ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்ட அப்துல் ரசாக்!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக், பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து ஆட்சேபகரமான கருத்துகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து அப்துல் ரசாக் மன்னிப்பு கேட்டார்.

செவ்வாயன்று ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்தைப் பற்றி அப்துல் ரசாக் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஐஸ்வர்யா ராய் பெயரைக் குறிப்பிட்டு ஒரு கருத்து தெரிவித்தார்.

ஐசிசி டி-20 உலகக் கோப்பை 2024 பற்றி ஒரு குழுவில் ரசாக் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ​​இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் திறமையைக் குறிப்பிட்டு ஐஸ்வர்யா ராயின் பெயரை மேற்கோள் காட்டினார்.

ஐஸ்வர்யா ராயிடம் ரசாக் மன்னிப்பு

அப்போது அப்துல் ரசாக் ஐஸ்வர்யா ராய் மீது ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். “பாகிஸ்தானைப் பற்றியும், வீரர்களைப் பற்றியும் இங்கு பெரிய எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. ஆனால் வீரர்களை வளர்த்து அவர்களை மேம்படுத்துவது என்பது உண்மையில் எங்கள் நோக்கமல்ல. ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டு நல்லொழுக்கமுள்ள ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என நான் நினைத்தால், அது எவ்வளவு தொலைவுக்கு உண்மையோ, அதுபோல இதுவும் ஒருபோதும் நடக்காது,” என்றார்.

அப்துல் ரசாக் இப்படிக் கூறிய போது, ​​பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி ஆகியோரும் உடன் இருந்தனர்.

ஐஸ்வர்யா ராய் குறித்து ரசாக் கருத்து தெரிவித்தபோது, ​​முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவரும் சிரித்து கைதட்டினர்.

மன்னிப்பு கேட்கும்போது அவர் என்ன சொன்னார்?

அப்துல் ரசாக் தனது கருத்துக்காக விமர்சனங்களை எதிர்கொண்டபோது, ​​செவ்வாய்கிழமை மாலை ஒரு வீடியோவை வெளியிட்டு அவர் மன்னிப்பு கேட்டார் .

அந்த வீடியோவில், “ஆம், நான் அப்துல் ரசாக் தான். நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கிரிக்கெட் குறித்தும், பயிற்சியாளர் குறித்தும், நோக்கங்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில், தவறுதலாக, ஐஸ்வர்யா ஜியின் பெயரை உச்சரித்துவிட்டேன்,” எனத் தெரிவித்தார்.

“நான் வேறு உதாரணம் சொல்ல விரும்பினேன். ஆனால் என் நாக்கு நழுவியது. இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன். அவ்வாறு பேசியது எனது நோக்கமல்ல. நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.”

ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு
தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது அப்துல் ரசாக் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார்.

ஐஸ்வர்யா குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை அவர் தெரிவித்த போது கைதட்டி சிரித்ததற்காக ஷாஹித் அப்ரிடியும் சிக்கலில் சிக்கினார்.

பின்னர் பாகிஸ்தானின் சாமா டிவியில் தெளிவுபடுத்திய அப்ரிடி, ரசாக் கூறியதை தாம் கவனிக்கவில்லை என்றும், வீட்டிற்கு வந்ததும் வீடியோ கிளிப்பைப் பார்த்தபின் தான் தெரியவந்ததாகவும் கூறினார்.

இது குறித்து அவர் பேசுகையில், “வீடியோ கிளிப்பைப் பார்த்த பிறகு நான் மிகவும் வெட்கப்பட்டேன். இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரசாக்கிடம் கூறியுள்ளேன். இது முற்றிலும் முரட்டுத்தனமான நகைச்சுவை. இதுபோன்ற கருத்துகள் நகைச்சுவையாக இருக்கக் கூடாது,” என்றார்.

அப்துல் ரசாக்கின் கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான முகமது யூசுப், ரசாக்கின் கருத்து வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

“ரசாக் என்ன சொல்லியிருந்தாலும் அவமானப்பட்டு மன்னிப்பு கேட்பார் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தரும் ரசாக்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு பெண்ணையும் இப்படி அவமரியாதை செய்யக்கூடாது என்று சோயப் அக்தர் கூறியுள்ளார். ரசாக்கின் அருகில் அமர்ந்திருந்த வீரர்கள் கைதட்டி சிரிக்காமல் ஆட்சேபனை தெரிவித்திருக்க வேண்டும் என்றார் அவர்.

ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு

ஐஸ்வர்யா ராயின் பெயரைப் பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணம் எதுவும் தமக்கு இல்லை என்று அப்துல் ரசாக் கூறியுள்ளார்.

இதற்கு முன்னரும் ஆட்சேபக கருத்துகளைத் தெரிவித்த ரசாக்

ரசாக் ஒரு பெண்ணுக்கு எதிராக இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைக் கூறுவது இது முதல் முறையல்ல.

முன்னதாக செப்டம்பர் 2021 இல், பாகிஸ்தான் பெண் கிரிக்கெட் வீராங்கனை நிடா டார் குறித்து ரசாக்கின் சர்ச்சைக்குரிய கருத்து ஒளிபரப்பப்பட்டதால், நியோ நியூஸ் சேனலுக்கு பாகிஸ்தான் எலக்ட்ரானிக் மீடியா ஒழுங்குமுறை ஆணையம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தது.

நிதா தர் குறித்து கருத்து தெரிவித்த ரசாக், அவர் ஒரு பெண் என்பதை விட ஆணாகவே தோற்றமளிக்கிறார் என்று கூறியிருந்தார்.

நிதா தார் எதிரில் அமர்ந்து, “ஆண்கள் எந்த வேலையைச் செய்ய முடியுமோ, அதை அவரும் செய்ய முடியும் என்று அவர் உணர்கிறார். ஆண்களுக்குச் சமமாக இருக்க விரும்புகிறார்” என்று ரசாக் கூறிக்கொண்டிருந்தார். அத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்குள் பெண்களுக்கான எந்த உணர்வும் இருக்காது என்றும், அவர்களுடன் “கைகுலுக்க முயற்சி செய்யுங்கள்”, அது ஒரு பெண்ணின் கை போல் இருக்காது என்றும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து நிதா தார் கூறுகையில், “நாங்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல வேண்டிய ஒரு தொழிலைச் செய்கிறோம். ஏனென்றால் நம்மை உடற்தகுதியுடன் வைத்திருப்பது முக்கியம்,” என்றார்.

இந்த வீடியோ கிளிப் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது.

தற்போதைய ரசாக்கின் ஐஸ்வர்யா ராய் குறித்த கருத்து தெரிவித்த கருத்தை விமர்சித்துள்ள சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான பிரியங்கா சதுர்வேதி, ஐஸ்வர்யா ராய் மீது ஆட்சேபகரமான கருத்து தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை விமர்சித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், இதுபோல் யார் எந்தக் கருத்தைத் தெரிவித்தாலும், அது ஐஸ்வர்யா ராயை எந்த விதத்திலும் பாதிக்காது எனத் தெரிவித்துள்ளார்.

Previous Story

ஐஸ்வர்யா -அப்துல் ரசாக் திருமணம்!

Next Story

"காசாவில் கொலையை நிறுத்துங்கள்" - ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி கொடுத்த இஸ்ரேல் பிரதமர்