ரஞ்சன் அருண் பிரசாத்

நவம்பர் 27 அன்று திட்வா புயல் தாக்கத்தினால் இலங்கையில் பெய்த கடும் மழை காரணமாக கலாவௌ ஆறு பெருக்கெடுத்த நிலையில், அநுராதபுரம் அவுகண பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது அவுகண பகுதியை சேர்ந்த சம்ஷூதீன் தனது வீட்டை அண்மித்துள்ள பகுதியொன்றுக்கு சென்றுள்ளார்.
வெள்ளப்பெருக்கு காரணமாக நான்கு பக்கமும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், அருகிலுள்ள தென்னை மரத்தில் ஏறியதாக சம்ஷூதீன் கூறுகிறார்.
தனது உயிரை பாதுகாத்துக்கொள்ள சம்ஷூதீனுக்கு அந்த சந்தர்ப்பத்தில் வேறு எந்தவொரு வழியும் இருக்கவில்லை.

சம்ஷூதீன் சிக்குண்டிருந்ததை பிரதேசத்தைச் சேர்ந்த பலரும் அவதானித்து, அவரை காப்பாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர்.
எனினும், ஒரு நபருக்கு கூட அந்த தென்னை மரத்தை அண்மித்து செல்வதற்கான இயலுமை கிடைக்கவில்லை. காரணம், வெள்ளம் எல்லை மீறி சென்றதாக பிரதேசத்தைச் சேர்ந்த ரகுமான், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, கடற்படையினர் சம்ஷூதீனை காப்பாற்ற முயற்சித்த போதிலும், பலன் கிடைக்கவில்லை.
சம்ஷூதீனை காப்பாற்றும் இறுதி முயற்சியாகவே களமிறங்கியது இலங்கை விமானப்படை.
இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர், சம்ஷூதீனை காப்பாற்றும் நடவடிக்கைகளுக்கு களமிறங்கியது.
விமானப்படையின் மீட்பு குழு உறுப்பினர்கள், தென்னைமரத்தில் செய்வதறியாதிருந்த சம்ஷூதீனை காப்பாற்றினார்கள்.
தான் எதிர்கொண்ட ஆபத்து நிறைந்த அந்த அனுபவங்களை சம்ஷூதீன் பிபிசி தமிழுடன் பகிர்ந்துக்கொண்டார்.

‘மாடுகளை காப்பாற்ற முடியவில்லை’
” நீர் திறந்து விடப்பட்டுள்ளது என்று அன்று காலை தொலைபேசி அழைப்பொன்று வந்தது. நான் ஓடிச் சென்று பார்த்தேன். நீர் மட்டம் வெகுவாக அதிகரித்திருந்தது. இதற்கு முன்னர் அவ்வாறு வந்ததில்லை. நீர் பெருக்கெடுத்திருந்தது. ஒன்றுமே செய்ய முடியவில்லை.
வீட்டுக்கு அருகில் உள்ள பகுதியில் கட்டப்பட்டிருந்த நான் வளர்த்த மாடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மாடுகளை காப்பாற்றுவதற்காக நான் நீந்தி சென்றேன். ஐந்து மாடுகள் இருந்தன. நீர் அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொன்றாக அடித்துச் சென்றது. ஒரு மாடு கூட காப்பாற்றப்படவில்லை. அனைத்தும் இறந்து விட்டன.” என தெரிவித்தார் சம்ஷூதீன்.
”நீர் மட்டம் சடுதியாக அதிகரித்தது. எனக்கு நீந்த தெரியும். ஆனால், நீந்த முடியாதளவு நீர் மட்டம் அதிகரித்திருந்தது. ஒன்றுமே செய்ய முடியாமையினால், அந்த இடத்திலிருந்த தென்னை மரத்தில் ஏறினேன்.” என சம்ஷூதீன் கூறினார்
தென்னை மரத்தில் ஏறிய பின்னர் என்ன நடந்தது என்பது குறித்தும் சம்ஷூதீன் விளக்கினார்.

மரத்திலிருந்த சந்தர்ப்பத்தில் தான் உணவு உட்கொண்ட விதத்தையும் அவர், பிபிசி தமிழிடம் கூறினார்.
என்ன சாப்பிட்டார்?
”யாராவது வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் தென்னை மரத்தில் இருந்தேன். பிரதேச மக்கள் படகொன்றை கொண்டு வந்தார்கள். படகை நான் இருந்த இடத்துக்கு கொண்டு வர முடியவில்லை. கயிறுகளை வழங்க இளைஞர்கள் நீந்தி முயற்சி செய்தார்கள். ஆனால் முடியவில்லை.” என்றார்.
மேலும் பேசிய அவர், “ஒரு புறத்தில் காடு, வாழைமரங்கள், பாக்கு மரங்கள் இருந்தன. நான் அங்கு அடித்து சென்றிருந்தால் இறந்திருப்பேன். சுனாமி வந்ததை போன்று ஒரே சந்தர்ப்பத்தில் நீர் சடுதியாக அதிகரித்தது.”
மரத்திலிருந்த சந்தர்ப்பத்தில் தான் உணவு உட்கொண்ட விதத்தையும் அவர் கூறினார்.
”என்ன சாப்பிடுவது? சாப்பிடாமல் இருந்தேன். ஒரு கட்டத்தில் பசி பொறுக்க முடியாமல் இளநீர் ஒன்றை அருந்தினேன். மீண்டும் இளநீரை குடித்தேன். அடுத்த நாள் வரை உண்பதற்கு ஒன்றும் இல்லை. இரவு முழுக்க அங்கேயே கழித்தேன். காலை வரை தொடர்ச்சியாக மழை பெய்தது. ஒரு நொடி கூட மழை விடவில்லை. அந்த மழையில் இளநீரை அருந்திக் கொண்டே இருந்தேன்.” என அவர் குறிப்பிட்டார்.

‘மரம் முறிந்து விழும் அளவுக்கு காற்று’
”யாராவது வந்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தேன். அருகில் வந்திருந்தால் பாய்ந்து படகை பிடித்துக்கொண்டிருப்பேன். படகால் வர முடியவில்லை. வருவார்கள் என்று இரவு வரை பார்த்துக்கொண்டிருந்தேன். வரவில்லை. மனதை உறுதியாக வைத்துக்கொண்டு அப்படியே இருந்தேன். மரம் சரிந்தால் பாய்ந்து நீந்திச் செல்லும் எண்ணத்துடன் தயாராகவே இருந்தேன்.” என அவர் கூறினார்.
நவம்பர் 28 அன்று விமானப்படையினர் வருகை தந்து தன்னை காப்பாற்றியமை குறித்தும் சம்ஷூதீன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
”என்னை காப்பாற்றுவதற்காகவே வருகின்றார்கள் என்று நான் அறிந்துகொண்டேன். நான் எழுந்து நின்று அவர்களுக்கு கைகளை காட்டினேன். ‘கொஞ்சம் இருங்கள்’ என்று கூறி, இரண்டு தடவைகள் சுற்றினார்கள். தென்னை மரம் முறிந்து விழும் அளவுக்கு காற்று வந்தது. என்னால் இருக்க முடியவில்லை. நான் பிடித்துக்கொண்டிருந்தேன்.” என அவர் தெரிவித்தார்.
‘மீண்டு வருவேன்’
மேலும் பேசிய அவர், “கடவுள் புண்ணியத்தில் என்னை காப்பாற்றினார்கள். எனது உயிரை காப்பாற்றியமைக்காக அவர்களுக்கு புண்ணியம் சேரட்டும்.” என்றார்.
தன்னை மீட்ட பின்னர் அநுராதபுரத்திற்கு அழைத்து செல்ல முயன்றதாகவும் அவர் கூறினார்.
“குளிராக இருந்தது. கை, கால்கள் மரத்துப் போயிருந்தன. இந்த காலத்தில் அங்கும் இங்கும் சென்று வர முடியாது என்று சொன்னேன். அதன் பின்னர் கலாவௌ பகுதியில் இறக்கினார்கள். போலீஸாரினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்” என அவர் கூறினார்.
விவசாயத்தில் ஈடுபடும் சம்ஷூதீன், தன் அனைத்து விளை நிலங்களும் சேதமடைந்துள்ளன என்று கூறினார். எவ்வாறேனும், ”நான் மீண்டு வருவேன்” என அவர் தெரிவித்தார்.





