எது உண்மை: கல்விக் காரியாலயம் தரும் பதில் என்ன?

-ஜஹங்கீர்-

கடந்த 16ம் திகதி நாம் பதிவிட்டிருந்த ஒரு செய்தி தொடர்பாக ‘ஜாமியன்ஸ்’ என்ற வட்சப் குழுவினர் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தனர். அந்த செய்தியின் படி கண்டி-உடதலவின்ன ஜாமியுள் அஸ்ஹர் தேசிய கல்லூரியில் 16ம் திகதி நடைபெற்ற பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் தெரிவு சட்டத்துக்கு முரணானது-பலாத்காரமானது பள்ளி நிருவாகத்திற்கு ஆட்களைத் தெரிவு செய்யும் பாணியில்தான் அது நடந்திருக்கின்றது என்றும் அதனைப் பதிவிட்டவர் தனது பெயர் முகவரியுடன்  சொல்லி இருக்கின்றார்.

எனவே முஸ்லிம் பள்ளிகளில் நிருவாகிகள் முறையாக தெரிவு செய்யப்படுவதில்லை என்றும் அந்தப் பதிவில் சுட்டிக் காட்டப் பட்டிருக்கின்றது. இது முழு சமூகத்தையும் கொச்சைப் படுத்துகின்ற பதிவாகவே  பார்க்க வேண்டும்.  பள்ளி நிருவாகம் தொடர்பாக இவர்கள் பதிவுக்கு  முஸ்லிம் சமூகம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இதில் நமக்குள்ள நெருக்கடி என்னவென்றால் உலகம் பூராவிலுமுள்ள பல இலட்சக் கணக்கான வாசகர்களைக் கொண்டிருக்கின்ற நமது செய்தி சேவைக்கு அந்தப் பதிவு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

அவர்கள் பதிவின்படி நாம் கடந்த 16ம் தகதி வெளியிட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. எனவே அன்று ஜாமியுள் அஸ்ஹர் தேசிய கல்லூரியின் அபிவிருத்தி  சங்கக் கூட்டத்தில் செயலாளர் தெரிவின் போது முறைகேடு நடந்திருக்கின்றது என்று அதனைப் பதிவு செய்தவர் உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார்.

தற்போது நாட்டில் தகவல் அறிந்து கொள்ளும் உரிமை என்ற ஒரு சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றி அது அமுலிலும் இருக்கின்றது. அதே நேரம் போலியான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிரான சட்ட நடவடிக்கை பற்றி குற்றப் புலனாய்வுத் துறைக்கு முறைப்பாடு செய்யவும் பாதிக்கப் பட்டவர்களுக்குச் சட்டத்தில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்று நடந்த கூட்டத்தில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளராக சாபி சிஹாப்தீன்  என்பவரும்  ஏனைய உறுப்பினர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதாக நாம் பதிந்திருந்தோம். ஆனால் ‘ஜாமியன்ஸ்’ அதனை மறுத்து செய்தி வெளியிட்டு வருகின்றது.

கடந்த 20.03.2022 ம் திகதி இரவு ஏழு மணிக்குப் ‘ஜாமியன்ஸ்’ வட்சப் குழு இந்த செய்தியைப் பதிவாக்கி இருந்தது. இதனை இலங்கை தொலைபேசி நிறுவனப் பதிவில் இருந்து உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். (பதிவை நீக்கினாலும் மீளப் பெற்றுக் கொள்ள முடியும்)

இதில் உள்ள கேள்வி என்னவென்றால் ‘ஜாமியன்ஸ்’ சொல்லும் செய்தி உண்மையானதா? நாம் பதிந்த செய்தி உண்மையானதா? என்பதனைத் தெரிந்து கொள்ள நாம் வத்துகாமக் கல்விக் காரியாலத்தின் பதிலை எதிர்பார்ப்பதுடன் இந்தப் பதிவை கல்வி அமைச்சின் கவனத்துக்கும் கொண்டு வருகின்றோம்.

நமக்கு கிடைத்த செய்தியின் படி சாபி சிஹாப்தீன் பெயரை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்  ஐ.எம்.இப்டிக்கார் (ஆளும் தரப்பு) என்பவர் பிரேரிக்க தற்போதய பிரதேச சபை உறுப்பினர் ஜே.எம். நௌபர் (எதிரணி) ஆமோதித்திருக்கின்றார்.

அதன் பின்னர் ரிஷாட் முஹம்மட் என்பவர் பெயர் பிரேரித்து ஆமோதிக்கப் பட்டிருக்கின்றது. இந்த நிலையில் அவர்கள் கூறுகின்றபடி வாக்கெடுப்பு என்ற கோரிக்கை நியாயமானதுதான். ஆனால் ரிஷாட் மொஹம்மட் தான் அந்தப் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்று மேடையில் ஏறி பகிரங்கமாக அறிவிக்க சபை ஏகமனதாக சாபி சிஹாப்தீன் அவர்களின் பெயரை போட்டியின்றி உறுதி செய்திருக்கின்றது.

இது தொடர்பாக அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பலருடன் நாம் உண்மைத் தன்மை பற்றித் தெரிந்து கொள்ளத் தொடர்பு கொண்ட போது அவர்கள் அனைவரும் இப்படித்தான் நடந்தது என்று உறுதி செய்கின்றார்கள்.

ஆனால் அன்றைய கூட்டத்துக்கே போகாத ஒருவர்தான் ரிசாட் முஹம்மட் வற்புறுத்தி வெளியேற்றப்பட்டார்; என்று குற்றச்சாட்டி இந்தப் பதிவை ‘ஜாமியன்ஸில்’ தனது பெயரில் பதிவு செய்திருக்கின்றார்.

கல்வித் திணைக்களப் பிரதிநிதியாக வந்திருந்த பௌசுல் ராஹ்மான் என்பவரும் அன்று மேடையில் அமர்ந்திருந்தார். அப்படி பலாத்காரமாக அடுத்த போட்டியாளர் வெளியேற்றப்படும் போது அவர் அங்கு என்ன செய்து கொண்டிருந்தார்.?

எனவே ‘ஜாமியன்ஸ்’ பதிந்திருக்கின்ற அந்த செய்திப்படி அந்த அதிகாரி  பக்கச் சார்பாக நடந்திருக்கின்றார் சட்டத்துக்கு முரணானக செயல்பட்டிருக்கின்றார் என்று தெரிகின்றது. எனவே இந்த செய்தி தொடர்பாக நாம் கல்வித் காரியாலயத்திடமும் கல்வி அமைச்சிடமும் உண்மையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இது குறிப்பாக வத்துகாம கல்விக் காரியாலய அதிகாரிகளுக்கு அவப்பெயரை உண்டு பண்ணும் ஒரு செய்தி. எனவே இதற்கு விளக்கமளிக்க வேண்டி சட்டரீதியான கடமை கல்வித் திணைக்களத்துக்கு இருக்கின்றது.

தனி நபர்களுடன் உள்ள குரோதம் காரணமாக ‘ஜாமியன்ஸின்’ போலியாக இந்தப் பதிவை போட்டிருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கும் உரிமை இருக்கின்றது. செய்தி வெளியீட்டாளர்கள் என்ற வகையில் நாம் வெளியிட்ட செய்தி தொடர்பாக உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளும் உரிமையின் அடிப்படையில் நாம் இந்த விளக்கத்தை கல்வி அமைச்சிடம் எதிபார்க்கின்றோம்.

மேலும் கல்லூரிகள் சார்பில் அதன் முத்திரையை (லோகோவை) பாவித்து வட்சப் குழுக்கள் செய்தி வெளியிடுவது நாம் அறிந்த வகையில் சட்டத்துக்கு ஏற்புடையதல்ல என்பது நமது கருத்து. இப்படி  நாட்டில் கல்லூரி லோகோவைப் பாவித்து வட்சப் குழுக்கள் செய்படுவதை இது வரை நாம் அவதானிக்கவில்லை.

பாடசாலை நிருவாகமும் கல்விக் காரியாலயமும்  இந்தத் தெரிவை சட்ட ரீதியாது என ஏற்றுக் கொள்ளும் போது பாடசாலை லோகோவைப் பாவித்து அந்தத் தெரிவை நிராகரித்து தனி நபர்கள் செய்தி பதிவது எப்படி ஏற்புடையதாகும்? இதன் சட்ட ரீதியான தன்மை பற்றி பாடசாலை நிருவாகமும் கல்விக் காரியாலயமும் பதில் சொல்ல வேண்டும்.

பாடசாலை நிருவாகம் அவர்களுக்கு இந்த லோகோவை பாவித்து அப்படி செய்தி வெளியிட அனுமதி வழங்கி இருக்கின்றதா என்று தெரிந்து கொள்ள வேண்டி இருப்பதுடன் கல்வித் திணைக்களம் இதற்கு வழங்கும் பதில் என்ன?

பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கூட்டம் மற்றும் பழைய மாணவர் சங்கக் கூட்டங்கள் என்றால் அதில் யார் யார் எல்லாம் கலந்து கொள்ள முடியும் என்று அரச சுற்று நிருபங்களும் சட்டமும் தெளிவாக சொல்லி இருக்கின்ற போது கையாட்களையும், அடியாட்களையும் அங்கு எடுத்துச் சென்று சட்டத்துக்கு முரணான கூட்டங்கள் பல இடங்களில் நடந்து வருகின்றது.

ஆனால் முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்ற போது அதில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். மேலும் பல நிருவாகிகளும் அதிகாரிகளும்கூட  சுற்று நிருபங்களை முறையாக தெரிந்து கொண்டு அந்தக் கூட்டங்களை நடத்துவதில்லை என்பதும் தெரிகின்றது.

கூட்டங்கள் நடக்கின்ற போது அதில் சில இடங்களில் வாக்கெடுப்பு என்றும் வருவதுண்டு. அப்போது இதில் யாரெல்லாம் வாக்களிக்க முடியும் என்ற பட்டியலை பாடசாலை நிருவாகம் வைத்திருக்க வேண்டும். பாடசாலைகள் தரமுயர்த்தப்படுகின்ற போது இவையெல்லாம் முறையாகப் பேனுவது பாடசலை நிருவாகத்தின் கடமையாகும்.

பொதுவாக ஆளுமையற்ற அதிபர்கள் வேலை பார்க்கும் இடங்களில் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் பழைய மாணவ சங்க நிருவாகிகள் தம்மை அதிபராக நினைத்துக் கொண்டு  ஆசிரியர்களையும் மாணவர்களையும் மிரட்டுவதும் நடக்கின்றது. இது மிகவும் பாராதூரமான குற்றம். இவர்களுக்கு பாடசலை நிருவாகத்திலோ ஆசிரியர்களின் கடமைகளிலோ மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களிலோ தலையிடுவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது.

அது முற்றிலும் பாடசாலை நிருவாகம் சம்பந்தப்பட்ட கடமை. பாடசாலை அபிருத்திச் சங்கம் பழைய மாணவர் சங்கம் என்பன பாடசாலை சமூகம் சார்ந்த நிருவனங்கள். அவற்றிற்கு பாடசாலை நிருவாகத்தில் தலையிட எந்த உரிமையும் கிடையாது.

கல்வி அமைச்சு அனுப்பி வைத்துள்ள ED/01/12/07/02/01 இலக்க 2018.06.22 மற்றும் திருத்திய  19/2019 இல-2019.04.09 திகதி சுற்று நிருபத்துக்கு அமைவாக இந்தக் கூட்டம் நடைபெற்றிருக்க வேண்டும். அன்றைய கூட்டத்தில்

1. 2022 வருடாந்த வரவு செலவு அறிக்கை

2. 2022 வருடத்துக்கான வேலைத் திட்டம்

என்பன கண்டிப்பாக பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றிருக்க வேண்டும். இவை எல்லாம் முறையாக நடந்ததா என்பதனை பிரச்சனைகள் வரும் போது அங்கு காரியாலயப் பிரதிநிதியாக வந்திருந்தவர் உறுதி செய்ய வேண்டி வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

31.03.2022ம் திகதிக்கு முன்னர் முறையாக அந்த விபரங்கள் காரியாலத்தக்கு அனுப்பி வைப்பப்பட வேண்டும். என்று கல்வி அமைச்சு சம்பந்தப்பட்ட நிருவனங்களை கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கூட்டங்களுக்கு எப்படி அழைப்புக்கள் விடுக்கப்பட வேண்டும் என்பதனையும் சுற்று நிருபத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருப்பதுடன் வெளிப்படை தன்மையுடன் இவை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சுற்று நிருபத்தில் பல இடங்களில் வலியுறுத்தப்பட்டிருந்தாலும் முறையான அறிவிப்புக்களைச் செய்யாது இரகசியமாக கூட்டங்களை நடாத்தி தமக்கு வேண்டியவர்களை தெரிவு செய்கின்ற ஒழுங்குகளும் சில இடங்களில் நடந்து வந்திருக்கின்றன.

குறிப்பாக நிதி மோசடிகள் இடம் பெறுவதால் அவை எப்படிக் கையாளப்பட வேண்டும் என்பதனை நாம் இங்கு சுட்டிக் காட்டி இருக்கின்ற ED/01/12/07/02/01 இலக்க 2018.06.22 சுற்றுநிருபத்தில் தெளிவாக சொல்லப் பட்டிருக்கின்றது. எனவே குறிப்பாக நிருவாகிகள் இந்த சுற்று நிருபங்களை தெளிவாக வாசித்து அதன்படி நடந்து கொண்டால் சட்டச் சிக்கல்களில் இருந்து தப்பி தமது பணிகளைச் செவ்வனே நிறைவேற்ற முடியும்.

-தகவல்களை வழங்கிய கல்வி அதிகாரிகளுக்கு நன்றிகள்

Previous Story

பிரதமர் இம்ரான் கான் ரஷ்யா பயணம்

Next Story

ரணில்-கோட்டா இரகசிய பேச்சு?