பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் கிளம்பின. இந்த நிலையில் இம்ரான் கானை சிறையில் சந்தித்த அவரது சகோதரி உஸ்மா கான், ‘இம்ரான் கான் நலமுடன் உள்ளதாக’ கூறினார். மேலும் அவர் மன ரீதியாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்” என்று கூறினார்.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக கடந்த 2018 முதல் 2022 வரை பதவி வகித்தவர் இம்ரான் கான். அவரது அரசுக்கு கூட்டணிக் கட்சிகளே திடீரென ஆதரவை விலக்கிக் கொண்டதால் அப்போது இம்ரான் கானின் ஆட்சி கலைக்கப்பட்டது.

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை
இதையடுத்து அமைந்த ஷெபாஸ் ஷெரீப் அரசு இம்ரான் கானுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தது. இம்ரான் கான் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இம்ரான் கான் கடந்த 2023ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அதுமட்டும் இன்றி, பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, 2023 முதலே இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் நிலை குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு செய்திகள் பரவின. அதாவது, இம்ரான் கான் உயிரிழந்துவிட்டதாக வதந்திகள் கிளம்பின.
இம்ரான் கான் எப்படி இருக்கிறார்?
இதனால், பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறையில் வைத்து இம்ரான் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் ரகசியமான முறையில் சிறையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.
இது சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றது. எனினும், இம்ரான் கான் நலமாக இருப்பதாக அவர் அடைக்கப்பட்டுள்ள சிறை நிர்வாகம் கூறியது. ஆனாலும் கடந்த ஒருவாரமாக இம்ரான் கானை சந்திக்க யாரும் அனுமதி அளிக்க அடிலா சிறை நிர்வாகம் மறுத்தது.
இந்த நிலையில்தான், இம்ரான் கானின் சகோதரி உஸ்மா கான் இன்று ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறைச்சாலைக்கு சென்று இம்ரான் கானை சந்தித்து பேசினார். இம்ரான் கானை சுமார் 225 நிமிடங்கள் வரை உஸ்மா கான் சந்தித்து பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.
இம்ரான் கான் நலமாக இருப்பதாகவும், மிகுந்த உத்வேகத்துடன் இருப்பதாகவும் உஸ்மா கானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின.
சகோதரி உஸ்மா கான் பேட்டி
அதே நேரத்தில், சிறையில் தனக்கு மன ரீதியாக துன்புறுத்தல் ஏற்படுத்தப்படுவதாகவும் இதற்கு ராணுவ தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் பொறுப்பு என்றும் இம்ரான் கான் கூறியதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இம்ரான் கான் சகோதரி உஸ்மா கான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இம்ரான் கான் நலமாக உள்ளார். அவரது உடல் நலமும் நல்ல நிலையில் உள்ளது. அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மன ரீதியாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்” என்று கூறினார்.
உச்சக்கட்ட பாதுகாப்பு
இதற்கிடையே, இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சியினர் இன்று போராட்டம் அறிவித்ததால், அவர் அடைக்கப்பட்டுள்ள ராவல்பிண்டி சிறையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 144 தடை உத்தரவும் போடப்பட்டது.
அடிலா சிறைச்சாலை அருகே பாகிஸ்தான் காவல் அதிகாரிகள் 8 பேரின் வீடுகள் இருந்ததால், அங்கு உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. உள்ளூர் வாசிகள் அடையாள அட்டை காட்டிய பிறகே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக, இம்ரான் மகன் காசிம் கான், தந்தை உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை அரசு உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து இருந்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருந்ததாவது:- “இம்ரான் கான் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம் எங்களுக்கு வேண்டும்” என்று கூறியிருந்தார்.





