இந்திய டெஸ்ட் அடுத்த தலைவர் யார்? 

மனோஜ் சதுர்வேதி

அடுத்தது யார் இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்த உள்ளார் என்கிற கேள்விதான் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் முன் எழுந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்த போது, விராட் கோலி இப்போட்டியோடு தன் டெஸ்ட் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

தற்போது இந்திய டெஸ்ட் களத்தில் ரோஹித் சர்மா மட்டுமின்றி கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் என பலரும் தலைவர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார்கள்.

இப்போது இந்திய அணிக்கு விராட் கோலியைப் போல ஒரே தலைவரை வைத்துக் கொள்வதா அல்லது ஒருநாள் & டி20 போட்டிகளுக்கு ஒரு தலைவர், டெஸ்ட் போட்டிகளுக்கு மற்றொரு தலைவர் என இரு தலைவர்களை வைத்துக் கொள்வதா என பிசிசிஐ முடிவு செய்ய வேண்டும்.

ரோஹித் சர்மா

ஒருவேளை ஒரு தலைவர் போதும் என முடிவு செய்தால் ரோஹித் சர்மாவை அணித் தலைவர் ஆக்குவார்கள். இந்திய அணியில் பல முக்கிய போட்டிகளில் விளையாடிய அனுபவஸ்தர்.

ஐபிஎல் போட்டிகளில் மும்பை சார்பாக விளையாடி ஐந்து முறை கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். விராட் கோலி இல்லாத போது சில ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு அணித் தலைவராக இருந்து வழிநடத்தி பல வெற்றிகளையும் பெற்றுள்ளார்.

10 ஒருநாள் போட்டிகளில் 8-ல் வெற்றி, 22 டி20 போட்டிகளில் 18 போட்டிகளில் வென்றுள்ளார். இதெல்லாம் அவருக்கு சாதகமாக இருக்கும் விஷயம்.

அவருக்கு அடிக்கடி ஏற்படும் காயங்கள் அவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் கூட காயம் காரணமாக அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு தலைவராக இருக்கும் ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் பொறுப்பையும் கொடுத்தால், அவருக்கான பணிச்சுமை அதிகரிக்கலாம் என்கிற அச்சமும் நிலவுகிறது. இதெல்லாம் போக ரோஹித் சர்மாவின் வயதும் ஒரு தடையாக இருக்கலாம். 35 வயதான ஒருவருக்குத் தலைவர் பதவியைக் கொடுப்பதற்கு பதிலாக இளைஞர் ஒருவருக்கு அப்பொறுப்பு வழங்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.

கே.எல்ராகுல்

2019 ஆகஸ்டுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்காமல் இருந்த கே.எல். ராகுலுக்கு ஆகஸ்ட் 2021ல் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. முதல் வாய்ப்பிலேயே லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 129 ரன்களைக் குவித்து இந்திய டெஸ்ட் வீரர்கள் வரிசையில் தனக்கான இடத்தை உறுதி செய்து கொண்டார்.

கடந்த டிசம்பர் 2021-ல் செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் கூட 123 ரன்களை குவித்து தன் இடத்தை இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வலுப்படுத்திக் கொண்டார்.

சமீபத்தில் ஜோஹன்ஸ்பெர்கில் நடந்த டெஸ்ட் போட்டியில் கூட விராட் கோலி இல்லாத போது, இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்கு தலைமை தாங்கிய அனுபவம் கொண்டவர் என்றாலும் சர்வதேச போட்டிகளில் தலைமை தாங்கிய அனுபவம் அவருக்கு அதிகம் இல்லை என்பது சற்றே பின்னவைடைக் கொடுக்கும் விஷயம்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கே.எல். ராகுல் தான் தலைமை தாங்கி வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷப் பண்ட்

இவரை இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக்க சுனில் கவாஸ்கர் ஆதரவளித்தார். ஒரு கூடுதல் பொறுப்பு அவரை ஒரு நல்ல கிரிக்கெட்டர் ஆக்கும் என தான் கருதுவதாகவும் கூறினார்.

கேப் டவுனில் ரிஷப் அடித்த சதம் அவர் திறனுக்கான சான்று. அவரால் எந்த சூழலிலும் களமிறங்கி போராட முடியும் என்பதை வெளிக்காட்டியுள்ளார். இது அவர் தலைவரானால் கை கொடுக்கலாம்.

அதே போல கடந்த ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ஐபிஎல் போட்டியில் சிறப்பாக வழிநடத்தினார். தலைமைப் பண்பு தொடர்பாக, தலைவர் பொறுப்பு தொடர்பாக ரிக்கி பாண்டிங்கிடமிருந்து அவர் நிறைய கற்றுக் கொண்டார்

24 வயதான ரிஷபுக்கு தலைமைப் பதவி கிடைப்பதற்கு எதிராக அவரது அனுபவமின்மை இருக்கிறது. ஆனால் இதே நாட்டில்தான் வெறும் 21 வயதில் மன்சூர் அலிகான் படோடி இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரானார் என்பது நினைவுகூரத்தக்கது.

அஜிங்க்யா ரஹானே

கடந்த 2021ஆம் ஆண்டில் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது. அப்போட்டியில் பெரிய நட்சத்திர வீரர்கள் எவருமின்றி அஜிங்க்யா ரஹானே தலைமையிலான இந்திய அணி வென்றது. வரலாற்று சிறப்புமிக்க காபா வெற்றியும் ரஹானே தலைமையில் தான் சாத்தியமானது.

அத்தனை பெரிய சாதனை படைத்த ரஹானேவால் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியவில்லை. எனவே கேப்டன்சிக்கான போட்டியில் இல்லை என்றே கணக்கில் வைத்துக் கொள்ளலாம்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் அதிகம். சமீபத்தில் கூட 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்கிற பெருமையையும் பெற்றார். ஐபிஎல் போட்டிகளில் தலைமை பதவி வகித்த அனுபவமும் கொண்டவர் தான், ஆனால் பந்துவீச்சாளர்கள் கேப்டனாக்கப்பட்டால் சிறப்பாக செயல்பட முடியாமல் போகலாம் என்கிற பிம்பம் இந்தியாவில் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சிரமமே.

அடுத்த சில ஆண்டுகளில் இரண்டு உலகக் கோப்பை போட்டிகள் வரவிருக்கின்றன. இதற்கிடைய நிறைய சர்வதேச போட்டிகள் விளையாட வேண்டியுள்ளது. இந்த சூழலில் டெஸ்ட் அணிக்கு ரோஹித் ஷர்மா தலைவராகவும் ,கே.எல். ராகுல் துணைத் த்லைவராகவும் நியமிக்கப்பட வாய்புள்ளது.

ரோஹித் ஷர்மாவுக்கு அதிக பணிச்சுமை கொடுக்க வேண்டாம் என்று பிசிசிஐ கருதினால், கே.எல். ராகுல் இந்தியாவில் நடைபெறவிருக்கும் சில தொடர்களில் தலைவராக்கப்பட்டு, ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு கொடுக்கலாம். கே.எல். ராகுல் அடுத்து தலைமை பொறுப்பை ஏற்க பயிற்சி பெறவும் முடியும். ரோஹித்துக்கு வேலைப்பளு குறைந்ததாகவும் இருக்கும்.

Previous Story

சாணக்கியனுக்கு கொரோனா

Next Story

பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் விரிவுரையாளர் முகம் சுழிக்கும் செயல்!