நஜீப் பின் கபூர்
நன்றி: 27.09.2026 ஞாயிறு தினக்குரல்
.jpg)
‘ரிசானா நபீக் விவகாரத்தில் நடந்த
தவறு அனோஜனுக்கு நடக்கக் கூடாது’

கடந்த வாரம் நமது அரசியலில் முக்கிய பல நிகழ்வுகள் நடந்திருந்தன. அதில் அனுரகுமார ஜனாதிபதியாகி கடந்த 23ம் திகதிக்கு இரண்டு வருடங்கள் அல்லது 730 நாட்கள் பூர்த்தியாகி இருந்தன. அதனால் ஜனாதிபதி தமது ஆதரவாலர்களையும் குடிகளையும் சந்தித்துப் பேரணிகளை வெற்றிகரமாக நடத்தி வருகின்றார். அடுத்து நாய்க் கதையால் மூண்ட சண்டையால் அனோஜனுக்கு சவுதி நீதி மன்றம் வழங்கிய மரண தண்டனை முழு நாட்டையும் உலுப்பிப்போட்டது. அடுத்து நாம் ஏற்கெனவே பேசி இருக்கின்ற அரசியல் யாப்பின் 22வது திருத்தம் தொடர்பான தீர்ப்பு. இவை எல்லாவற்றையும் விட முழு உலகமுமே எதிர்பார்த்த ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பு சொன்னபடி வந்திருக்கின்றது. இவை பற்றி இப்போது பேசுவோம்.
ஈஸ்டர் தீர்ப்பு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தீர்ப்புக்கள் எப்படி அமையும் என்பதை நாம் சில வாரங்களுக்கு முன்னரே பேசி இருந்தோம். அதில் நமது ஊகங்கள் கணக்குகள் எந்தளவு சாத்தியமாக இருந்தன என்பதனை வாசகர்கள் மதிப்பீடு செய்து பார்த்திருப்பார்கள். நம்மைப் பொறுத்தவரை இந்த தீர்ப்புப் பற்றியோ வழக்குப் பற்றியோ பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை.
காரணம் டம்மிகளுக்குத்தான் நீதிமன்றம் தீர்ப்பை வழங்;கி இருக்கின்றது. சூத்திரதாரிகள் தொடர்பான வழக்குகளும் அது தொடர்பான தீர்ப்பிலும்தான் எமக்கு அதிகளவான ஆர்வம் இருந்து வருகின்றன. அதற்காக கடந்த 22ம் திகதி கொடுக்கப்பட்ட தீர்ப்புகளில் நாம் மகிழ்ச்சி இல்லாதிருக்கின்றோம் என்பதல்ல. இது கூலிக்கு வேலை பார்த்த அல்லது மூலைச்சலவை செய்யப்பட்ட கும்பலுக்கு கிடைத்திருக்கும் தண்டனை மட்டுமே. ஆனால் கேவலம் இவர்கள் கடவுளையும் துணைக்கு அழைத்துக் கொள்வதுதான்.!
2019ல் நடந்த இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் 274. காயப்பட்டவர்கள் 592. கொல்லப்பட்ட காயமடைந்தவர்களில் வெளிநாட்டவர்களும் இருந்தனர். ஆனால் இந்த இறந்த காயப்பட்டவர்கள் எண்ணிக்கையில் இன்னும் குழறுபடிகள் இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இதுதவிர தாக்குதலில் ஒத்துழைத்தவர்கள் சாட்சிகளாகிவிடக் கூடாது என்பதற்காகவும் சிலர் திட்டமிட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அவர்களும் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.

குற்றவாளிகளில் ஒருவரான நௌபர் மௌலவிக்கு 16900 வருடங்கள் சிறைத் தண்டனை என்று இருந்தாலும் அது 260 வருடங்களாக நடைமுறைக்கு வருகின்றது. மேலும் நால்வருக்கு 240. ஐந்து பேருக்கு 220. அடுத்து ஐந்து பேருக்கு தலா 200 வருடங்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 920 வருடங்கள் என்று இது பிரிந்து செல்கின்றது. ஒன்பது பேருக்கு விடுதலையும் கிடைத்திருக்கின்றது. ஒருவர் ஏற்கெனவே மரணித்துவிட்டார்.
![]()
இதற்கு முன்னர் தாக்குதல் தொடர்பான வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில் பாதுகாப்புத் அதிகாரிகளான ஹேமசிரி மற்றும் பூஜித ஆகியோருக்குத் கடமையை தட்டிக்கழித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிகூட 100மில்லியன் ரூபா நஸ்டஈடு செலுத்தி இருந்தார். ஆனால் 22ம் திகதிய தீர்ப்பில் குற்றவாளிகள் மரண தண்டணையிலிருந்து தப்பி இருப்பது புரியாமல் இருக்கின்றது. குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற தண்டனைகள் தொடர்பாக நாம் இங்கு மேலும் விரிவாக விளக்கத் தேவையில்லை.
யாப்புத் திருத்தம்

இருபத்தி இரண்டாவது யாப்புத் திருத்தம் தொடர்பில் எதிர்க் கட்சியினர் மத்தியில் இருக்கின்ற இணக்கப்பாடுகளையும் முரண்பாடுகளையும் ஒரு முறைபார்ப்போம். இந்த நீதிபதிகளின் வயதை நீடிக்கின்ற விவகாரத்தில் பொதுமக்களை அரசுக்கெதிராக ஒன்று கூட்டிக் கொள்வதற்கு சில சமயங்களில் ஐக்கியப்படுகின்ற எதிர்க்கட்சிகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் அதில் வேறு சிலருக்கு செல்வாக்கு வந்து விடும் என்று அஞ்சுவதால் தங்களுக்குள்ளே மோதிக் கொள்கின்றார்கள். அல்லது புறக்கணித்துக் கொள்கின்றாhகள். கடந்த 24ம் திகதி நாடாளுமன்றத்துக்கு போகும் பொல்துவ சந்தியில் எதிரணியினர் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் நாம் இதனைப் பார்த்தோம்.

24ம் திகதி நடக்கின்ற ஆர்ப்பாட்டம் தமது கட்சி ஏற்பாடு செய்யும் ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் கூறி அடுத்தவர்களுக்கு கதவை மூடி விட்டார். மொட்டு அணியை துணைக்கு அழைப்பது தமக்கு ஆபத்தானது என்பது மரிக்கார் அச்சத்துக்குக் காரணமாக இருந்தது. அதே நேரம் சஜித் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்த முரண்பாடு இவர்களின் நாடகமா திட்டமிட்ட செயலா என்று தெரியவில்லை. சஜித்தும் மரிக்காரும் நல்ல சகாக்கள் அதானால் தான் நமக்கு ஒரு சந்தேகம்.?
சு.கட்சி துமிந்த திசாநாயக்க நாம் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கட்டாயம் இணைய வேண்டும் என்று கேட்கின்றார். தமது கட்சிக்கு தனியாக எதனைiயும் சாதிக்க முடியாது என்பதால் அவர் சஜித்துடன் இங்கு கூட்டணிக்கு வருகின்றார்போலும். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள சஜிதிடம் நாம் அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை என்பது பாட்டளி சம்பிக்க கருத்து. சஜித்துக்கும் பாட்டளிக்குமிடையே வழக்கமாகப் பனிப்போர் ஒன்று இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். எப்படியும் நீதிபதிகளின் வயதை நீடிக்கின்ற விவகாரத்தில் ஆளும் தரப்பு வெற்றிக் கோட்டை என்றோ தாண்டி விட்டது.
அனோஜன் துயரம்
ஏதாவது ஒரு பரபரப்பான விவகாரமாக இருந்தால் போதும் அது பற்றிய செய்திகளை சம்பிரதாய ஊடகங்கள் மட்டுமல்ல சமூக ஊடகங்களும் முண்டியடித்துக் கொண்டு தகவல்களைத் தந்து கொண்டிருக்கும். தொழிநுட்ப வளர்ச்சி காரணமாக இந்தத் தகவல்கள் நமக்குத் மின்னல் வேகத்தில் வந்து விடும். நல்ல விடயமாக இருந்தாலும் அதில் ஆபத்துக்களும் நிறைய இருப்பது அனோஜன் விவகாரம் நல்ல உதாரணம்.
நாம் அனோஜன் போட்ட பதிவு பற்றி இந்தக் கருத்தை இப்போது பேசவில்லை அதுபற்றி பிற்பகுதியில் பார்ப்போம். நாம் அனோஜன் விவகாரத்தில் வந்து கொண்டிருக்கின்ற செய்திகள்-தகவல்கைளைப் பற்றித்தான் முதலில் பார்க்க இருக்கின்றோம். அனோஜன் விடயத்தில் மரண தண்டனை அவரது குடும்பம் சவுதி அரசு இலங்கை அரசு என்ற விடயங்கள் தொடர்படுகின்றன.
ஆனால் அது பற்றிய தகவல்களை நாம் மேற்சொன்ன ஊடகங்கள் பேசுகின்ற போது அல்லது சொல்கின்ற போது பலர் சவுதி மன்னன் சல்மானில் சட்ட ஆலோசகர் போலவும் இன்னும் சிலர் நமது ஜனாதிபதியின் வெளி உறவு செயலாளர் போலவும் இன்னும் பலர் அனோஜன் மற்றும் அவரது குடும்பத்தவர்கள் போலவும் இருந்து கண்மூடித்தனமான கருத்துக்களைப் பதிந்து வருகின்றார்கள். இதனால் அப்பாவி வாசகர்கள் வஞ்சிக்கப்படுகின்றார்கள். இப்படியான செய்திகள் தொடர்பாக நாம் ஏற்கெனவே பல இடங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டிருந்தோம்.

என்னதான் சொன்னாலும் நவீன தொழிநுட்ப பாவனையில் ஏமாற்றப்படுகின்றவர்கள் மிக அதிகம். எனவே அவர்களாகவே அதிலிருந்து முட்டிக் குனிவது போல விடுபட வேண்டும். ஆனால் சமகாலத்தில் அது இலகுவான ஒரு காரியமும் அல்ல. அதனால்தான் நமது நாட்டில் இருக்கின்ற சில முஸ்லிம் சமய குருமார் அனோஜனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்ற செய்தி முற்றிலும் பொய்யானது ஏமாற வேண்டாம் என்றும் உபதேசம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்படியான ஒருவரை தொடர்பு கொண்டு கோள்விகளைத் தொடுத்த போது வித்தகர் நமது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை பேண்ட் பண்ணி விட்டார். இது அவர்கள் தன்னை அல்லது தனது ஊடகத்தை பரப்புரை செய்து கொள்ள எடுக்கின்ற ஒரு குறுக்கு முயற்சியாகத்தான் நாம் பார்க்கின்றோம்.
அதற்குச் சமாந்திரமாக அல்லது அதற்கு பல மணி நேரங்களுக்கு முன்னர் கல்முனை-நாட்பிட்டிமுனையில் இருக்கும் தனது குடும்பத்துடன் குறிப்பாக தாயாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அனோஜன் தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது என்ற செய்தியை நேரடியாகவே தனது தாயாரிடம் உறுதி செய்திருந்தார். இப்படியான முன்னுக்குப்பின் முரணான செய்திகளை நம்பித்தான் கடைத் தெருவிலும் வீடுகளிலும் சமூகத்தின் மத்தியிலும் அந்தச் செய்திகள் காட்டுத்தீயாகி விடுகின்றன. அதே நேரம் நமது ஜனாதிபதிக்கு இந்த மரண தண்டனை பற்றிய யதார்த்தமான தகவல் முன்கூட்டி கிடைத்திருந்தது.
இப்படி முன்னுக்குப் பின் முரணான செய்திகளை சொல்கின்றவர்களை குற்றம் சாட்ட முடியாது. நாம் வழக்கமாகச் சொல்வது போல கையடக்கத் தொலைபேசி வைத்திருக்கின்ற அனைவரும் ஊடகவியலாளர்கள் என்ற ஒரு நிலை இன்று சமூகத்தில் காணப்படுகின்றது. அதற்காக நாம் அவர்களை விமர்சிப்பதும் நாகரிகமானதல்ல. அது அவர்களின் உரிமை. ஆனால் அதன் விளைவுகள் ஆபத்தானவை என்பதற்கு அனோஜனே நல்ல உதாரணமும் கூட.
இப்படியான செய்திகள் சமூகத்தை மூட்டிவிடுகின்ற கதைகள் அப்படி இருக்க இப்போது நாயக் கதையுடன் இரு சமூகங்களுக்கிடையில் நடந்த ஊடகப்பதிவுகள்தான் ஒரு மனிதனின் உயிரைக் காவு கொள்கின்ற அளவுக்கு எடுத்துக் கொண்டு போய் இருக்கின்றது. அத்துடன் இரு சமூகங்களுக்கிடையிலான முறுகள் இரு தேசங்களுக்கு இடையிலான இராஜதந்திர கசப்புணர்வுகள் மனித உரிமைகளும் அதனால் வரும் சிக்கல்கள்.
மத நம்பிக்கைகளுக்கு இடையிலான வெறித்தனங்கள் என்பன இதில் பிணைந்து நிற்க்கின்றன. அது எப்படி இருந்தாலும் உள்நாட்டில் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகத்தினர் அனோஜன் விவகாரத்தில் நல்ல புரிதலுடன் இருக்கின்றார்கள். அதே நேரமும் இன்னும் சில கருத்துக்களும் பதிவுகளும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றன என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அது பற்றிய கதைகளை மீட்டுவதுகூட ஆரோக்கியமானதல்ல. எனவே சமூகங்களிடையே இது விவகாரத்தில் புரிதல் மிகவும் அவசியம்.
அதே நேரம் அனோஜன் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகின்ற ஒரு கூட்டமும் களத்தில் இருக்கின்றன. இந்த விவகாரத்தில் அரசு செயல்பாடுகள்தான் கனதியனதும் காரியம் நடக்கக் கூடியதும். அதே நேரம் நமது நாட்டில் இருப்பதைப்போல ஒரு சட்டம் அமைப்பு சவுதியில் இல்லை. அது சற்று இறுக்கமானது.
அதற்காக மன்னிப்புப் பெற்றுக் கொள்வது சிரமமானது என்று அர்த்தமல்ல. அப்படி காரியம் சாதித்த சந்தர்ப்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் குறுகிய காலத்துக்குள் துரிதமாக செயல்பட வேண்யடி நிலை. இப்போது மூதூர் ரிசானா நபீக் விவகாரத்தில் ஒரு கதையை நினைவு கூருவது பொருத்தமாக அமையும் என்பதால் அதனை இங்கு பதிகின்றோம்.
அனோஜன் விவகாரம் போலத்தான் மூதூர் ரிசானா விடயத்தில் சில சம்பவங்கள் தப்புத் தப்பாக நடந்தது. இந்தளவு சமூக ஊடகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் செல்வாக்கு அன்று இருக்கவில்லை. அதனால் தகவல்கள் தாமதமாக அல்லது புரிதலின்மை நிறையவே ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றக் காரணமாக இருந்தது என்பது நமது குற்றச்சாட்டு.
ரிசானாவுக்கு என்ன நடக்கின்றது என்று அரசும் சமூகமும் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் அவர் விடயத்தில் தனிப்பட்ட ரீதியில் அக்கறை கொண்ட கிபாயா என்ற வைத்தியர் ரியாத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
ரிசானா நபீக் சிறை வைக்கப்பட்டிருந்த தவாமி சிறைச்சாலைக்கு நான்கு மணி நேரம் பயணம் செய்து டாக்டர் கிபாயா அவளை அடிக்கடி சந்தித்து நலன்களை கவனித்து வந்திருக்கின்றார். ஆனால் இது பற்றி அன்றைய அரசு எதையும் அறிந்திருக்கவில்லை.
இந்த தகவல் நமக்கு ஒரு அச்சக உரிமையாளர் ஊடாகத் தெரியவர நாம் டாக்டர் கிபாயா நாட்டுக்கு வந்திருந்த போது அவரது கட்டுகாஸ்தோட்டை வீட்டில் போய் சந்தித்து ரிசானா பற்றி டசன் கணக்கான கட்டுரைகளை இதே வார இதழில் எழுதி இருந்தோம். அதில் 24.07.2011 மற்றும் 13.01.2013 திகதிகளில் எழுதிய கட்டுரைகள் ஜனரஞ்சகமாக அமைந்திருந்தன.
அதுவரைக்கும் இந்த டாக்டர் கிபாயா, ரிசானா விவகாரத்தில் சுயேட்சையாக ஆற்றிய பங்களிப்பை நாடோ அரசோ அறிந்திருக்கவில்லை. நமது தகவல் சிங்கள மற்றும் சர்வதேச ஊடகங்களில் வெளிவந்த போது தொழில் அமைச்சர் டிலான் பெரேரா நாம் குறிப்பிட்ட டாக்டரை வீடுதேடிச் சென்று சந்தித்து அப்போதுதான் சரியான தகவல்களைப் பெற்றிருந்தார்.

அது காலம் கடந்த ஒரு செயலாகத்தான் இருந்தது என்பது நமது கணக்கு. அது பற்றியும் நாம் எமது வார இதழில் சொல்லி வந்திருக்கின்றோம். அதன் பின்னர் டாக்டர் கிபாயா ரியாத்திலிருந்து தவாமி சிறைக்குப் போய் ரிசானாவை சந்திக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்கு தரும் தகவல்களை அப்போது ஊடகங்களில் சொல்லி வந்திருந்தோம்.

ஆனால் அரசு பணிகள் ஆமை வேகத்தில் நடந்தது. ரிசானா தூக்கிலிடப்பட்ட பின்னர்கூட அமைச்சர் அவர் உயிருடன் இருப்பதாக நாடாளுமன்றில் கதை சொல்லி வந்தார். இதனையும் எழுதி இருந்தோம். தூக்கிலிடும் முன்னர் ரிசானா ஒப்படைத்த சில உடமைகளை டாக்டர் கிபாயா நாட்டுக்கு வந்தபோது மூதூர் சென்று அவரது தாயாருக்கு ஒப்படைத்த போதும் நாமும் கூடவே இருந்தோம். ரிசானாவை சவுதி பொலிசார் 22.05.2005ல் கைது செய்தனர். அவர் தூக்கிலிடப்பட்ட நாள் 09.01.2013.. இதற்கிடையில் ரிசானாவுக்கு மேன்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
துரதிஸ்டம் அப்போதும் கூட பிழையான தகவல்களே முன்வைக்கப்பட்டன. அரசு சார்பாக உரிய சட்ட ஆலோசனைகள் கூட ரிசானாவுக்கு அன்று கிடைக்கவில்லை. அவர் சிறுமி என்பதனை உறுதிப்படுத்த அரசு தவறி இருந்தது. காரணம் வயதைக் கூட்டி ரிசானாவை அனுப்பி வைத்தது நமது வெளிநாட்டு முகவர்கள். அதனால்தான் அவரது தண்டனை உறுதியானது. அப்போதய ஐ.நா.செயலாளர் பாங் கீ மூன் தலையிட்டும் ரிசானாவைக் காப்பற்ற முடியவில்லை. இது முற்றிலும் அன்றைய அரசு விட்டதவறு. இதனை நாம் அன்றும் எழுதி இருந்தோம் இன்றும் கூறுகின்றோம். சம்பவம் நடக்கின்ற போது ரிசானாவுடைய உண்மையான வயது 17 மட்டுமே.
அனோஜன் விவகாரத்தில் இது போன்ற தவறுகள் நடந்து விடக் கூடாது என்பதற்காக ரிசானா நபீக் விவகாரத்தை ஒரு படிப்பிணையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். பிந்திய தகவலின்படி இந்தியா அமெரிக்க மாலைதீவு போன்ற நாடுகளின் முன்னாள் இன்நாள் தலைமைகள் அனோஜன் விவகாரத்தில் இலங்கை அரசுக்கு தமது ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்திருப்பது ஆரோக்கியமாக நாம் பார்க்க முடியும்.





