இஸ்ரேல் @75: முரண் முகங்கள் கொண்ட இந்த நாடு

-பெளலா ரோசாஸ்-

யூரோவிஷன் இசை நிகழ்ச்சிக்கு இஸ்ரேல் அரசு தனது பிரதிநிதியாக ஒரு திருநங்கையை அனுப்புமளவுக்கு முற்போக்காக இருந்தாலும், மறுபுறம் ‘சப்பத்’ தினத்தன்று பொதுப் போக்குவரத்தைக் கூட அனுமதிக்காத அளவுக்கு ‘மதம் சார்ந்த நாடாக’ உள்ளது. ஒரே இடத்தில் இரண்டு இணையான உலகங்கள் இருப்பதை மத்திய கிழக்கு நாடுகளில் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கும் எட்கர் கெரெட்டை விட பலர் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர்.

இஸ்ரேல் கொண்டாட்டங்கள்

1998ஆம் ஆண்டு யூரோவிஷன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற டானா இன்டர்நேஷனல் என்ற மூன்றாம் பாலினத்தவரை உதாரணமாகக் காட்டி, ஒரு நாட்டில் முற்போக்கான சிந்தனையும், பழமைவாதமும் நிறைந்திருப்பதை விளக்கினார் கெரெட்.

இஸ்ரேல் சுதந்திரம் பெற்று மே 14-ம் தேதியன்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் பிபிசி அவரிடம் பேசியது.

அப்போது பேசிய அவர், இது போன்ற இருவேறு தன்மைகள் இருப்பதால் கலாச்சார வளம் அதிகரித்தாலும், இது நிலையாக நீடித்திருக்கும் எனக்கருத முடியாது என எச்சரித்தார். தொடர்ந்து பேசிய அவர் இஸ்ரேலியர்கள் நேரெதிரான இருவேறு குணாதிசயங்களைக் கொண்ட மக்களாக இருப்பதை சுட்டிக்காட்டினார்.

“அது ஒரு வழக்கமான கலவையாக இல்லாமல் பெரும் வேறுபாடுகளைக் கொண்டதாக உள்ளது.”

“ஆனால் இப்போது இந்த இருவேறு தன்மைகளில் எதற்கு முக்கியத்துவம் அளிப்பது என்பதில் இஸ்ரேலிய சமூகங்களிடையே சச்சரவுகள் அதிகரித்துள்ளன. முதலில் முற்போக்கான சிந்தனைக்கும், அதன் பின் யூதமத சம்பிரதாயங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதா அல்லது முதலில் மதத்துக்கு முக்கியத்துவம் அளித்து விட்டு பின்னர் முற்போக்கான சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதா,” என்பதில் தான் குழப்பம் நிலவுகிறது.

‘தவறான அறிவியல் புனைவு’

இஸ்ரேல்

சமீபத்திய வாரங்களில் பல இஸ்ரேலிய நகரங்களைத் தாக்கிய போராட்டங்களில் எட்கர் கெரெட் பங்கேற்றார்.

இந்த சச்சரவுகள், 1948-ம் ஆண்டு இஸ்ரேல் என்ற நாடு பிறந்த போதே தொடங்கிவிட்டன. தீவிர வலதுசாரி சிந்தனையும், மரபுவழி யூத சிந்தனையும் கொண்ட கூட்டணி ஆட்சி கடந்த நவம்பர் மாதம் அமைந்த பின் இந்த சச்சரவுகள் மேலும் மோசமடைந்து வருகின்றன.

இஸ்ரேல் நாட்டின் அறிவு சார் பெருமக்களைப் போலவே, 55 வயதான எழுத்தாளர் எட்கர் கெரெட்டும், அந்நாட்டு அரசின் சர்ச்சைக்குரிய நீதித்துறை சீர்திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடந்த சில வாரங்களாக நாட்டின் பெரும்பாலான நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றார். இது போன்ற சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டால் இறையச்சம் சார்ந்த ஆட்சி அமைவதற்கான ஆபத்து ஏற்படும் என முற்போக்குவாதிகள் அஞ்சுகின்றனர்.

இஸ்ரேல்
மிகவும் மாறுபட்ட லட்சியங்களை கொண்ட இணையான உலகங்கள் இஸ்ரேலில் வாழ்கின்றன.

சடன்லி (Suddenly), எ நாக் ஆன் தி டோர் (A Knock on the Door) மற்றும் பிஜ்ஜீரியா காமிகேஸ் (Pizzeria Kamikaze) போன்ற கதைகளை எழுதி உலகப் புகழ்பெற்ற எட்கர் கெரெட், தமது நாட்டின் அடையாளத்தையே இந்த அரசியல் பிரச்னைகள் மாற்றி விட்டதாக நம்புகிறார்.

“ஒருவர் ஒரு நல்ல அறிவியல் புனைகதையை எழுதினால், அதற்கு அடுத்ததாக அந்த கதைக்கு நேர்மாறான கதையுடன் ஒரு திரைப்படம் திரைக்கு வருகிறது. இஸ்ரேலைப் பொறுத்தளவில் ஒரு மோசமான அறிவியல் புனைக்கதையை எழுதி, அந்த கதையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நாடாகவே திகழ்கிறது,” என 1902-ம் ஆண்டு வெளியான தி ஓல்ட் நியூ லேண்ட்(The Old New Land) என்ற அறிவியல் புனைகதை அந்நாட்டை ஒரு யூதமத நாடாக மாற்றியதை சுட்டிக்காட்டி குறிப்பிடுகிறார் கெரெட்.

தாம் ‘மதத்துக்கு முன்பு சுதந்திரம் கேட்கும்’ மக்களின் பக்கம் நிற்பதாகவே குறிப்பிடும் கெரெட், மறுபுறம் பிரிவினைவாதம் தொடர்ந்து மேலோங்குவது குறித்தும், ஒவ்வொரு குடும்பத்திலும் இது போன்ற நிலை காணப்படுவது குறித்தும் எச்சரிக்கிறார்.

உதாரணமாக, எழுத்தாளர் கெரெட் அறிவியலுக்கு முக்கியத்துவம் அளித்தாலும், அவரது சகோதரர் தீவிர இடதுசாரியாகவும், அவரது சகோதரி பழமையான மதக்கோட்பாடுகளுடனும் வாழ்கின்றனர். இருப்பினும் அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாக அவர் கூறினார்.

“மக்கள் பல்வேறு கொள்கைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பது பிரச்னையல்ல. ஒவ்வொருவரும் ஒரு தனித்தனிப் பிரிவாக வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்,” என அவர் விளக்கினார்.

“ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாமல் சகிப்புத் தன்மை குறையும் போது, இந்நாட்டில் குழப்பம் மேலோங்குகிறது என்பதால் அது அழிவில் முடிகிறது,” என்றார்.

மோசமான காலத்தில் இஸ்ரேல்

Palestinian women waiting at a border checkpoint in the West Bank
 

“இஸ்ரேல் இப்போது, நீங்கள் எப்படி பார்த்தாலும், மத்திய கிழக்கில் மிகப்பெரிய மற்றும் வலிமையான சக்தியாக உள்ளது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் நாங்கள் பாலத்தீனர்களை கத்திகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கிகளுடன் எதிர்கொள்கிறோம்” என்று கெரட் நம்புகிறார்.கெரெட்டின் புனைக்கதை ஒன்றில் வரும் வாடகை கார் ஓட்டும் நபர், “தற்போது பாலத்தீனர்களுடனான மோதல்கள், உள்நாட்டு போராட்டங்கள் என ஒவ்வொரு நாளும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் நிலையில், இஸ்ரேல் போரில் ஈடுபட்டிருந்த காலம் நன்றாக இருந்தது; அதை நினைத்து நான் ஏங்குகிறேன். அந்த காலம் கூட இவ்வளவு மோசமாக இல்லை,” என்றும் கூறுகிறார்.

“எகிப்து, சிரியா, ஜோர்டான், லெபனான் போன்ற எதிரி நாடுகள் என் நாட்டை சூழ்ந்திருந்த காலத்தில் நான் வளர்ந்தேன். எல்லா திசைகளில் இருந்தும் அவர்கள் எங்களை மிரட்டிக்கொண்டிருந்தது மட்டும் இன்றி தாக்குதலும் நடத்தினர்,” என தமது பழைய நினைவுகளை எழுத்தாளர் கெரெட் அசைபோட்டார்.

“ஆனால் தற்போது இஸ்ரேல் நாட்டை பாருங்கள்.. மத்திய கிழக்கில் அது ஒரு வலிமையான நாடாக இருக்கிறது. ஆனால் எப்போது பார்த்தாலும் கத்தியுடனும், மோசமான துப்பாக்கிகளுடனும் வரும் பாலத்தீனர்களை எதிர்கொள்ளும் நிலையில் நாங்கள் உள்ளோம்.”

மேலும், “ஒரு காலத்தில் நாங்கள் தாவீதாக இருந்தோம். ஆனால் தற்போது கோலியாத்தாக இருக்கிறோம்,” என்றார்.

2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு நேர்காணலின் போது, “தமது மகன் லெவ், ஒரு பாலத்தீனரை கூட எப்போதும் பார்த்ததில்லை” என கெரெட் குறிப்பிட்டிருந்தார். மேலும், தமது இளமைப்பருவத்தின் போது பாலத்தீன அரபு மக்களிடம் நெருங்கிய தொடர்பு இருந்ததை நினைவுகூர்ந்த கெரெட், 1990களில் இஸ்ரேல் மற்றும் பாலத்தீன விடுதலை அமைப்பினருக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஓஸ்லோ உடன்படிக்கைக்குப் பின் அனைத்தும் மாறிவிட்டதாகத் தெரிவித்தார்.

“நான் சிறுவனாக இருந்த போது எங்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே எந்த பிரிவினையும் கிடையாது. அதனால் அவர்கள் எப்போதும் இங்கே இருப்பார்கள். நாங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தோம். அது மிகவும் இயல்பாகவே இருந்தது. ஆனால் இப்போது இருதரப்பும் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. அது இஸ்ரேல் நாட்டுக்கு வேலைக்கு வரும் பாலத்தீனர்களுக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்துகிறது,” என்றார்.

“ஆனால் ஓஸ்லோ உடன்படிக்கை இஸ்ரேலியர்களுக்கும், பாலத்தீனர்களுக்கும் இடையே ஒரு பிளவை ஏற்படுத்தி இருதரப்பையும் சந்திக்கவிடாமல் செய்துவிட்டது.”

சமூக வலைதளங்கள் இப்பிரச்னையை மேலும் மோசமாக்குவதாக கெரெட் நம்புகிறார்.

“ஃபேஸ்புக் யுகத்தில், ஒரு சாதாரண இஸ்ரேலியர் பாலத்தீனர்களை நினைத்து கடும் அச்சத்துடனேயே வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சாதாரண பாலத்தீனர் இஸ்ரேலியர்களுக்கு எதிராக கடும் வெறுப்புடன் இருப்பதாகவும் நான் கருதுகிறேன்.”

‘முரண்’ நகரங்கள்

An anti-government protest in Tel Aviv

அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய நீதித்துறை சீர்திருத்த முன்மொழிவு, இஸ்ரேலில் கடுமையான எதிர்ப்புகளைத் தூண்டியது.

கெரெட்டின் கூற்றின்படி, “எதிரிகளால் நிரம்பிய அண்டை நாட்டுக்கு மத்தியில்” வாழப்பழகிக்கொள்ளவேண்டும் என்ற ஒரே ஒரு நடைமுறை உண்மை இஸ்ரேலியர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. .

“நாங்கள் யாரும் தோற்றுவிட்டு உயிரிழக்க விரும்பவில்லை. ஈரானியர்களின் குண்டுவீச்சுக்கு இலக்காகவும் நாங்கள் யாரும் விரும்பவில்லை.”

“எங்களுடைய தற்போதைய அரசு ஒரு தீவிர வலதுசாரியாக இருக்கிறது. மிகவும் முரட்டுத் தனமாக அது ஒவ்வொருவரையும் அடிமைப்படுத்த முயல்கிறது. ஆனால் அவர்களுக்கு வாக்களித்த பெரும்பாலானவர்கள் பழமைவாத யூதர்கள். அந்த யூதர்களுக்கு கட்டாய ராணுவப் பணி உள்ளிட்ட விஷங்களில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன,” என அவர் விளக்கினார்.

“பழமைவாத யூதர்களின் ஆதரவுடன் செயல்படும் ஆட்சியாளர்கள் மிகவும் முரட்டுத் தனமாக இருக்கிறார்கள். நானும், எனது மகனும் அவர்களுக்காக சண்டையிட வேண்டும் என நினைக்கின்றனர்.”

2022-ம் ஆண்டு வெளியான நிதித்துறை அறிக்கையை மேற்கோள் காட்டிய அவர், பழமைவாத யூதர்களைவிட மதசார்பற்ற இஸ்ரேலியர்கள் 6 மடங்கு அதிகமான வரி செலுத்துவதை சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இஸ்ரேலின் எதிர்காலம் எப்படி இருக்கும்? நிதி சார்ந்த தலைநகராகத் திகழும் டெல் அவிவ் நகரத்தைப் போலவா அல்லது பெனி ப்ராக் போலவா?

“ஒரு வெள்ளிக்கிழமை மாலை நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை இஸ்ரேலியர்கள் காணும் நிலை டெல் அவிவ் நகரில் இருக்கிறது. ஆனால், வெள்ளிக்கிழமை இரவும், சனிக்கிழமை இரவும் மின்சாரத்தைப் பயன்படுத்தக்கூடாது என மதச்சட்டங்களை அதிகம் சார்ந்திருக்கும் யூதர்கள் வாழும் நகரமாக பெனி ப்ராக் இருக்கிறது. எனது அச்சம் என்னவென்றால், இரு சார்புநிலைகளைச் சார்ந்த பொதுமக்களில் ஏதோ ஒரு சார்பு நிலையைச் சார்ந்தவர்கள் எதிர்காலத்தில் ஒடுக்கப்படுவார்கள். அது தான் எனக்குள் பயத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது,” என்று தனது பேச்சை முடித்துக்கொண்டார்.

Previous Story

கர்நாடகத் தேர்தல்: கலையும் அரசியல் சமன்பாடுகள்!

Next Story

0.4% வாக்குகளில் தவறவிட்ட எர்டோகன்