ஈரானில் 5,000 மாணவிகள் உடலில் விஷம்கண்டுபிடிப்பு..கைது தீவிரம்!

ஈரானில் 5,000 மாணவிகள் உடலில் விஷம்கண்டுபிடிப்பு.. பின்னணியில் ஷாக் காரணம்.. கைது தீவிரம்! ஈரானில் பள்ளி பயிலும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவிகளின் உடல்களில் விஷம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் 5 ஆயிரம் பள்ளி மாணவிகளின் உடலில் விஷம் கலந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெற்றோர்களே மாணவிகளுக்கு விஷம் கொடுத்திருப்பதாக கூறப்படும் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஷாக் காரணம் வெளியாகி உள்ளது. இதனால் சுதாரித்து கொண்ட ஈரான் அரசு தற்போது கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது. ஈரான் நாட்டிலும் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

ஹிஜாப் அணிதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்றாத பெண்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது. கடந்த ஆண்டு ஹிஜாப் சரியாக அணியாமல் இருந்ததாக கூறி 22 வயது இளம்பெண்ணான மாஷா அமினி மீது அந்நாட்டின் நல்லொழுக்க காவலர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த பெண் பலியானார்.

இது அந்த நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஹிஜாப் பிரச்சனை ஈரானில் பின்பற்றப்படும் பெண்களுக்கான கட்டுப்பாடுகளை அரசு கைவிட வேண்டும் எனக்கூறி பெண்கள் வீதிகளில் இறங்கி பேராட்டம் நடத்தினர். மேலும் ஹிஜாப்பை எரித்தும், தலைமுடியை வெட்டியும் ஈரான் அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த போராட்டம் வீரியமான நிலையில் போலீசார் பல இடங்களில் பெண்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஈரானை பல உலக நாடுகள் கண்டித்தன. தற்போது இந்த பிரச்சனை முடிந்து நாட்டில் அமைதி நிலவுகிறது. மாணவிகள் பாதிப்பு இதற்கிடையே தான் ஈரானில் உள்ள பல மாகாணங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளி மாணவிகள் உடல்நல பிரச்சனையை எதிர்கொண்டனர். வயிற்று வலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடும் பிரச்சனை உள்ளிட்ட பலவற்றை மாணவிகள் சந்தித்தனர். மாணவிகளின் உடலில் விஷம் இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டாக்டர்கள் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

அப்போது மாணவ-மாணவிகளின் உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் உடலில் விஷம் கலந்திருப்பது தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பள்ளி செல்வதை தடுக்க? இதற்கிடையே மாணவிகளை பள்ளிகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில் அவர்களின் பெற்றோர் மற்றும் மத அடிப்படை வாதிகள் உடல்நல பிரச்சனையை ஏற்படுத்தும் விஷத்தை வழங்கி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.

இதில் உண்மையை கண்டறியவும், கொடூரமான செயலை யார் செய்தது? என்பது பற்றி விசாரிக்க அரசு உத்தரவிட்டது. மேலும் கைது செய்யப்படும் நபர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. துவங்கிய கைது நடவடிக்கை இந்த நிலையில் இவ்விவகாரத்தில் கைது நடவடிக்கையை ஈரான் அரசு எடுத்துள்ளது.

இதுகுறித்து ஈரான் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “21 மாகாணங்களில் உள்ள 210 பள்ளிகளை சேர்ந்த 5,000 மாணவிகள் இந்த நச்சு விஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அபாயகரமான பொருளை பயன்படுத்திய குற்றத்திற்காக ஒரு மாணவியின் பெற்றோர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விஷத்தின் வகை மற்றும் வழங்கப்பட்டதற்கான நோக்கத்தை கண்டறிய தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். எந்த வகையான விஷம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை” என கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுபற்றி உண்மை கண்டறியும் குழவின் உறுப்பினராக உள்ள முகமது ஹாசன் அசாபாரி கூறுகையில், ‛‛மொத்தம் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மாணவிகள் தான் அதிகம். மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகும். உண்மை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்றார்.

Previous Story

மத்திய கிழக்கு அரசியலையே புரட்டி போட்ட சீனா! கை கோர்த்த எதிரிகள் சவுதி - ஈரான்.

Next Story

ஏப்ரல் 25 மீண்டும் தேர்தல்! குறுக்கே நிற்க்கும் ரணில்!!