இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க தயாராகிறதா இரான்? 

இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர்.இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் ஆகியவற்றின் இருப்பிடமாகும்.

இஸ்ரேல் vs இரான்

இதனிடையே இஸ்ஃபஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது.

இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, ‘நம்பகமான ஆதாரங்களை’ மேற்கோள் காட்டி, இஸ்ஃபஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் ‘முற்றிலும் பாதுகாப்பானவை’ என்று கூறியிருக்கிறது.

அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி, வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய ராணுவம் ‘இந்த நேரத்தில்’ கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

இரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350கி.மீ. தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்ஃபஹானில் வெடிப்புகள் நடந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரான்

இஸ்ஃபஹானின் முக்கியத்துவம் என்ன?

முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்க் கிம்மிட், இஸ்ஃபஹானின் முக்கியத்துவம் குறித்தும், இஸ்ரேல் ஏன் அப்பகுதியை இலக்காகத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது குறித்தும் பேசினார்.

“இஸ்ஃபஹான் உண்மையில் இரானிய அணுசக்தி திட்டத்தின் மையமாக உள்ளது. பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் சிலர் சொல்வது போல இரானிய அணுசக்தி திறனை மேம்படுத்துதுதற்கான இடம் அது,” என்றார்.

“எனவே இத்தளத்தின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு செய்திருக்கலாம். ஏனெனில் இஸ்ரேலியர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பயம், இரான் வசமுள்ள ஏவுகணைகள் அல்ல. இரானின் இலக்கான நாளைய அணுசக்தி திறன் ஆகும்,” என்றார் அவர்.

நிழல் யுத்தம் நிஜ மோதலாகியுள்ளது

கடந்த வார இறுதியில் நடந்த இரானிய தாக்குதலுக்கு இஸ்ரேல் எப்போது, ​​எப்படி பதிலடி கொடுக்கும் என்பன போன்ற ஊகங்கள் இந்த வாரம் முழுவதும் நீடித்திருந்தன. தற்போது இந்த இரண்டு நீண்டகால எதிரிகளுக்கு இடையேயான நிழல் யுத்தம், ஆபத்தான முறையில் வெளிப்படையானதாக மாறியிருக்கிறது.

இப்போது, இரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், இஸ்ஃபஹான் நகரில் உள்ள ஒரு ராணுவ தளத்திற்கு அருகே வெடிச்சத்தம் கேட்டதால்உள்ளூர் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

தாக்குதல் அளவு மிகவும் குறைவானது –  ஃபிராங்க் கார்ட்னர்

கடந்த வார இறுதியில் நடத்தப்பட்ட இரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் “திரள்” தாக்குதலுக்கு ஏதோ ஒரு வகையில் பதிலளிக்கப் போவதாக இஸ்ரேல் கூறியது. அது இப்போது நடந்திருக்கிறது.

இஸ்ரேலிய பதிலடியின் தொடக்கம் மற்றும் முடிவாக இது இருக்கும் பட்சத்தில், இது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே தோன்றுகிறது.

இஸ்ஃபஹான் இன்று காலையில் சாதாரணமாகத் தெரிகிறது.

இரானிய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பலத்த பதிலடி கொடுக்க வேண்டாம் என்று இஸ்ரேலின் மேற்கத்திய நட்பு நாடுகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கேட்டுக் கொண்டன.

இனி என்ன நடக்கப் போகிறது என்பது இரண்டு விஷயங்களைப் பொறுத்தது: ஒன்று இது இஸ்ரேல் தாக்குதலின் முடிவாக இருக்குமா என்பதாகும். அடுத்தது, இரான் மீண்டும் பதிலடி கொடுக்கப் போகிறதா என்பதையும் பொறுத்தது.

பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி

இரானின் இஸ்ஃபஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது.

பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது.

இஸ்ரேலுக்கு உடனடியாக பதிலடி கொடுக்க திட்டமா?

இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு இரான் மூத்த அதிகாரி ஒருவர் பேட்டி அளித்துள்ளார். இஸ்ஃபஹான் நகரின் மீது இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குல் நடந்த சில மணி நேரங்களில் அவர் அளித்த அந்த பேட்டியில், “இஸ்ரேலுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் திட்டம் இரானிடம் இல்லை” என்று கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் இஸ்ரேலில் இருந்தே நடத்தப்பட்டதாக 2 அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், இஸ்ரேல் இதுவரை அதற்கு பொறுப்பேற்கவில்லை.

“இந்த தாக்குதலில் வெளிநாட்டு சக்திக்கு தொடர்புள்ளதா என்பது இன்னும் உறுதியாகவில்லை. எந்தவொரு வெளிநாட்டு தாக்குதலையும் எதிர்கொள்ளவில்லை. எங்களது ஆலோசனை தாக்குதலைக் காட்டிலும் ஊடுருவல் குறித்ததாகவே இருக்கிறது” என்று பெயர் வெளியிட விரும்பாத இரான் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக இரானிய அரசு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்நாட்டு நிபுணர் ஒருவர், “இஸ்ஃபஹான் நகரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளால் சிறிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இரானுக்குள் நுழைந்துள்ள ஊடுருவல்காரர்களால் அவை பறக்கவிடப்பட்டுள்ளன ” என்று கூறினார். அவரது இந்த பேட்டி, இஸ்ரேல்தான் தாக்குதல் நடத்தியது என்ற கூற்றை மறுக்கும் வகையில் அமைந்திருந்தது.

இஸ்ரேல் vs இரான்

இரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் பற்றி பேச மறுக்கும் பிளிங்கன் – என்ன காரணம்?

ஈரானின் இஸ்பஹான் நகரில் நேற்று இரவு இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

ஈரான் மீதான இந்த ஏவுகணைத் தாக்குதல் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடாமல் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் தயங்குகிறார்.

இஸ்ரேல் மற்றும் இரானின் பரஸ்பர தாக்குதல்கள் மிகுந்த எச்சரிக்கையுடன், கட்டுப்படுத்த ஒன்றாக இருப்பதால் மிகப்பெரிய மோதல் தவிர்க்கப்பட்டு விட்டது என்று அர்த்தமா என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

காஸாவில் உள்ள ரஃபா தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்றும் பிளிங்கனிடம் அவர்கள் கேட்டனர்.

இந்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “பதற்றத்தைக் குறைப்பதிலும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதிலும்தான் தனது கவனம் உள்ளது” என்றார்.

பிபிசி நிருபர் ஜெசிகா பார்க்கர் நேற்றிரவு நடந்ததைப் பற்றி ஏன் பேசவில்லை என்று பிளிங்கனிடம் கேட்டார்.

அதைப் பற்றி மீண்டும் பேச மறுத்த அவர், “என்ன சொன்னாலும் சலிப்பு தருவதாகவே இருக்கும்” என்றார்.

எவ்வாறாயினும், அமெரிக்கா எந்தவொரு இராணுவ நடவடிக்கையிலும் ‘ஈடுபடவில்லை’ என்றும், பதற்றங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் அது தொடர்ந்து ஈடுபடும் என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேல் vs இரான்

இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்?

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது.

தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை.

அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran’s elite Republican Guards – IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார்.

இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது.

இஸ்ரேல் vs இரான்

அமெரிக்க தூதரகப் பணியாளர்களுக்கு பயணக் கட்டுப்பாடு

இஸ்ரேலில் உள்ள தனது தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது.

கிரேட்டர் டெல் அவிவ் பகுதிக்கு வெளியே, ஹெர்ஸிலியா, நெதன்யா, யாஹூதா, ஜெருசலேம் மற்றும் பி’எர் ஷெவா உள்ளிட்ட எந்தவொரு இடத்திற்கும் யாரும் பயணம் செய்யக் கூடாது என்று தனது பணியாளர்களை அங்குள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

“பாதுகாப்புச் சூழல் இன்னும் மோசமாகவே இருக்கிறது. அரசியல் மற்றும் அண்மைய நிகழ்வுகளால் சூழல் எந்நேரமும் வேகமாக மாறக்கூடும்.” என்று அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.

இஸ்ரேல் vs இரான்

தங்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு

இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியிருப்பதைத் தொடர்ந்து உலகளவில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. அதேசமயம் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்திருக்கின்றன.

வெள்ளிக்கிழமையின் (ஏப்ரல் 19) துவக்கத்தில் ஆசியச் சந்தைகளில் சில தீவிரமான நகர்வுகள் தென்பட்டன. அதன்பிறகு, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் வர்த்தகம் சுமார் 1.7% அதிகமாகி, ஒரு பீப்பாய் 88 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ.7,349) மேல் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 அமெரிக்க டாலர்களுக்கு அருகில் (இந்திய மதிப்பில் ரூ.2 லட்சம்) விற்பனையானது.

இரான் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி வெளியானதன்பின் ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் உள்ள பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் வீழ்ச்சியடைந்தன.

மத்திய கிழக்கில் மோசமடைந்து வரும் மோதல் போக்குகள் எண்ணெய் விநியோகத்தை சீர்குலைக்கும் என்று முதலீட்டாளர்கள் கவலைப்படுகிறார்கள்.

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயை உலக நாடுகள் பெரிதும் நம்பியிருப்பதால், எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கங்கள் உலகம் முழுவதும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

மத்திய கிழக்கில் அதிகரித்திருக்கும் பதற்றங்கள் காரணமாக ஏற்கனவே ஓமன் மற்றும் இரான் இடையே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் 20% இந்த வழியாகவே நடப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளாம சவூதி அரேபியா, இரான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் இராக் இந்த ஜலசந்தி வழியாகவே தாம் ஏற்றுமதி செய்யும் எண்ணெயை அனுப்புகின்றன.

அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் கூற்றுப்படி, இரான் உலகின் ஏழாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராகவும், ஓபெக்கின் மூன்றாவது பெரிய உறுப்பினராகவும் உள்ளது.

இந்த எண்ணெய் விலை உயர்வு ‘இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே மீண்டும் போர் மூளும் என்ற அச்சத்தினால் ஏற்பட்ட எதிர்வினை’ என்று எரிசக்தி சந்தை நிபுணர் வந்தனா ஹரி கூறினார்.

இஸ்ரேல், இரான், தங்கம், எண்ணெய்

‘தமிழகத்தில் தங்கம் விலை இன்னும் உயரும்’

தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு தங்கநகைக் கடை சங்கத்தைச் சேர்ந்த சாந்தகுமார் கூறினார்.

“உலகில் இரு நாடுகளுக்கு இடையே எந்த பகுதியில் போர், மோதல் நடந்தாலும் அதனால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளில் இருந்து மக்கள் பலர் இடம்பெயர்வார்கள். அப்படி செய்யும் நபர்களுக்கு நகை ஒரு முக்கிய சொத்தாக இருக்கும். போர் சூழல் காரணமாக பங்குச் சந்தை வர்த்தகம் நிலையாக இருக்காது. இதை பங்குச் சந்தை தரவுகள் பலமுறை நமக்கு உணர்த்தியுள்ளன,” என்றார் சாந்தகுமார்.

“இதன் காரணமாக மக்கள் தங்கத்தை நல்ல முதலீடாகக் கருதி, தங்கம் வாங்க தொடங்குவார்கள். இதனால் உலகில் எங்கு போர் தொடங்கினாலும், இந்தியா மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கும். இந்தியாவில் தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் இது இன்னும் அதிகரிக்கும்,” என்று சாந்தகுமார் தெரிவித்தார்.

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.55,120 ஆகவும், ஒரு கிராம் ரூ. 6,890 COLOMBO-(SLRS: 24873) ஆகவும் உள்ளது.

Previous Story

அங்கும்… இங்கும்… எங்கும்… அரசியல் தீ

Next Story

கெஜ்ரிவாலை சிறையிலேயே கொல்ல சதி : ஆம் ஆத்மி