ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் சர்ச்சை! 

-காவ்யா பிருந்தா-

marakkuma nenjam ar rahman tickets

சென்னையில் நடைபெற்ற ரஹ்மான் இசைநிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்தால், ரசிகர்கள் அதிருப்தியடைந்த நிலையில், முதல்வரின் வாகனங்கள் சிக்கிக்கொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை கிழக்கு டிஐஜி, பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு ஆணையர் ஆகியோர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் ரஹ்மானுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

rahman

இதுவரை என்ன நடந்தது?

கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறாத நிலையில், (செப்டம்பர் 10-ம் தேதி) சென்னைக்கு அருகில் பனையூரில் ரஹ்மான் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார்.

இதில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கவனக் குறைவால் ரசிகர்கள் பலரும் இடம் கிடைக்காமலும், இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கும் செல்ல முடியாமல் கூட்ட நெரிசலுக்குள் சிக்கியும் சிரமத்துக்குள்ளாகினர். இது தொடர்பாக தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டனர்.

இந்நிலையில், இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஏசிடிசி (ACTC) நிறுவனம் சமூக வலைதளத்தில் இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற மோசமான அனுபவத்திற்கு ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியது.

ரஹ்மான் இதுதொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “இந்த விவகாரத்தில் நான் யாரையும் நோக்கி விரல் நீட்ட விரும்பவில்லை. எனக்காகதான் மக்கள் நிகழ்ச்சிக்கு வருகிறார்கள் என தெரியும், யார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என்பதை பார்த்து அல்ல. இதை நாங்கள் எதிர்கொண்டு சரி செய்வோம். ஏனெனில் எந்தவொரு ஆன்மாவும் எனக்கு முக்கியம்,” என கூறியிருந்தார்.

ரஹ்மானுக்கு எதிராக ஏமாற்றமடைந்த ரசிகர்கள் பலரும் தொடர்ந்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில், தமிழ்த் திரையுலகில் பலரும் ரஹ்மானுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

“சக இசைக் கலைஞனாக, ரஹ்மானுக்கு ஆதரவாக நிற்கிறேன்”

karthi tweet

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, அவரது ட்விட்டர் பக்கத்தில், இதுகுறித்து எழுதியுள்ள குறிப்பில்,

“இவ்வளவு பெரிய நிகழ்வை ஒழுங்காக நடத்துவது என்பது மிகவும் சிக்கலான பணி. நிர்வாகத் தவறுகள் சொதப்பல்களுக்கு காரணமாகியுள்ளது. இது போன்ற, ஒரு பெரிய இசை நிகழ்ச்சியை நடத்தும்போது, நல்ல நோக்கத்தில், பெரிய அளவில் முன்னேற்பாடுகள் செய்யப்படும் போது இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து விடுகின்றன. சரியான திட்டமிடல்கள் இல்லாதபோது, எங்கள் இசையை அர்த்தமுள்ளதாக மாற்றும் எங்களது ரசிகர்களுக்கு பெரும் அவதியையும், மோசமான அனுபவத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன.

ரசிகர்கள் சிரமத்துக்குள்ளாவது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் கலைஞர்களாகிய எங்களை, இன்னும் ஒரு படி அதிகம் சென்று திட்டமிட வேண்டும் என்பதையும், பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் தீவிரமாகப் பங்காற்ற வேண்டும் என்பதையும் உணரவைக்கிறது.

ஒரு சக கலைஞன் என்ற முறையில், இந்த துரதிர்ஷ்டவசமான சூழலில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக நிற்கிறேன். எதிர்கால நிகழ்வுகளை ரசிகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதையும், அதிலும், குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும்!” என தெரிவித்திருக்கிறார்.

நடிகர் கார்த்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஹ்மானுக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார்.

“ரஹ்மான் சாரை கடந்த மூன்று தசாப்தங்களாக நமக்குத் தெரியும். அவரை மூன்று தசாப்தங்களாக நேசித்தும் வருகிறோம். இசை நிகழ்ச்சியில் நடந்தது எதிர்பாராதது. என் குடும்பத்திலுள்ளவர்களும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். ஆனாலும், நான் ரஹ்மான் சார் பக்கம் நிற்க விரும்புகிறேன். இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற குழப்பங்களுக்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் பொறுப்பை ஏற்க வேண்டும். ரசிகர்கள் ரஹ்மான்சார் மீது வெறுப்பை உழிவதை விட்டுவிட்டு, அவர் நம் அனைவரின் மீதும் அன்பு செலுத்துவது போல, அவரது மோசமான காலகட்டத்தில் நாமும் அவர் மீது அன்பு செலுத்துவோம்,” என்று கூறியுள்ளார்.

“ரஹ்மானுடன் இணைந்து நிற்போம்” – குஷ்பு

kushbhu

“ரஹ்மான் எப்போதும் தனது ரசிகர்கள் ஏமாற்றமடையாமல் பார்த்துக் கொள்வார். எனது மகள்களும், அவர்களது நண்பர்களும் டைமண்ட் பாஸ் இருந்தும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த இடத்தை அடைய 3 மணி நேரத்திற்கு மேல் ஆனது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்கொண்ட எந்தவொரு பிரச்னைக்கும் ரஹ்மான் பொறுப்பேற்க முடியாது. ரஹ்மான் நேரலை நிகழ்ச்சிக்காக நிரம்பி வழியும் கூட்டத்தின் எண்ணிக்கையை உணராத நிர்வாகத்தின் முழுமையான தோல்வி இது.

ரஹ்மான் தனது இசை மூலம் எப்போதும் அன்பையும், அமைதியையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அவருடன் நாம் இணைந்து நிற்போம்,” என பதிவிட்டிருக்கிறார்.

ரஹ்மான் மகளின் பதிவு

தனது தந்தையை மோசடியாளர் என்று சில ஊடகங்கள், மற்றும் சமூக ஊடகங்களில் குறிப்பிடுவது பற்றி ரஹ்மான் மகள் கதீஜா ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார் . அதில் சிலர் இந்த விவகாரத்தில் மலிவான அரசியல் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். துரதிருஷ்டவான சம்பவத்திற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தரப்பே 100 சதவீதம் பொறுப்பு என்றபோதிலும் தனது தந்தை இந்த விவகாரத்தில் பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அதே சமயம், டிவிட்டர் தளத்தில் ரஹ்மானுக்கு ஆதரவு குரல் எழுப்புபவர்களுக்கு எதிராகவும் சிலர் எழுதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

10.09.2023வாராந்த அரசியல்

Next Story

மாலத்தீவு:'இந்தியாவே வெளியேறு'  சீனாவுக்கு பெருகும் ஆதரவு