ஈரான்:  கொமேனி இல்லத்திற்கு தீ வைப்பு

ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்படக் காரணமாக இருந்த முன்னாள் மதத் தலைவர் ருஹல்லா அலி கொமேனி இல்லத்தில் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.

1979 தொடங்கி ஈரானில் இஸ்லாமிய புரட்சி வெடித்தது. அங்கு இஸ்லாமிய அரசு அமைய முக்கியக் காரணமாக இருந்தவர் ருஹல்லா அலி கொமேனி. இந்த நிலையில் மாஷா அமினியின் மரணத்தை தொடர்ந்து ஈரானில் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தின் ஈரான் முன்னாள் மதத் தலைவர் ருஹல்லா கொமேனி இல்லத்திற்கு ( தற்போது அருங்காட்சியகமாக மாறியுள்ளது) போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

அந்த இடத்தில் ”இது ரத்தத்தின் ஆண்டு.. ஆட்சி கவிழ்க்கப்படும்” என்றும் போராட்டக்காரர்கள் குரல் எழுப்பினர். தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

போராட்டக்காரர்கள் கொமேனி இல்லத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. கொமேனி இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈரானில் பதற்றம் நிலவுகிறது. இந்த வாரத்தில் மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டக்காரர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஈரான் போராட்டம்:

ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார் மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் ஏற்படக் காரணமானது. இப்போராட்டத்தில் 200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous Story

மலேசியாவில் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு - இன்றே முடிவுகள்!

Next Story

லங்காவி தொகுதியில் மகாதீர் படு தோல்வி!