இறையடி சேர்ந்த மாத்தளை சட்டத்தரணி பசீனா நபீல்!

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.ஒவ்வொரு ஜீவனும் மரணத்தை சுவைத்தே ஆகனும் என்பது நியதி.ஆனால் சில பிரிவுகள் எல்லோரின் மனதிலும் ஒரு தாக்கத்தை விட்டுச் செல்கின்றன.
கொரோனா தாக்கத்தின் பின்னர் அதிகளவிலான திடீர் மரணங்கள் பலதையும் சிந்திக்க வைக்கின்றன.இறைவன் நமக்கு தரும் பட்டம் பதவி செல்வம் ஆற்றல் அறிவு ….இவை எல்லாம் அமானிதங்களே.இவற்றை எவ்வாறு ஒவ்வொரு மனித ஜீவனும் பயன்படுத்தினான் என்பதற்கு மறுமையில் பதில் கூறியே ஆகவேண்டும்.
அந்த வகையில் தமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அருள்களை மனித மேம்பாட்டுக்கு பயன்படுத்துவது ஒவ்வொருவரினதும் கடமை..தானும் தன்வாழ்வும் என்ற எல்லைக்குள் மட்டுப்படுத்தி வாழ்பவர்கள் தம் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நேற்று நம்மை விட்டு மறு உலக வாழ்விற்குச் சென்ற சட்டத்தரணி பசீனா நபீல் மாத்தளை வாழ் மக்களுக்கு ஒருமுன்மாதிரியாகும்.குறிப்பாக பெண்களுக்கு இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாததாகும்.
அதே  துறையில் நான் இருந்தாலும் அவரை நேரில்  சந்தித்தது கிடையாது..ஒரு சில சந்தர்ப்பங்களில் தொலைபேசி மூலம் மட்டும் தொடர்பு கொள்ள கிடைத்தது.அந்த ஓரிரு உரையாடல்கள் மட்டும் அவரின் நற்பண்புகளை எனக்கு புரிய வைத்தது எனலாம்.
எனது மனைவியின் தோழிகளில் ஒருவரான அவர் திடீரென நோய் வாய்ப்பட்டதை கேள்வியுற்ற நாளில் இருந்து அடிக்கடி அவரின்  நற்பண்புகளை தான்  என்னுடன் எடுத்துரைத்துப்பார்.
மாத்தளை ஆமினா மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகளில் ஒருவரான சட்டத்தரணி பசீனா நபீல் அவர்கள் தனது வேலைப் பளுவுக்கு மத்தியிலும் கல்லூரியின் வளர்ச்சியில் தனது பங்களிப்பை செலுத்திக் கொண்டே இருந்தார்.
பழைய மாணவிகளுக்கும் இன்றைய மாணவர்களுக்கும், வரும் சந்ததியினருக்கும்  இவர் ஒரு முன் மாதிரி.
சட்டத்தரணி என்ற தொழிலில் உயர் நிலைக்கு பெண்கள் எவ்வாறு செல்லலாம் என்பதை செயலுருவில் காட்டிய ஒரு வீரத் தாய் என்று கூட கூறலாம்.மாத்தளை மக்களால் இவரின் இடத்தை நிரப்புவதென்பது இலகுவான காரியமல்ல.
என்றாலும் தமிழ் பேசும் சமூக இளைய தலைமுறை சட்டத்துறையிலும் கூடிய ஆர்வம்  காட்டினால் அது இயலாததும் அல்ல..பெண்கள் தங்களது பிரச்சினைகளுக்கு ஆலோசனை பெற பெண் சட்டத்தரணிகளிடம் செல்வதையே அதிகம் விரும்புவர்.
அதுவும் தமது தாய் மொழியில் உரையாடும் ஒருவருடன்  பிரச்சினையை தெளிவாக விளங்கப்படுத்தலாம்.அவ்வாறான இல்லாத காரணத்தால் பெண்களது பலநூறு பிரச்சினைகள் ஊமைகளாகி உள்ளன.
அல்லது திசை மாறியுள்ளன.எனவே சட்டத்துறையில் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியம்.அதற்கான ஆர்வம் நம் சமூகத்தில் மேலும் அத்தியாவசிய ஒன்றாகவே இன்னும் உள்ளது.
மாத்தளை வாழ் பெண் சமூகத்துக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்குமே உதாரணமாக வாழ்ந்து  சட்டத்தரணி பசீனா நபீல் அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் த ஆலா ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்குவானாக.
சட்டத்தரணி ஃபஸ்லின் வாஹிட்
14.10.2022
Previous Story

ஆசியாவின் சம்பியன், நபீபியாவிடம் வீழ்ந்தது - வரலாற்று வெற்றி என்கிறது ICC

Next Story

கோமாவுக்குப் போன தமிழர் உரிமை!