ஒரு குழப்பமான நிலை!

-நஜீப் பின் கபூர்-

இன்று நாம் அடுத்த கட்ட நகர்வில் காணப்படுகின்ற ஒரு குழப்பமான நிலை தொடர்பாக பேசலாம் என்று எதிர்பார்க்கின்றோம். நமது அரசியல் மற்றும் பொது வாழ்வு தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் அனைவருமே ஒரு குழப்பமான நிலையில் இருக்கின்றார்கள் என்றுதான் எமக்கு எண்ணத் தோன்றுகின்றது. அரசியல் சமூக செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பவர்கள் என்றவகையில் இந்த வாரம் இது பற்றி சற்றுப் பேசலாம் என்று தோன்றுகின்றது. நாடு என்று வருகின்ற போது அங்கு அரசாங்கம் என்று ஒன்றிருக்கும். அது என்னவிதமான ஆட்சியாக இருந்தாலும் அரசுடன் இணங்கிப் போவோரும் எதிரணி அல்லது மாற்றுக் கருத்துக்களை உடையோரும் நாட்டில் இருப்பார்கள். நாட்டை முன்னெடுத்துச் செல்ல அந்த அரசுக்கு பொருளாதாரம் நடவடிக்கைகள் என்ற ஒரு ஒழுங்கும் இருக்கும்.

RANIL WICKREMESINGHE ELECTED CRISIS-HIT SRI LANKA'S NEW PRESIDENT | LMD

ஜனநாயகம், சோசலிஸம், மன்னராட்சி, அல்லது சர்வாதிகார ஆட்சிகள் என்றாலும் அதற்கும் அரசியல் யாப்பு சட்டதிட்டங்கள் நீதி நியாங்கள் என்ற ஒழுங்கு முறைகளும் அதற்கான ஆளணிகளும் இருக்கும். அதேபோன்று குடிமக்கள் என்று வருகின்ற போது அந்த நாட்டில் சிறுபான்மை பெரும்பான்மை இனங்கள் மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகள் இணக்கப்பாடுகள் முரண்பாடுகள் என்பனவும் அங்கு இருக்கும். மக்களின் பொருளாதார நிலமைகள் என்று பார்க்கின்றபோது மேல்மட்டம் மத்திய தரம் ஏழ்மை நிலை அதி வறுமை என்ற பிரிவினரும் அவர்களுக் கென்ற பொருளாதார நடவடிக்கைகள் என்றும் சில ஏற்பாடுகள் இருக்கும்.

மேற்சொன்ன அனைத்து விவகாரங்களையும் நமது நாட்டுச் செயல்பாடுகளுடன் இப்போது பொறுத்திப் பார்ப்போம். 1948ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை நாடு கடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பிப் பார்க்கின்றபோது, துவக்கத்தில் ஒரு இரு தசாப்தங்களுக்கும் குறைந்த காலப் பகுதிவரை நாடு திருப்திகரமான ஒரு பாதையில் ஓடிக் கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் நம்மை விட மிகவும் கீழ் மட்டத்தில் இருந்த நாடுகள் இலங்கையை அன்று உதாரணமாகக் காட்டி அவர்களைப் போல நாமும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று பேசி வந்ததாகவும், குறிப்பாக ஆசியாவில் நாம் அன்று ஜப்பானுக்கு மட்டுமே அடுத்த நிலையில் இருந்ததாக இன்று கடந்த காலப் பெறுமைகளைப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள் நமது ஆட்சியாளர்கள்.

இதற்கிடையில் அலாவுதீனும் அற்புத விளக்கும் போல அவ்வப்போது நம்மை சிங்கபூராக்குவது மற்றும் ஆசியாவின் ஆச்சர்யமாக்குவது மற்றும் 2048ல் உலகிலே செல்வந்த நாடுடாக வந்து இன்று வளர்ச்சியடைந்த நாடுகளாக இருக்கின்ற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு நாம் கடன் கொடுத்துச் செல்வச் செழிப்பில் வாழ்வது பற்றி இன்று திரும்பவும் நமது ஆட்சியாளர்கள் எமக்குக் கதைகள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இப்போது அரசாங்கம் பற்றிப் பார்ப்போம். உலகிலே மக்கள் செல்வாக்கை இழந்த ஒரு தலைவரை நாட்டுக்கு தலைவராக்கி அதிகார ஆசனத்தில் வைத்து அழகு பார்க்கும் அளவுக்கு நமது அரசியல் யாப்பு தாராள மனதைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது. அதனால்தான் ரணில் ஜனாதிபதியானார்.

Sri Lankan PM Mahinda Rajapaksa Resigns Amid Nationwide Curfew, Army Deployment

69 இலட்சம் வாக்குகளைப் பெற்றுத் தேர்தலில் மிப் பெரிய வெற்றியைப் பெற்ற கோட்டாபே ராஜபக்ஸ தன்னை அதிகாரத்துக்குக் கொண்டு வந்த மக்களாலே மிகக் குறுகிய காலத்துக்குள் தூக்கி எறியப்பட்டிருக்கின்றார். தனது கட்சிக்கு இருக்கின்ற ஒரே ஒரு ஆசனத்தால் அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி ரணில் தனது அரசியல் எதிரிகளாக கடந்த காலங்களில் இருந்தவர்களின் ஆதரவுடன் இன்று தனது ஆட்சியை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார். இப்படியான ஒரு சம்பவம் இதற்கு முன்னர் உலகில் ஏதாவது ஒரு நாட்டில் நடந்திருக்கின்றதா என்பது பற்றி எமக்குத் தெரியாது. அந்த வகையில் இது ஆசியாவின் ஆச்சர்யம் மட்டுமல்ல உலக ஆச்சர்யமாகத்தான் இருக்க வேண்டும்.

நமது தற்போதய அரசாங்கத்தின் செயல்பாடுகள் அப்படி இருக்க அரசியல் நெருக்கடிக்குள் சிக்கி அரசு மிகவும் செல்வாக்கிழந்து பலயீனப்பட்டிருக்கின்ற இந்த நேரத்தில் பிரதான எதிரணியான சஜித் தலைமையிலான எதிர்க் கட்சி அரசாங்கத்தை விட மிகவும் செல்வாக்கிழந்து சேற்றில் நட்ட கம்பைப்போல உறுதியற்றுக் காணப்படுகின்றது. அவர் கூட்டணியில் இருக்கின்ற உறுப்பினர்கள் பலர் பலயீனமான ஜனாதிபதியுடன் இரகசிய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு பதவிகளையும் அரசியல் சலுகைகளையும் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

அடுத்து நாடாளுமன்றத்தில் இருக்கின்ற சிறுபான்மைக் கட்சிகளும் இந்த ஜனாதிபதியில் நம்பிக்கை வைத்து நமது சமூகத்தை ஏமாற்றிக் கொண்டு இன்று அரசியல் தீர்வு வருகின்றது நாளை வருகின்றது என்று தாம் சார்ந்த சமூகளுக்குப் பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். வடக்குக் கிழக்குத் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் அனைவரினதும் நிலை இதுவாகத்தான் இருக்கின்றது.  அணுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அல்லது ஜேவிபி அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகின்ற முயற்சிகளை அவ்வப்போது செய்து வந்தாலும் அது இன்றுவரை வெற்றி பெற்றாதாகத் தெரியவில்லை. மக்கள் சலித்துப் போய் இருக்கின்றார்கள். இதனால் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான உடனடியான வாய்ப்புக்கள்  கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை. ஒரு அதிரடி அசாதாரணநிலை வந்தால் அந்தக் கதை வேறாக இருக்கலாம்.

நாட்டின் பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டால் அது படுபாதாளத்தில் இருக்கின்றது. தெற்காசியாவில் வறுமையில் நமக்கு முதலிடம்  உலக மட்டத்தில் பதினொராவது இடத்திலும் நாம்   இருக்கின்றோம் என்றால் இதற்கு மேல் இதனை விமர்சிக்கத் தேவையில்லை. நாடு 40 ரில்லியன் அளவில் உலகிற்குக் கடனாளியாக நிற்க்கின்றது. ஒரு ரில்லியன் என்பது ஒரு இலட்சம் கோடிகள் என்றால் கடனின் அளவை ஒருவர் கணக்குப் பார்த்துக் கொள்ள முடியும். இன்று நமது நாட்டின் பிரதான வருமானம் கடன் வாங்கி சமாளிப்பது என்றுதான் போய் கொண்டிருக்கின்றது இன்னமும் எத்தனை காலம் இப்படிப் பயணிக்க முடியும் என்று எண்ணிப்பாருங்கள்.

இன்று நாடு ஓராளவுக்கு மீண்டிருக்கின்றது. நிலமை எதிர்வரும் நாட்களில் சரியாகி விடும் என்று கதைப்போரும் நம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றார்கள். பாமர மக்கள் அப்படி சிந்திப்பதில் தவறும் கிடையாது. அது அவர்களது அறிவு மற்றும் பொருளாதாம் பற்றிய புரிதல் பற்றிய விடயம். ஆனாலும்  இது கிணற்றில் வாழ்கின்ற தவளையின் நம்பிக்கை என்று மட்டுமே நாம் சொல்ல முடியும். அவர்கள் விடயத்தில் அனுதப்படுவதைதவிர வேறு ஏதும் சொல்ல முடியாது. பெற்ற கடன்களைத் திருப்பிக் கொடுப்பது தொடர்பாகவோ அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பது பற்றியோ ஆட்சியாளர்களிடம் எந்த வேலைத் திட்டமும் கிடையாது. அவர்கள் முடியுமானவரை அதிகாரத்தில் இருந்து விட்டுப்போவது என்றும், அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் முடியுமான மட்டும் பிடுங்கி கொண்டு ஓடுவது என்ற நிலையில்தான் அதிகாரத்தில் இருப்போருக்கு அவர்கள் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Gotabaya Rajapaksa, Sri Lanka's military-minded leader, takes his last stand | Financial Times

புத்திஜீவிகள் இந்த நாட்டில் இருந்தால் நமக்கும் நமது சந்ததிகளுக்கும் வாழ்வு சூன்யமாகிவிடும் என்று அவர்கள் தாம் பார்த்து வந்த தொழில்களை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு ஓட்டம் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது வைத்தியத் துறையை கடுமையாகப் பாதித்திருக்கின்றது. நோயாளிகள் தமக்குத் தேவையான மருந்துகள் கிடைகாமல் தினந்தோரும் வைத்தியசாலையிலும் அதற்கு வெளியிலும் மரணித்துக் கொண்டிருக்கின்றார்கள் தரக்குறைவான மருந்துகளைக் கொண்டு வந்து அதனுடன் தொடர்புடையவர்கள் கொள்ளை இலாபமீட்டி வருவதால் அந்த மருந்துகளைப் பாவிப்போரும் தமது ஆயுலை முடித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

நாட்டில் இருக்கின்ற மக்களில் 68 சதவீதமானவர்கள் மூன்று வேலை முன்புபோல சாப்பிட வசதியில்லாமல் இருக்கின்றார்கள். வறுமை அவர்களை வாட்டிக் கொண்டிருக்கின்றது. பள்ளி போகும் சிறுவர்கள் இடைநடுவில் தமது படிப்பபை முடித்துக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. சிறு வியாபாரங்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களைத் தயாரித்தவர்கள் அந்தத் தொழில்களை முன்னெடுக்க முடியாது தொழிலைக் கைவிட்டு வருகின்றார்கள். இவை எல்லாவற்றுக்கும் கொரோனாவை ஆட்சியாளர்கள் குற்றவாளிகள் கூண்றில் நிறுத்தினார்கள். ஆனால் உலகில் அனைத்து நாடுகளும் போல இன்று அதிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் மீண்டு விட்டன. நமக்கு மட்டும் ஏன் இந்த நிலை.? அதுவல்ல காரணம். நாட்டில் அதிகாரத்தில் இருந்தவர்கள்-இருப்பவர்கள் மற்றும் அவர்களைச் சுற்றி நிற்ப்பவர்கள் மேற்கொண்ட அப்பட்டமான கொள்ளைகள்தான் இதற்கு அடிப்படை காரணம் என்பதனை இப்போது மக்கள் ஓரளவுக்கு உணர்ந்திருக்கின்றார்கள்.

இன்று நமது அன்றாட வாழ்வு இந்தியாவை நம்பித்தான போய் கொண்டிருக்கின்றது என்று சொன்னால் அதில் தவறு இருக்காது. ஆட்சியாளர்களை இந்தியா கைவிட்டால் அதோ கதிதான். சீனா தனக்குக் குறுக்கே நிற்பதால் இந்திய முடியுமான வரை இலங்கையை தனது பிடியில் வைத்துக் கொள்ள முயல்வதால் அந்த வாய்ப்பை நமது ஆட்சியாளர்கள் இதுவரை பாவித்துக் கொண்டு வருகின்றார்கள். இப்போது ஷhங்காய் ஒத்துழைப்பு கூட்டணி என்று ஒரு பலமான அமைப்பு உருவாகி இருப்பதால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டு நல்லறவு வளருமாக இருந்தால் முன்பு போல இந்தியாவும் சீனாவும் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுமா என்று சொல்லத் தெரியாது. பொருத்திருந்துதான் அந்தக் காட்சிகளை நாம் பார்க்க முடியும்.

Sri Lanka swears Dinesh Gunawardena in as new prime minister | Politics News | Al Jazeera

இந்த அரசாங்கத்தின் ஆயுல் காலம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும், ஆட்சியாளர்கள் தேர்தல்களைத் தள்ளிப் போட்டுக் கொண்டு எவ்வளவு காலத்துக்கு இன்னும் அதிகாரத்தில் இருக்கப் போகின்றார்கள் என்ற விடயத்திலும் தெளிவில்லாத ஒரு நிலை இருக்கின்றது. திட்டமிட்டபடி எதிர் காலத்தில் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் நடக்குமா என்று சொல்லத் தெரியாது. அப்படியாக இருந்தால் ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் வன்முறையில் அதிகாரத்தில் இருக்க என்ன முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்பதும் தெரியாது. தற்போது அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இருக்கின்ற 125 வரையிலான உறுப்பினர்களை அவர்கள் முடியுமான மட்டும் அதிகாரத்தில் இருப்பதற்காகப் பாவித்துக் கொள்வார்கள்.

Sri Lanka President Ranil Wickremesinghe To Make Fresh Clarion Call For All-Party National Government - Counterpoint

ஜனாதிபதிக்கு இருக்கின்ற நிறைவேற்று அதிகாரத்தை வைத்து தனக்கு முடியுமான மட்டும் பதவியில் இருந்து விட்டுப் போவதற்கு அவர் முயலக்கூடும் என்றுதான் நாம் நம்புகின்றோம். ராஜபக்ஸாக்களின் அரசியல் இருப்பும் எதிர்காலமும் ஜனாதிபதியின் அதிகாரம் மிக்க பதவியும் இருதரப்பு நல்லுறவிலும் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்க்கு அரிசி போடுவதிலும்தான் தங்கி இருக்கின்றது. இந்த பரஸ்பர ஒத்துழைப்புக்கள் கிடைக்கும் வரை யாப்பு நீதி சட்டம் எதையுமே மதிக்காமல் இவர்கள் அதிகாரத்தில் இருக்க வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றது என்று நாம் நம்புகின்றோம்.

அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பான தெளிவான பாதைகளைக் கண்டறிவதில் யாரிடமும் ஒரு நம்பிக்கை அற்ற நிலைதான் இன்று நாட்டில் காணப்படுகின்றது.  இதற்கிடையில் அதிகாரத்தில் இருக்கின்ற ஆட்சியாளருக்கு மக்கள் செல்வாக்கு கணிசமாக உயர்ந்து வருகின்றது ஐந்து சதவீதம்வரை இருந்த செல்வாக்கு இன்று 40 சதவீதத்தையும் கடந்து விட்டது என்ற ஒரு கதை நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. இந்த கருத்துக் கணிப்புக்கள் அனைத்தும் கண்துடைப்புக்கள். இதனை மக்கள் நம்பி மக்கள் ஏமாறக்கூடாது என்பது நமது வழக்கமாக வேண்டுகோள்.

Malinda Words: Whither Sajith Premadasa and the SJB?

பொது மக்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும்வரை நாடு இப்படித்தான் போய் கொண்டிருக்கும். அவர்களும் கூட அடுத்த கட்ட நகர்வு விடயங்களில் தெளிவான நிலைப்பாட்டில் இல்லை. அவர்கள் புரிதலும் தேவையும் தீர்மானமும் வரை கதை இதுதான். வறுமைக் கோட்டு மக்கள்  மட்டுமல்ல சாதாரண மக்களும் இந்த நாட்களில் ‘அஸ்வெசும’ பட்டியலில் தங்கள் பெயர்களை உள்ளீர்த்துக் கொள்வதற்காகாக ஓடித் திரிகின்றார்கள். இருபது இலட்சம் பேருக்கு மட்டும்தான் ‘அஸ்வெசும’ என்று கட்டுப்பாடுகள் இருக்கின்றபோது, ஜனாதிபதி ரணில் வழக்கம் போல யாரையும் வெளியே விட்டு விடாதீர்கள் என்று கேட்டிருக்கின்றார். அப்படியாக இருந்தால் ஐஎம்எப். புடன் செய்து கொண்ட உடன்படிக்கை மற்றும்  அடுத்த கட்ட கடன்கள் எப்படி நமக்குக் கிடைக்கும் என்று கேட்கத் தோன்றுகின்றது.

Anura kumara disanayaka on Behance

அரசாங்கம் எதிர்க் கட்சிகள் நிருவாகம் பொது மக்கள் என்ற அனைத்துத் தரப்பினரும் திக்குக் தெரியாத காட்டில் இறக்கி விடப்பட்டிருக்கின்றார்கள். எனவே அவர்கள்தான் தாம் சென்றடைய வேண்டிய இலக்குகளையும் பாதைகளையும் கண்டறிய வேண்டும். இப்போது அந்தப் பாதை எது என்பது கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்.

நன்றி: 09.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மொட்டுக்களுக்கு மஹிந்த ஓடர்!

Next Story

தீர்க்கமான நேட்டோ கூட்டம்!