உத்தர பிரதேச  தேர்தல் வெற்றியும் ஜாதியும்!

பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான வேலைகள் அந்தந்த மாநிலங்களில் சிறப்பாக நடந்து வருகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் 403 சட்டசபைத் தொகுதிகள் இருக்கின்றன. இங்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்டத்தேர்தல் வரும் பிப்ரவரி 10-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம் இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலம். இங்கு நடக்கும் தேர்தலை நாடே உற்றுநோக்கி வருகிறது. இங்கு ஆட்சியைக் கைப்பற்ற ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டு வேலை செய்து வருகின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் இங்குள்ள ஒவ்வொரு ஜாதியும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இடத்தில் இருந்திருக்கின்றன. இந்த 2022 தேர்தல் சற்று வித்தியாசமாக ஓ.பி.சி பிரிவினரை மையமாக வைத்தே வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது.

சமாஜ்வாதி கட்சி

1990-களின் முற்பகுதியில் மண்டல் கமிஷன் அறிக்கை வந்தது. அதை ஆராய்ந்து அதற்குத் தகுந்தமாதிரி தன்னுடைய அரசியல் ஓட்டத்தை அமைத்துக்கொண்டார் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ். சமூக நீதி பெயரில் அனைத்து தலைவர்களையும் அனுசரித்து சென்றார். அதனால் பெரும்பாலான ஒபிசி பிரிவு மக்கள் சமாஜ்வாதி பக்கம் வந்தனர்.

ஒபிசி

உத்தரப்பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 55% பேர் ஒபிசி பிரிவினர். இங்கு அரசியல் செய்யும் நான்கு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் ஒபிசி பிரிவினர். இன்றைய தேதிதியில் உத்தரப்பிரதேசத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடிய சக்தியாக இவர்கள் இருக்கிறார்கள். அதனால் அனைத்துக் கட்சிகளும் இவர்களை அனுசரித்து செல்லத்தயாராக உள்ளனர்.

பாஜக‌

உத்தரப்பிரதேச பாஜக-வில் தான் அதிக எண்ணிக்கையிலான ஒபிசி எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள்.

அங்கு 102 பேர், சமாஜ்வாதியில் 12 பேர், அப்னா தள் 5, காங்கிரஸில் 1, பிஸ்பி கட்சியில் 5 பேர் ஒபிசி எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். சிஎஸ்டிஎஸ் அமைப்பு நடத்திய ஆய்வில், பாஜக 2009ல் இருந்து 2014-க்குள் 12-14 சதவிகித ஒபிசி வாக்குவங்கியை அதிகரித்திருக்கிறது. 2017 சட்டசபைத் தேர்தல் மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் 45% ஒபிசி ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன.

தோல்வி

2017ல் பாஜகவிடம் தோற்றது சமாஜ்வாதி கட்சி. யாதவர்களின் கட்சி என்று சொல்லப்படும் சமாஜ்வாதி கட்சிக்கு கடந்த தேர்தலில் 66 சதவிகித ஓட்டுகள் யாதவர்களின் ஓட்டுகள். யாதவர்கள் அல்லாத மற்ற ஓபிசியின் 60% ஓட்டுகள் பாஜக-வுக்கு சென்றது. யாதவர்கள் அல்லாத மற்ற ஒபிசி மக்கள் முடிவு செய்து கடந்த முறை தேர்தலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவை உத்தரப்பிரதேசத்தில் ஜெயிக்க வைத்திருக்கிறார்கள்.

அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சியின் தலைவாரக உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவ் தன்னை ஒரு சமூக நீதி தலைவன் என்று தன் செயல்களால் சொல்லிவருகிறார். கடந்த தேர்தலில் யாதவர்கள் தவிர வேறு பெரிய ஒபிசி பிரிவு சமாஜ்வாதிக்கு ஆதரவு தரவில்லை. இதனால் தான் ஆட்சியில் இருந்து தூக்கப்பட்டோம் என்பதை அவரும் உணர்ந்து இந்த முறை அதை மாற்றி வருகிறார்.

வெற்றி

ஒபிசி தலைவர்களை மற்றக் கட்சிகளில் இருந்து சமாஜ்வாதிக்கு அழைத்து வந்திருக்கிறார். இந்த முறை ஜெயித்தே தீர வேண்டும் என ஒபிசி தலைவர்களுக்கு சீட் கொடுத்து வருகிறார். பாஜகவும் முலாயம் சிங் வீட்டிலேயே கை வைத்திருக்கிறது. முலாயம் மருமகள், மருமகன் என இருவரை 24 மணி நேரத்துக்குள் பாஜகவுக்குள் கொண்டு வந்திருக்கிறது. இந்த முறை இந்த இரு பெரும் கட்சிகளின் வெற்றியைத் தீர்மானிக்கப்போவது ஒபிசி ஓட்டுகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Previous Story

முதலமைச்சர் கதிரைக்கு  ஆசைப்படவில்லை- சட்டத்தரனி சுகாஸ்

Next Story

ரஞ்சன் வெளியே :நிபந்தனைகள்-3