ஈரான் துறைமுக நகரான பாந்தர் அப்பாஸில் நேற்று நிகழ்ந்த கோர வெடி விபத்தில் 14 பேர் பலி ஆகியுள்ளனர். வெடி விபத்து மற்றும் தீ விபத்தில் 750க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாந்தர் அப்பாஸ் நகரின் ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் கண்டெய்னர் நிறுத்தி வைத்திருந்த பகுதியில் பயங்கர சத்தத்துடன் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. கண்டெய்னர் யார்டில் கெமிக்கல் பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததே வெடி விபத்திற்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன். விஷயம் இதுதான்” ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் நகரம் ஈரானின் முக்கிய வர்த்தக மையம். எண்ணெய் ஏற்றுமதியில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

எண்ணெய் உள்பட பல்வேறு பொருட்கள் இங்கிருந்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேபோல, ஈரானுக்கு இந்த வழியாக இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தச் சூழலில் பாந்தர் அப்பாஸில் உள்ள துறைமுகத்தில் கன்டெய்னர் இருந்த பொருள் நேற்று வெடித்தது.
இதனால், அங்கிருந்த கட்டடம் மற்றும் வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்தன. மேலும், தீ விபத்து ஏற்பட்டு அந்த பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இந்த பயங்கர் வெடி விபத்தின் அதிர்வலை பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பாலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.





