இன நல்லிணக்கம்

இன நல்லிணக்கம் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னர் மனிதனைப் பற்றித் தெரிந்து கொள்ளவது நல்லது என்று கருதுகின்றோம். அந்த வகையில் தன்னைப் பெற்றறெடுத்த தாய் தந்தையுடன் சில விடயங்களில் பிள்ளைகளுக்கு முரண்பாடு  ஏற்பட்டு விடுகின்றது. அதே போன்று உடன் பிறந்த உறவுகளுக்கு மத்தியிலும் இந்த முரண்பாடு எப்படியோ மனிதனிடத்தில் ஏற்பட்டு விடுகின்றது. இதனை நாம் வாழ்கின்ற சமூகத்தில் அன்றாடம் பார்க்கின்றோம். இது நமது வீடுகளில் கூட தினந்தோரும் சிரிதாகவோ பெரிதாகவோ இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இது முற்றுகின்ற போது மோதல்கள் வெடிக்கின்றன.

குடும்பத்துக்கு அப்பால் இது நகர்கின்ற போது அங்கே இனம் மதம் குலம் சாதி பிரதேசம் நாடு என்றெல்லாம் விரிவடைகின்ற போது அங்கு மோதல்கள் அழிவுகள் என்றும் வந்து விடுகின்றன. இவற்றை சமநிலைப்படுத்த வேண்டியது சமூக ரீதியிலும்  தேச நலனுக்கும் உலக அமைதிக்கும் முக்கியமானதாக அiமைகின்றது. இலங்கை போன்ற இன முரண்பாடுகளினால் அல்லல் படுகின்ற ஒரு நாட்டு மக்களுக்கு இன நல்ணிக்கம் பற்றி அதிகம் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை. இதன் பாதிப்புக்களை நாம் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் உணர்ந்தும் அனுபவித்தும் வந்திருக்கின்றறோம். இப்போது அந்த இன நல்லிணக்கம் பற்றிப் பார்ப்போம்.

இன நல்லிணக்கம்.

மனிதர்கள் தம் சொந்த தேசத்திலேயே ஜாதியால் மதத்தால் மொழியால் வேறுபட்டிருப்பது போல  வாழச் சென்ற தேசங்களில் இனத்தால் வேறுபட்டிருக்கிறார்கள். இந்தியா போன்ற நாடுகளிலே கூட வடநாட்டவர், தென்னாட்டவர் என்று வேற்றுமை கருதப்படுகிறது. ஆனால் இனம், மொழி, மதம் , ஜாதி இவை எவற்றாலும் வேற்றுமை பாராட்டாமல் இன நல்லிணக்கத்தோடு இருக்கும் நாடு சிங்கப்பூர்.

சீனர், தமிழர், மலேய மக்கள் இங்கே இனவேற்றுமை கருதாது ஒற்றுமையாய் வாழ்கின்றார்கள். ஒருவர் இனத்தாலோ, நிறத்தாலோ, மொழியாலோ, மதத்தாலோ, ஜாதியாலோ தங்களை விட ஒரு  மாற்றாவது குறைந்தவர் என்ற எண்ணம் ஏற்படும்போதுதான் இது கலவரங்களையும் , யுத்தங்களையும்  கொண்டு வருகிறது.

கருப்பர் , வெள்ளையர் எனப் பாகுபாடு தற்போதுதான் குறைந்து வருகிறது. மார்ட்டின் லூதர் கிங் தம் மக்கள் சரிசமமாக நடத்தப்படவேண்டும் என சாத்வீக முறையில் போராடியும் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் வந்துள்ளார்கள்.

ரோசா பார்க்ஸ் அம்மையார் தான் முதன் முதலில் ஒரு பேருந்தில் வெள்ளையருக்குச் சமமாக  பயணிக்க அனுமதி மறுக்கப்பட்ட போது அதை எதிர்த்து நின்றவர். இன்று பரவலாக எல்லா நாடுகளிலும் இன மத  ஜாதி நிற துவேஷம் இருக்கிறது.  சிங்கப்பூரில் பல ஜாதி, இன , நிற மக்கள் வாழ்கிறார்கள். வருடம் தோறும் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாவுக்கும் கல்விகற்கவும் வேலை தேடியும் வந்து சேர்கிறார்கள். அனைவரையும் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தாமல் சிங்கப்பூர் அரசு அவர்களை சமமாக நடத்துவதால் அவர்கள் மத, மொழி, இன நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள். சிங்கப்பூரில் தமிழ் மொழிக்காக திரு கோ. சா அவர்கள் மிகுந்த முனைப்போடு பாடுபட்டிருக்கிறார்கள்.

மேலும் ஒருவர் தான் வேலை நிமித்தம் வந்து தங்கியிருக்கும் நாட்டைத் தன் நாடாகக் கருதி அதன் மொழியைக் கற்க வேண்டும் எனவும் அந்த நாட்டின் குடியுரிமை வாங்கி அதைத் தன் சொந்த நாடாகக் கருத வேண்டும் என்பதும் அவர் வலியுறுத்திய கருத்து.

இவ்வாறு தாம் பிழைக்கப் போன ஊரையே தன்னுடைய சொந்த நாடாகக் கருதுவதால் மட்டுமே அங்கே  நிலவக் கூடிய பேதங்களைக் களைய முயற்சி எடுக்க முடியும் என அவர் நம்பினார். அந்த மண்ணின் மீது வாழ்வோருக்கு தம் மண் என்ற நம்பிக்கை பெருகும்போதுதான் அசலான இனத் துவேஷம் மறையும் என அவர் எண்ணினார். அதைச் செயல்படுத்தியும் காட்டினார்.

இதனால் அங்கே வாழ்கின்ற எல்லா மக்களுக்கும் நம் நாடு என்ற எண்ணம் ஏற்பட்டு அங்கே மொழி, இன, நிறத் துவேஷம் இருக்கவில்லை. அதற்கு அங்கே வாழ்ந்த மற்ற மக்களின் எண்ணப் போக்கும் அதேபடி இருந்ததும் ஒரு நல்ல காரணம்.

பொதுவாக இன நல்லிணக்கத்துக்கு  நான்கு செயல்கள் அவசியம்.

ஒன்று மக்கள் அனைவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அவராகவே ஏற்றுக் கொள்ளுதல். சமமாக எண்ணுதல். நம்மை மாதிரியே அவர்களையும் நினைக்கவேண்டும்.

இரண்டாவது மக்களைப் புரிந்து கொள்ளுதல். ( எல்லாரின் ரத்தமும் சிவப்புத்தான், எல்லாரின் கண்ணீரும் உப்புக் கரிக்கும்)

மூன்றாவது அவரது (வழிபாடு, மொழி, உணவுமுறை, கல்வி , பழக்க வழக்கம் ) வித்யாசங்களையும் ஏற்றுக் கொள்ளுதல்.

நம்அம்மா அப்பா கற்பித்தபடி நம் உணவு, கல்வி, வழிபாடு, பழக்க வழக்கம் இருக்கிறது. நம் நண்பர்களின் பெற்றோர் கற்பித்தபடி அவர்களுடைய உணவு, கல்வி , வழிபாடும் பழக்க வழக்கம் இருக்கிறது. இது பழக்கம் தானே தவிர இதில் வித்யாசம் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை. இதை ஏற்றுக் கொள்ளப் பழகினாலே போதும். கருத்து ரீதியாகவும் அடுத்தவர்களை நம் பக்கம் வளைக்க முற்படாமல் அவர்கள் போக்கிலேயே ஏற்றுக் கொள்ள வேண்டும். நாட்டுக்கு நாடும் இது வித்யாசப்படும். அதை எல்லாம் எள்ளி நகையாடாமல் அவர்கள் கலாசாரத்தை அவர்கள் பழக்கத்தை அவர்களை ஏற்பது போலவே ஏற்றுக் கொள்வோம்

நான்காவது அவர்களோடு இணைந்து செயல்படக் கற்பது.

“பல்வேறு நாடு மொழி, இனத்தைச் சேர்ந்த நாம்  இப்படி பல்வேறு பழக்க வழக்கம், செயல்பாடுகள் உள்ள நண்பர்களோடு இணைந்து செயலாற்றவும் , வாழவும் கற்க வேண்டும்”

இந்த உறுதிமொழிகளை எல்லாம் ஒரு மாணவன் எடுத்துக் கொண்டால் எங்குமே இனத் துவேஷம் ஏற்படாது. எங்கும் இன நல்லிணக்கம் நிலவும்.

எந்த ஒரு நிகழ்விலும் எந்த இடத்திலும் துவேஷம் பாராட்டாமல்,  ஏற்றுக் கொண்டு, புரிந்து கொண்டு வித்யாசங்களையும் சமமாய்க் கருதி இணைந்து செயல்பட்டால் இனப் பாகுபாடு ஒழிந்து விடும். இதுவே இன நல்லிணக்கத்திற்கு இட்டுச் செல்லும்.

வசந்தம் தொலைக்காட்சியிலும் சிங்கையைச் சேர்ந்த  பள்ளி மாணாக்கருக்கு இன நல்லிணக்கத்துக்காக இந்த வருடம் ஒரு வண்ணமடிக்கும் நிகழ்வு நடந்தது. தத்தமக்குத் தரப்பட்டுள்ள பானையில் எல்லா மாணவர்களும்  தோன்றியபடி வண்ணம் தீட்டி மகிழ்ந்தனர். அவை கண்காட்சியாக வைக்கப்பட்டன.

இந்த மாதிரி நிகழ்வுகளில் குழந்தைப் பருவத்திலிருந்தே பங்குபெறுவதன் மூலம் எல்லாரையும் சமமாகக் கருதும் மனோநிலை கிடைக்கும். மேலும் ஒருவரின் கலாச்சாரம், பண்பாடு, மனோபாவம் எல்லாம் அந்த ஓவியங்களின் வழி வெளிப்படும். அவை  அந்தக் குழந்தைகளை நல்ல நண்பர்களாக்கி நல்ல விளைவுகளுக்கு இட்டுச் செல்லும்.  எனவே இது போன்ற இன நல்லிணக்க நிகழ்வுகள் தேவை.

அனைவரும் சமம் என்று கருதினாலும் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்று கருதினாலும் இந்தத் தொல்லைகள் ஏற்படாது. வலியவர் எளியவர் மேல் சவாரி செய்வது குறையும் . எத்தனையோ புரட்சிகள், இனப் போராட்டங்கள் , அழிவுகள் கண்டும் மனித இனம் மாற வேண்டும்.

எல்லாருக்கும் எந்தச் சூழ்நிலையிலும்  நாம் அனைவரும் மனித இனமே . அனைவரும் ஒன்றே என எண்ண வேண்டும். . அவர் பிறந்த ஊர் , இடம், மொழி, மதம், இனம் வேறானாலும் அனைவரும் மனிதர்களே நம்மைப் போன்றே அவர்க்கும் என்ற மனித நேயத்தோடு சிந்தித்தால் இன  நல்லிணக்கம் எளிதில் கைகூடும்.

நாம் மேற்சென்ன தகவல்கள் சிங்கப்பூரில் இன நல்லிணக்கத்துக்காக அந்த சமூகம் மேற் கொண்டிருக்கும் முயற்ச்சிகள். இதனால் அங்கு பல்லினங்களும் ஐக்கியமாக வாழ்ந்த வருகின்றார்கள். அரசியல் ரீதியிலான பதவிகள் கூட இன அடிப்படையில் அங்கு பகிரப்பட்டு வருகின்றது தற்போது அங்கு ஜனாதிபதியாக இருப்பவர் ஒரு  முஸ்லிம் பெண் மலே இனத்தைச் சேர்ச்தவர். இது கூட இன நல்லிணக்கத்துக்காக அந்த நாடு மேற் கொண்டிருக்கும் தாரான்மை வாத நடவடிக்கை. அந்த நாட்டு சனத் தெகையில் மலே இனத்தவர் வெரும் 13 சதவீதம் மட்டுமே. இலங்கை போன்ற ஒரு நாட்டில் இது போன்ற ஒரு விட்டுக் கொடுப்பை கற்பனை பண்ணிப் பார்க்க முடியுமா? இதனால் தான் சிங்கப்பூர் அந்த மட்டத்திலும் நாம் இந்த மட்டத்திலும் இருக்கின்றோம். ஆனால் மேடைகளில் பேசுகின்ற போது மட்டும் தமது தலைவர்கள் நாட்டை சிங்கப்பூராக்க மாற்றுவோம் என்றெல்லாம் பேசுகின்றார்கள் இது வாய்வார்த்தை மட்டுமே.

எனவே மனித நேயத்தோடு சிந்திப்போம்.! இன நல்லிணக்கத்தோடு செயல்படுவோம்.!!

அமைதிக்கு 5 அம்சங்கள்

உலகம் ழுழுவதுமே கலாசார கசப்புணர்வு அதிகரித்து வருகிறது. மக்கள் தங்கள் அடையாளத்தையும் உடைமை உணர்வையும் இழந்துவருவதாக அஞ்சுகிறார்கள்.

இந்த அச்சம், மெதுவடையும் உலகப் பொருளியல், அதிகரிக்கும் சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுடன் சேர்ந்து கொண்டுள்ளது. கடும் போக்குடைய தேசியவாதிகளும் அரசியல் வாதிகளும் இத்தகைய பயத்தை இன்னும் ஊதிவிடுகிறார்கள்.

அமெரிக்காவில் இன அடிப்படையிலான உள்நாட்டு பயங்கரவாதச் சம்பவங்களில் பெரும்பாலானவற்றுக்கு வெள்ளை ஆதிக்க இயக்கமே பின்னணியில் இருந்துள்ளதாக அமெரிக்க வேவுத்துறை தெரிவித்தது.

பதினேழு ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரி தேசியவாத கட்சிகளுக்கு ஆதரவு கூடி வருவதாக கடந்த மே மாதம் பிபிசி நியூஸ் அறிவித்தது.

ஆசியாவில் சமய தீவிரவாதிகளால் தூண்டி விடப்படும் அதிக வன்செயல் சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். இலங்கை, மியன்மாரில்  தேசியவாத புத்த பிக்குகள் ஆக்ரோஷமான பேச்சுகள் மூலம் சிறுபான்மை குழுக்களுக்கு எதிராக வன்செயல்களைத் தூண்டிவிடுகிறார்கள்.

ஒருசாரார் நலனை மட்டும் நாடும் அரசியல், இன, சமய, தேசியவாதம் ஆகிய போக்குகளுக்கு சிங்கப்பூர் விதிவிலக்கு அல்ல.

சுதந்திரம் அடைந்தது முதலே சமூக நல்லிணக்கத்துக்குச் செல்லும் பாதைக்கு வழிகாட்டும் ஐந்து கோட்பாடுகளை நாம் சார்ந்து இருந்து வருகிறோம்.

1) இனம், சமயத்தை அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பது

இனம், சமயத்தை அரசியலில் இருந்து ஒதுக்கிவைப்பது முதல் கோட்பாடு.

சமயத் தலைவர்கள் தங்கள் சமயப் பிரசார மேடைகளைப் பயன்படுத்தி அரசியல்  விவகாரங்கள் பற்றிய தங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தவும் அரசியல்வாதிகள் தங்கள் நலன்களுக்காக சமயத்தைப் பயன்படுத்தவும் நம்முடைய சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் தடை போடுகிறது. இதைப் பொறுத்தவரை நாம் மிகவும் உறுதின அணுகுமுறையைக் கையாளுகிறோம்.

2) பல இனத்தன்மையை உறுதிப்படுத்துவது

சீனர், மலாய்க்காரர், இந்தியர், மற்றவர் என்ற நம்முடைய கட்டமைப்பு, இனவாதத்தை நிலையூன்றச் செய்கிறது என்று சிலர் கூறி இருக்கிறார்கள். இந்தக் கட்டமைப்பு தொடர்ந்து ஏற்புடையதாக இருக்கிறது என்றும் இது இன நல்லிணக்கத்தை நிலைநாட்டிவர உதவுகிறது என்றும் நான் நினைக்கிறேன்.

நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளதைபோல், இந்தக் கட்டமைப்பு முற்றிலும் குறை இல்லாத அல்லது சீரிய ஒன்று அல்ல என்றாலும், நம் சமூகத்தில் சிறுபான்மை இனத்தவருக்கு இடம் கொடுப்பதில் ஒருமித்த கவனத்தைச் செலுத்த இது நமக்குத் தொடர்ந்து உதவுகிறது என்றே நான் நினைக்கிறேன்.

3)  பொதுமொழி, சமய சார்பற்ற கல்வி

பொதுவான, நடுநிலைன மொழி ஒன்றை அன்றாடம் புழங்கி அதன் வழிகவும் அனைவருக்கும் சமயசார்பற்ற தேசிய கல்வியைப் போதிப்பதன் மூலமாகவும் எல்லா இன சமூகங்களையும் பிணைப்பது மூன்றாவது கோட்பாடு.

நான்கு அதிகாரத்துவ மொழிகள் நமக்கு இருக்கின்றன. இருந்தாலும் ஆங்கிலத்தை நாம் ஐக்கியத்துக்கான பொது மொழிகக் கொண்டு இருக்கிறோம், பள்ளிக்கூடங்களில், நிர்வாகத்தில் நிர்வாக மொழிக அது இருக்கிறது. இத்தகைய ஓர் ஏற்பாட்டை நாம் கொண்டு இருப்பதால் மூன்று முக்கிய இன மொழிகளில் எதற்கும் அனுகூலம் என்பது இல்லை.

4) அனைவருக்கும் சம வாய்ப்பு

இனம், சமயம் எப்படி இருந்தாலும் சிங்கப்பூரர் ஒவ்வொருவருக்கும் சரிசம வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். இதுவே நான்காவது கோட்பாடு.

5) சட்டத்துக்கு முன் அனைவரும் சரிசமம்

சிங்கப்பூரில் சட்டத்துக்கு முன் அனைவரும் சரிசமம். இதுவே நமது ஐந்தாவது கோட்பாடு. இது, சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையைப் பலப்படுத்த உதவி இருக்கிறது. சட்டங்களை நியாயமாக அமல்படுத்துவதில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை ஏற்பட இது உதவுகிறது. யாராவது வரம்பு மீறினால் அவரது சமயம், இனம் எப்படி இருந்தாலும் அவருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை உண்டு.

நாம் தொடர்ந்து நல்லிணக்கத்துடன் வாழ விரும்பினால், இன, சமய விவகாரங்களை மிகவும் கவனமாக நாம் கையாள வேண்டும். பிரிவினைவாத, தனிமைப்படுத்தக்கூடிய குறுகிய உணர்வுகளைக் குறைக்க முயல வேண்டும்.

இந்தியாவில் இந்துவான ஒருவர்தான் தனக்குச் சாப்பாடு கொண்டு வந்து தரவேண்டும் என்று இந்துவான வாடிக்கையாளர் ஒருவர் ஓர் உணவு விநியோக நிறுவனத்திடம் கோரியதாக அண்மையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

இத்தகைய கண்ணோட்டங்கள் இங்கு வேர் ஊன்ற நாம் அனுமதிக்கக்கூடாது. அண்மையில் சிங்கப்பூரில் உள்ள முக்கிய சமயங்கள் எல்லாம் சமய நல்லிணக்கத்தைப் பாதுகாக்க உறுதி தெரிவித்து அறிக்கை வெளியிட்டன. இது மிகவும் ஆற்றல்மிக்க அறிக்கை.

சிங்கப்பூர் போன்ற எந்த ஒரு பல இன சமூகத்திலும் இனவாதம் என்பது இருக்கும். அரசாங்க ஆதரவு பெற்ற, நிலைபெற்ற இனவாதம் நம்மிடம் இல்லை என்பதுதான் இதில் முக்கியம்.

இன சிறுபான்மையினரிடத்தில் சகிப்புத் தன்மை எப்படி இருக்கிறது என்பதை 140க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆராய்ந்தபோது சிங்கப்பூர் முதல் இடத்தில் இருப்பதாக 2016ல் ‘கேலப் உலக ஆய்வு’ தெரிவித்தது.

தனிப்பட்ட சிங்கப்பூரர்களைப் பொறுத்தவரை, எப்போதாவது அவர்கள் இனவாத பிரச்சினையைச் சந்தித்தாலும்கூட, நமது அன்றாட வாழ்வின் உண்மை நடைமுறையில் இந்தச் சகிப்புத்தன்மை பிரதிபலிக்கப்படுகிறது. சமூக நல்லிணக்கத்துக்கு இட்டுச் செல்லும் பாதையில் நமக்கு வழிகாட்டும் இந்த ஐந்து கோட்பாடுகளை நாளுக்கு நாள் தொடர்ந்து நாம் பின்பற்றினால், பொதுவான வாய்ப்புகளை விரிவுபடுத்த கடுமைகப்பாடுபட்டால்,  நாம் இன்னும் சிறந்த, இன்னும் நல்லிணக்கம் மிகுந்த சமூகமாகத் திகழ்வோம்.

மத நல்லிணக்கம்

  1. முன்னுரை
  2. மதங்கள் ஏன் தோன்றின
  3. மனிதத்தின் பின்பே மதங்கள்
  4. மதங்கள் கூறும் விழுமியங்கள்
  5. மதவாதமுடையோரால் உருவாகும் அனர்த்தங்கள்
  6. முடிவுரை

முன்னுரை

உலகம் காடுகளில் தோன்றிய காலத்தில் மனிதர்கள் இயல்பாக வாழ்ந்து
வந்தார்கள். ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள்.

நாளடைவில் மனிதன் நாகரீகமடைய ஆரம்பித்தான். தனக்கென மொழிகளையும் பாசைகளையும் கற்று கொண்ட மனிதன் அதிகாரங்களுக்காக போட்டியிட ஆரம்பித்தான்.

ஆசை எனும் மோகத்தால் தான் அடைய விரும்பியவற்றை அடைந்து கொள்ள சக மனிதர்களை கொல்லவும் துணிந்தான். மனிதநேயத்தை இழந்து மிருகமாக மாற ஆரம்பித்தான்.

உலகத்தில் மக்கள் நெறி பிறழ்வாக வாழும் காலத்தில் தான் மதங்கள் தோன்றின. மக்களை வழிப்படுத்தவும் நெறிப்படுத்தவும் யாவற்றிற்கும் மேலான சக்தியாக கடவுளை உருவகித்து மனிதனை கட்டுக்குள் வைப்பதே மதங்களின் நோக்கமாகவிருந்தது.

இக்கட்டுரையில் மதங்கள் தோன்றியதன் காரணம், மதங்கள் கூறும் விழுமியங்கள், மதநல்லிணக்கமும் அது இல்லாமல் போனால் உருவாகும் அனர்த்தங்கள் தொடர்பாக நோக்கலாம்.

மதங்கள் ஏன் தோன்றின

மனிதனை மனிதனாக்கி நல்வழிப்படுத்துதல் எனும் உயர்ந்த நோக்கில் உருவானவையே மதங்கள் ஆகும்.

அவனது தீய எண்ணங்களை வேரறுக்க கடவுள் எனும் பேராற்றல் உண்டென்பதை மனிதகுலம் நம்புகின்றது.

மனிதன் வாழும் இந்த உலகம் பஞ்சபூதங்கள் இவை அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டது என மனிதர்கள் நம்புகின்றார்கள்.

உலகத்தில் பலகோடி மக்கள் வாழ்கின்றனர். மனிதர்கள் தனிப்பட்ட குணாதிசயங்கள், வெவ்வேறான எண்ணப்பாங்குகள் விருப்பு வெறுப்புக்களை உடையவர்கள் இதில் நல்லவர்களும் தீயவர்களும் அடக்கம்.

இங்கு மனிதர்கள் மனிதர்களை மதித்து நடவாது போகின்ற பிறழ்வு நிலையில் தான் மதங்கள் இறைவன் எனும் ஆற்றல் கொண்டு மனிதர்களை வழிப்படுத்த துவங்கின எனலாம்.

இங்கே இந்து மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம், யூத மதம் மற்றும் பௌத்த மதம் என பலவகையான மதங்கள் இருக்கின்றன.

மனிதத்தின் பின்பே மதங்கள்

மதங்கள் பல தோன்றி மனிதர்களை வேறுபடுத்துவது இங்கு நோக்கமல்ல.

ஒவ்வொரு மனிதர்களும் வெவ்வேறான மதங்களை பின்பற்றுகிறார்கள். வேறுபட்ட கலாச்சாரங்களையும் பழக்கவழக்கங்களையும் கொண்டு காணப்படுகிறார்கள்.

இருப்பினும் அவர்கள் சக மனிதர்களே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதனையே கணியன் பூங்குன்றனார் “யாதுமூரே யாவரும் கேளீர்” என்று பாடுகின்றார்.

இங்கே மனிதர்களுக்கிடையே இனம், மதம், மொழி, சாதி என பல வேறுபாடுகளை நாம் ஒழத்துவிட வேண்டும். மனிதநேயம் என்ற ஒன்றினால் பிறமனிதர்களோடு அன்பு பாரட்டுதல் தான் சிறப்பானது.

மனிதர்களிடையே வேற்றுமையை உருவாக்கி ஒரு சிலர் அதில் குளிர்காய்வார்கள்.

பிறப்பினால் இங்கே அனைவரும் சமம் என்ற உண்மையை நாம் புரிந்துகொண்டு பிரிவினைகளை விடுத்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதனை தான் மதங்களும் கற்பிக்கின்றன.

மதங்கள் கூறும் விழுமியங்கள்

அனைத்து மதங்களும் இங்கே அன்பை தான் போதிக்கின்றன.

அன்பே சிவம்” என்கிறது இந்து சமயம். பிற மனிதர்கள் மீதும் உயிர்கள் மீதும் கருணைகொள்ள வேண்டும் என்கிறது. ஏழைகளுக்கும் இல்லாதவருக்கும் உணவழித்தல் இறைவனுக்கு செய்யும் தொண்டு என்று இந்து மதம் போதிக்கின்றது.

உன்னை போல் அடுத்தவனையும் நேசிக்க வேண்டும் என்கிறார் “இயேசு கிறிஸ்து” கிறிஸ்தவ மதமும் பிறர் மீது கொள்ளும் உயர்ந்த கருணையே இறைவனுக்கு செய்யும் உயர்ந்த சேவை என்று போதிக்கிறது. அன்பு, கருணை, சகிப்பு, ஒற்றுமை போன்ற விடயங்களை கிறிஸ்தவ மதம் கற்பிக்கிறது.

அது போல பௌத்த மதத்தின் கௌதம புத்தர் அன்பையும் அமைதியையும் கொண்டு வாழ்பவனே பௌத்தன் என்கிறார்.

அது போல இஸ்லாமின் புனித நபி அவர்கள் மனிதம் காத்து வாழ்வதுவே இஸ்லாமியர்களின் உயர்ந்த அறம் என்கிறார்.

இவ்வாறு உலகின் அனைத்து மதங்களும் நல்வழியை தான் போதிக்கின்றது.

ஆனால் அதனை புரிந்து கொள்ளாத சில மனிதமிருகங்கள் மதங்களின் பெயரில் பிரிவினைகளை உண்டாக்கி மோதல்களையும் பிரச்சனைகளையும் உலகில் தோற்றுவிப்பது கண்ணடனத்துக்குரியது.

மதவாதம் உடையோரால் நிகழும் அனர்த்தங்கள்

மதங்களை சரியாக புரிந்து கொள்ளாத சில மனிதநேயமற்ற மனிதர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் அவர்களை நம்பியுள்ள மக்களையும் நாட்டையும் பிழவுபடுத்துகின்றனர்.

மதவாதத்தை விதைத்து அரசியல் இலாபம் தேடுவதும். தீவிரவாத அமைப்புக்களை உருவாக்குதல் போன்ற இழி செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இது போன்ற நிகழ்வுகள் உலகத்தின் அமைதியை இன்று கெடுத்து கொண்டிருக்கின்றன. மனிதர்களுக்கிடையே மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை இருக்குமானால் இவ்வுலகம் அமைதி பெறும்.

முடிவுரை

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்பது நம் முன்னோரின் பொன்மொழி. நாம் மனிதர்கள் என்ற உயர்திணைக்குரியவர்கள்.

சாதாரண ஜந்தறிவு விலங்குகள் கூட ஒற்றுமையாக தமது கூட்டங்களோடு வாழ்வதை நாம் அவதானித்திருப்போம்.

ஆனால் இந்த மனிதர்கள் மாத்திரம் ஏன் இவ்வாறு முட்டாள்கள் போல சக மனிதர்களையே கொன்றும் கொடுமைப்படுத்தியும் வாழ்கிறார்கள்.

இது மாறவேண்டும் மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவை மனிதம் என்ற ஒன்றை தான் போதிக்கின்றன. ஆகவே மனிதம் பேணினால் இவ்வுலகம் அன்பில் திழைக்கும் என்பது திண்ணம்.

Previous Story

ஆபாச சாட்: உலக அளவில் நடக்கும் மோசடி! பின்னணி....

Next Story

சப்ரி மிரட்டலும் உருட்டலும்!