ஐ.நா.வில் கதறி அழுத பாலத்தீன தூதர்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூன்றாவது குழுவான சமூக, மனிதநேய, கலாச்சார மேம்பாட்டுப் பிரிவின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உலகம் முழுவதும் நடைபெறும் தாக்குதல்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறுதல், இனப்படுகொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆண்டிற்கான கூட்டத்தின் தயாரிப்பு தொடர்பான ஆலோசனை கடந்த வாரம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இஸ்ரேல் நாட்டின் ராணுவ தாக்குதலும் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டது.

பாலத்தீன தூதர் கண்ணீர்

ஐ.நா. வின் மூன்றாவது குழுவின் வருடாந்திர கூட்டத்தின் தயாரிப்பு ஆலோசனையின் போது பாலத்தீன தூதர் கதறி அழுத காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சியடையவைத்தன.

அப்போது பேசிய ஐ.நா. அமைப்பிற்கான பாலத்தீன தூதரக அதிகாரியான சஹர் கே.ஹெச் சாலெம், “11 நாட்களாக, காஸா பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட மக்களை இஸ்ரேல் கொடூரமாக கொலை செய்துள்ளது. இப்படி நேரடி தாக்குதல்களின் காரணமாக உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளாக உள்ளனர்,” என்றார்.

மேலும், “காஸாவில் உள்ள ஒரு பாலத்தீன குடும்பத்தைக் கூட இஸ்ரேல் காப்பாற்றவில்லை,” என்றும், காயமடையாதவர்கள் இடம்பெயர்கிறார்கள், அல்-அஹ்லி மருத்துவமனையில் பாதுகாப்பு இருப்பதாக நினைத்து அங்கு அடைக்கலம் தேடியவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இது போன்ற தாக்குதல்கள் தான் இஸ்ரேலை பாதுகாப்புடன் இருப்பதாக உணர வைக்கிறதா என்றும் இது இஸ்ரேலுக்கான நிபந்தனையற்ற ஆதரவின் தேவையை நிறைவேற்றுகிறதா என்றும், பாலத்தீன குடும்ப உறுப்பினர்கள் வசிக்கும் வீடுகளின் மீது குண்டு வீசிக் கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கைகளை மேற்கோள் காட்டி கேள்வி எழுப்பினார்.

“குழந்தைகள் கூட குண்டுவீசி கொல்லப்பட வேண்டியவர்களா? “

பாலத்தீன தூதர் கண்ணீர்

காஸா பகுதியில் தாக்குதல்கள் தொடரும் நிலையில், எங்கு பார்த்தாலும் புகை மண்லமும் இடிபாடுகளும் வழக்கமான காட்சிகளாக மாறிவிட்டன.

பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர்கள் எங்கும் செல்லமுடியாமல் எங்காவது பாதுகாப்பு கிடைக்குமா என துடிக்கிறார்கள் என்றும், பள்ளிகள் மற்றும் ஐ.நா. சபை கட்டிடங்கள் உட்பட முழு சுற்றுப்புறக் கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

மேலும், அங்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, எரிபொருள் இல்லை, உணவுப் பொருட்கள் குறைந்துள்ளன என்று குறிப்பிட்ட அவர், “சவக்கிடங்கில் பிணங்கள் நிரம்பி வழிகின்றன” என்பதுடன் உடல்கள் கொத்துக்கொத்தாக புதைகுழிகளில் புதைக்கப்படுகின்றன என்பதை வலியுறுத்திக் கூறினார்.

இதில், “மோசமான விஷயம் என்னவென்றால், 22 மருத்துவமனைகளில் இருப்பவர்களை வெளியேற்ற இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதை, உலக சுகாதார அமைப்பு (WHO) நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் நடவடிக்கை என்று முத்திரை குத்தியுள்ளது.” என வேதனையுடன் கூறினார்.

“காஸாவில் சுமார் 20 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பாதி பேர் குழந்தைகள். ஆனால் பொதுமக்கள் அனைவரும் கொல்லப்படுவதற்கு தகுதியானவர்கள் என்று கருதி இஸ்ரேல் குண்டுவீசி வருகிறது. இந்த பேரழிவு எப்போதும் போல போரில் விளைந்த ஒரு சேதமாக கருதப்படக்கூடாது. இது மனிதாபிமானமற்றது மற்றும் சர்வதேச சட்ட அடிப்படையிலான ஒழுங்கு விதிகளை குறைத்து மதிப்பிடுவதற்கு வழிகோலுகிறது.” என்றார் அவர்.

துயரத்துடன் தொடர்ந்து பேசிய அவர், இஸ்ரேலின் குற்றங்களுக்கு எதிராக நிற்கவும், அந்நாட்டு அரசு தொடங்கியுள்ள மனிதத் துன்பங்களை உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்துமாறு சர்வதேச சமூகத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார். “எங்களுக்கு நீதி தேவையே ஒழிய பழிவாங்குதல் அல்ல” என்ற அவர், உலகத்தின் ஆதரவு பாலத்தீனர்களுக்கு மிகவும் தேவையானது என்று கூறினார்.

இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டின் சார்பில் அந்நாட்டின் இளைஞர் பிரதிநிதியான கார்மேலி பேசிய போது, ஹமாஸ் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதல்களை நினைவு கூர்ந்தார். இதன் விளைவாக ஏராளமான கொலைகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

“ஹமாஸ் என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பிற்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. குடிமக்களோ, தனிநபர்களோ பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கருதமுடியாது. ஒட்டுமொத்த நாடும் ஆபத்தில் உள்ளது,” என்று அவர் கூறினார். தற்காப்புக்கான இஸ்ரேலின் உரிமையைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், காஸாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் தற்போதைய நிகழ்வுகளை ஹமாஸ் ஆயுதக் குழு அரசியல் ஆக்குவதற்கு எதிராக எச்சரித்தார்.

பாலத்தீன தூதர் கண்ணீர்

தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து வெளியேற ஒரு பெண்ணுக்கு அங்கிருந்த நபர் ஒருவர் உதவினார்.

இஸ்ரேலின் ராணுவம் காஸா மீது வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாக எச்சரித்துள்ளது. மேலும், இன்னும் வடக்கு பகுதியில் உள்ள பாலத்தீனர்கள் தென்பகுதியை நோக்கிச் செல்லுமாறும் எச்சரித்துள்ளது.

இது இஸ்ரேலுக்கு போரின் அடுத்த கட்டங்களில் தனது படைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க உதவும் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இதற்கிடையில், காஸா மீதான விமானத் தாக்குதல்களில் 55 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

மேற்குக் கரையில் உள்ள மசூதியில் தங்கியிருந்த ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.

தரைவழித் தாக்குதல் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்தப் படையெடுப்பிற்கு ஆயத்தமாகும் வகையில், காஸாவின் எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள் மற்றும் ராணுவ வீரர்களைக் குவித்துள்ளது. இருப்பினும் அந்தத் தாக்குதல் எப்போது தொடங்கும் என்பது குறித்து தெளிவான விவரங்கள் இல்லை.

காஸாவுக்குள் அதிக உதவிகளை அனுப்பிவைக்க முடியும் என்று ஐ.நா. நம்புகிறது. சண்டை தொடங்கிய பிறகு முதல் முறையாக நேற்று அத்தியாவசியப் பொருட்கள் பொருட்கள் மக்களைச் சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி 1,400க்கும் மேற்பட்ட மக்களை கொன்று இரண்டு வாரங்கள் ஆகிறது. காஸாவில் இதுவரை 4,300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

பாலத்தீன தூதர் கண்ணீர்

காஸாவில் தவிக்கும் மக்களுக்கு மருத்துவர்களும், அறுவை சிகிச்சைக் குழுவினரும் செல்ல இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மருத்துவர் குழுக்களுக்கு அனுமதி கோரும் செஞ்சிலுவைச் சங்கம்

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) காஸாவில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களுக்குத் தேவைப்படும் மனிதாபிமானப் பொருட்களுடன் சென்று பணியாற்ற மருத்துவ பணியாளர்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் சாரா டேவிஸ் பிபிசி பிரேக்ஃபாஸ்டிடம் கூறுகையில், “இப்போது மிகவும் தேவையானது மனிதாபிமான பொருட்கள் மற்றும் காஸாவுக்குள் அத்தியாவசிய உதவிகள் தொடர்ந்து வருவதே ஆகும்,” என்றார்.

தங்களுக்குத் தேவைப்படுவது அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவது மட்டுமல்ல என்று கூறும் அவர், “காஸாவில் படுகாயங்களுடன் தவிக்கும் பொதுமக்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்க மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக் குழுவினரையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும்,” என்றார்.

இஸ்ரேல் ஒப்புக்கொண்டபடி காஸாவில் தவிப்பவர்களுக்கு உதவ 20 டிரக்குகள் உதவிப்பொருட்களுடன் பயணிக்க எகிப்துக்கும் காஸாவிற்கும் இடையிலான எல்லைக் கடப்பு பாதை நேற்று திறக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இதேபோன்ற உதவிகள் தேவை என்று டேவிஸ் கூறினார்.

“இத போன்ற உதவிகள் தொடர வேண்டும். 20 டிரக்குகள் மூலம் அளிக்கப்படும் உதவியால் மட்டும் பொது மக்கள் உயிர்வாழ முடியாது. இது உண்மையில் மிகவும் மோசமான நிலைமை,” என்று அவர் கூறினார்.

“நாங்கள் காஸாவில் செயல்படும் எங்கள் குழுவினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்கள் விவரிக்கும் காட்சிகள் பயங்கரமானவையாக இருக்கின்றன.”

பாலத்தீன தூதர் கண்ணீர்

ஹமாஸ் அமைப்பிடம் பணயக் கைதிகளாகப் பிடிபட்டுள்ள பிரிட்டன் குடிமக்களை மீட்கும் நடவடிக்கை தொடர்வதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

பிரிட்டன் குடிமக்களை மீட்கும் நடவடிக்கைகள்

இந்நிலையில், தாக்குதல் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள பிரிட்டன் குடிமக்களை மீட்கும் முயற்சிகள் தொடர்வதாக பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். ரஃபா கடவுப் பாதை வழியாக அவர்களை மீட்க, பிரிட்டன் அரசு”சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

டெலிகிராப்பில் இது குறித்து எழுதியுள்ள அவர், எகிப்து-காஸா இடையே ரஃபா பாதையை மீண்டும் திறக்கப்படுவதை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். காஸாவிலிருந்து வெளியேற உதவுவது மட்டுமின்றி உதவிகளை வழங்குவதற்கும் பயன்படக் கூடிய ஒரே வழி அந்த பாதைதான் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “பொதுமக்களுக்குத் தேவைப்படும் அனைத்து நீர் விநியோகங்களும்” காஸாவுக்குள் ” சாத்தியமான இடங்களில்” நேரடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். உலக சுகாதார நிறுவனம் காஸாவில் சராசரியாக தினசரி நீர் நுகர்வு ஒரு நபருக்கு வெறும் மூன்று லிட்டர் தான் என்று மதிப்பிட்டுள்ளது. ஆனால், அடிப்படைத் தேவைகளுக்கான குறைந்தபட்ச தினசரி தண்ணீர் தேவை 100 லிட்டராக உள்ளது.

ஹமாஸின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் குடும்பங்களைச் சந்தித்ததையும், இரு தரப்பும் இணைந்து பேசி தீர்வை எட்டுவதற்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுனக் விவரித்தார்.

இது “கவனம் மற்றும் எச்சரிக்கைக்கான காலம் என்பது மட்டுமல்ல, தார்மீக தெளிவுக்கான காலமும் கூட” என்பதுடன் “பயங்கரவாதத்தின் கசப்பான அனுபவங்களுக்கு எதிராக மனிதகுலம் வெற்றி பெறுவதற்கான தருணம்” என்றும் அவர் கூறினார்.

Previous Story

நாமல் மின்சாரக் கட்டணம்!

Next Story

குவைத்+ஓமனுடன் கைகோர்த்த சீனா!  திசைமாறும் போர்?