ஈலோன் மஸ்க் சொத்து

 மதிப்பு ஒன்றரை ஆண்டுகளில் 1000% அதிகரிப்பு

கொரோனா பெருந்தொற்று, உலக பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கியுள்ளது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான மக்களை வறுமையின் கோரப் பிடியில் தள்ளியிருக்கிறது என ஆக்ஸ்ஃபாம் (Oxfam) அமைப்பு தன் அறிக்கையில் கூறியுள்ளது.மார்ச் 2020 முதல், உலகின் டாப் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது.

பொதுவாக, டாவோஸ் நகரத்தில் நடக்கும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தின் தொடக்கத்தில், ஆக்ஸ்ஃபாம் தன் உலகளாவிய சமத்துவமின்மை குறித்த அறிக்கையை வெளியிடுகிறது. அந்த நிகழ்வில் பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பிரசாரகர்கள், பொருளாதார வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட ஆயிரக் கணக்கானவர்கள் சுவிஸ் ஸ்கை ரிசார்ட்டில் குழு விவாதங்கள் உட்பட பல்வேறு செயல்பாடுகளுக்காகக் கூடுகிறார்கள்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக இக்கூட்டம் இரண்டாவது ஆண்டாக இணையத்தில் நடத்தப்படுகிறது. தொற்றுநோய், தடுப்பூசி, ஆற்றல் ஆகியவற்றின் எதிர்கால பாதை ஆகியவை குறித்து இந்த வாரம் விவாதிக்கப்பட உள்ளது.

ஆக்ஸ்ஃபாம் கிரேட் பிரிட்டனின் முதன்மைச் செயல் அதிகாரி டேனி ஸ்ரீஸ்கந்தராஜா, பொருளாதார, வணிக மற்றும் அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் டாவோஸ் நகரத்தில் நடக்கும் கூட்டத்தோடு ஒத்துப்போகும் வகையில், அறிக்கை வெளியிடப்படுவதாகக் கூறினார்.

“இந்த ஆண்டு, என்ன நடக்கிறது என்பது முக்கியமில்லை,” என்றும் அவர் கூறினார். “இந்த பெருந்தொற்று காலத்தில், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கோடீஸ்வரர் உருவாக்கப்பட்டுள்ளார். மறுபக்கம் உலக மக்கள் தொகையில் 99% பேர் பொதுமுடக்கம் காரணமாக மோசமான பிரச்னைகளை எதிர்கொண்டனர். குறைந்த அளவிலான சர்வதேச வர்த்தகம், சரிந்த சர்வதேச சுற்றுலா ஆகியவற்றின் காரணமாக மோசமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் விளைவாக 16 கோடி மக்கள் வறுமையில் சிக்கியுள்ளனர்”

“நம் பொருளாதார அமைப்பில் ஏதோ ஆழமான குறைபாடு உள்ளது,” என்று அவர் கூறினார்.

ஆக்ஸ்ஃபாம் தொண்டு நிறுவனம் மேற்கோள் காட்டிய ஃபோர்ப்ஸ் புள்ளிவிவரங்களின்படி, ஈலோன் மஸ்க், ஜெஃப் பெசோஸ், பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பத்தினர், பில் கேட்ஸ், லாரி எலிசன், லாரி பேஜ், செர்ஜி பிரின், மார்க் ஸுக்கர்பெர்க், ஸ்டீவ் பால்மர் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோர் தான் உலகின் டாப் 10 பணக்காரர்கள்.

மார்ச் 2020 மற்றும் நவம்பர் 2021க்கு இடையில் அவர்களின் சொத்துகள் 700 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்திருந்தாலும், அவர்களுக்கிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. ஈலோன் மஸ்கின் சொத்து மதிப்பு, மேலே குறிப்பிட்ட காலத்தில் 1,000 சதவீதத்துக்கும் அதிகமாக வளர்ந்துள்ளது, அதே நேரத்தில் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 30% உயர்ந்துள்ளது.

உலகப் பணக்காரர்களின் செல்வம் பொதுவாக அவர்களது பங்குகளோடு தொடர்புடையதாக உள்ளது. கடந்த மார்ச் 2020ல் பங்குச் சந்தை கடுமையாக வீழ்ச்சியடைந்தது, அங்கிருந்து இந்த அசுர வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொற்றுநோய் தொடங்குவதற்கு சற்று முன்பிருந்து ஆக்ஸ்ஃபாம் சொத்து மதிப்பை கணக்கிட்டிருந்தால் கூட, வளர்ச்சி குறைவாகவே இருந்திருக்கும்.

“2020 பிப்ரவரி மத்தியில் நீங்கள் கோடீஸ்வரர்களின் செல்வத்தை எடுத்துக் கொண்டால் கூட, உலகின் டாப் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பின் உயர்வு 70 சதவீதமாக இருந்திருக்கும். அப்போதும் அது வரலாறு காணாத மிகப் பெரிய உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு வளர்ச்சியை நாம் இதற்கு முன் கண்டதில்லை என பிபிசியிடம் கூறுகிறார் அவ்வறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான மேக்ஸ் லாசன்.

உலக வங்கியின் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸ்ஃபாமின் அறிக்கை, சுகாதாரம், பசி, பாலின அடிப்படையிலான வன்முறை, காலநிலை பிரச்னை ஆகியவைகாரணமாக ஒவ்வொரு நான்கு நொடிகளுக்கும் ஒரு மரணத்திற்கு பங்களித்ததாகக் கூறுகிறது.

கொரோனா தொற்றின் தாக்கம் இல்லாமல் இருந்ததை விட, 16 கோடி மக்கள் ஒரு நாளைக்கு 5.50 டாலருக்கும் குறைவான பணத்தோடு வாழ்கின்றனர் என்கிறது அவ்வறிக்கை.உலக வங்கி நாள் ஒன்றுக்கு $5.50 டாலர் என்பதை உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வறுமையின் அளவீடாகப் பயன்படுத்துகிறது.

பெருந்தொற்று, வளரும் நாடுகளின் கடன்களை அதிகரிப்பதால், சமூக செலவீனங்களைக் குறைக்க கட்டாயப்படுத்துகிறது.பாலின சமத்துவம் பின்தங்கியுள்ளது, 2019ஆம் ஆண்டில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண்களை விட 1.3 கோடி பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பள்ளிக்குச் மீண்டும் திரும்ப முடியாத அபாயத்தில் 200 லட்சம் பெண் குழந்தைகள் உள்ளனர்.

இன ரீதியிலான சிறுபான்மையினர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் பிரிட்டன் மற்றும் வங்கதேசமும் அடக்கம். அமெரிக்க கருப்பின மக்களும் அடக்கம்.உலகளாவிய நெருக்கடியின் போது கூட, நம் நியாயமற்ற பொருளாதார அமைப்புகள் பணக்காரர்களுக்கு சாதகமாகவும், ஏழைகளைப் பாதுகாக்கவும் தவறுகிறது” என்று ஸ்ரீஸ்கந்தராஜா கூறினார்.

“நாம் சென்று கொண்டிருக்கும் மோசமான பொருளாதாரப் பாதையை மாற்ற” தைரியமான பொருளாதார முடிவுகளை எடுக்க அரசியல் தலைவர்களுக்கு இப்போது ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.கொரோனா தடுப்பூசிகளின் அறிவுசார் சொத்துரிமைகளை விலக்கிக் கொண்டு, பரந்த உற்பத்தி மற்றும் விரைவான விநியோகத்தை செயல்படுத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளது ஆக்ஸ்ஃபாம்.

இந்த மாத தொடக்கத்தில், உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ், உலகளாவிய சமத்துவமின்மை அதிகரித்து வருவது, பணவீக்கத்தின் தாக்கம் மற்றும் அதைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் ஏழை நாடுகளுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று வாதிட்டார்.

“பலவீனமான நாடுகளுக்கான கண்ணோட்டம் இன்னும் மேலும் மேலும் பின்தங்கியுள்ளது,” என்றும் அவர் கூறினார்.

 

 

Previous Story

சகோதரியை திருமணம் செய்த மன்னர்கள்

Next Story

கண்டியில் இளம் பெண்கள் கைது!