உத்தர பிரதேச தேர்தல்

-வாத்சல்ய ராய்-

“முசாஃபர் நகர் மீண்டும் பற்றி எரியும்.”

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சனிக்கிழமை முசாஃபர்நகருக்கு வந்தபோது, ​​அவர் பேச்சு மூலம் வெளிப்படுத்திய செய்தி இது. இந்தச் செய்தி வாக்காளர்களுக்கு மட்டுமல்ல, கட்சியின் தொண்டர்களுக்கும் தான்.2013ஆம் ஆண்டு முதல் அரசியல் வட்டாரங்களில் கலவரங்களுக்குப் பெயர் போன இடமாக முசாஃபர்நகர் உள்ளது. ஆனால், இந்த மாவட்டம் கரும்பு மற்றும் வெல்ல உற்பத்திக்காகத்தான் பெரிதும் பிரபலம்.

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வீடு வீடாகச் சென்று மக்களிடம் பிரசாரம் செய்த இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில்தான், ஆசியாவின் மிகப்பெரிய வெல்ல மண்டி உள்ளது. அமித் ஷாவின் வருகைக்குச் சில மணி நேரங்களுக்குப் பிறகு, வெல்ல மண்டி தொழிலதிபரும் பாஜக ஆதரவாளர் என்று தன்னைக் கூறிக்கொள்பவருமான சுரேஷ் சந்த் ஜெயின் பிபிசியிடம் பேசினார். அப்போது, இம்முறை இந்த மாவட்டத்தின் ஆறு தொகுதிகளில் இரண்டை பாஜக இழக்க வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி அனைத்து ஆறு இடங்களிலும் (சதர், புடானா, புர்காஜி, கத்தௌலி, சர்தாவல் மற்றும் மீராபூர்) வெற்றி பெற்றது.

முக்கிய விவகாரங்கள்

உத்தர பிரதேசத்தில் பாஜகவின் வெற்றிக்கு ஜாட் வாக்காளர்களின் ஆதரவு பெரும் பங்காற்றியதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.அதே சமயம், “பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சட்டம்-ஒழுங்கு சீரடைந்தது உண்மையென்றாலும் விவசாயிகள் போராட்டத்தால், கூட்டணியின் ஆதரவு வலுத்துள்ளது” என்பதே ஜெயினின் மதிப்பீடு.

மேலும், இன்றைய சூழலில் “ஜாட் இனத்தவர் பலர் பாஜக-வுக்கு வாக்களிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளனர். அவர்களின் மனதை மாற்ற முடியாது. இது விவசாயிகள் போராட்டத்தின் விளைவு. என்ன முயற்சி செய்தாலும், 25 -30 சதவிகிதம் வித்தியாசம் இருக்கும்.” என்றும் தெரிவிக்கிறார் ஜெயின்.

பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், வருமானம் அதிகரிக்கவில்லை என்ற பல புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் பெரும்பாலான மக்களின் கருத்துப்படி, விவசாயிகள் மற்றும் விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகள் தான் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.உதாரணமாக, ஆதரவின்றி சாலைகளில் அலையும் விலங்குகள், கரும்பு கொடுப்பனவு மற்றும் விவசாயத் தலைவர்கள் மீதான அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அவற்றின் தாக்கம் ஆகியவை தேர்தல் முடிவுகளில் காணப்படலாம். ஆனால், பா.ஜ.க, தலைவர்கள், தங்களின் கோட்டை பாதுகாப்பாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

இந்த மாவட்டத்தின் சதர் தொகுதியின் எம்.எல்.ஏ.வும், மாநில அமைச்சருமான கபில்தேவ் அகர்வால் பிபிசி-யுடனான உரையாடலில், “மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுகிறோம். இதற்கு நான் பொறுப்பேற்று, இதைச் சொல்கிறேன்” என்று உறுதிபடக் கூறுகிறார்.

அதே சமயம், சமாஜ்வாதி கட்சி மற்றும் ராஷ்ட்ரிய லோக்தள கூட்டணித் தலைவர்களும் கூட இதையே தான் கூறி வருகின்றனர்.ராஷ்ட்ரிய லோக்தளத்தின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் சுதிர் பாரதியா முசாபர்நகரில் கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்து வருகிறார். அத்துடன் “எங்களுக்கு ஆறுக்கு ஆறும் கிடைக்கும்” என்றும் கூறி வருகிறார்.

பல தசாப்தங்களாக முசாபர்நகரின் அரசியலை கண்காணித்து வந்த மூத்த பத்திரிகையாளர் ரண்வீர் சிங், “இது நேருக்கு நேரான போட்டி. ஆறு இடங்களிலும் பாஜக மற்றும் கூட்டணிக்கு இடையேதான் போட்டி,” என்கிறார் அவர். எதிர்கொள்ளும் பிரச்னைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை என்று கூறுகிறார்கள். பல இடங்களில் இந்தக் கட்சிகளின் ஆதரவாளர்களே அந்த வேட்பாளர்களுக்கு எதிராக இருக்கின்றனர்.

சில தொகுதிகளில் வெளியாட்கள் – உள்ளூர் வேட்பாளர்களின் மோதலை கவனிக்க வேண்டியுள்ளது. சிலவற்றில் செல்வாக்கற்ற தலைவருக்கு சீட் கொடுத்ததாக தொண்டர்களிடமிருந்து எழும் புகாரையும் பாஜக எதிர்கொள்ள வேண்டியுள்ளது.இது பாஜகவுக்கு ஒரு பலவீனம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், கபில்தேவ் அகர்வால், “இப்போது எந்தப் புகாரும் இல்லை” என்று கூறுகிறார்.

முஸ்லிமுக்கு வாய்ப்பளிக்க பாஜக விரும்பியது!

அதே நேரத்தில், ராஷ்டிரிய லோக் தளம் தொண்டர்கள் தங்கள் சின்னத்தில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை நிறுத்துவது குறித்துப் புகார் கூறி வருகின்றனர்.குறிப்பாக, மாவட்டத்தில் 30 சதவீத முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தும், ராஷ்ட்ரிய லோக்தளம் மற்றும் சமாஜ்வாதிக் கட்சிக் கூட்டணி எந்த முஸ்லீம்களுக்கும் சீட் கொடுக்கவில்லை என்ற பெரிய புகார் உள்ளது.

இது குறித்து சுதிர் பாரதியா கூறுகையில், “பாரதிய ஜனதாவின் ஆடுகளத்தில் நாங்கள் விளையாடவே விரும்பவில்லை. முசாபர்நகரில் ஒரு முஸ்லிமுக்கு நாங்கள் டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா விரும்புகிறது,. நாங்கள் ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தினால் அங்கிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்க அமித் ஷா நினைத்திருந்தார். மதப் பிரிவினை வாதத்தால் அதிக இழப்பு ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்குத் தான்” என்றார்.

மேலும் “ஒரு விவசாயி, விவசாயியாக இல்லாமல், இந்து, முஸ்லிம் என்றானதால் இழப்பு எங்களுக்குத் தான் ஏற்பட்டது. பிரிப்பது மிகவும் எளிதானது, இணைப்பது மிகவும் கடினம். 2013 இல் ஒரு சம்பவம் நடந்தது. மக்களுக்கு 2013 கலவரம் பற்றி மட்டுமே தகவல் செல்கிறது. அதற்குப் பிறகு நடந்தவை மக்களிடம் சென்று சேரவில்லை. 2014, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், நாங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தோம்,” என்றார் அவர்.

அத்துடன், தனது கூட்டணி முஸ்லிம் வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளதாக சுதிர் பாரதியா கூறுகிறார். “ஜாட்கள் ஆதிக்கம் செலுத்தும் சிவால்காஸ் (மீரட்) தொகுதியில் ஜாட் பிரிவினருக்கு வழங்கி வந்த வாய்ப்பு முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,” என்கிறார் அவர்.

மேலும், “பாரதிய ஜனதா கட்சி முசாபர்நகரை கலவரங்களின் தொட்டிலாக மாற்றியது. வித்தியாசத்தைக் குறைக்கும் ஒரே நோக்கத்தில் சவுத்ரி அஜித் சிங் இங்கிருந்து (2019 லோக்சபா தேர்தலில்) போட்டியிடத் துணிந்தார். தோல்விக்குப் பிறகும், அவர் மக்களிடம், தான் இங்கு வந்ததன் நோக்கம் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே இடத்தில் வாக்களித்ததன் மூலம் நிறைவேறியது என்று பேசியதையும் ” குறிப்பிட்டார் சுதிர்

‘இஸ்லாமியர்களின் வாக்கு  அதிகம்’

2019 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சஞ்சீவ் பல்யான் சௌத்ரி அஜித் சிங்கை சுமார் ஆறாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பல்யான் இப்போது மத்தியில் நரேந்திர மோடி அரசில் இணை அமைச்சராக உள்ளார்.

அஜித் சிங் கடந்த ஆண்டு காலமானார். இப்போது அவரது மகனும் ராஷ்ட்ரிய லோக்தள தலைவருமான சவுத்ரி ஜெயந்த் சிங் முசாபர்நகர் மற்றும் மேற்கு உத்தரபிரதேச வாக்காளர்களுக்கு அஜித் சிங்கை நினைவுபடுத்துகிறார்.இருப்பினும், முசாபர்நகரில் எந்த ஒரு முஸ்லிமுக்கும் கூட்டணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற பிரச்சினையை மற்ற எதிரணியினரும் எழுப்புகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் பிராந்தியப் பொறுப்பாளர் ஜியாவுர் ரஹ்மான் இதுகுறித்துக் கூறுகையில், முஸ்லிம் சமூகத்திற்கு “மரியாதை கிடைக்காததால்” பலர் சமாஜ்வாதி கட்சி மீது கோபத்தில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

பல ஆய்வாளர்கள் பகுஜன் சமாஜ் கட்சியை பிரதான போட்டியாளராகக் கருதாமல் இருக்கலாம் ஆனால் ஜியாவுர் ரஹ்மானின் கூற்று மாறுபடுகிறது.அவர், “இந்த (எஸ்பி-ஆர்எல்டி) கூட்டணி முஸ்லிம்களின் வாக்குகளுக்காகவே உருவானது. இங்குள்ள முஸ்லிம் சமூகத்தினரின் வாக்குகள் அதிகம்” என்கிறார்.

ரஹ்மான் மேலும் கூறுகையில், “இங்கே ஒரு முஸ்லிமுக்குக் கூட கூட்டணியில் வாய்ப்பு கொடுக்கவில்லை. எங்கள் கட்சி முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு வேட்பாளர் வாய்ப்பு கொடுத்துள்ளது. 6 இடங்களிலும் நாங்கள் கடுமையாகப் போட்டியிடுகிறோம், ஆனால் மீராப்பூர் மற்றும் சர்தாவல் பகுதிகள் தான் எங்களுக்கு வலு சேர்க்கும் இடங்கள்.” என்றார்.

காங்கிரஸ் நிலை என்ன?

காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் தீபக் குமார், புர்காஜி (தனி) தொகுதியில் தனது மேலாதிக்கம் குறித்து நம்பிக்கை தெரிவிக்கிறார். அவரே இங்கு வேட்பாளராகக் களமிறங்குகிறார். கடந்த தேர்தலில் அவர் ஏறக்குறைய ஒன்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருந்தது.

“சென்ற முறை இரண்டாவது இடத்தில் வந்தோம். இம்முறை நான் வெற்றி பெறுவேன். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவிதி மிகவும் மோசமாக இருக்கும். மற்ற இடங்களில் முஸ்லிம் வாக்குகள் கூட்டணிக்குப் போகலாம். ஆனால் இங்கு என்னால் பிளவு ஏற்படும்.” என்று கூறுகிறார்.

கலவரம் குறித்த பாஜக தலைவர் கருத்து

மறுபுறம், பாரதிய ஜனதா கட்சியின் முழு கவனமும் அகிலேஷ் யாதவ் மற்றும் சவுத்ரி ஜெயந்த் சிங் கூட்டணி ஏற்படுத்தும் சவாலில் உள்ளது. பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இந்தக் கூட்டணி மற்றும் அதன் ஆதரவாளர்களின் பலவீனமான இணைப்புகளைக் கண்டறிய முயற்சிக்கின்றனர்.

மாநில அமைச்சர் கபில் தேவ் அகர்வால் மற்ற பாஜக தலைவர்களைப் போலவே சவுத்ரி ஜெயந்த் சிங்கிடம் மென்மையாக நடந்து கொள்கிறார்.

“எல்லோரும் ஒன்று சேருவதில் என்ன தவறு. யாராவது நம் மீது கோபமாக இருந்தால், அவரை சமாதானப்படுத்துவது நம் பொறுப்பு” என்கிறார் கபில்தேவ். ஆனால், அவர்தான், சமாஜ்வாதி கட்சியைத் தாக்கும் நபராகவும் காணப்படுகிறார்.

மேலும், “இவர்கள் எப்போதும் ரௌடிகள், , மாஃபியாக்கள், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வேலையைச் செய்கிறார்கள்.” என்று கபில்தேவ் அகர்வால் சமாஜ்வாதியை குற்றம் சாட்டுகிறார். 2013 கலவரம் இன்னும் ஒரு பிரச்னையாக இருக்கிறதா என்ற கேள்விக்கு அவர், “கண்டிப்பாக இது ஒரு பிரச்னையாக இருக்கும். அது எப்படி முடிவடையும்.” என்று பதிலளிக்கிறார்.

அதாவது, ஒவ்வொரு கட்சியும் ஒரு கோடு போட்டுள்ளது. வாக்காளர்கள் எந்தக் கோட்டைப் பின்பற்றி வருவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Previous Story

குழந்தையை கரடி குழியில் வீசிய தாய்.!

Next Story

அடுத்தடுத்து வரப்போகும் புது படங்கள் -?