இயற்கைக்கு மாறான உறவு: கணவருக்கு 9 ஆண்டு சிறை!

-அலோக் பிரகாஷ் மேனெக்கின்-

Download Couples Love Husband Royalty-Free Stock Illustration Image - Pixabay

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள விரைவு நீதிமன்றம், தனது மனைவியுடன் பலவந்தமாக இயற்கைக்கு மாறான உறவு கொண்ட கணவருக்கு ஒன்பது ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூபாய் 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இது தவிர, மனைவியை அடித்து துன்புறுத்தியதற்காக கணவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. துர்க் நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, கணவர் நிமிஷ் அகர்வால் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருமண உறவில் வல்லுறவு மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் செயல்கள் குறித்து நாட்டில் விவாதம் நடைபெற்று வரும் வேளையில், சனிக்கிழமை இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவு

திங்களன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு, இந்திய நீதித்துறை சட்டம் உட்பட மூன்று மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார். இந்த புதிய இந்திய நீதிச் சட்டத்தில், இயற்கைக்கு மாறான பாலியல் செயல் குறித்த 377ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் நீதிமன்றம்

நடந்தது என்ன?

கணவர் மற்றும் பாதிக்கப்பட்ட மனைவி, இருவரது குடும்பங்களும் பெரிய அளவிலான வணிகத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த தீர்ப்பிற்குப் பிறகு பேசிய பாதிக்கப்பட்ட பெண், “நான் எல்லா வகையிலும் சித்ரவதை செய்யப்பட்டேன். மனரீதியாக, உடல் ரீதியாக, சமூக ரீதியாக, நிதி ரீதியாக.

இயற்கைக்கு மாறான பாலியல் செயல்கள் குறித்து புகாரளிக்கும் சில பெண்கள் தான் தயங்காமல், தைரியமாக வெளியே வருகிறார்கள் என்று நம்புகிறேன். அதே நேரத்தில் மற்ற பெண்கள் அச்சம் காரணமாக தயங்குகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் முன் வந்து தங்கள் உரிமைகளுக்காக குரல் எழுப்ப வேண்டும்” என்கிறார்.

நீங்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, இயற்கைக்கு மாறான உடலுறவு அல்லது உடல் ரீதியாக துன்புறுத்துவது அல்லது வரதட்சணை கொடுமை போன்ற வழக்குகளில் சட்டம் உங்களுக்கு உதவும் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “உங்கள் மனமோ, உடலோ புண்பட்டுள்ளதா என்பதை சமூகத்திடம் கூற வேண்டும், நீங்கள் குரல் எழுப்ப வேண்டும். சமூகமும் சட்டமும் இப்போது மிகவும் முன்னேறிவிட்டது” என்றார்.

“கடந்த பல ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் கஷ்டங்களை யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது” என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் வயதான தந்தை பிபிசியிடம் கூறினார்.

சத்தீஸ்கர்: இயற்கைக்கு மாறான பாலியல் செயல்கள் குறித்த வழக்கு

வரதட்சணை கொடுமை

அவர் தொடர்ந்து கூறியது, “நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து நான் என்ன கருத்து கூற வேண்டும்? நான் அதை தண்டனை அல்லது நீதி என்று கூட சொல்ல மாட்டேன். எனக்கு வயது 70க்கு மேல். என் மனைவி பக்கவாதத்தால் முடங்கிவிட்டாள். ஒட்டுமொத்த குடும்பமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக அவதிப்பட்ட எங்கள் குடும்பம், நீதிமன்றத்தின் இந்த முடிவைப் பற்றி நாங்கள் என்ன சொல்ல முடியும்” என்கிறார்.

வழக்கறிஞர் நீரஜ் சவுபே கூறுகையில், “இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமியார் மற்றும் மாமனார் ஆகியோருக்கும் 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாதிக்கப்பட்ட பெண்ணின் நாத்தனாருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது” என்றார்.

இவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு, பாதிக்கப்பட்ட பெண்ணை கொடுமைப்படுத்தியது என்ற குற்றச்சாட்டுடன் தொடர்புடையது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்படி, நிமிஷ் அகர்வால் ஜனவரி 16, 2007 அன்று துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகளை திருமணம் செய்து கொண்டார்.

நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, நிமிஷும் அவரது தந்தையும் வணிகத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பெண் வீட்டாரிடம் அதிக பணம் கேட்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு இந்தப் போக்கு மேலும் அதிகரித்தது.

இயற்கைக்கு மாறான பாலியல் உறவு

சத்தீஸ்கர்: இயற்கைக்கு மாறான பாலியல் செயல்கள் குறித்த வழக்கு

நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தனது தந்தை 3 கோடியே 5 லட்சம் ரூபாய் கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகிறார்.

ஆனால் நிமிஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூபாய் 10 கோடி மற்றும் பிஎம்டபிள்யூ கார் வேண்டுமென்ற கோரிக்கையில் பிடிவாதமாக இருந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மனைவியின் மீதான தாக்குதல் தொடங்கியது. நிமிஷ் அகர்வாலின் தந்தை, தாய் மற்றும் சகோதரியும் அந்த பெண்ணைத் தாக்கியுள்ளனர்.

2011ஆம் ஆண்டு தான் கர்ப்பமாகி, வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்று தெரிய வந்தபோது, ​​கருவை கலைக்குமாறு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வற்புறுத்தியதாகவும், ஆனால் தான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அந்த பெண் கூறுகிறார்.

“மகள் பிறந்த பிறகு, தன்னைத் தாக்க மற்றொரு காரணம் அவர்களுக்கு கிடைத்தது” என்கிறார் அவர்.

இதற்கு பின்னர் தான் கணவர், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ளத் தொடங்கியுள்ளார். அந்த சமயத்தில் தனது கணவர் அதிக ஆபாச படங்களை பார்த்ததாகவும், அந்த வீடியோக்களில் இருப்பது போல செய்ய வற்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறுகிறார்.

நிமிஷ் அகர்வால் தரப்பு வாதம் என்ன?

சத்தீஸ்கர்: இயற்கைக்கு மாறான பாலியல் செயல்கள் குறித்த வழக்கு

மே 2016இல், பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர், மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறை மற்றும் நீதிமன்ற நடவடிக்கையைத் தவிர, சமூகக் கூட்டங்களிலும் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

இருப்பினும், நிமிஷ் அகர்வால் மற்றும் அவரது குடும்பத்தினரின் வழக்கறிஞர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிமிஷ் குடும்பத்தை துன்புறுத்தும் நோக்கில் புனையப்பட்டவை என்றும் அவற்றில் உண்மையில்லை என்றும் வாதிட்டனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இறுதியாக சனிக்கிழமையன்று, சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் துர்க் விரைவு நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது.

குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 377இன் கீழ் நிமிஷ் அகர்வாலுக்கு ஒன்பது ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. மேலும், அவருக்கு 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமண பந்தத்தில் வல்லுறவு, இயற்கைக்கு மாறான உடலுறவு – இந்திய சட்டம் என்ன சொல்கிறது?

சத்தீஸ்கர்: இயற்கைக்கு மாறான பாலியல் செயல்கள் குறித்த வழக்கு

வல்லுநர்கள் கூறுவது என்னவென்றால், “இந்த முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து சமூகத்தில் ஒரு புரிதல் உருவாகும். இதுபோன்ற தலைப்புகள் அரிதாகவே விவாதிக்கப்படுகின்றன.”

சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திவேஷ் குமார் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இன்னும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இத்தகைய தீர்ப்புகள் இந்தப் பிரச்னைகள் குறித்த சமூகப் புரிதலையும் வளர்க்கின்றன” என்கிறார்.

மேலும் பேசிய திவேஷ், “இந்தியாவில் திருமண உறவில் வன்புணர்வு, அதாவது மனைவியுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்வது தொடர்பான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவை தடை செய்யப்பட்ட விஷயங்களாகக் கருதப்படுகின்றன எனவே சமூகத்தில் இதைப் பற்றி அதிகளவில் விவாதிப்பதில்லை” என்றார்.

இந்திய தண்டனைச் சட்டம், 1860 பிரிவு 375, பாலியல் வல்லுறவை வரையறுத்து, அதைக் குற்றமாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றத்திற்கு 376வது பிரிவின் கீழ் தண்டனை வழங்குவதற்கான நடைமுறை உள்ளது. அதேபோல், இயற்கைக்கு மாறான பாலியல் செயல் பிரிவு 377இல் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனால் 375 பிரிவின் விதிவிலக்கு 2இன் படி, ஒரு ஆண் தனது 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மனைவியுடன் அவளது அனுமதியின்றி உடல் ரீதியான உறவு வைத்திருந்தால், அது பாலியல் வன்புணர்வு என்று அழைக்கப்படாது. இருப்பினும் 2017ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் பெண்களின் வயது வரம்பை 15 வயதிலிருந்து 17ஆக உயர்த்தியது.

இந்திய தண்டனைச் சட்டம் 375வது பிரிவின் இந்த விதிவிலக்கு 2க்கு எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

புதிய சட்டத்தில் 377 போன்ற ஒரு பிரிவு இல்லை

சத்தீஸ்கர்: இயற்கைக்கு மாறான பாலியல் செயல்கள் குறித்த வழக்கு

வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் பிரியங்கா சுக்லா

உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரியங்கா சுக்லா, துர்க் விரைவு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மற்ற அம்சத்தைப் பற்றி பேசுகையில், “திங்களன்று, இந்திய தண்டனைச் சட்டத்தை மாற்றுவதற்கான இந்திய நீதிச் சட்டத்தின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். அதில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 பிரிவைப் போன்ற எந்த விதியும் இல்லை.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377இன் படி, ஒருவர் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டால் அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

பிரியங்கா சுக்லா கூறும்போது, ​​“2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த பிரிவை கிட்டத்தட்ட ரத்து செய்தது. வயது வந்தோருக்கு இடையேயான பரஸ்பர சம்மதத்துடன் கூடிய உடலுறவு குற்றமாகக் கருதப்படாது என்றும், அவ்வாறு கருதப்பட்டால் அது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சமத்துவத்தை மீறுவதாக இருக்கும். மேலும் பேச்சுரிமை மற்றும் பிற அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் உச்சநீதிமன்றம் கூறியது” என்கிறார்.

377வது பிரிவை கணவருக்கு எதிராக பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் நிலுவையில் உள்ள நேரத்தில் துர்க் நீதிமன்றத்தின் இந்த முடிவு வந்துள்ளது என்று பிரியங்கா கூறுகிறார்.

இது தவிர, அதே மாதத்தில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா பெஞ்ச், இதேபோன்ற வழக்கில், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரித்து, ‘இயற்கைக்கு மாறான குற்றங்களுக்கு’ இடமில்லை என்று கூறியது. அதாவது திருமண உறவில் பிரிவு 377க்கு இடமில்லை என.

‘கணவன்-மனைவி இடையேயான பாலுறவுக்கு இடையூறு ஏற்படுத்த முடியாது’

சத்தீஸ்கர்: இயற்கைக்கு மாறான பாலியல் செயல்கள் குறித்த வழக்கு

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான மத்தியப் பிரதேசத்தின் அந்த குறிப்பிட்ட தீர்ப்பில், “கணவன்-மனைவிக்கு இடையேயான திருமண உறவில் அன்பு, நெருக்கம், இரக்கம் மற்றும் தியாகம் போன்றவை அடங்கும்” என்று நீதிமன்றம் கூறியது.

மேலும், “கணவன்-மனைவியின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது கடினம் என்றாலும், பாலியல் இன்பம் என்பது அவர்களுக்கிடையே இருக்கும் பிணைப்பின் ஒருங்கிணைந்த அம்சமாகும்” என்று கூறியது.

“கணவன்-மனைவி இடையேயான பாலுறவுக்கு இடையூறு ஏற்படுத்த முடியாது. இதனால், 375வது பிரிவின் திருத்தப்பட்ட வரையறையின்படி, திருமண உறவில் பிரிவு 377இன் தொடர்பான குற்றத்திற்கு இடமில்லை என்ற முடிவுக்கு வருகிறோம்.” என்று நீதிமன்றம் கூறியது.

பிரியங்கா கூறும்போது, ​​”திருமண உறவில் வன்புணர்வு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. அதேபோல், இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவு தொடர்பான மனுக்களும் நிலுவையில் உள்ளன”

“குடியரசுத் தலைவர் திங்கட்கிழமை கையெழுத்திட்ட 3 மசோதாக்களில், இயற்கைக்கு மாறான பாலியல் செயல்கள் தொடர்பாக எந்த ஒரு மசோதாவும் இல்லை. வெளிப்படையாக பல சிக்கல்கள் இதில் உள்ளன. இந்த பிரச்சினைகள் குறித்து தெளிவான ஒரு புரிதலை உருவாக்க நாம் மேலும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்” என்கிறார்.

Previous Story

புத்தாண்டில் வருகின்றது அதிரடியான கூட்டணிகள்!

Next Story

வாராந்த அரசியல் 31.12.2023