் உறவுகளைப் பேனுவதில் ஆர்வமாக இருக்கின்றது. இந்திய அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல சீனா ரஸ்யா போன்ற நாடுகளும் கூட அணுர அரசுக்கு நல்ல நண்பனாக இருந்து ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன. ட்ரம்புடன் பேசி 44 சதவித வரியை வெறும் 20 என்ற அளவுக்கு கொண்டுவந்தது அணுராவுக்கு கிடைத்த மிகப் பெரும் அங்கிகாரம். இதுவிடயத்தில் செல்வாக்கான இந்தியாவின் நிலை நாம் அறிந்ததே.
சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஐஎம்எப். போன்ற அமைப்புக்கள் கூட அரசின் தூய்மையான செயல்பாடுகளைப் பகிரங்கமாகப் பாராட்டி வருகின்றன. பொருளாதார வளர்ச்சி வீதம் எதிர்பார்த்ததை விட ஆரோக்கியமான ஒரு நிலையில் இருக்கின்றது. நின்று போய் இருந்த பல அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது மீண்டும் ஆரம்பமாகி இருக்கின்றது. மேலும் புதிய வெளிநாட்டு உதவிகள் உடன்படிக்கைகள் என்றெல்லாம் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பமாகி வருகின்றன.
கொழும்பு மத்திய பஸ் நிலையம் அது அமைக்கப்பட்ட அறுபது ஆண்டுகளுக்குப் பின்னர் நவீன வசதிகளுடன் பூனரமைக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் நூறு ரயில் நிலையங்கள் நவீனமயப்படுத்தப்பட இருக்கின்றன. ஆங்கிலேயர் அமைத்த கொழும்பு மற்றும் மருதானை புகையிரத நிலையங்கள் இப்போதுதான் முதல் முறையாக நவீன மயப்படுத்தப்பட இருக்கின்றது.
இதுவரை இருந்து வந்த அரச ஊழியர்களின் சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. 2025ல் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. 2026 மற்றும் 2027 வரவு செலவுத்திட்டத்தில் மேலும் தலா முப்பது சதவீத சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி அணுரகுமார திசாநாயக்க மீண்டும் உறுதி செய்திருக்கின்றார். அதே போன்று ஓய்வூதியக்காரர்களுக்கு கொடுப்பனவுகள் 2025ல் அதிகரிக்கப்பட்டது. 2016, 2027களிலும் அதில் ஓய்வூதியக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்கள் வர இருக்கின்றது.
மேலும் ஊழல் மிகுந்த பொலிஸ் மற்றும் நீதித்துறைகளில் கனிசமான மாற்றங்கள் சட்டம் அனைவருக்கும் சமம் என்று அரசு உறுதியாகச் சொல்லி அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி இருக்கின்றது.
மோசடியான நீதிபதிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிலர் இப்போது சிறைகளிலும் இருக்கின்றார்கள். இதனால்தான் நாட்டில் நடந்த கொலைகள் கொள்ளைகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் புதிய நம்பிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாதாள உலகத்தார் மற்றும் போதை வியாபாரிகளுக்கும் முடிவு கட்டுதால் என்று அரசின் செயல்பாடுகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்படி ஒரு ஆட்சி மாற்றம் நாட்டில் நடந்திருக்காவிட்டால் நமது சந்ததியினர் எதிர்காலம் எப்படி அமைந்திருக்கும் என்று ஒரு முறை கற்பனை செய்து பாருங்கள். புதிதாக அறுபதாயிரம் பேருக்கு தொழில் வாய்ப்புக்கள். மேலும் அரச நிறுவனங்களில் இருக்கும் வெற்றிடங்களை நிரப்புவது போன்ற நடவடிக்கைகளில் அரசு தீர்மானங்களை எடுத்திருக்கின்றது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த காலங்களில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக சுதந்திரமாக அரசு அனுசரனையுடன் இயங்கி வந்த இனவாதிகளை இந்த அரசாங்கம் இன்று கட்டிப்போட்டிருக்கின்றது.
அதே நேரம் ரணில் அல்லது மஹிந்த அதிகாரத்தில் இருந்திருந்தால் இந்த இனவாதிகள் எப்படி எல்லாம் சிறுபான்மை சமூகங்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.
தனக்குத் தானே விலங்கு
மாட்டிக் கொண்ட என்பிபி
நாட்டில் தூய்மையான ஆட்சி ஊழலற்ற நிருவாகக் கட்டமைப்பு என்று ஆட்சியாளர்கள் அடித்துச் சொல்லி வருகின்றார்கள். அதனை அவர்கள் கடைப்பிடித்தும் வருவதாகத் தெரிகின்றது. எனவே தூய்மையான அரசுக்கு என்பிபி.ஆட்சியாளர்கள் தனக்குத்தானே விலங்கு மாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் ஒரு போது கொமிஸ் பெறுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை. கடந்த காலங்களில் இந்த கொமிஷ; கொள்ளை 20-30 என்ற வீதத்தையும் கடந்திருந்தது. சில அபிவிருத்தித் திட்டங்களின் பெயரில் பணம் பெறப்பட்டிருந்தாலும். அப்படி ஒரு நிகழ்வோ திட்டமே நாட்டில் எங்கும் நடந்திருக்கவில்லை.
போதை வியாபாரங்கள் போலிப் பதிவுகளில் வாகன வர்த்தகம், வாகனக் கொள்ளை இயற்கை வளங்களை சூரையாடிய அரசியல்வாதிகள் விடயத்தில் அரசு கடும் நிலைப்பாட்டில் இருப்பதால் நமது வருங்காலச் சந்ததியினருக்கு ஒரு நம்பிக்கையான நிலை நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்றது என்பதனை வஞ்சகமின்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.
இது நாம் அணுரவுக்குக் கொடுக்கின்ற ஒரு நற்சான்றிதழ் என்று சொன்னாலும் அதில் குறைகள் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் விமர்சனம் வரத்ததான் செய்யும்.
அரசு கடும் போக்கான ஒன்றாக இருந்தாலும் மிகவும் நிதானமாகவே கரியங்களைக் கையாண்டு வருகின்றது-பயணிக்கின்றது. அதே நேரம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தான் சொல்லி இருந்த விடயங்களையும் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது.
எங்கே கள்வர்களைப் பிடிக்கின்றோன் என்று சொன்னீர்கள் செய்து விட்டீர்களா என்று எவரும் இப்போது கேட்பது கிடையாது. அணுர அது நடக்கும் அப்போது கதறாதீர்கள் என்று சொன்னதுதான் இப்போது நடந்து வருகின்றது. ஆனால் அதனை அரசியல் பழிவாங்கள் என்றும் சிலர் சொல்லி வருகின்றார்கள்.
கடந்த ஆட்சியாளர்கள் மாகாணசபைத் தேர்தலை நடத்தாது அதற்கு நொண்டிக்காரணங்களை சொல்லிக் கொண்டிருந்ததுடன் எல்லை நிர்ணயம் என்ற ஒன்றை கொடுண்டு வந்து தெற்கில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்துக்கும் ஆப்பு வைக்கின்ற ஒரு திட்டத்தை கடந்த காலத்தில் முன்வைத்திருந்தனர். அதனை இந்த அரசு தீர்த்து 2026 முதல் பகுதியில் தேர்தலை நடாத்த இருக்கின்றது என்றும் சொல்லப்படுகின்றது.
சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஜனாதிபதி அணுரகுமார திசாநாயக்க சாதித்திருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அவரது முதல் சபாநாயகர் நியமனத்தில் அவர்கள் முகத்தில் கறியைப் பூசிகொண்டார்கள் என்பதனையும் இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும்.
அதற்கு இதுவரை தமது பக்க நியாயத்தை வழங்க இந்த அரசாங்கத்தால் முடியாமல் போய் இருக்கின்றது என்பதனை அவர்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அல்லது அதற்காக பகிரங்க மன்னிப்பாவது கேட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை.
இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்த அரசு புரட்சிகரமான தீர்வுகளையோ மாற்றங்களையோ கொடுக்கும்-கொண்டுவரும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. இந்தியாவில் கூட இப்போது அதற்கு பாரியளவில் அழுத்தங்கள் இல்லை. மாகாணசபைத் தேர்தலை நடாத்தி வடக்குத் கிழக்கு மக்களை அரசு திருப்திப்படுத்த முனையக் கூடும்.
முதலமைச்சர் அமைச்சர்கள் என்று அங்குள்ள சம்பிரதாய தமிழ் தரப்புக்கள் அதிகாரத்துக்கு வந்தாலும் நல்லது என்று அணுரதரப்பினர் சிந்திக்கக் கூடும். இதன் மூலம் இந்தியாவை அணுர திருப்திப்படுதலாம். ஆனால் மாகாணசபைத் தேர்தலில் கூட ஆளும் தரப்பினர் ஒரு நல்ல போட்டியை அங்கும் கொடுக்கக் கூடும். அதன் மூலம் தனது ஆதிக்கத்தை அவர்கள் வடக்குக் கிழக்கில் நிலை நிறுத்த முற்படுவார்கள் என்று நாம் நம்புகின்றோம்.
எதிரணியினர் அணுர மீது தொடர்ச்சியான விமர்சனங்களை செய்து கொண்டிருந்தாலும் பெரும்பாலும் அவை வீரியம் குறைந்ததாகவும் பலயீனமானவையாகவும்தான் நமக்குத் தெரிகின்றன.
அணுரவின் அசாதாரணமான ஆளுமை காரணமாக இன்றுள்ள அரசியல்வாதிகள் மத்தியல் அவர் தனிக்குரையாக களத்தில் சாதனை படைத்துக் கொண்டு வருகின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். அதே நேரம் அவருக்கு உயிர் ஆபத்துக்களும் நிறையவே இருந்து வருகின்றது.