இரான்-துருக்கி இடையே அதிகரித்து வரும் பதற்றம்  - Sri Lanka Guardian News

இரான்-துருக்கி இடையே அதிகரித்து வரும் பதற்றம் 

சிரியாவில் பஷர் அல்-அசத் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டது முதல் துருக்கி மற்றும் இரானின் நலன்கள் ஒன்றுக்கொன்று மோதும் எனக் கூறப்பட்டது.

இரான், துருக்கி இடையே அதிகரித்து வரும் பதற்றம் - எர்துவானின் உண்மையான நோக்கம் என்ன?

அகமது அல்-ஷாரா தலைமையிலான ஆயுதக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம், பஷர் அல்-அசத்தை அதிகாரத்தையும் சிரியாவையும் விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தியது. இந்தக் குழுவுக்கு துருக்கியின் ஆதரவு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிரியா சன்னி முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட ஒரு நாடு. பஷார் அல்-அசத், ஷியா முஸ்லிம்களின் அலவைட் சமூகத்தைச் சேர்ந்தவர். பஷர் அல்-அசத் 2000 முதல் 2024 வரை சிரியாவில் ஆட்சியில் இருந்தார்.

அசத் ஆட்சியில் இருந்த வரை இரான் சிரியா மீது ஆதிக்கம் செலுத்தியது. வெளிப்படையாக, இரான் ஒரு ஷியா முஸ்லிம் பெரும்பான்மை நாடாக அறியப்படுகிறது. மேலும் சிரியாவில் பஷர் அல்-அசத் அதிகாரத்தில் இருந்து விலகியது துருக்கியின் வெற்றியாகவும், இரானின் தோல்வியாகவும் பார்க்கப்பட்டது.

சிரியாவில் இருந்து பஷர் அல்-அசத் வெளியேற்றப்பட்ட பிறகு, குர்திஷ் பிரிவினைவாதிகளைக் கட்டுப்படுத்துவதில் துருக்கி வெற்றி பெற்றதாகத் தெரிகிறது.

அதைத் தொடர்ந்து, கடந்த மாதம்தான், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (PKK) நிறுவன உறுப்பினரான அப்துல்லா ஓகலான், தனது குழுவினரை ஆயுதங்களைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். அப்துல்லா ஓகலான் சிறையில் இருக்கிறார்.

கடந்த 40 ஆண்டுகளாக துருக்கியில் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி ஒரு கொரில்லா போரை நடத்தி வருகிறது. ஒகலானின் இந்த வேண்டுகோள் எர்துவானுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.

“ஆயுதங்களைக் கைவிடுமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த வேண்டுகோளை ஏற்று உங்களது வரலாற்றுப் பொறுப்பை நிறைவேற்றுங்கள். அனைத்துக் குழுக்களும் தங்களது ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி ஓர் அமைப்பாக இருப்பதை நிறுத்த வேண்டும்” என்று தனது மேல்முறையீட்டில் ஒகலான் கூறினார்.

ஒகலானின் இந்த வேண்டுகோள் முழு மத்திய கிழக்குக்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குர்துகள் இன்னும் சிரியாவின் பெரும் பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறார்கள். அவர்கள் இராக் மற்றும் இரானிலும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் உள்ளனர்.

நேருக்கு நேராக நிற்கும் துருக்கி, இரான்

அயதுல்லா அலி காமெனி துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனுடன்

இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனேயி துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்துவானுடன்

பிப்ரவரி 26ஆம் தேதி, துருக்கிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹக்கன் ஃபிடானிடம், இரான் ஆதரவு பெற்ற குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) சிரியாவின் புதிய ஆட்சியாளர் அகமது அல்-ஷாராவை எதிர்த்தால் என்ன நடக்கும் என்று கத்தாரின் அல்-ஜசீரா செய்தி நிறுவனம் கேட்டது.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக, “இது எந்த வகையிலும் சரியாக இருக்காது. ஒரு குறிப்பிட்ட குழுவை ஆதரிப்பதன் மூலம் வேறொரு நாட்டில் நிலையற்ற சூழலை உருவாக்க நீங்கள் முயன்றால், உங்கள் நாட்டிலும் அதே நிலை ஏற்படலாம்” என்று ஃபிடான் கூறியிருந்தார்.

ஃபிடானின் கருத்துகளுக்கு இரானின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாய் கடும் கண்டனம் தெரிவித்தார். பிப்ரவரி 28ஆம் தேதி பக்காய் துருக்கிய வெளியுறவு அமைச்சரை விமர்சித்து ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

அதில், “இந்தப் பிராந்தியத்தில் நடக்கும் நிகழ்வுகளில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈடுபாட்டைக் காணாதது ஒரு பெரிய தவறு” என்று தெரிவித்தார். மறுபுறம், சிரியாவில் இஸ்ரேல் அத்துமீறி நுழைவதை விமர்சிப்பதை ஃபிடான் தவிர்த்து வருகிறார்.

மார்ச் 3ஆம் தேதி நடைபெற்ற வாராந்திர பத்திரிகையாளர் சந்திப்பில், ஃபிடான் தெரிவித்த கருத்துகள் குறித்து பகாய் கேள்வி எழுப்பினார்.

“சமீப காலங்களில் இந்தப் பகுதியில் நடந்தவற்றின் பின்னணியில் உள்ள காரணங்கள் ஒவ்வொரு நாளும் தெளிவாகி வருகின்றன. துருக்கியின் கொள்கைகளால் சிரியாவுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து தெளிவாக விளக்கப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

அதே நாளில், வெளியுறவுத் துறை அமைச்சகம் துருக்கிய தூதரை வரவழைத்ததாக சில இரானிய ஊடகங்கள் கூறின. ஊடக அறிக்கைகளின்படி, மார்ச் 4ஆம் தேதி துருக்கி மீண்டும் இரானிய தூதரை அழைத்துத் தனது எதிர்ப்பைத் தெரிவித்தாக அறியப்படுகிறது.

TASAM | Iran: Its Relations with the World and Turkey*

அதையடுத்து, மார்ச் 4ஆம் தேதி துருக்கிய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர், துருக்கி மீதான பொது விமர்சனத்திற்கு இரானிய அதிகாரி ஒருவர் ஆட்சேபனை தெரிவித்ததாகக் கூறினார்.

துருக்கியின் வெளியுறவுத் துறை அமைச்சகம், “வெளியுறவுக் கொள்கை விஷயங்களை உள்நாட்டு அரசியலுடன் கலக்கக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். துருக்கிக்கு இரான் ஒரு முக்கியமான கூட்டாளி” என்று குறிப்பிட்டது.

இரானிய ஊடகங்களில் வெளிப்பட்ட கோபம்

துருக்கி

துருக்கியின் ஆதரவுடனும் பஷர் அல்-அசத்தை சிரியாவில் இருந்து வெளியேற்றுவதில் அகமது அல்-ஷாரா வெற்றி பெற்றார்.

ஆனால் ஃபிடானின் கருத்துகள் இரானிய ஊடகங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டன.

“சமீபத்திய மாதங்களில் ஏற்பட்ட தொடர்ச்சியான அதிர்ச்சிகர சம்பவங்களுக்குப் பிறகு இரான் பலவீனமடைந்துள்ளதாக துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்துவான் கருதுகிறார். சிரியாவில் நடப்பவை மற்றும் துருக்கியில் இருந்து வளர்ந்து வரும் சவால்களில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப, எர்துவான் இரான் மீது கவனம் செலுத்துகிறார்.

துருக்கி தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும். மேலும் எர்துவானின் விளையாட்டுகள் நிரந்தரமாக அர்த்தமற்றதாக மாற்றப்பட வேண்டும்” என்று சீர்திருத்தவாதி ஹாம்-மிஹான் மார்ச் 2ஆம் தேதி குறிப்பிட்டார்.

“ஃபிடானின் அகந்தை மாயையால் உருவாகியுள்ளது. ஃபிடானுக்கு துருக்கியின் நிலையை உணர்த்த வேண்டும், மேலும் இரான் என்றால் என்ன என்பதையும் அவருக்குச் சொல்ல வேண்டும்” என்று இரானின் பழமைவாத ஜஹான் நியூஸ் என்ற ஊடகம் மார்ச் 1ஆம் தேதி குறிப்பிட்டது.

சீர்திருத்தவாத ஷார்க் நாளிதழ், அரசுடன் இணைக்கப்பட்ட துருக்கிய சமூக ஊடகக் கணக்குகள் இரானில் உள்ள அஜெரி இன மக்களிடம் பிரிவினைவாத உணர்வைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டியது.

‘இரான் சிரிய குர்துகளுடன் ஒத்துழைக்க முடியும். இத்தகைய சூழ்நிலையில், துருக்கியே எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருப்பதாக துருக்கிய வெளியுறவுத் துறை அமைச்சர் இரானிடம் கூற விரும்பினார். முக்கியமான விஷயம் என்னவென்றால், துருக்கியே சிரிய ஜனநாயகப் படைகளை அழிக்க விரும்புகிறது.

விரைவிலோ அல்லது பின்னரோ, இரானின் சார்பாக சிரிய குர்துகள் ஏதாவது செய்வார்கள் என்று நம்பப்படுகிறது. டிரம்ப் அத்தகைய உதவியைத் தடுத்து வருவதால், அமெரிக்க ஆதரவு குறித்து சிரிய ஜனநாயகப் படைகள் நிச்சயமற்றதாக உள்ளது,” என்று துருக்கிய நிபுணரான வலி கோல்மோஹம்மதி தெரிவித்துள்ளார்.

அகமது அல்-ஷாரா சன்னி பிரிவைச் சேர்ந்தவர், அவர் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பஷர் அல்-அசத் அலவைட் சமூகத்திற்கு பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

சிரியாவின் மொத்த மக்கள் தொகையில் அலவைட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 10 சதவீதம் பேர் உள்ளனர். மேலும் சிரியாவுக்கும் இரானுக்கும் இடையிலான நட்புறவு பழமையானது. 1980 முதல் 1988 வரை இராக்-இரான் போரின்போது சிரியா இரானுக்கு ஆதரவாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷியா vs சன்னி

எர்துவான்-மசூத் பெஸ்ஜிகி

துருக்கிய அதிபர் எர்துவான் இரான் அதிபர் மசூத் பெஸ்ஜிகியனுடன்

கடந்த வாரம் வியாழக்கிழமை முதல் இந்த வாரம் திங்கள் கிழமை வரை சிரியாவில் நடந்த வன்முறையில் 1500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 1,068 பேர் பொதுமக்கள், பெரும்பாலானோர் அலவைட்டுகள். கொலையாளிகள் சிரிய அரசுக்கு விசுவாசமானவர்கள் என்று கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, அலவைட்டுகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, இந்தியாவின் ஆங்கில நாளிதழான தி இந்துவின் சர்வதேச ஆசிரியர் ஸ்டான்லி ஜானி எழுதியதாவது:

“சிரியா பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தைக் கொண்ட நாடு. இது முஸ்லிம் பெரும்பான்மை நாடு, ஆனால் ஒருபோதும் அங்கு ஒற்றுமை நிலவியதில்லை. சிரியா 1946இல் ஃபிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. அதன் பின்னர் பல ஆட்சிக் கவிழ்ப்புகளைக் கண்டுள்ளது. ஒரு வகையில், அது நிலையற்ற அரசியல் சூழலின் காலகட்டமாக இருந்தது.

பஷர் அல்-அசத்தின் தந்தை ஹபீஸ் அல்-அசத் 1970இல் ஆட்சியைக் கைப்பற்றி சிரிய அரசியலில் நிலைத்தன்மையைக் கொண்டு வருவதில் வெற்றி பெற்றார். மேலும் சிரியாவில் வகுப்புவாத சமநிலையைப் பேணுவதற்காக ஹபீஸ் அசத் ஒரு சர்வாதிகார அமைப்பை உருவாக்கினார்.

மதச்சார்பற்ற அரசியலமைப்பின் கீழ் ஹபீஸ் அசத் இதைச் செய்தார். பின்னர், அல்-ஷாரா இந்த ஹபீஸின் அமைப்பை அழித்தார், இப்போது அவர்கள் பெரும்பான்மையான இஸ்லாத்தில் வேரூன்றிய ஒரு புதிய அமைப்பை உருவாக்க விரும்புகிறார்கள்.”

எர்துவான்

பிப்ரவரி 4ஆம் தேதி, அங்காராவில் சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷராவுடனான செய்தியாளர் சந்திப்பின்போது துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்துவான்.

சிரியாவில் அலவைட்டுகள் கொல்லப்பட்டது குறித்து, “துருக்கி ஆதரவு பெற்ற ஆயுதக் குழு அசத் அரசைக் கவிழ்த்தது. இதன் பொருள், சிரியாவில் நடக்கும் எந்த விஷயத்திற்கும் புதிய சிரிய அரசும் துருக்கியும் பொறுப்பாக இருக்க வேண்டும்” என்று இரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி மார்ச் 7ஆம் தேதி தெரிவித்தார்.

மேலும் சிரியாவில் அரசாங்கத்தை மாற்றியவர்களுக்கு, இங்கு நிலவும் வன்முறை மற்றும் உறுதியற்ற சூழலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு உள்ளது என்று அப்பாஸ் கூறியிருந்தார்.

சௌதி அரேபியாவில் நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் துருக்கிய வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்த அப்பாஸ், சிரியாவில் நிலவும் உறுதியின்மை, பயங்கரவாத குழுக்களுக்கும் இஸ்ரேலுக்கும் மட்டுமே பயனளிக்கும் என்று கூறினார்.

கெய்ஹான் என்பது இரானின் கடுமையான அரசியல் நிலைப்பாடுகளை எடுத்துரைக்கும் ஒரு நாளிதழாக அறியப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 14 அன்று வெளியான அதன் பகுப்பாய்வு ஒன்றில், “முதல் உலகப் போருக்குப் பிறகு எல்லை நிர்ணயம் வித்தியாசமாகச் செய்யப்பட்டிருந்தால், அலெப்போ, டமாஸ்கஸ், இட்லிப், ரக்கா ஆகியவை துருக்கியில் இருந்திருக்கும்” என்று எர்துவான் கூறியிருந்தார்.

மேலும், “சிரியாவில் நாம் என்ன செய்கிறோம் என்று துருக்கியின் எதிர்க்கட்சித் தலைவர்கள் கேட்கிறார்கள்? இப்போது நான் அவர்களிடம் கேட்கிறேன், நாங்கள் ஏன் சிரியாவில் இருந்தோம் என்பதை அவர்கள் கண்டுபிடித்தார்களா? பஷார் அல்-அசத் எங்கே இருக்கிறார் என்பதை அவர்கள் கண்டுபிடித்தார்களா?” என்று எர்துவான் தனது கட்சி மாநாட்டில் இந்த விஷயங்களைக் கூறினார் எனக் குறிப்பிட்டிருந்தது.

எர்துவானின் நோக்கம்

எர்துவான்

எர்துவான் 2028 தேர்தலிலும் பங்கேற்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.

குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் உடனான ஒப்பந்தம் எர்துவானின் அரசியல் லட்சியங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. சோனர் ககோப்டே என்பவர் வாஷிங்டன் இன்ஸ்டிடியூட் என்ற சிந்தனைக் குழுவில் மூத்த உறுப்பினராக உள்ளார், மேலும் எர்துவான் குறித்து ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

“பல ஆண்டுகளாகப் பழமையான எதிர்க்கட்சி குழுக்களான குர்திஷ் ஆதரவு ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு மக்கள் கட்சியை அழிப்பதே எர்துவானின் குறிக்கோள். அவை இருக்கும்போது, ​​எர்துவான் நீண்ட காலம் அதிபராக இருப்பது கடினமாக இருக்கும்” என்று சோனர் வாஷிங்டன் இன்ஸ்டிடியூட் இணையதளத்தில் எழுதினார்.

எர்துவான் பிரதமராக நீடிப்பதற்கான அரசியலமைப்பு வரம்பு 2017-18இல் காலாவதியானது. ஆனால் ஆட்சியில் நீடிக்க, அரசியலமைப்பைத் திருத்துவதற்கான வாக்கெடுப்பை அவர் நடத்தினார். அரசியலமைப்பு திருத்தத்திற்குப் பிறகு, பாராளுமன்ற அரசாங்க முறையில் இருந்து அதிபர் முறைக்கு துருக்கி மாற்றப்பட்டது.

இதன் பின்னர் எர்துவான் அதிபரானார். ஆனால் இப்போது அதிபராக நீடிப்பதற்கான அரசியலமைப்பு வரம்பும் முடிவடைகிறது. துருக்கியின் தற்போதைய விதிகளின்படி, எர்துவான் 2028ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் பங்கேற்க முடியாது.

அதனால்தான் எர்துவான் குர்திஷ் ஆதரவுக் கட்சிகளுடன் ஒப்பந்தங்களைச் செய்து வருகிறார், இதன் மூலம் அரசியலமைப்பைத் திருத்துவதில் அவர்களின் ஆதரவை மீண்டும் பெற முடியும்.

ஆனால் துருக்கியின் தேசியவாத எதிர்க்கட்சி முகாம் குர்துக்களின் உரிமைகளை எதிர்க்கிறது, மேலும் எர்துவான் ஆதரவாளர்களும் அவர்களில் அடங்குவர். மறுபுறம், ஜனநாயகக் கட்சியின் வாக்காளர்கள் எர்துவான் வாழ்நாள் முழுவதும் அதிபராக இருப்பதை விரும்ப மாட்டார்கள்.

“எர்துவானுக்கு ஜனநாயகக் கட்சியின் ஆதரவைப் பெற்று 2028க்கு முன்னர் இடைக்காலத் தேர்தல்களை நடத்தும் விருப்பமும் உள்ளது. ஏனெனில் நாடாளுமன்றம் நேரத்திற்கு முன்பே கலைக்கப்பட்டால், விதிகளின்படி அவருக்குத் தானாகவே மற்றொரு பதவிக்காலம் கிடைக்கும்,” என்று சோனர் குறிப்பிட்டிருந்தார்.

“அதற்குப் பதிலாக, 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் இந்த நகரங்களின் மேயர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதால், எர்துவான் மீண்டும் குர்திஷ் பெரும்பான்மை நகரங்களில் மேயர் பதவிகளை ஜனநாயகக் கட்சிக்கு வழங்க முடியும்.”

இதுதவிர, குர்துகள் சில கலாசார உரிமைகளையும் பெறலாம். அதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி உடனான மோதல் முடிவுக்கு வந்தால், அது வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும், அதற்கான பெருமை எர்துவானுக்குக் கிடைக்கும்.”

Previous Story

பாகிஸ்தான் ரயில் கடத்தல்:  பயணிகளின் திகில் அனுபவம்!

Next Story

மதம் மாற வற்புறுத்திய அப்ரிடி; பாக்., முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா பகீர்