நஜீப் பின் கபூர்
நன்றி ஞாயிறு தினக்குரல் 03.08.2025
ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்துச் சுதந்திரம் எந்தளவுக்கு முக்கியமோ அதே போன்று ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒரு பலம் மிக்க எதிரணியோ கூட்டணியோ அவசியம் தேவை என்ற விடயத்தில் நமக்கு மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. சில சமயங்களில் ஜனாநாயக நாடுகளில் இப்படி எதிர்க் கட்சிகள் மிகவும் பலயீனமான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.
தற்போது இந்தியாவில் கூட இப்படி ஒரு நிலைதான் இருந்து வருகின்றன. நமது நாட்டிலும் ஸ்ரீமா அம்மையார் காலத்தில் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் பலயீனப்பட்டிருந்தது. அதே போன்று ஜே.ஆர். ஜெயவர்தன காலத்தில் சுதந்திரக் கட்சிக்கு அப்படியான ஒரு நிலை வந்தது. அதனால் 1977-1983 களில் அமீர்தலிங்கம் எதிர்க் கட்சித் தலைவராக இருந்திருக்கின்றார்.
அரசாங்கத்தின் எல்லாத் திட்டங்களுக்கும் குறுக்கே நிற்பது ஒரு நல்ல எதிர்க் கட்சியின் பாண்பாக இருக்க முடியாது. அதே நேரம் எதிர் கட்சியின் நல்ல ஆலோனைகளையும் உள்வாங்கிக் கொள்வதும் அரசின் கடமையாகும். கீரியும் பாம்புமாக நின்று அரசியல் செய்வது எதிர்க்கட்சிக்கும் அரசுக்கும் கூட ஆரோக்கியமாக இருக்க மாட்டாது.
என்றாலும் இன்றைய எதிர்க் கட்சியின் நடவடிக்கைகளை பொதுமக்கள் மட்டுமல்ல எதிரணியில் இருக்கின்ற ஏனைய கட்சிகளே விமர்சித்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் வெறும் மூன்று ஆசனங்களை வைத்திருக்கின்ற பொதுஜன பெரமுனையின் நாடாளுமன்ற குழுத் தலைவர் நாமல் நான் தான் உண்மையான எதிர்க் கட்சித் தலைவர் என்று கூறி வருகின்றார். இது யதார்த்தமானதல்ல.
அடுத்து இன்று எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஓரணியின் இணைய வேண்டும் என்று ஒரு கருத்து அவர்கள் மத்தியிலே பேசப்படுகின்றது. ஆனால் களத்தில் அப்படி ஒரு நிலை தெரியவில்லை. இன்று நாடாளுமன்த்தில் இருக்கின்ற பிரதான குழுக்களை எடுத்துக் கொண்டால் ஆளும் என்பிபி. ஒரு கிளிப் பிள்ளை அணியாகத்தான் செயல்பட்டு வருகின்றது.
அவர்களுக்கு 159 ஆசனங்கள். மொத்த வாக்கில் அவர்கள் 61 சதவீதம் பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் மத்தியில் முரண்பாடான கருத்துக்களுக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை. அவர்களின் கட்டுப்பாட்டை வெளிப்படுத்துகின்ற ஒரு ஒழுங்காகத்தான் நாம் இதைனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
எதிரணியை எடுத்துக் கொண்டால் நாடாளுமன்றத்தில் பிராதன கட்சியாக சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி இருக்கின்றது. அவர்களுக்கு 40 ஆசனங்கள். மொத்த வாக்கில் இது 35 சதவீதம். ஆனால் இதில் பல அரசியல் கட்சிகள்-குழுக்கள் அங்கு இணைந்திருக்கின்றன என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் இருக்கும் அடுத்த பெரிய சக்தி இலங்கை தமிழரசுக் கட்சி அவர்களுக்கு எட்டு ஆசனங்கள்.
புதிய ஜனநாயக கூட்டமைப்புக்கு ஐந்து ஆசனங்கள். பொது ஜனபெரமுன மற்றும் முஸ்லிம் காங்கிரசுக்கு தலா மூன்று ஆசனங்கள். நாடாளுமன்றத்தில் இருக்கின்ற ஏனைய அனைத்து கட்சிகளில் தலா ஒரு ஆசனம் என்று சிலர் அங்கு இருக்கின்றார்கள்.
இதிலுள்ள மிகவும் கேவலமான நிலை என்னவென்றால் இது வரை நாட்டை பலமுறை ஆட்சி செய்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு சதவீதமான வாக்கைக் கூட இந்தத் தேர்தலில் பெற்றுக் கொள்ள முடியவில்லை.!
அவர்களுக்கு ஒரு ஆசனம் மட்டுமே நுவரெலியாவில் கிடைத்தது அது கூட இலங்கை தொழிலாளர் காங்கிரசில் போட்டியிட்ட ஜீவன் தொண்டமான் கட்சி வாக்குகள் என்பதும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். இந்தக் கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினராவது கிடைக்கவில்லை.
அப்படிக் கிடைத்திருந்தால் அதன் மூலம் ரணில் உள்ளே நுழைந்திருப்பார். இந்தளவுக்கு நாடாளுமன்றத்தில் காணாமல் போய் இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில்தான் குறிப்பாக இன்றும் சஜித்துக்குப் பெரும் சவலாக இருந்து வருகின்றார்.
மேற்சொன்ன தகவல்களின்படி நாடளுமன்றத்திலுள்ள கட்சிகளின் பலத்தையும் பலயீனத்தையும் ஒருவர் புரிந்து கொள்ள முடியும். நாம் வழக்கமாகச் சுட்டிக் காட்டுவது போல ஐக்கிய மக்கள் சக்தி 40 ஆசனங்களை வைத்திருந்தாலும் அதன் தலைவரின் ஆளுமையில் இருக்கின்ற பலயீனங்கள் காரணமாக அவருக்குத் தொடர்ந்தும் பல தரப்பினர் தலையிடி கொடுத்து வருகின்ற ஒரு நிலை நமது அரசியலில் தெரிகின்றது. இதன் பின்னணியில் நிச்சயமாக ரணில் இருக்கின்றார்.
அதே நேரம் சஜித்துடன் இருக்கின்ற பலரும் கூட இதற்குத் துணை இருக்கின்றார்கள். அவர்களை சஜித் தெரிந்துதான் வைத்திருக்கின்றார். தன்னிடம் இருக்கின்ற பலயீனங்களும் இதற்குக் காரணம் என்பதும் சஜித் அறிவார். இது வாரிசு அரசியலின் இயல்பு.
இதனால்தான் கட்சி சீரமைக்ப்பட வேண்டும். கீழ்மட்டத்தில் இருந்து மேல் மட்டம்வரை மாற்றம் தேவை என்று கட்சிக்குள்ளே கருத்து சொன்னவர்களும் இருக்கின்றார்கள். என்னதான் சொன்னாலும் பேசினாலும் கட்சிக்குள் சஜித் வலுவாக இருக்கின்றார். அங்கு அவருக்கு எதிரானவர்களும் இருந்து வருவதும் உண்மை.
அதே நேரம் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைய வேண்டும் என்போரும் அர்ஷவை தலைமைக்குக் கொண்டுவர வேண்டும் என்போரும் தயாசிரியை உள்ளே கொண்டு பதவி கொடுத்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்போரும் இதில் இருக்கின்றார்கள்.
ஆனால் இந்த விடயங்கள் உடனடியாக நடப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றுதான் நாம் கருதுகின்றோம். இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எட்டு ஆசனங்கள் இருந்தாலும் இந்த எதிரணிக்குத் தலைமைத்துவம் கொடுக்கின்ற போட்டியில் அவர்கள் இல்லை. சமகால அரசியலைப் பொறுத்தவரை தெற்கு மக்கள் தமிழர்களின் எதிரணித் தலைமையை ஏற்கும் மனநிலையில் இல்லை.
ஒருவேளை மாகாணசபைத் தேர்தல் வருமாக இருந்தால் மீண்டும் சஜித்தும் ரணிலும் இணைய வேண்டும் என்ற முயற்சிகளும் பேச்சுகளும் வரலாம். ஆனால் நடைமுறையில் அதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட போது கிடைத்த தேர்தல் பெறுபேருகள்தான் மாகாணசபைத் தேர்தலிலும் வரும் என்ற கருதில் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அமைக்கலாம் என்றும் இவர்கள் சிந்திக்கலாம் ஆனால் 2026ல் மாகாணசபைத் தேர்தல் வருமாக இருந்தால் அது உள்ளாட்சி மன்றத் தேர்தல் போல ஒரு போதும் அமையாது என்பது நமது கணிப்பு.
எனவே தற்போதய நிலையில் மீண்டும் பலமான ஒரு கூட்டணிக்கு வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. என்னதான் தனது அணியில் பலயீனமான மனிதராக இருந்தாலும் சஜித்தை விட்டால் இன்று இந்த இடத்துக்கு அங்கு யாரும் இல்லை.
மேலும் புதிய எதிர்க் கட்சிகளின் கூட்டணி ஒன்று தொடர்பாக நமது அரசியல் அரங்கில் பேசப்பட்டு வருகின்றது. அது பற்றி இப்போது பார்ப்போம் அரசியல் செயல்பாட்டாளர்களாக இருக்கும் கடும் போக்கு இனவாதியான சம்பிக்க ரணவக்க தான் ஒரு புதிய அரசியல் கூட்டணியை அமைக்க இருப்பதாகச் சொல்லி வருகின்றார்.
இது எந்தளவுக்கு வெற்றி பெற முடியும்? அதே போல விமல் வீரவன்ச கம்மன் பில போன்றவர்களுக்கும் ஒரு புதிய கூட்டணி பற்றி ஆசைகள் இருக்கின்றது. இவர்கள் அமைக்கின்ற கூட்டணியை சிறுபான்மை சமூகங்கள் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ளும்.? பேரின சமூகங்கள் கூட இவர்களை ஊழல் பேர்வழிகளாகத்தான் பார்க்கின்றார்கள்.
மேலும் புதிய கூட்டணி ஒன்று பற்றி முன்னாள் அமைச்சரும் மேற்கத்திய முகவருமான மிலிந்த மொரகொட தொடர்பாகவும் பேசப்படுகின்றது. இவருக்குப் பின்னால் அமெரிக்க மற்றும் இந்திய போன்ற செல்வாக்கான நாடுகள் இருக்கின்றன என்பது உண்மையாக இருந்தாலும் இந்த புதிய அரசியல் இயக்கம் களத்துக்கு வந்து மக்களின் அங்கிகாரம் பெறுவது என்பதும் இலகுவான காரியமல்ல.
அதே போன்று பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேக்காவும் ஐதேக. மற்றும் ஐமச முக்கியஸ்தர்கள் சிலரை இணைத்துக் கொண்டு ஒரு அணியை உருவாக்கின்ற முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றது.
அனுராவுக்கு விசுவாசமாக அவர்கள் சிந்திப்பதாகவும் தெரிகின்றது. இது தவிர சஜித்துக்கு எதிராக மற்றுமொரு பலமான சதியும் வருகின்றது. இதனைப் பிரிதொரு இடத்தில் சொல்லி இருக்கின்றோம்.
இவை எல்லாவற்றையும் விட இன்று பலமான ஒரு எதிரணி பற்றி எதிர்பாக்கின்ற ஒரு கூட்டம் இருக்கின்றது. இதற்காக எவ்வளவு காசு வேண்டுமானாலும் அவர்கள் கொட்டவும் தயாராக இருக்கின்றார்கள்.
அவர்கள் யார் என்று கோட்டால் கடந்த ஆட்சி காலத்தில் குறிப்பாக ராஜபக்ஸாக்களின் காலத்தில் மக்கள் பணத்தை கோடி கோடியாக கொள்ளையடித்து இன்று சட்டத்தின் பிடிக்குள் சிக்கி சிறை போக வேண்டி வரும் என்போரும் ஒரு பலமான எதிரணியை கட்டி எழுப்புவதில் அதிக நாட்டம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. இவ்வாறான எதிரணியினரை மக்கள் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ளவார்கள்?
இந்த முயற்சிகளுக்கு மத்தியில் இந்த அரசை சதிகளின் மூலம் வீழ்த்துவதற்காக ஏற்பாடுகள் உள்ளநாட்டிலும் சர்வதேச மட்டத்தில் நடக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதனை ஆட்சியாளர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று நாம் நம்புகின்றோம்.
எனவே அரசை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றுவது என்பதனை விட தமக்குள் ஒரு பலமான எதிரணியை அமைப்பதிலே அவர்கள் மத்தியில் பெரும் நெருக்கடிகளும் வெட்டுக் கொத்துக்களும் நடந்து வருவதை இப்போது நமக்குப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
தெற்கு அரசியல் அப்படி இருக்க வடக்கு கிழக்கு தமிழ் தரப்புக்கள் தமக்குள் ஒரு பலமான அரசியல் கூட்டணி பற்றி சிந்திக்கும் நிலை தெரிகின்றது. அது கூட ஏறக்குறைய தெற்கு அரசியல் பின்னணிகளுக்குச் சமமான பலயீனங்களுடன்தான் அங்கும் இருக்கின்றது.
அதற்கு சித்தாந்த ரீதியில் பல வர்ணங்கள் இருக்கின்றன. அவர்கள் பெரும்பாலும் தமது இனம் சார்ந்த மக்களின் நலன்களுடன்தான் பயணிக்க முயற்சி செய்கின்றார்கள்.
அவர்கள் தேசிய அரசியலை விட இனரீதியான அரசியலுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றார்கள். இந்த நாட்டில் இருக்கின்ற சிறுபான்மை சமூகங்களின் இரண்டாம் இடத்தில் இருக்கின்ற முஸ்லிம்களின் அரசியலை இன்று எடுத்துக் கொண்டால் அங்கு ஒட்டு மொத்தமாக தேர்தல்களில் தமது கட்சிசார்ந்த அரசியலும் அதன் மூலம் எப்படி உள்ளே நுழைந்து மேடைகளில் இடம்பிடிக்கலாம் என்ற நிலை தெளிவாகத் தெரிகின்றது. தமிழர்களுக்கு ஏதாவது கொடுப்பதாக இருந்தால் தமக்கும் தா என்பது தான் இவர்களின் கோசமாக இருந்தது.
இன்று அதற்கு வாய்ப்புக்கள் கம்மியாக இருப்பதால் அவர்கள் மெத்தன அரசிலுக்கு தம்மை இயல்பாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் இன்று முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் தனித்துவ அரசியல் பெரும் பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது.
கடந்த காலத் தேர்தல்களில் ஒரு இலட்சம் விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற முஸ்லிம் தலைவர்கள் இன்று 30000 ஆயிரம் விருப்புவாக்குகள் என்ற நிலையில் தொங்கிக் கொண்டு நாடாளுமன்றம் நுழைந்திருப்பது இதனை உறுதி செய்கின்றது.
மலையகத்திலும் ஒரு சில்லறை அரசியல்தான் இன்று நடந்த வருகின்றது. அனுர ஆட்சியில் இவர்கள் நலன்களில் உரிய தீர்வுகள் வழங்கப்பட்டால் மலையக அரசியல் கட்சிகள் காணாமல் போக இடமிருக்கின்றது.
இன்று நாடாளுமன்றத்திலுள்ள எதிரணியினர் அரசுக்கு எதிராக முன்வைக்கின்ற குற்றச் சாட்டுக்கள் விமர்சனங்கள் தர்க்க ரீதியானதாகத் தெரியவில்லை. நாடாளுமன்றத்துக்கு வெளியே இப்படியான கருத்துக்களை முன்வைக்கின்ற போது அவர்கள் சட்டத்தின் பிடியில் மாட்டிக் கொள்கின்றார்கள்.
உதாரணத்துக்கு கொழும்பில் நடந்த ஒரு அரசியல் மேடையில் சர்ச்சைக்குரிய திஸ்ஸ குட்டி என்ற அரசியல்வாதி அனுரா மோல்டாவில் கோடிக் கணக்கில் மூலதனமிட்டிருக்கின்றார் என்று பேச கதை நீதி மன்றம் சென்றது. அனுர தரப்பில் பத்து பில்லியன் நஸ்டஈடு என்று வழக்குத் தாக்கள் செய்யப்பட்டது.
இப்போது தான் அரசியல் மேடையில் அப்படிப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்டு வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருக்கின்றார் திஸ்ஸ குட்டி. இதிலிருந்து நாம் எதனைச் சொல்ல வருகின்றோம் என்றால் இந்த அரசுக்கு எதிரான கருத்தியல் ரீதியலான போராட்டங்களை நடத்துவதில் எதிரணியினர் முதிர்ச்சி போதாமல் இருக்கின்றது என்று சொல்ல வேண்டும்.