இந்த அரசுக்கான உரிமையாளர்கள் ஜேவிபி-என்பிபியா?

நஜீப் பின் கபூர்

நன்றி:09.08.2026 ஞாயிறு தினக்குரல்

JVP/NPP government and social media – The Island

இந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வது ஜேவிபிதான்.! இங்கு என்பிபி என்பது வெரும் சுலோகம் மட்டுமே என்ற ஒரு கதை இருப்பதை அரசியல் வட்டாரங்களில் அனைவரும் அறிந்திருக்கின்றனர். ஆனால் நாம் இங்கு பார்க்கப் போவது அல்லது கேள்வி எழுப்பப்போவது ஒட்டு மொத்தமாக இந்த அரசு ஜேவிபி-என்பிபி. காரர்களுடையது தானா என்பது.? இதiனை எந்தளவுக்கு நாம் நிருவி இருக்கின்றோம்- உறுதிப்படுத்தி இருக்கின்றோம் என்பதனை நமது வாசகர்கள்தான் முடிவு செய்து கொள்ளட்டும்.

சில வாரங்களுக்கு முன்னர் நாம் எழுதி இருந்த ஒரு கட்டுரையில் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு அவர்கள் தேர்தர்தல்களில் பெற்றுக் கொண்ட வாக்குகள், மற்றும் கட்சிகளின் எழுர்ச்சி வீழ்ச்சி பலம் பலயீனங்கள் பற்றிய தகவல்களை விரிவாகச் சொல்லி இருந்தோம். அவற்றை மீண்டும் இங்கு பதிய விரும்பவில்லை. அவை நமது வாசகர்களுக்கு நினைவில் இருக்கும்.

1982 இருந்து 2024 ஜனாதிபதித் தேர்தல் வரையிலும் ஜேவிபி-என்பிபி. செல்வாக்கு பற்றிய புள்ளி விபரங்களைப் பார்த்தால் இந்த நாற்பத்து இரண்டு (42) வருட காலத்தில்  ஜேவிபி-என்பிபி  பெரியளவில் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. சில சந்தர்ப்பங்களில் அது 1982 ஜனாதிபதித் தேர்தலில் விஜேவீர பெற்ற வாக்குகளை விட வீழ்ச்சி கண்டிருந்தது என்பதை நாம் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரிய வந்தது.  சராசரியாக இந்த ஆதரவு வெரும் நான்கு சதவீதம் என்று அளவுக்கு மேல் செல்லவில்லை. என்பதனை நாம் எமது கட்டுரையில் நிருவி இருந்தோம்.

அப்படி இருக்க 2024 ஜனாதிபதி தேர்தலில் என்பிபி. வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க 42.31 சதவீத வாக்குகளைப் பெற்றபோது இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கைக்குச் செல்ல வேண்டி ஏற்பட்டது. இது நமது ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முதல் பதிவாகவும் அமைந்தது. சஜித்தும் ரணிலும் தேர்தலில் ஓரணியில் இணைந்து போட்டியிட்டிருந்தால் சஜித் ஜனாதிபதியாக வந்திருப்பார் என்று சிலர் பேசுகின்றார்கள். அது அவர்களின் அரசியல் அறியாமை.

2024 ஜனாதிபதித் தேர்தலில் என்பிபி. வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க 42.31. ஐமச. வேட்பாளர் சஜித் 32.72 ரணில் 17.27 சதவீத வாக்குகள். அதன்படி சஜித் ரணில் இணைந்து களத்துக்கு வந்திருந்தால் கூட 49.99 சதவீத வாக்குகள்தான் இந்த சோடிகள் பெற்றிருக்க முடியும். அப்போதும் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டி இருந்திருக்கும். சரி மொட்டு-நாமல் பெற்ற 2.57 சதவீத வாக்குகளையும் இதில் சேர்த்தால் 52.56 சதவீத வாக்குகள். அப்படியாக இருந்தால் இந்த மூன்று சக்திகளும் ஒன்றிணைந்து களத்துக்கு வந்திருந்தால் இன்று சஜித் வெற்றி பெற்றிருப்பார் என்று பேசுவோரும் நாட்டில் இருக்கின்றார்கள்.

இப்படி ஒரு கருத்தை அல்லது கணிப்பை ஒப்பீடு செய்வதே முட்டால்தனமானது என்பதனையும் இங்கு சொல்லி வைக்க வேண்டும். ஒரு வாதத்துக்கு முன்வைக்கலாம், ஆனால் அந்த நேர அரசியல் சூழ்நிலையில் இப்படி கூட்டணிகள் சாத்தியமில்லை. இன்று இப்படி எல்லாம் கணக்குப் போட்டு அனுராவுக்கு எதிரான ஒரு கூட்டணி பற்றிய எண்ணக்கரு எதிரணியினர் மத்தியில் இன்று இருக்கின்றது.

Interview with Sri Lanka's NPP and JVP – Challenge Magazine

அதற்கும் ஒரு முடிச்சுப் போட்டுத்தான்  நாம் இந்தக் கதையை-வாதத்தை நகர்த்திக் கொண்டு செல்கின்றோம். 2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின்படி பொதுத் தேர்தலுக்கு ஆசனங்கள் பகிரப்படுமாக இருந்தால் அனுர- 105 சஜித்- 78 ரணில்- 37 அரியநேந்திரன்- 4 நாமல்- 1  என்று தான் அதற்கான ஆசனங்கள் அமைந்திருக்கும். ஆனால் பின்னர் வந்த பொதுத் தேர்தல் முடிவுகள் எப்படி மாறி அமைந்தது.? ஆளும் என்பிபிக்கு மக்கள் 159 ஆசனங்களை பொதுத் தேர்தலில் கொடுத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் கொடுத்திருந்தனர்.

இதிலிருந்து நாம் என்ன சொல்ல வருகின்றோம் என்றால் எதிரணியினர் 2024 ஜனாதிபதித் தேர்தலில் கற்றுக் கொண்ட பாடங்களில் இருந்தும் அதனைத் தொடர்ந்து வந்த பொதுத் தேர்தலில் ஓரணியில் இவர்கள் இணையவில்லை-இணையவும் முடியாது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கள சூழ்நிலைகளும் மக்களின் உணர்வுகளும்தான் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன என்பது நமது வாதம்.

எனவே கள நிலமைகளும் மக்கள் உணர்வுகளும் எப்போது வேண்டுமானாலும் எப்படியும் மாறலாம். இதனை நாம் ஆளும் என்பிபி.க்கும் ஒரு எச்சரிக்கையாகவும் இங்கு சொல்லி வைக்க விரும்புகின்றோம். இதுதான் நமது கருப் பொருளுக்கு தலைப்பாகவும் இந்தவாரம் அமைகின்றது.

2029 செப்தெம்பரில் வர இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 3 வருடங்களும் ஒரு மாதமும் இருக்கின்றன. எனவே எதிரணியில் இருக்கின்றவர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு கூட்டணிக்கு வர வேண்டிய கட்டயாயம் இங்கு இருக்கின்றது. அப்படியாக இருந்தால் சஜித் நாமல் இணைவுதான் அரசியல் களத்தில் சற்று வலுவான சக்தியாக மாற்ற முடியும். அடுத்து வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐதேக.வும் ரணிலும் செல்லாக் காசாகத்தான் அரசியலில் இருப்பார்கள். தற்போது சஜித் அணிக்கு ஏறக்குறைய இருபது சதவீதமான ஆதரவுதான் மக்கள் மத்தியில் இருக்கின்றது. அதுவும் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளும் இதில் இருக்கின்றன.

நமது ஆய்வுகளின் படி மொட்டு-நாமல் அணிக்கு ஒரு ஏழு சதவீதமான அளவு வாக்குகள்தான் இருக்கின்றன. இந்தப் பின்னணியில் சஜித்-நாமல் கூட்டணி வருகின்றது என்று வைத்துக் கொள்வோம், அதனை மக்கள் எந்தளவு ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் நிறையவே இணக்கப்பாடுகளை விட முரண்பாடுகள்தான் காணப்படுகின்றன.

இன்று நாட்டில் இரண்டாவது பெரிய அரசியல் சக்தியாக இருக்கின்ற சஜித்தின் செல்வாக்கு என்பது இந்த நாட்டில் இருக்கின்ற சிறுபான்மை சமூகங்களின் ஆதரவுதான் முதுகெலும்பாக இருந்து வருகின்றன. ரணிலின் நிலையும் அப்படித்தான் இருந்தது. ஆனால் இன்று ரணில் நமது அரசியலில் காணாமல் போன அல்லது மிகவும் பலயீனப்பட்ட ஒரு சக்தி. அவரால் ஏதுமே பண்ண முடியாது.

President Anura Kumara Dissanayake's trip to Valvettithurai: Sentiments, themes, and issues in Tamil, and Sinhala

ஆனாலும் அவர் பற்றி அவரை சுற்றி இருக்கின்ற சில கையாட்கள் பெரிய பில்ட்அப் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அது வெறும் மாயை என்பது இப்போது உறுதியாக இருக்கின்றது. எதிர் வருகின்ற காலங்களும் அப்படித்தான் அமையும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் அதனைத் தொடர்ந்து வந்த பொதுத் தேர்தல் என்பவற்றில் பெறுபேருகளை ஆராய்கின்ற போது சிறுபான்மை சமூகங்களின்; பெரும்பான்மை ஆதரவை அனுர தரப்பினர் இப்போது பெற்றுவிட்டனர்.

சஜித் தனது தன்னலத்துக்காக ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராகின்ற கனவில் நாமலுக்கு பிரதமர் பதவி என்று ஒரு இணக்கப்பாட்டுக்கு வர அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

அப்போது இன்று சஜித்துடன் இருக்கின்ற சிறுபான்மை கட்சிகள் சஜித்தை தலை மூழ்கி விடுவார்கள். அல்லது சிறுபான்மை சமூகங்கள் தமது தலைமைகளை தலை மூழ்கிவிடும்.

இதற்கு நல்ல ஒரு உதாரணமும் நமக்கு இருக்கின்றது. 2015 ஜனாதிபதித் தேர்தலில் மு.கா. ஹக்கீம் ஒரு தீர்மானத்துக்கு வர பின்னடித்தார். ஆனால் தலைமையை ஓரம்கட்டிவிட்டு சமூகம் அந்த தேர்தலில் மைத்திரியை ஆதரிக்க முடிவெடுத்ததும் தேர்தலில் ராஜபக்ஸாவை ஆதரிக்க இருந்த தனது நிலைப்பாட்டை ஹக்கீம் மாற்றிக் கொண்டார். ஏற்கெனவே ராஜபக்ஸாவுடன் அவர் செய்து கொண்ட கொடுக்கல் வாங்கல்களை மாற்றி பல்டியடிக்க தனித்துவம் பட்டபாடு பற்றி  நிறையவே சுவையான- வினோதமான பல கதைகளும் இதில் இருக்கின்றன.

அதே போன்று வடக்கு கிழக்கில் ஒரு சிங்களத் தலைவருக்கு கிடைத்த உச்ச ஆதரவை இன்று ஜனாதிபதி அனுர பெற்றிருக்கின்றார். சந்திரிக்காவுக்கும் இப்படி ஒரு ஆதரவு இருந்தது. ஆனால் அவர் பதவிக்கு வந்த சில மாதங்களிலே தமிழர்களை ஏமாற்றிவிட்டார். ஆனால்  இன்று ஜனாதிபதி அனுர மீதான செல்வாக்கு தமிழர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதனால் வடக்குக் கிழக்கில் இருக்கின்ற தமிழ் கட்சிகள் திக்கு முக்காடி வருகின்றன.

Tracking the evolution of Tamil sentiment on President Anura Kumara Dissanayake: A study of Facebook comments

அதனை விட ஒரு படி மேலான நிலை இன்று மலையகத்தில் ஜனாதிபதி அனுர மீது ஏற்பட்டிருக்கின்றது. இதனால் அப்பாவி மலையக மக்களின் முதுகில் ஏறி இதுவரை சவாரி செய்த அரசியல்வாதிகள் சமூகத்தின் மத்தியில் இன்று மூக்குடைபட்டு நிற்கின்றார்கள். இதனால் ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகங்களின் ஆதரவை சஜித் இழக்கும் நிலை. அந்த இழப்பை பேரின சிங்கள சமூகம் சஜித்துக்கு ஈடுசெய்யுமா? என்று பார்த்தால் அப்படியான ஒரு நிலை நமது அரசியல் களத்தில் இல்லை.

பொதுவாக மொட்டுக் கட்சி மற்றும் ராஜபக்ஸாக்கள் மீது சிங்கள மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை என்றுதான் நமக்கு அவதானிக்க முடிகின்றது. சமகால அரசியல் நகர்வுகள்- நெருக்கடிகள் பற்றி சிங்கள மக்களுக்கு நல்ல புரிதலும் அறிவும் முதிர்ச்சியும் இருக்கின்றது. எனவே இவர்கள் ராஜபக்ஸாக்களை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வரமுனைவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

அப்படிப்பட்ட ஒரு அரசியல் சக்தியுடன் சஜித் கூட்டணிக்கு போவாராக இருந்தால் உள்ளதும் இல்லாமல் போகும் ஒரு நிலை அவருக்கு ஏற்படும். இதனை சஜித் புரிந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. எனவேதான் இனவாதிகள் வன்முறையாளர்கள் கொள்ளையர் கெலைகாரர்கள் என்று மக்கள் நிராகரித்தவர்களுடன் சஜித் இன்று தோழமைக்கு தயாராகி வருகின்ற ஒரு நிலையையும் நாம் இப்போது அவதானிக்கின்றோம். இது பற்றி தனித்துவத் தலைமைகள் கேள்வி எழுப்பாமல் இருப்பதன் இரகசியம் அவர்களின் நாடாளுமன்ற இருப்புத் தொடர்பான எதிர்பார்ப்புகளாகும்.

அரசுக்கு எச்சரிக்கை!

இது குடிகளின் அரசு!

நாம் என்னதான் தர்க்கங்கள் நியாயங்களை முன்வைத்தாலும் சுனாமி தித்வா போல அசாதாரண நிலைமைகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கி விடலாம். இதனைத்தான் நாம் தற்போதய அனுர தலைமையிலான இந்த அரசுக்கு சொல்லி வைக்கின்றோம் அல்லது எச்சரிக்கின்றோம். இன்று நாட்டில் இருப்பது ஜேவிபி-என்பிபி அரசு கிடையாது என்ற நமது வாதத்துக்குள் இப்போது பிரவேசிக்கலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.

நாம் முன்பு எழுதி இருந்த கட்டுரைகளில் கடந்த நாற்பத்து இரண்டு (42) வருடங்களாக ஜேவிபி-என்பிபி தேர்தல்களில் பெற்று வந்த வாக்குகள் பற்றி சொல்லி இருந்தோம். அந்தப் புள்ளிவிபரங்களின் படி அவர்களது செல்வாக்கு  விரிவடைந்திருக்கவில்லை. அது தேர்தல்களில் என்றுமே நான்கு சதவீதத்துக்கு மேல் செல்லவில்லை. இந்த நிலையில் 2024 ஜனாதிபதித் தேர்தல் அதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தல்களில் இவர்களுக்குக் கிடைத்த வாக்குகள் ஒரு அசாதராண நிகழ்வு என்பது எமது நிலைப்பாடு.

இவர்கள் குறிப்பிடுவது போல கடந்த எழுபத்தி ஆறு வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் மக்களை ஏமாற்றி இருக்கின்றார்கள். குறிப்பாக கடந்த கால் நூற்றாண்டாக   அதிகாரத்தில் இருந்தவர்கள் மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்து அதனை தமது கஜானாவில் நிறைத்துக் கொள்ளும் ஒரு அரசியல் சமூக கலாச்சாரத்தை நாட்டில் ஏற்படுத்தி இருந்தனர்.

President Anura Kumara Dissanayake attended an Iftar gathering held yesterday (18) evening at the President's House to mark the breaking of the daily fast observed by Islamic devotees during the holy month

இந்த அரசுக்குள்ளும் அதன் தாக்கம் வலுவாக இருக்கின்றது. மேலும் போதை பாதாள உலகத்தாருடன் அரசியல்வாதிகள் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு அதில் நன்மை பெற்று வந்தனர். பலர் நேரடியாக இந்த வியாபாரங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

தற்போது நீதிமன்றத்தில் இருக்கின்ற வழக்குகள் குற்றச்சாட்டுக்களை வைத்துப் பார்க்கின்ற போது இது தெளிவாகத் தெரிகின்றது. இதனைக் குடிமக்கள் புரிந்து கொண்டனர். இதற்கு இந்த ஜேவிபி-என்பிபி பரப்புகைள் உதவி வந்திருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. அந்தவகையில் இவர்கள் சமூகத்துக்கு தலைமைத்துவம் கொடுத்தார்கள் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.

ஆனால் அவர்களுக்கு கடந்த தேர்தல்களில் கிடைத்த வாக்குகளுக்கு இந்த ஜேவிபி-என்பிபி முழுமையாக உரிமை கோருவதை நமக்கு ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே எதேச்சையாக வந்த இந்த ஆதரவை பாதுகாத்துக் கொள்ள இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அல்லது இது ஆபத்தாக முடியும்.

குடிமக்கள் புதியதோர் அரசியல் கலாச்சாரத்தை எதிர்பார்த்திருந்தனர். சட்டம் நீதி அனைவருக்கும் சமனாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் அடாவடித்தனங்களுக்கு முற்றுப் புள்ளிவைக்க வேண்டும். சமூக விரோத செயல்பாடுகளுக்கு முடிவு வேண்டும். அவர்களுக்கு தண்டனை வேண்டும்.

அரசியலில் குடும்ப மற்றும் வாரிசு ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி என்று மக்கள் எதிர்பார்த்ததால் ஊர் பேர் முகவரிகளே தெரியாதவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள். இது வஞ்சிக்கப்பட்ட குடிமக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு. இதனை இந்த ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே கிடைத்துள்ள வாக்குகளையும் வாய்ப்புக்களையும் ஜேவிபி-என்பிபி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Previous Story

ஈரானுக்கு பணிவதை விட டிரம்பிற்கு இனி வேறு வழிகள் இல்லை நிபுணர்

Next Story

குப்பையில் வீசிய லாட்டரிக்கு ரூ.38.37 கோடி பரிசு..