மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேல் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு ஹமாஸ் இஸ்ரேல் இடையே சில ஆண்டுகள் வரை போர் தொடர்ந்தது. இப்போது தான் அமெரிக்காவின் உத்தரவால் இந்தப் போர் முடிவுக்கு வந்துள்ளது. இருந்தாலும் கூட அங்கு இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை

மன்னிப்பு கேட்ட நெதன்யாகு
இது ஒரு பக்கம் இருக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திடீரென நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளார். இஸ்ரேல் அதிபரிடம் இது தொடர்பாக அவர் கடிதம் எழுதியுள்ளார். தன் ஊழல் புகார்களுக்கு மன்னிப்பு கோரி, அவர் இந்த கடிதத்தை ஜனாதிபதியிடம் அளித்துள்ளார்.
நெதன்யாகு மீது ஊழல் புகார்கள் குறித்த வழக்குகள் பல காலமாகவே விசாரணையில் இருக்கிறது. தன் மீதான நீண்டகால வழக்குகள் நாட்டை பிளவுபடுத்துவதாகக் கூறி, நெதன்யாகு மன்னிப்பு கோரும் மனுவைச் சமர்ப்பித்துள்ளார். தன் மீதான ஊழல் புகார்களில் உண்மை இல்லை என்ற போதிலும் இது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதால் நெதன்யாகு மன்னிப்பிற்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடிதம்
இது தொடர்பாக நெதன்யாகு மேலும் கூறுகையில், “என் மீதான வழக்கு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது, மேலும் பல ஆண்டுகளுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான் நிரபராதி என்று நிரூபிக்கப்படும் வரை இந்த வழக்கு விசாரணை தொடர வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. ஆனால், தேசிய பாதுகாப்பு காரணமாக நிலைமை வேறு விதமாக இருக்கிறது. இப்போது இஸ்ரேல் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது
இந்த நேரத்தில் இதுபோல நடக்கும் வழக்குகள் நம்மை உள்ளுக்குள் பிளவுபடுத்துகிறது.. கடுமையான பிளவுகளை ஏற்படுத்துகிறது விரிசல்களை அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே எனது மீது தவறில்லை என்றாலும் கூட பொது மன்னிப்பு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
அதிபருக்கு கடிதம்
வாரத்திற்கு மூன்று முறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற உத்தரவால் எனது பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமே இல்லாத ஒரு உத்தரவு.
இந்த வழக்கை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவது, நாட்டில் பதற்றத்தைத் தணிக்கவும், நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் பெரிதும் உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நெதன்யாகு மீதான வழக்குகள் குறித்து இஸ்ரேல் நாட்டில் பெரிய விவாதமே நடந்து வருகிறது. அங்கு இதை வைத்தே பெரிய அரசியல் நடக்கிறது. மேலும், இது இஸ்ரேல் சமூகத்தில் பிளவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.
நெதன்யாகு ஆதரவாளர்கள் இந்த வழக்குகளை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்கிறார்கள். அதேநேரம் எதிர் தரப்பினர் வழக்கு விசாரணை முடியும் வரை இஸ்ரேல் பிரதமர் பதவியில் இருக்கக்கூடாது என்கிறார்கள்.
டிரம்ப் சப்போர்ட்
ஒரு வழக்கில் நெதன்யாகுவும் அவரது மனைவி சாராவும் கோடீஸ்வரர்களிடமிருந்து விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு சாதகமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு மற்ற வழக்குகளில் இரு இஸ்ரேல் ஊடகங்களில் தனக்குச் சாதகமான செய்திகளை வெளியிட நெதன்யாகு வலியுறுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நெதன்யாகுவிடம் இருந்து மன்னிப்புக் கடிதம் வந்துள்ளதை இஸ்ரேல் அதிபர் மாளிகை உறுதி செய்துள்ளது. இது ஒரு அசாதாரணக் கோரிக்கை என்றும் இது தொடர்பாகச் சட்ட ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிபர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
முன்னதாக இந்த விவகாரத்தில் நெதன்யாகுவுக்கு இஸ்ரேல் அதிபர் மன்னிப்பு அளிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்பும் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.





