ஒலிம்பிக் ஊக்கமருந்து பரிசோதனை எப்படி நடக்கிறது?

15 வயதான ரஷ்ய ஃபிகர் ஸ்கேட்டர், கமிலா வலீவா, ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த போதிலும், குளிர்கால ஒலிம்பிக்கில் தொடர்ந்து போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளார். இது, விளையாட்டு வீரர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்துவதற்காக ஊக்கமருந்து பயன்படுத்துவது குறித்த பிரச்னை மீது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கமிலா விதிகளை மீறியது எப்படி?

வலீவா தன்னுடைய அணியான ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி அணி தங்கம் வெல்வதற்கு உதவினார். ஒலிம்பிக் போட்டியில் குவாட்ரபிள் எனப்படும் கடினமான தாவலை (Quadruple Jump) நிகழ்த்திய முதல் பெண் ஸ்கேட்டிங் வீராங்கணை என்ற பெயரைப் பெற்றார் கமிலா வலீவா. இருப்பினும், டிசம்பரில் சேகரிக்கப்பட்ட மாதிரியிலிருந்து சர்வதேச ஊக்கமருந்து சோதனை நிறுவனம் மேற்கொண்ட பரிசோதனையில் அவர் தோல்வியடைந்ததாகத் தெரிவித்தது.

வலீவாவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்துக்கான சோதனையில் ட்ரைமெடாசிடைன் என்ற மருந்தைப் பயன்படுத்தியிருப்பது உறுதியானது. இது பொதுவாக இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையக்கூடிய ஆஞ்சினா என்ற பிரச்னைக்காகக் கொடுக்கப்படுகிறது. இந்த மருந்து விளையாட்டு வீரர்களுக்கான தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளது. ஏனெனில், இதயம் சிறப்பாகச் செயல்பட இந்த மருந்து உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் வலீவாவை அவருடைய வயது காரணமாகப் போட்டியிட அனுமதித்தது. செவ்வாய்க்கிழமை தொடங்கும் ஒற்றையர் ஸ்கேட்டிங் போட்டியில் வலீவா இரண்டாவது தங்கப் பதக்கத்தை இலக்காகக் கொண்டுள்ளார்.இந்நிலையில், அவருடைய பயிற்சியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் இதற்குப் பொறுப்பாக்கப்பட வேண்டும் என்று பரவலாகக் குரல்கள் எழுகின்றன.

ஊக்கமருந்து என்றால் என்னஅது எவ்வாறு சோதிக்கப்படுகிறது?

சில விளையாட்டு வீரர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்த மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். இது மற்ற போட்டியாளர்களைவிட அவர்களுக்கு நியாயமற்ற பலன்களை வழங்குகிறது.அனபோலிக் ஸ்டிராய்டுகள், ஹார்மோன்கள், இதய மருந்துகள், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள், பீட்டா-2 அகோனிஸ்டுகள் (ஆஸ்துமா கட்டுப்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள்) ஆகியவை அப்படிப் பயன்படுத்தப்படும் ஊக்கமருந்துகளில் அடங்கும்.

உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பில் (World Anti-Dropping Agency, WADA), பணிபுரியும் விஞ்ஞானிகளால் விளையாட்டு வீரர்களின் ரத்தமும் சிறுநீரும் செயல்திறனை மேம்படுத்தும் ஊக்கமருந்து பயன்பாட்டைக் கண்டறிய பரிசோதிக்கப்படுகின்றன. முன்னாள் கிழக்கு ஜெர்மனி போன்ற பல நாடுகள், தங்கள் போட்டியாளர்களுக்கு செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

பல ஆண்டுகளாக அப்படியிருந்த சூழலில், தடகளத்தில் இருந்து ஊக்கமருந்து பயன்படுத்துவதை உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு தடுக்க விரும்புகிறது. இது ஒலிம்பிக்கின் நம்பகத்தன்மையை அழிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பினுடைய கட்டளையின் கீழ் பிராந்திய மற்றும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்புகளால் சோதனை செய்யபடுகிறது. ஆண்டின் எந்த நாளிலும் விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்படலாம்.

ஊக்கமருந்து பயன்படுத்துவதற்குக் கிடைக்கும் தண்டனைகள் என்ன?

விளையாட்டு வீரர்கள் விளையாட்டு நிகழ்வுகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அவர்களுடைய பதக்கங்களைத் திரும்ப ஒப்படைக்குமாறு வலியுறுத்தப்டுவார்கள். அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு எந்த விளையாட்டிலும் போட்டியிருவதற்கு, பயிற்சி எடுப்பதற்கு மற்றும் பயிற்சி அளிப்பதற்குத் தடை விதிக்கப்படும்.அதோடு, அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.

நடுநிலையான ஒலிம்பிக் கமிட்டி அணியில் போட்டியிடும்போது கூட, ரஷ்ய விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் இருந்து முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.அமெரிக்க ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் தலைவர் டிராவிஸ் டைகார்ட், சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட ரோட்சென்கோவ் சட்டத்தைப் பயன்படுத்தி வலீவாவின் செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது அமெரிக்கா வழக்கு தொடர முயற்சி செய்யலாம் என்றார்.

அமெரிக்கர்கள் அல்லாதவர்கள் உட்பட ஊக்கமருந்து பயன்படுத்தியவர்களின் நடவடிக்கைகளால், அமெரிக்க விளையாட்டு வீரரின் இறுதி முடிவுகள் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கவும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கவும் இது உதவுகிறது.

ரஷ்யா ஊக்கமருந்து விதிகளை எப்படி மீறியது?

2016-ஆம் ஆண்டில், கோடை மற்றும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் ரஷ்ய அரசு ஊக்கமருந்து திட்டத்தைச் செயல்படுத்தியது தெரியவந்தது.ரஷ்யா ஒருங்கிணைத்து நடத்திய 2014-ஆம் ஆண்டின் சோச்சி குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் போது நடந்த ஊக்கமருந்து பரிசோதனைகளும் இதில் அடக்கம். அந்தப் போட்டிகளில் ரஷ்யா பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் விசாரணை கமிஷன் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பான ருசாடா, தடகள வீரர்களுக்குப் பரிசோதனைகள் குறித்து முன்கூட்டியே அறிவித்தாகக் கூறியது. மேலும், ஆயிரக்கணக்கான மாதிரிகளை அழித்த்து. ஊக்கமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளையும் அவர்களுடைய குடும்பத்தினரையும் கொடுமைப்படுத்தியது மற்றும் தவறவிட்ட பரிசோதனைகளை மறைக்க லஞ்சம் வாங்கியதை உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் விசாரணை கமிஷன் வெளிப்படுத்தியது.

ரஷ்ய பாதுகாப்பு சேவையான ஃபெடரல் செக்யூரிட்டி சேவையின் அதிகாரிகள் சோதனை ஆய்வகங்களில் பங்கெடுத்தார்கள். இது, “மாஸ்கோ ஆய்வக நடவடிக்கைகளில் ரஷ்ய அரசின் நேரடி மிரட்டல் மற்றும் குறுக்கீடு,” ஆகியவற்றின் பரந்த வடிவத்தின் ஒரு பகுதியாகும் என்றும் அது கூறியது.

ஊக்கமருந்து பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பல ரஷ்ய விளையாட்டு வீரர்கள் லண்டன் 2012 ஒலிம்பிக்கில் போட்டியிட்டதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு கூறியது.இதன் விளைவாக, 2016 ரியோ கோடைக்கால விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் தடகளப் போட்டிகளிலிருந்து தடை செய்யப்பட்டார்கள். 2019-ஆம் ஆண்டில், அனைத்து முக்கிய விளையாட்டு நிகழ்வுகளில் இருந்தும் ரஷ்ய அணிகள் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பால் தடை செய்யப்பட்டன.

இந்தத் தடை, இந்த ஆண்டு டிசம்பர் வரை நிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினர் ஒருவர், ரஷ்யா தனது ஊக்கமருந்து கலாச்சாரத்தை ஒழிக்கும் வரை எதிர்கால விளையாட்டுகளில் இருந்து இடைவெளி எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.

ரஷ்ய அரசு, அதன் செலவில் ஊக்கமருந்து திட்டத்தை முன்னெடுத்ததாகக் கூறப்பட்டதை மறுத்துள்ளது. ஆனால், ஊக்கமருந்து பயன்படுத்துவதில் நாட்டில் குறிப்பிடத்தக்க பிரச்னை இருப்பதை ஒப்புக்கொண்டது.

பெய்ஜிங் விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் ஏன் போட்டியிருகிறார்கள்?

ரஷ்யா தற்போது கோடை அல்லது குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரஷ்ய விளையாட்டு வீரர்கள் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி என்ற நடுநிலை அணியினுடைய கொடியின் கீழ் போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

போட்டியாளர்கள், தாங்கள் தூய்மையானவர்கள் என்றும் முந்தைய ஊக்கமருந்து ஊழலுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் நிரூபித்திருக்க வேண்டும்.

பதக்கங்களை வெல்லும் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் அணியின் போட்டியாளர்கள் மேடையில் தேசிய கீதத்தைக் கேட்கவோ, அவர்களின் கொடி உயர்த்தப்படுவதைப் பார்க்கவோ அல்லது ரஷ்ய கொடிகளைத் தங்கள் ஆடைகளில் அணியவோ முடியாது.

டோக்கியோவில் 2020 கோடைக்கால ஒலிம்பிக்கில் மற்ற நாடுகளின் விளையாட்டு வீரர்கள், ரஷ்யர்கள் போட்டியிட அனுமதிக்கப்பட்டதற்கே புகார் தெரிவித்தார்கள்.

Previous Story

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு என்ன நேர்ந்தது?

Next Story

ஈஸ்டர் தாக்குதல்! ஹேமசிறி விடுதலை