ஏன் இந்த வஞ்சனை அரசியல்!

-நஜீப் பின் கபூர்-

தேர்தலுக்கு மட்டுமே வரும் அரசியல் கட்சிகள்

சமூக உணர்வுகளை கிளறி நடக்கும் வேட்டை

‘சிறுபான்மை அரசியல் தொடர்பான விமர்சனம்’

ஏன் இந்த வஞ்சனை அரசியல் என்ற தலைப்பில் நேரடியாக சிறுபான்மை அரசியல் தொடர்பில் சில சந்தேகங்களையும் கேள்விகளையும் இந்த வாரம் எழுப்பலாம் என்று எதிர்பார்க்கின்றோம். நாட்டில் இருக்கின்ற பேரின சமூகம் தேர்தல் தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றது. அவர்கள் ஒரு அரசியல் பிரள்வுக்கான நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். அரசியல் குற்றவாளிகளையும் துரோகிகளையும் விரட்டுவது மட்டுமல்ல அவர்களுக்கான தங்குமிடம் சிறைகூடம்தான் என்று பொதுமக்களை விளிப்பூட்டி ஒரு சமூக மாற்றத்துக்கான பயணத்தில்-பரப்புரையில் இருக்கின்றார்கள்.

அனைத்துத் தரப்பு சிவில் அமைப்புக்களையும் இது விடயத்தில் அவர்கள் ஓரணியில் இணைத்து வருகின்றார்கள். அதே நேரம் இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் அந்த நிலை இல்லை. பொதுவாக தேசிய அரசியல் போராட்டங்கள் தொடர்பிலும் அவர்களிடத்தில் எந்த உணர்வுபூர்வமான செயல்பாடுகளையும் நாம் காணவில்லை. சிறுபான்மை அரசியல் இயக்கங்கள்தான் தனது சமூகத்தில் இந்த உணர்வுகளை ஊக்குவிக்க வேண்டும்-உயிர்ப்பிக்க வேண்டும். ஆனால் அது அப்படி இல்லை.

இந்த நாட்டில் இனப்பிரச்சினைகள் இருப்பதும் அது வடக்கு கிழக்கு வாழ்கின்ற தமிழர்கள் மற்றும் கிழக்கிலும் நாடுபூராவிலும் பரவலாக வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரச்சினைகள் மலையகத்தில் வாழ்கின்ற  இந்திய வம்சாவளி மக்களின் தேவைகள் பிரச்சினைகள் என்று அதில் தனித்துவமான அம்சங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக நாட்டில் வாழ்கின்ற அனைத்துக் குடிமக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் என்றும் ஒன்று இருக்கின்றது.

இதில் விரும்பியோ விரும்பாமலோ நாட்டில் வாழ்கின்ற அனைத்துக் குடிமகனும்  இந்த விவகாரத்தில் தப்பி இருக்க முடியாது. சிறுபான்மை சமூகங்களும் அவர்களின் அரசியல் தலைமைகளும் இந்த விவகாரத்தில் பார்வையாளர் அரங்கில்தான் இருக்கின்றார்கள் என்பது நமது கணிப்பாக இருக்கின்றது. நமது இந்த கருத்துத் தொடர்ப்பில் சில சமையங்களில் முரண்பாடுகளுக்கும் இடமிருக்கின்றது.

Chelva was the Tamil people; Tamils were Chelva | Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition

சரி பொதுவான இந்த பிரச்சினைகளில்  சிறுபான்மை சமூகங்களும் அவற்றின் அரசியல் தலைமைகளும் இது தங்களுடடைய பணி அல்ல என்று விலகி நிற்கின்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும். தனது இனத்தின் பிரச்சினைகள் தொடர்பில் இவர்கள் ஏதாவது உருப்படியாக காரியம் பார்த்து வருகின்றார்களா என்று கேட்டால் சமககால அரசியலில் இது சீரோ. சிறுபான்மை அரசியல் இயக்கங்கள் அனைத்தம் ஏமாளிகளாகத் தான் காரியம் பார்த்து வந்திருக்கின்றார்கள் என்ற விடயத்தில் இந்த சிறுபான்மை சமூகங்கள் எந்தளவுக்கு விளிப்படைந்திருக்கின்றார்கள் அல்லது தெரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதும் தெளிவில்லாத நிலையில்தான் இருக்கின்றது.

சமூகம் இதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால் சமூகத்தின் பேரில் அரசியல் வியாபாரம் பண்ணிக் கொண்டிருக்கின்ற தலைமைகளுக்கு அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கான அரசியலை தன்னிஸ்டத்துக்கு முன்னெடுப்பதற்கு இது அவர்களுக்கு பெரிதும் உதவியாக அமைகின்றது. இந்த விடயத்தில் சிறுபான்மை சிவில் சமூகங்களின் பங்களிப்பும் செயல்பாடுகளும் கையாலாகாத தன்மையுடன் இருந்து வருகின்றது. இதனால் ஒட்டு மொத்த சிறுபான்மை அரசியல் செயல்பாடுகளும்  இன்று செயலிழந்து நிற்கின்றது என்பது நமது குற்றச்சாட்டாக இருக்கின்றது.

இதனை இன்னும் நேரடியாக சுட்டிக் காட்டுவதாக இருந்தால் நாம் குறிப்பிடுகின்ற வடக்கு கிழக்கு அரசியல் செயல்பாடுகளைச் சற்றுப் பார்ப்போம். சுதந்திரத்திற்கு பின்னிருந்தே அந்த சமூகத்துக்கு அரசியல் ரீதியில் பல ஆதங்கங்கள் இருந்து வந்திருக்கின்றன. இது தொடர்பாக நடந்த சத்வீகப் போராட்டங்கள் அனைத்தும் கண்டுகொள்ளப்படாமலும் அடக்கி ஒடுக்கபட்டதாலும் ஆயுதப்போராட்டம் வந்து அது மூன்று தசாப்தங்கள் வரை நீடித்தது. அதில் தமக்கு ஏதாவது நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்த நம்பிக்கை முள்ளிவாய்காலில் முடங்கிப் போனது. அது பற்றியும் நாம் இங்கு பேசவரவில்லை.

சமகாலத்தில் குறிப்பாக போருக்குப் பின்னர் ஈழத் தமிழர் பிரச்சினகளுக்கு அரசியல் தீர்வு என்ற நம்பிக்கையும், அதில் இந்தியாவின் பங்களிப்பு இன்றுவரை ஏமாற்றத்தில் இருந்து வருகின்றது. இந்த நிலையில் இன்று தமிழர் அரசியல் இந்தியாவை நம்பி அரசியல் செய்யும் ஒரு கூட்டம். மேற்கு நாடுகளில் நம்பிக்கை வைத்திருக்கின்ற மற்றுமொரு தரப்பு. அடுத்தது போராட்ட சக்திகளை மையப்படுத்தி அரசியலைச் செய்கின்ற ஒரு கூட்டம் என்று இது இன்று போய்க் கொண்டிருக்கின்றது.

இந்த ஆயுதப் போராட்டம் சார்பான அணியை இரண்டு அணிகளாக பார்க்க வேண்டி இருக்கின்றது. அரசுடன் இணைந்து பேரின விசுவாசத்துடன் அரசியல் செய்கின்ற தரப்பினர், மற்றது விடுதலைபுலிகள் உணர்களைப் பின்புலமாகக் கொண்டு அரசியலை முன்னெடுக்கின்ற தரப்பினர் என்று இதனைச் சுட்டிக் காட்ட முடியும்.

Sri Lanka: 1st Tamil politician named opposition leader since 1983 | World News - Hindustan Times

மேற்சொன்ன தரப்பினரை நாம் ஊர் பேர் முகவரியைச் சொல்லி நாம் இங்கு சுட்டிக் காட்ட விட்டாலும் நாம் யாரையெல்லாம் சுட்டிக் கட்டுகின்றோம் என்பதை தமிழர்கள் அறிவார்கள். அதனால் அவர்கள் முகவரி இங்கு முக்கியமானதல்ல. என்றாலும் 2009க்கு பின்னர் தமிழர் சில காலம் மௌம் காத்தாலும், பின்பு தமக்கிருந்த அச்சம் பயம் சற்றுக் கலைந்த போது தமது இழப்புகள் அரசியல் இருப்பு என்பவற்றை முதன்மைப்படுத்தி அரசியல் கட்சிகள் மேடைகளில் மக்களின் உணர்வுகளுடன் விளையாடும் அரசியலை இவர்கள் முன்னெடுத்தார்கள். இது முற்றிலும் தமது தனிப்பட்ட அரசியல் இருப்பு மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மையப்படுத்தியதாகத்தான் இந்த அரசியல் இன்று வரை போய் கொண்டிருக்கின்றது.

Lankan leader CV Vigneswaran bats for dual citizenship for Sri Lankan Tamils living in India- The New Indian Express

இதனால் கடந்த ஒரு தசாப்தங்களுக்கு மேலாக தமிழருக்கு இந்த அரசியல் கட்சியகள் பெற்றுக் கொடுத்தது என்று எதுவுமே கிடையாது என்பதுதான் எமது கருத்து. இன்று தீர்வு நாளை தீர்வு என்று பேரினத் தலைவர்களை நம்பி தமிழ் தலைமைகள் இன்றுவரை இளவு காத்த கிளியின் அரசியலைத்தான் அவர்களால் செய்ய முடிந்தது. இதற்குப் பின்னரும் அவர்கள் அதனைத்தான் செய்வார்கள். கொழும்பு அரசியல் தலைமைகள் குறிப்பாக ஜனாதிபதி ரணில் தீர்வு பற்றி கதைகளை உச்சரித்த துவக்கத்திலிருந்தே இது வெறும் ஏமாற்று நாடகம். இதனை தமிழ் தலைமைகள் நம்பி சமூகத்தை ஏமாற்றக் கூடாது என்று நாம் அடித்துச் சொல்லி வந்தோம். அடிக்கடி எச்சரித்தும் வந்தோம். கடைசியில் என்ன நடந்தது.?

இப்போது வருகின்ற தேர்தலுக்குப் பின்னர்தான் தன்னால் தீர்வு தரமுடியும்.! தற்போது இருக்கின்ற அரசியல் பின்னணியில் தன்னால் எதையும் செய்ய முடியாது என்று இந்த ஏமாளிகள் முகத்திற்கே ரணில் நேரடியாக இன்று சொல்லி கதையை முடிதிருக்கின்றார். இப்போது இந்த தமிழ் அரசியல் தலைமைகள் என்ன பதிலைத் தர முடியும்.? தேர்தல் மேடைகளில் இவர்கள் வழக்கம் போல ஆகயத்தில் இந்த முறையும் மாளிகை கட்டும் கதைகளைத்தான் சொல்ல வருவார்கள். அப்போது அவர்களுக்கு தமிழ் சமூகம் தருகின்ற பதில் என்னவாக இருக்கப் போகின்றதோ தெரியாது.

Report called over incident involving MP Ponnambalam

எனவே இன்று ஈழத் தமிழர் அரசியல் வஞ்சனையும் ஏமாற்றும் தன்னலனும் கலந்த ஒன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றது. இதனால் மக்கள் யரைத்தான் நம்புவதேர்… என்ற பாடல் போல வந்தவன் போனவன் பின்னால் போய் இன்று சமூகம் சார்ந்த அரசியல் இயக்கத்தை பலயீனப்படுத்தி பேரின வாதிகளுக்கு வாய்ப்பாக களத்தை மாற்றுகின்ற அரசியலுக்கான வாய்ப்பை இங்கு ஏற்படுத்தி இருக்கின்றார்கள். சமகாலத்தில் நடக்கின்ற இந்த வரலாற்றுத் துரோகத்துக்கு முற்றும் முழுதுமான பொறுப்பை தமிழ் அரசியல் தலைமைகள்தான் ஏற்க வேண்டும்.

இப்போது கிழக்கிலும் நாட்டில் நலா புறங்களிலும் சிதறி வாழ்கின்ற முஸ்லிம் அரசியல் தொடர்பாக  பார்ப்போம். சுதந்திரத்துக்குப் பின்னாலான முஸ்லிம் அரசியல் கொழும்பை மையப்படுத்திய தீர்மானங்களின் அடிப்படையில்தான் நகர்ந்து கொண்டிருந்தன. சுதந்திரத்துக்கு முன்னர் கூட அது அப்படித்தான் அமைந்திருந்தது. அதற்குப் பின்னர் 1980 களின் பிற்பகுதியில் அஸ்ரஃப் தோற்றுவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வருகையுடன் முஸ்லிம்களின் கொழும்பு அரசியல் தலைமைத்துவங்கள் பெரும் சவால்களுக்கு இலக்காகியது. இதுவரை பேரினத் தேசிய கட்சிகளில் இருந்த முஸ்லிம் கொழும்புத் தலைமைத்துவங்கள் அஸ்ரஃப் வருகையுடன் காணாமல் போய்விட்டன.

M H M Ashraff - Alchetron, The Free Social Encyclopedia

தேசிய கட்சிகள் முஸ்லிம்கள் தொடர்பான அரசியல் கொடுக்கல் வாங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை பெரும்பாலும் அஸ்ரஃப் அவர்களின் மு.காவுடன்தான் மேற் கொண்டது. இதற்குக் காரணம் கிழக்கு முற்றிலும் அஸ்ரஃப் தனது கோட்டையாக மாற்றி அதனைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகும். அஸ்ரஃப் அவர்களின் இந்த அரசியல் ஆதிக்கம் தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் சிறு எண்ணிக்கையில் வாழ்கின்ற குட்டி முஸ்லிம் கிராமங்கள் ஒழுங்கைளில் கூட மு.கா. தனது செல்வாக்கை செலுத்திக் கொண்டிருந்தது. இதனால் இலங்கை அரசியலில் அஸ்ரஃப் ஒரு ஹீரேவாக வலம் வந்தார்.

இந்த எழுர்ச்சி குறிப்பாக கிழக்கில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழ்கின்ற பிரதேசங்கள் பாரிய நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தன என்பதனை எவரும் மறுக்க முடியாது. அதே போன்று தெற்கிலும் முஸ்லிம் சமூகத்திற்கு பல நண்மைகள் கிடைத்தன என்பதனையும் மறுக்க முடியாது. இந்த எழுர்ச்சி அஸ்ரஃப் மரணத்துடன் மொல்ல மொல்ல தனது நம்பகத் தன்மையை இழந்தது. இதனால் கிழக்கில் இந்த மு.கா.  குறுநிலங்களில் மன்னர்கள் அரசியல் அதிகாரங்களை வைத்திருப்பது போல பிளவு படத்துவங்கியது. இது முற்றிலும் மு.கா. தலைமைத்துவத்தின் இயலாமையால் நடந்த நிகழ்வாகவே நாம் குறிப்பிட முடியும்.

Rauff Hakeem - Alchetron, The Free Social Encyclopedia

இதற்கிடையில் வன்னியில் ரிசாட் பதியுத்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோற்றம் பெற்றது. அது இன்று மு.கா.வுக்கு குறிப்பாக ஹக்கீம் அரசியல் தலைமைத்துவத்துக்கு நல்ல சவாலைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இதனால் இன்று மு.கா கோட்டை என்று சொல்லப்படுகின்ற திகாமடுல்ல, மட்டக்களப்பு திருகோணமலை, வன்னி மட்டுமல்லாது தெற்கிலும் ரிசாட் கட்சி தனது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றது. இதற்கு மத்தியில் அக்கரைப்பத்தை மையப்படுத்திய அதாவுல்ல, காத்தான்குடியை மையப்படுத்திய ஹிஸ்புல்லா, கல்குடாவில் அமீர் அலி திருகோண மலையிலும் இப்படி ஒரு நிலை இருக்கின்றது.

நாம் மேற் சொன்ன அனைத்தும் குறுநிலங்களையும் மையப்படுத்தி அரசியல் செய்கின்றவர்கள் அனைவரும் போல அஸ்ரஃபின் மு.கா.விலிருந்து அரசிலை துவங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் சமகாலத்தில் ஹக்கீம் மற்றும் ரிசாட்  முஸ்லிம்களின் செல்வாக்கான அரசியல் தலைமைகள் என்ற ஒரு கருத்து இருக்கின்றது. ஆனால் இது ஒரு மாயை. தமது கட்சி உறுப்பினர்களைக்கூட இவர்களினால் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை. இதனால் அந்தக் கட்சிகள் சமூகத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் வியாபாரங்களைத் தான் இப்போது முற்றும் முழுதாகச் செய்து கொண்டிருக்கின்றன.

Lack of Muslim ministers in new Cabinet is just fine - Rishad

இதற்கு நல்ல உதாரணம்தான் கடந்த காலங்களில் இவர்கள்  தன்னல அரசியலை இலக்காகக் கொண்ட தீர்மானங்களை எடுத்தமை. புத்தளத்தில் இந்தக் கட்சிகள் சமூகக் கூட்டணி சமைத்து நெடுங்காலத்துக்கு பின்னர் ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டது. அந்த உறுப்பினர் பார்த்த காரியத்தால் அந்தக் கூட்டணி மூக்குடை பட்டு நிற்க்கின்றது. இதனால் குறிப்பிட்ட உறுப்பினரை வெளியே போட்டு தமது ஒரு உறுப்பினரை ரிசாட் நியமிக்க முயன்றாலும் பணக் கொடுக்கல் வாங்கல் காரணமாக அந்தக் கூட்டணியின் எழுத்துமூல இணக்கப்பாடுகளே செல்லாக் காசாகிப்போனது. இது முஸ்லிம் அரசியல் வியாபாரத்துக்கு நல்ல மற்றுமொரு உதாரணம்.

இப்படியான அரசியல் செயல்பாடுகளினால் இன்று முஸ்லிம்களின் சமூக ரீதியான அரசியல் கட்சிகள் அந்த சமூகத்தின் மத்தியில் பெரும் பின்னடைவை எதிர் நோக்கி வருகின்றது. இதனால் முஸ்லிம் இளைய சமூகத்தினர் மீண்டும் தேசிய கட்சிகள் ஊடாக அரசியல் செய்வது தொடர்பாக ஆர்வமாக இருப்பது தெரிகின்றது. இதனால் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழ்கின்ற பிரதேசங்களில் கூட தேசிய மக்கள் சக்தி மாபெரும் பேரணிகளை அங்கு நடாத்த முடிந்தது. எனவே எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் தனித்துவ அரசியல் காணாமல் போவதற்கு இடமிருக்கின்றது.

அதே போன்று தேசிய கட்சிகள் ஊடாக அரசியல் செய்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் கை தற்போது ஓங்கி வருகின்றது என்று சொல்ல முடியும். ஆனால் இது இன உணர்வுகளைப் பிரதிபளிப்வை அல்ல. அதே போன்று இன்னும் சில முஸ்லிம் உறுப்பினர்கள் நாடாளுமன்ற்ததில் இருக்கின்றார்கள் என்பதனை அவர்கள் மாதாந்த சம்பளப் பட்டியலில் iயொயமிடுவதால்தான் உறுதியாகின்றது. அல்லவிட்டால் அப்படியானவர்கள் இருக்கின்றார்கள் என்பதற்கு ஆதாரமே இல்லை என்ற நிலை.

அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 109 ஆவது ஜனன தினம் | Virakesari.lk

மலையக அரசியலும் இதே நிலையில்தான் போய்க் கொண்டிருக்கின்றது. அங்கு ஜீவன், திகா, மனோ, ராதா, சுரேஸ் என்போர் அரசியல் அணிகளை வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் சீனியர் தொண்டா (சௌமிய) மறைவுக்கு பின்னர் அந்த சமூகத்தில் சொல்லும்படியாக எந்த நன்மைகளையும் பெற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இவர்கள் தாம் சார்ந்த சமூகத்தை பாவித்து நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்வதை மட்டுமே தற்போது தமது இலக்காக வைத்து காய் நகர்த்தி வருகின்றார்கள். குறிப்பாக அந்த சமூகத்தின் ஆயிரம் ரூபாய் கோரிக்கையை இன்றுவரை பெற்றுக் கொள்ள முடியாது போனது. இது என்ன அநியாயம். மலையகத்துக்கு தனித்துவமான அரசியல் கட்சிகள் தேவைதானா என்ற கேள்வி  இதனால் வருகின்றது.

Mano slams bank for suspending employees over event | Daily FT

வடக்கு கிழக்கு அரசியல் தலைமைத்துவங்களை ஏமாற்றுவதில் வழக்கமாக வெற்றி கொள்ளும் ஆளும் வர்க்கத்தினருக்கு இந்த அப்பாவி மலையத்தரை ஏமாற்றுவது ஒன்றும் பெரிய காரியமே கிடையாது. இதனால் தமது தனித்துவ அரசியல் தலைமைகள் செயல்பாடுகள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் இருந்து வருகிக்றன.

எனவே ஒட்டு மொத்தமாக அனைத்து சிறுபான்மை சமூகத்தினரும் தமது அரசியல் தலைமைகளினாலேயே வஞ்சிக்கப்படுகின்ற ஒரு அரசியல்தான் இப்போது நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. தேர்தல் காலங்களில்தான் இவர்கள் மக்கள் முன் வந்து சமூகம் சார்ந்த உணர்வுகளை கிளரி தமது வாக்கு வேட்டையை இவர்கள் மீண்டும் ஆரம்பிப்பார்கள். இவர்களிடம் தொடர்ந்தும் சமூகம் நம்பிக்கை வைப்பதா அல்லது இதற்கு மாற்று வழிகளை கண்டறிவதா என்பதனை அதே சமூகம்தான் தீர்மானிக்க வேண்டி இருக்கும்.

நன்றி: 07.01.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ரூ.170.72 கோடி வென்ற இந்திய டிரைவர்

Next Story

வங்கதேசம்:கிரிக்கெட் கேப்டன் டூ MP!