உ.பி.தேர்தல்: இந்திய அரசியல் 

-அ.தா.பாலசுப்ரமணியன்-

சுமார் 23.78 கோடி மக்கள் தொகை, 15 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், 403 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ஒரு மாநிலம், 80 எம்.பி.க்களை நாடாளுமன்ற மக்களவைக்கும், 30 எம்.பி.க்களை மாநிலங்களவைக்கும் அனுப்பும் ஒரு மாநிலம் தேர்தலை எதிர்கொண்டால் நாடு அதை உற்று நோக்கும். அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஆனால், உத்தர பிரதேச தேர்தலை இந்தியா அதிகம் கவனிப்பது அதன் பிரமாண்டத்துக்காக மட்டுமே அல்ல.

அதன் அளவுக்கும் மிஞ்சிய தாக்கத்தை உத்தர பிரதேச தேர்தல் இந்திய அரசியல் மீது செலுத்தும் என்பதால்தான், இவ்வளவு கவனம் அதன் மீது குவிகிறது.

1985ஆம் ஆண்டு வரை ஒரு முறை தவிர, தொடர்ந்து ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், இந்த தேர்தலில் ஆளும் பாஜகவின் முக்கிய போட்டியாளர் கூட இல்லை என்றே கணிப்புகள் கூறுகின்றன.

சமாஜ்வாதி கட்சிதான் பாஜகவின் முக்கிய போட்டியாளராக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், உ.பி அரசியல் களத்தில் என்ன நடக்கிறது? இது என்னென்ன விதமான தாக்கத்தை இந்திய அரசியல் மீது செலுத்த வாய்ப்புள்ளது என்று உத்தர பிரதேச விவகாரத்தில் ஆழமான புரிதல் உள்ள மூத்த பத்திரிகையாளர் ராம்தத் திரிபாதியிடம் கேட்டோம்.

“ஒருபுறம் கடும்போக்கு இந்துத்துவ அரசியல், மறுபுறம் சமூக நீதி அரசியல். இது இரண்டுக்கும் இடையிலான போட்டிதான் இப்போதைய உ.பி தேர்தல் களத்தில் நிலவுகிறது” என்கிறார் அவர்.

மேலும் இது பற்றி கூறிய அவர், பாஜக அரசு இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்து விட்டது, வேலை வாய்ப்புகளை பெருக்கவில்லை, பல அரசுப் பணியிடங்களை நிரப்பாமல் வேலைகளை ‘அவுட்சோர்சிங்’ செய்கிறது என்கிற கோபம், பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு உண்மையான அரசியல் அதிகாரம் கிடைக்கவில்லை; எல்லாமே மையப்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான் பாஜகவில் இருந்து சமீபத்தில் வெளியேறிய சுவாமி பிரசாத் மௌரியா போன்ற தலைவர்கள் வைத்த குற்றச்சாட்டு. ஊரக தொழில்களில் கடும் நெருக்கடி நிலவுகிறது. மக்களுக்கு பொருளாதார சிரமங்கள் மிகுதியாக உள்ளன.

இதையெல்லாம் தாண்டியும் நரேந்திர மோதியின் கவர்ச்சி வேலை செய்கிறதா என்பதை அவருக்கு நிதி வழங்கும் சக்திகள் பரிசோதிக்க இந்த தேர்தல் பயன்படும்”, என்றார் ராம்தத் திரிபாதி.

அகிலேஷ்: இந்த முறை அதிகம் களத்தில் காலூன்றி நிற்பதாகப் படுகிறது.

இந்த தேர்தலில் ஆதித்யநாத் தோற்றால், மோதியின் கவர்ச்சி சரிகிறது என்று பொருள். அதேநேரம், அவர் வென்றால், அவர் ஒரு வலுவான தலைமையாக உருவெடுக்கக்கூடும். அதற்காகத்தான் அவரை ஆர்.எஸ்.எஸ். வளர்க்கிறது என்ற பேச்சும் உண்டு. இதை ஒட்டி பலவித புரளிகளும் உண்டு, என்றார் அவர்.

“ஆனால், நிலைமை என்னவென்றால், கடந்த முறையைவிட இந்த முறை, சமாஜ்வாதி கட்சி களத்தில் அதிகம் காலூன்றி நிற்கிறது. புத்திசாலித்தனமாகவும் வேலை செய்கிறது. வெறும் ஆட்சியின் குறைகளை மட்டும் பேசாமல், சாதிக் கணக்கீடுகளிலும் அது வேலை செய்கிறது. எனவே ஒருவேளை பாஜக வென்றாலும், அவர்கள் பெறும் இடங்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும். அப்படி நடந்தால், முதல்வர் பதவியை வேறொருவருக்கு தரவே மோதி தலைமை விரும்பும். இதன் மூலம் தனக்குப் போட்டியாக வர சாத்தியமுள்ள ஒருவரை ஓரம் கட்டவே அவர் விரும்பக்கூடும்,” என்று கூறினார் ராம்தத் திரிபாதி.

மீண்டும் பாஜக வலுவாக வென்றால், ரத்து செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களும் மீண்டும் நிறைவேற்றப்படக்கூடும் என்ற அச்சமும் விவசாயிகள் மத்தியில் இருப்பதாக கூறினார் அவர்.

அதைப் போலவே 1989 முதல் உத்தர பிரதேசத்தில் இறங்கு முகத்தையே சந்தித்து கடந்த முறை 10க்கும் குறைவான இடங்களையே வென்ற காங்கிரசுக்குப் பின்னால், இப்போது எந்த ஜாதியோ, மதமோ வாக்கு வங்கியாக இல்லை. இத்தகைய சூழலில் பிரியங்கா தலைமையில் களமிறங்கும் காங்கிரசுக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. அதனால்தான், அதற்கு மாற்றாக, பெண்களைக் கவரும் வகையில் முழக்கத்தை அமைத்து, அந்த உத்தியை முயற்சியை முயற்சிக்கிறார் பிரியங்கா.

ஆனால், வீட்டில் ஆண்கள் முடிவு எடுக்கும் வழியிலேயே வாக்களிக்கும் சமூகத்தில், இது பெரிதாக பலன் தருவதாகத் தெரியவில்லை என்றார் அவர்.

பாஜக இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், முன்பைவிட அது வலுவாக இருக்குமா என்று கேட்டபோது, வெற்றி பெற்றாலும்கூட எண்ணிக்கை குறைந்தால், அது இரண்டு வழிகளில் பாஜகவை பாதிக்கும் என்றார் ராம்தத். ஒன்று, மோதியின் செல்வாக்கு சரிகிறது என்ற தோற்றத்தை பாஜகவுக்கு நிதி வழங்குவோருக்கு அது அளிக்கும். மற்றொன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாஜகவின் வலு மேலும் குறையும் என்றார் அவர்.

ஆனால், டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் முனைவர் ஆய்வு மாணவராக உள்ளவரும் உ.பி.யை சேர்ந்தவருமான அஸ்ரம் அப்படி நினைக்கவில்லை.

ஒருவேளை உபியில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், அதன் மூலமாக 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தம்மை வலிமையாகத் தயாரித்துக்கொள்ள அது பாஜக-வுக்கு உதவக்கூடும் என்கிறார் அவர்.

இந்த முறை, சமாஜ்வாதி கட்சி வலிமையான போட்டியைக் கொடுப்பதாக கூறும் அவர், ஆனால், போட்டி கடுமையாக இருக்கும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைசி நேரத்தில் நடக்கும் அரசியல் பிகார் போல 20-30 இடங்கள் வேறுபாட்டில் பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை கொண்டுவரவும் வாய்ப்பு உண்டு என்கிறார்.

அகிலேஷ் இந்த முறை, யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளைப் பெற வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்று கூறுகிறார் அவர்.

சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்று முதல்வரானால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் எப்படிப்பட்ட தாக்கத்தை செலுத்துவார் என்று கேட்டபோது, அகிலேஷின் தந்தை முலாயம் சிங் யாதவுக்கு தேசிய அரசியலில் சில அபிலாஷைகள் இருந்தன. ஆனால், அகிலேஷுக்கு அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார் அஸ்ரம்.

இந்த இருவரோடு நடத்திய உரையாடல்கள் அடிப்படையிலும், ஊடகங்களில் வெளியாகும் அலசல்கள் அடிப்படையிலும் பார்த்தால், உத்தரப்பிரதேசத் தேர்தல் கீழ்க்கண்ட விதமான தாக்கங்களை இந்திய அரசியல் மீது செலுத்த முடியும் என்று தெரிகிறது.

மண்டல் – கமண்டல்: எந்த முகாம் வென்றால் என்ன நடக்கும்?

1.உ.பி. தேர்தலில் மீண்டும் பாஜக வென்றால், 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அது தன்னை வலிமையாகத் தயாரித்துக் கொள்ளும். ஆனால், முந்தைய தேர்தலைவிட அதன் எண்ணிக்கை வலு குறைந்தால், அது இந்த ஆண்டு நடக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் மாநிலங்களவையில் பாஜகவின் வலிமை மேலும் குறையும். இது தான் விரும்பியபடி சட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான பாஜக அரசின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும். அத்துடன், பாஜக-வுக்கு நிதி அளிப்போரிடம் இது தடுமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

2.பாஜக வலிமையாக வெற்றி பெற்றால், பாஜக-வுக்கள் மோதி முகாமுக்கு வெளியே யோகி ஆதித்யநாத் ஒரு வலிமையான தலைவராக உருப்பெறுவார். இது மோதி முகாமுக்கு சவாலாக மாறக்கூடும். ஆனால், பாஜக பலவீனமாக வென்றால், ஆதித்யநாத் மாற்றப்பட்டு வேறு ஒருவர் முதல்வர் பதவிக்கு நியமிக்கப்படலாம். இதன் மூலம் தனக்குப் போட்டியாக வரக்கூடிய சாத்தியமுள்ள ஒருவரை முடக்கி நரேந்திர மோதி முகாம் வெற்றி பெறும்.

3.அரசியல்ரீதியாக அல்லாமல், சாதிரீதியாக அணி திரட்டப்படுவதாகவே உ.பி. தேர்தல் களம் ஆகியுள்ள நிலையில், பாரம்பரியமாக தமக்கு ஆதரவாக இருந்த சமூகங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்குப் பின் அணிதிரண்டுள்ள நிலையில், காங்கிரசுக்குப் பின்னால் நிற்க சாதிக்குழு ஏதும் இல்லை. இதனால், ‘நான் பெண். என்னால் போராட முடியும்’ (லட்கி ஹுங். லட் சக்தி ஹுங்) என்ற முழக்கத்தைக் கையில் எடுத்துள்ளார், அந்த மாநிலத்தில் காங்கிரசின் முகமாக உள்ள பிரியங்கா வாத்ரா. அத்துடன், அவர் 40 சதவீத தொகுதிகளை பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்குவதாகவும் கூறியுள்ளார்.

இந்த உத்தி ஓரளவு வெற்றி பெற்றாலும்கூட சாதி ரீதியிலான அணி திரட்டலுக்குக் குறுக்கு வெட்டாக பாலின ரீதியில் பெண்களை அணி திரட்டுவதை தேசிய அளவில் இது ஊக்குவிக்கும்.

ஆனால், இந்த உத்தி எந்தப் பலனையும் தராமல் போகுமானால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தன் தலைமையில் ஒரு அணியை திரட்டிக் கொள்வது காங்கிரசுக்கு கடினமாகப் போகும் என்பது மட்டுமல்ல, 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள உ.பி. மாநிலத்தில் அதற்கு ஒரு கூட்டணிக் கட்சியும்கூட கிடைக்காமல் போகும்.

4.இந்திய அளவில் தலித் அரசியல் மூலம் மாநில ஆட்சியைக் கைப்பற்றி ஒரு மாதிரியை உருவாக்கிய மாயாவதி, இந்த தேர்தலில் காங்கிரசைப் போலவே அரசியல் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் பரவலாக எண்ணிக்கை வலுவைக் கொண்டுள்ள தலித்துகளை மட்டுமே தமக்குப் பின்னணியாக கொண்டுள்ள மாயாவதி, முஸ்லிம் வாக்குகளையோ, பிற்படுத்தப்பட்டோர் அல்லது முன்னேறிய வகுப்பினர் வாக்குகளையோ தமக்கு ஆதரவாகத் திருப்பினால் மட்டுமே வெற்றியைப் பெற முடியும். அதற்கு மாறாக பரவலாக கணிக்கப்படுவதைப் போல அவர் படுதோல்வி அடைந்தால், அது தலித் அரசியலுக்குப் பின்னடைவாக இருக்கும்.

மாறாக, மாயாவதி கொஞ்சம் தொகுதிகளில் வென்று, பாஜக மயிரிழையில் பெரும்பான்மை எண்ணிக்கையை தவறவிட்டால், சிறிது காலம் பாஜக, மாயாவதியை ஆள அனுமதித்து மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி தேர்தலுக்கு செல்ல விரும்பலாம் என்று சில உ.பி அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

5.உ.பி. தேர்தலில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மற்றொரு அரசியல் சக்தி, இடதுசாரிகள். 2007, 2012, 2017 என தொடர்ந்து மூன்று சட்டமன்றத் தேர்தலாக உ.பி.யில் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத இடதுசாரி கட்சிகளுக்கு பல மாவட்டங்களில் அமைப்பு ரீதியாக உள்ள கொஞ்சம் வலு உண்டு. ஆனால், அரசியல் கணக்குகளில் இந்த வலுவைக் கொண்டு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை அவர்களால்.

இந்த தேர்தலில் பாஜக மீண்டும் வெல்லக்கூடாது என்பதே தங்கள் முக்கியக் குறிக்கோள் என்று கூறும் இடதுசாரித் தலைவர்கள், அதற்கான வலிமை உள்ள கட்சி என்று கருதப்படும் சமாஜ்வாதியோடு இணைந்துகொள்ள முயற்சி செய்தார்கள். ஆனால், சமாஜ்வாதி ஆர்வம் காட்டவில்லை. வேறு எந்தப் பெரிய கட்சியும் அவர்களை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை.

இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இ.க.க. (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்), ஃபார்வார்டு பிளாக் உள்ளிட்ட இடதுசாரிகள் கூட்டாக 35 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளனர். இந்த தொகுதிகளில் பிற கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு கணிசமான வாக்குகளை வாங்கினால் வரும் தேர்தல்களில் அவர்கள் பொருட்படுத்தப்படுவார்கள். இல்லாவிட்டால், இந்திய அரசியலில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு மேலும் ஆழமாகும்.

  1. ‘டெல்லியை கைப்பற்றுவதற்கான பாதை லக்னோ (உ.பி. தலைநகர்) வழியாகச் செல்கிறது’ என்ற ஒரு தொடர் அரசியல் வட்டாரத்தில் உண்டு. உ.பி.யை கைப்பற்றுகிறவர்கள் டெல்லியையும் கைப்பற்றுவார்கள் என்ற பொருளில்தான் அந்த தொடர் பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக உண்மை என்றாலும், இதற்கு விதிவிலக்கு இல்லாமல் இல்லை. குறிப்பாக 2002 சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி பாஜக ஆதரவோடு ஆட்சியைக் கைப்பற்றியது. பிறகு இந்தக் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு மாயாவதி பதவி விலகினார்.

மாயாவதி ஆதரவோடு முலாயம் சிங் ஆட்சிக்கு வந்தார். இந்தப் பின்னணியில் 35 இடங்களை சமாஜ்வாதி கட்சி பெற்றிருந்தாலும், உ.பி.யில் வெறும் 9 இடங்களை மட்டுமே கைப்பற்றிய காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது. குழப்பமான பின்னணியில் நடந்த விதி விலக்கு இது. இப்போது போட்டி தெளிவாக ‘மண்டல் – கமண்டல்’ என்ற இரண்டு முகாம்களுக்கு இடையே நடக்கிறது. இதில் வெற்றி பெறும் முகாம், நிச்சயம், 2024 தேர்தலுக்கு இந்த வெற்றி தரும் வலுவோடுதான் செல்லும்.

 

 

Previous Story

முனியை சந்திக்க குற்றத் தடுப்பு பிரிவுக்கு சென்ற பேராயர்

Next Story

அமெரிக்க சிறுவனுக்கு 100 ஆண்டு சிறை