என்னை கொலை செய்ய சதி! இம்ரான் கான்

பாகிஸ்தான் நாட்டில் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் இம்ரான் கான் அளித்த நேர்காணலில் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் பொருளாதாரம் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து தடுமாறிக் கொண்டு இருந்தது. இதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து தடுமாறிக் கொண்டே இருந்தது.

இந்தச் சூழலில் தான், கடந்த 2019 தேர்தலில் புதிய பாகிஸ்தான் படைப்போம் என்ற முழக்கத்தை வைத்தார் இம்ரான் கான். அந்தத் தேர்தலில் இம்ரான் கான் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அவர் ஆட்சியை அமைத்தார்.

பாக். அரசியல் குழப்பம்

இருப்பினும், பாக். பொருளாதார நெருக்கடியை இம்ரான் கானால் சமாளிக்க முடியவில்லை. இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, எதிர்க்கட்சிகள் இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன. அதேபோல இம்ரான் கான் கூட்டணியில் இருந்த சில கட்சிகளும் அவருக்கு எதிராகத் திரும்பி உள்ளன. சில நாட்களில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இம்ரான் கானால் ஆட்சியைத் தக்க வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இம்ரான் கான்

இந்தச் சூழலில் ARY செய்தி நிறுவனத்திற்குப் பிரதமர் இம்ரான் கான் அளித்த பேட்டியில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து பல்வேறு விவகாரங்கள் குறித்தும் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நம்பத்தகுந்த இடத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட பாக். பிரதமர் இம்ரான் கான், இருப்பினும் இதைக் கண்டு தான் பயப்படவில்லை என்றும், வலுவான பாகிஸ்தானை அமைக்கும் தனது போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

உயிருக்கு ஆபத்து

இது தொடர்பாகப் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில், “எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதை இந்த நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். இது மட்டுமின்றி என்னைக் குறித்து பொய்யான மற்றும் தவறான தகவல்களை என்னை மோசமானவன் எனச் சித்தரிக்கவும் முயல்கின்றனர்.

என்னைப் பற்றி மட்டுமல்ல.. எனது மனைவி குறித்தும் இதுபோன்ற போலி தகவல்களைப் பரப்புகின்றனர்” என்று அவர் தெரிவித்தார். மேலும், பாக். நாட்டின் நலன் குறித்தும் துளியும் சிந்திக்காத நபராக எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

ஒரே வழி

தொடர்ந்து இம்ரான் கான் பேசுகையில், “இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றிகரமாக முறியடித்து விட்டால், முன்கூட்டியே தேர்தலைச் சந்திப்பது தான் ஒரே வழி! இப்போது உள்ள எதிர்க்கட்சிகள் உடனும் சுயநலத்திற்காகக் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் உடனும் மீண்டும் வேலை செய்ய முடியாது, முன்கூட்டியே தேர்தல் சந்திக்கும் போது, என் தேசத்தை எனக்குத் தனிப் பெரும்பான்மை வழங்க வேண்டும். அப்போதுதான் நான் சமரசம் செய்து கொள்ள வேண்டியதில்லை.

எதிர்க்கட்சிகள் சதி

எதிர்க்கட்சிகள் இப்போது கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானமே ஒரு திட்டமிட்ட சதிதான். கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே இது குறித்து எனக்குத் தெரியும். சில எதிர்க்கட்சி தலைவர்கள் வெளிநாட்டுத் தூதரகங்களுக்குத் தொடர்ந்து சென்று வந்ததும் எனக்குத் தெரியும். ஹுசைன் ஹக்கானி போன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் லண்டன் சென்று நவாஸ் ஷெரீப்பை சந்தித்தனர். நான் மீண்டும் சொல்கிறேன், இதில் அந்நிய நாட்டின் சதி உள்ளது.

பிரதமர் பதவி

என்னைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது தான் வெளிநாட்டுச் சக்திகளின் நோக்கமாக உள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் என்னை நீக்கினால் மட்டுமே பாகிஸ்தான் மன்னிக்கப்படும் என எச்சரித்துள்ளனர். நமது நாட்டிற்குச் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை இருக்கக் கூடாது என்று அந்த அந்நிய சக்தி நினைக்கிறது. கடந்த மாதம் வந்த எச்சரிக்கை குறிப்பு ஆட்சி மாற்றத்தை மட்டும் கோரவில்லை. நான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பதும் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது” என்றார்.

வெளிநாட்டு சதி

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் இம்ரான் கானை படுகொலை செய்யச் சதித்திட்டம் தீட்டப்படுவதாகப் பாகிஸ்தானின் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்திருந்தார். அதேபோல பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவர் பைசல் வவ்டாவும் நாட்டை விற்க மறுத்ததற்காக இம்ரான் கானைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்படுவதாகக் குற்றஞ்சாட்டி இருந்தார். இதையடுத்து இம்ரான் கானின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பாகிஸ்தான் அரசியல் நிலை

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டு மக்களிடையே உரையாற்றிய இம்ரான் கான், தனது ஆட்சியைக் கலைக்கச் சதி நடப்பதாகவும் இதற்குப் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார். பின்னர், அந்நாட்டு அரசு அளித்த விளக்கத்தில் இம்ரான் கான் தவறுதலாக அமெரிக்கா குறிப்பிட்டதாகத் தெரிவித்திருந்தது. அதேபோல அமெரிக்காவும் பாகிஸ்தான் அரசியல் நிலை குறித்து எந்தவொரு கடிதமும் எழுதவில்லை என விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Story

ஆர்ப்பாட்டம் மக்கள் உரிமை - அமெரிக்க தூதுவர்

Next Story

ஞானாக்கா ஆலயம் மக்களால் சுற்றி வளைப்பு