இலங்கை:விசேட கவனத்தை செலுத்தும் வத்திகான்

இலங்கையில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களுக்கு நியாயம் கிடைப்பது தாமதமாகி வருவது குறித்து பரிசுத்த பாப்பரசர் உட்பட வத்திகான் நிர்வாகம் விசேட கவனத்தை செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் பொரள்ளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் உட்பட சம்பவங்கள் தொடர்பாக உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் குறித்து கத்தோலிக்க சமூகம் வழங்கிய அறிவிப்புக்கு அமைய வத்திகான் இந்த விசேட கவனத்தை செலுத்தியுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக சுயாதீனமான தனியான தகவல் விசாரணைகளுக்கு தேவையான விரிவான ஒத்துழைப்புகள் வத்திகான் அரசிடம் இருந்து கிடைக்கும்.

இது சம்பந்தமாக இலங்கை கத்தோலிக்க சமூகத்தின் துறவிகள் மற்றும் ஏனைய செயற்பாட்டாளர்கள் சிலர் வத்திகான் நிர்வாகத்துடன் தொடர்புகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தின விசேட ஆராதனைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகள் மீது பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அப்போது வத்திகான் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடி இருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய புனித பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை, இலங்கையில் கத்தோலிக்கர்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டித்தார்.

அந்த தாக்குதல் கொரூரமான வன்முறை செயல் எனக் கூறியே அவர் அதனை கண்டித்தார். ஈஸ்டர் தினத்தில் சோகத்திற்கும், துன்பத்திற்கும் உள்ளான கிறிஸ்தவர்களுடன் தான் நெருக்கமாக தான் இருப்பதாக பாப்பரசர் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே பொரள்ளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் பொலிஸார் நாடகம் ஆடுவதாக கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அண்மையில் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி இருந்தார்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்கான சர்வதேச அமைப்பு சூம் தொழிற்நுட்பம் ஊடாக அண்மையில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் உரையாற்றும் போதே பேராயர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

உண்மையை வெளியிடும் வரை அரசாங்கத்திற்கு எதிராக போராடப் போவதாகவும் இதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து பலமிக்க நாடுகளில் உதவியை நாட தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் தன்னுடன் இணைந்து போராடும் மூன்று பேருக்கு விரைவில் ஐநாவின் அங்கத்துவம் கிடைக்கவுள்ளதாகவும் இதன் பின்னர் ஐ.நாவுடன் நேரடியாக கொடுக்கல், வாங்கலில் ஈடுபடும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் எனவும் பேராயர் தெரிவித்திருந்தார்.

Previous Story

ரஞ்சன் வெளியே :நிபந்தனைகள்-3

Next Story

மேஜையில் துப்பாக்கி: சமாதானம் பற்றி அமெரிக்கா!