ஓமிக்ரான் லேசான வைரஸ்னு நினைச்சிராதீங்க.

ஓமிக்ரானை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும், எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இதிலிருந்து தப்பிக்கலாம் ஆனால் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது என கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது தனிமைப்படுத்தலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் அதிகமாக பரவத் தொடங்கி இருப்பதையடுத்து, அதைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மகராஷ்டிரா, டெல்லி, கேரளா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம் என இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொரொனா மற்றும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்திலும் , அதைத் தொடர்ந்து டெல்லியில் மக்கள் ஓமிக்ரான் வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல தெலங்கானா, தமிழகம், குஜராத், கேரளா, ஹரியான, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் ஓமிக்ரான் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஓமிக்ரான் பரவலைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களும் மீண்டும் இரவு நேர ஊரடங்கும் வார இறுதி ஊரடங்கை பிறப்பித்துள்ளன.

WHO எச்சரிக்கை

இந்தியாவில் மூன்றாவது கொரோனா அலை ஆரம்பமாகியுள்ள நிலையில் இது பெரும்பாலும் ஒமிக்ரான் வைரஸால் இயக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஓமிக்ரான் மிகவும் தொற்றுநோயாக நம்பப்படுகிறது எனவும், உலக அளவில் அதிகமானோர் பாதிக்கப்படுவதால் WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் புதிய ஓமிக்ரான் மாறுபாட்டை லேசானது என்று நிராகரிக்கக்கூடாது என எச்சரித்துள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவர் பேட்டி

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தனியார் செய்தி நிறுவனம் ஒன்ரிடம் பேசிய ஜோத்பூர் எய்ம்ஸில் பணிபுரியும் மருத்துவர் தன்மய் மோதிவாலா ஓமிக்ரானை இலகுவாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என எச்சரித்துள்ளார். எய்ம்ஸில் குழந்தை மருத்துவத் துறையில் பணிபுரியும் டாக்டர் தன்மய் மோதிவாலா, புதன்கிழமை கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது, இதையடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஐசியுவில் நோயாளிக்கு சிகிச்சையளித்த பிறகு எனக்கு லேசான தலைவலியு, ஆழ்ந்த பலவீனம் ஏற்பட்டது எனவும் இது ஒரு முக்கிய அறிகுறி என்பதால் தான் உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டேன் என்றார்.

மருத்துவர் எச்சரிக்கை

தொடர்ந்து பேசிய மருத்துவர் மோதிவாலா, கடந்த ஆண்டுகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்ட போதும் தான் மருத்துவமனை பணியாற்றி நிலையில் முன்பும் மருத்துவர்களுக்கு நோய்த்தொற்று இருந்தது எனவும், ஆனால் இந்த முறை அதிக எண்ணிக்கையிலான மருத்துவ பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது அதிகம் கவலை அளிக்கக்கூடிய விஷயம் என கூறினார். அதிக எண்ணிக்கையிலான மக்கள் நோயால் பாதிக்கப்படும்போது மருத்துவ அமைப்புக்கு அது ஒரு பெரும் சுமையாக இருக்கும் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தடுப்பூசி முகக்கவசம் அவசியம்

மூன்றாவது அலையில் மக்கள் தங்கள் பங்கை கடமையாக கருதி செய்ய வேண்டும் எனக் கூறிய அவர் அனைவரும் முகக்கவசம் அணிந்து தங்கள் வீடுகளில் அமர்ந்தால் தான் ஹீரோவாக முடியும் எனவும், தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது எனக் கூறியுள்ளார். மேலும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உள்ள சிலருக்கு, அறிகுறிகள் லேசாக இருக்கலாம் எனவும், ஆனால் ஆபத்தில் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது எனவும், நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இதிலிருந்து தப்பிக்கலாம், ஆனால் அவர்களுக்கு அன்புக்குரியவர்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

Previous Story

நடுவானில் கும்மாளம்; கனடா பிரதமர் கோபம்

Next Story

சிக்கிய மோதி: நேரில் பார்த்தவர்கள் தகவல்கள்