-நஜீப்-
முன்னாள் ஆளும் தரப்பு அமைச்சர் சந்திரசேன ஜனாதிபதிக்கு மேலும் ஒரு வருடம் கொடுங்கள். அவர் எல்லாப் பிரச்சினையையும் தீர்த்துத் தருவார் என்று நேற்று ஊடகங்கள் முன் பேசினார். அதே கதையை இன்று ரணிலும் நேரடியாகச் சொல்லி இருக்கின்றார். இதே ரணில் சிலரை கூலிக்கு அமர்த்தி அவரால் மட்டுமே நெருக்கடிக்குத் தீர்வு தர முடியும் என்று பரப்புரை பண்ணிக் கொண்டிருந்தார்.
அவர்களது குடும்பப் பத்திரிகையும் கூட அந்தக் செய்திகளை முன் பக்கத்தில் வழக்கமாக பேசியும் வருகின்றது. அதனால்தான் ரணிலைப் பிரதமராக்கி பிரச்சினைக்குத் தீர்வு என்ற செய்திகள் மக்கள் மத்தியில் வந்தது. இவை எல்லாம் அவரே ஆள் வைத்து செய்த பிரச்சாரம் என்று நாம் அன்றிலிருந்து அடித்துச் சொல்லி வருகின்றோம்.
இன்று அவரே நேரடியாக தனக்கு தலைமையை தந்தால் பிரச்சினையை ஒரு வருடத்தில் தீர்க்கின்றோன் என்று கூறுகின்றார். இதனையும் நம்புகின்ற ஒரு கூட்டம் நாட்டில் இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக இதனை ஒரு பெரிய இசுவாகக் கூட சில ஊடகங்கள் எடுத்துக் கொண்டு அந்த செய்திக்கு முக்கியத்துவமும் கொடுத்து வருகின்றன.
இது நடை முறைச்சாத்தியம் இல்லாத ஒரு விடயம். ஒரு ஆசனத்தை வைத்துக் கொண்டு அவர் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று பேசுவது என்ன வேடிக்கை. அடுத்து இந்த நாட்டில் நெருக்கடி நிலைக்கு அவர் மிகப் பெரியதோர் பங்கையும் ஏற்க வேண்டி இருக்கின்றது. அவருக்கும் ராஜபக்ஸாக்களுக்கும் எந்த முரன்பாடுகளும் கிடையாது.
அவர் ஒரு அரசியல் குற்றவாளி. ஓட்டு மத்திய வங்கியையே கொள்ளையடித்த விவகாரத்தில் அவர் மீது நடவடிக்கைகளுக்கு நிறையவே இடமிருக்கின்றது என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படியான செய்திகளை சொல்லி மக்களை பிழையாக வழிநடாத்திச் செல்வதை இந்த நேரத்தில் ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்பது எமது கருத்து.
நம்மைப் பொருத்து இது ஒரு நகைச்சுவை என்பது எமது வழக்கமான நிலைப்பாடு. இப்படியான கதைகளைக் கட்டி அவர் தனது இமேஜை மீண்டும் நாட்டில் கட்டியெழுப்ப முனைகின்றார் என்பது எமது குற்றச்சாட்டு. இதே அவரது ஒரு வருடக் கதை.
மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்று, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று (17) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் கோரிக்கைக்கு அமைய ஒட்டுமொத்த அரசாங்கமும் விலக வேண்டும். மக்கள் உண்மையில் என்னை விரும்பினால், இடைக்கால அரசாங்கத்துக்கு குறுகியக் கால தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தயாராகவே இருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடி நிலைமைகளை ஒன்றரை வருடங்களுக்கு தீர்க்க முடியும் எனவும் ரணில் கூறியுள்ளார்.