இந்திய குடியரசு தலைவர் தேர்தல் தகவல்கள்!

JULY 21

இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவு பெறுவதையடுத்து, அவர் வகிக்கும் பதவிக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற்றது.
குடியரசு தலைவர் தேர்தல்

இந்தியாவின் 15ஆம் குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் 2017ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றார். அவரது பதவிக்கு நடைபெறவுள்ள தேர்தல் தொடர்புடைய சில கேள்விகள் மற்றும் அவற்றுக்குரிய விடையை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

குடியரசு தலைவர் தேர்தல் எப்படி நடக்கிறது?

இந்திய குடியரசு தலைவரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள். இவர்கள் ‘எலக்டோரல் காலேஜ்’ எனப்படும் வாக்காளர் குழுமம் என்று அழைக்கப்படுகிறார்கள்.

சில மாநிலங்களில் மேலவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. அதேபோல, மாநிலங்களவை, மக்களவையில் நியமன உறுப்பினர்களுக்கும் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்குரிமை கிடையாது.

1971ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் இந்த தேர்தல் வாக்குகள் மதிப்பு கணக்கிடப்படுகிறது.

இந்த தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எம்எல்ஏ, எம்.பியின் வாக்கு வங்கி மாறுபடும். மாநிலங்களவை எம்பி, மக்களவை எம்பிக்களின் வாக்குகளின் மதிப்பு மாறாது. அதே சமயம், மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப எம்எல்ஏக்களின் வாக்குகளின் மதிப்பு மாறுபடும்.

உதாரணமாக, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு, குறைந்த மக்கள்தொகை கொண்ட மணிப்பூர், கோவா, திரிபுரா ஆகியவற்றை விட அதிக மதிப்பைக் கொண்டதாக இருக்கும்.

இந்தியாவிலேயே அதிக வாக்கு மதிப்பைக் கொண்டது உத்தர பிரதேச மாநிலத்தின் எம்எல்ஏ பதவி. அங்கு ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 208 ஆகும். தமிழ்நாட்டில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 176 ஆகும். அந்த வகையில் மாநிலத்தின் மொத்த வாக்கு மதிப்பு 234 x 176 = 41,184

அதே சமயம், நாட்டில் உள்ள ஏனைய எம்பிக்களின் வாக்கு மதிப்பு தலா 708 ஆகும்.

எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

மாநில மக்கள்தொகையை அந்த மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதன் ஈவை ஆயிரத்தால் பெருக்கிக் கிடைக்கும் வாக்குகளே அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஒவ்வொருவரும் அளிக்கும் வாக்குகளின் மதிப்பாக இருக்கும். அவ்வாறு ஆயிரத்தால் பெருக்கிய பிறகு மீதமுள்ளது ஐநூற்றுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

16ஆம் குடியரசு தலைவர் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவை எம்எல்ஏக்களின் மொத்த வாக்குகள் மதிப்பு 5,43,231. எம்.பிக்களின் மொத்த வாக்குகள் மதிப்பு 5,43,200. அந்த வகையில் 2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலில் உள்ள மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431.

குடியரசு தலைவர் தேர்தல்

குடியரசு தலைவர் தேர்தலை யார் நடத்துவார்கள்?

இந்திய தேர்தல் ஆணையம், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் குடியரசு தலைவர் தேர்தலை நடத்துவதற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை செகரட்டரி ஜெனரலை தேர்தல் நடத்தும் பொறுப்பு அதிகாரியாக சுழற்சி முறையில் நியமிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை மாநிலங்களவை செகரட்டரி ஜெனரல் நடத்துவார். மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் இந்த தேர்தலை நடத்துவதற்காக உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.

தமிழ்நாட்டில் இந்த முறை தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரியாக சட்டப்பேரவை செயலாளர் டாக்டர் கே. ஸ்ரீநிவாசன், இணைச் செயலாளர் ஆர். சாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் சட்டப்பேரவை செயலாளர் ஆர். முனிசாமி, சட்டப்பேரவை விவாதங்கள் பிரிவு ஆசிரியர் என். அலமேலு ஆகியோர் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள் விதி 7இன்படி இந்த தேர்தல் இந்திய நாடாளுமன்ற வளாகத்திலும், மாநில சட்டப்பேரவை வளாகத்திலும் நடைபெறும்.

இந்த தேர்தலில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது. உறுப்பினர்கள் வாக்குச்சீட்டு முறையில் ரகசியமாக தங்களுடைய வாக்குரிமையை செலுத்த வேண்டும். இந்த வாக்குச்சீட்டில் குறிப்பிட்ட வேட்பாளரை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் வழங்கும் பிரத்யேக பேனாவை மட்டுமே வாக்காளர் பயன்படுத்த வேண்டும்.

குடியரசு தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சம்பந்தப்பட்ட வாக்காளர் இன்னாருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கட்சி மட்டத்தில் கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது. மேலும், குறிப்பிட்ட வேட்பாளருக்கு சாதகமாக வாக்களிக்க பணம் கொடுப்பதும், செல்வாக்கை செலுத்தி வாக்குரிமை செலுத்த நிர்பந்திப்பதும் சட்டவிரோத செயலாக கருதப்படும்.

குடியரசு தலைவர்

குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட யார், எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட சம்பந்தப்பட்ட வேட்பாளர் நேரடியாகவோ அவரை முன்மொழிபவர், வழிமொழிபவர் மூலமாகவோ வேட்பு மனுவை சமர்ப்பிக்கலாம். ஆனால், அவரது வேட்பு மனுவுடன் அவரை முன்மொழிந்து 50 வாக்காளர்களும், வழிமொழிந்து 50 வாக்காளர்களும் மனுவில் ஆதரவைத் தெரிவித்து கையொப்பமிட்டிருக்க வேண்டும். ஒவ்வோர் வாக்காளரும் தலா ஒரு வேட்பு மனுவை முன்மொழிபவராகவோ வழிமொழிபவராக மட்டுமே தாக்கல் செய்ய முடியும். சம்பந்தப்பட்ட வேட்பாளர் அதிகபட்சமாக நான்கு வேட்பு மனுக்களை வாங்க அனுமதிக்கப்படுவார். வேட்பு மனுவுக்கு முன்னதாக, அவர் ரிசர்வ் வங்கி கரூவூலத்திலோ அரசு கருவூலத்திலோய ரூ. 15 ஆயிரம் பாதுகாப்பு டெபாசிட் தொகையை செலுத்த வேண்டும்.

இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெறும் வாக்காளர்களான எம்எல்ஏ, எம்பிக்களின் சமீபத்திய முகவரி, தொடர்பு எண் விவரங்கள் அடங்கிய பட்டியலை ரூ. 300 கட்டணம் செலுத்தி தேர்தல் ஆணையத்தில் பெறலாம்.

எங்கு வாக்களிக்க வேண்டும்?

குடியரசு தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தல்களில் வாக்களிக்க தகுதி பெறும் வாக்காளர்களில் எம்எல்ஏ ஆக இருந்தால் அவர், மாநில சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும்.

எம்.பி ஆக இருந்தால் அவர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும். மிகவும் அவசரத் தேவை எழுந்தால் மட்டுமே எம்பி ஒருவர் தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பாக முன்னனுமதி பெற்று சட்டப்பேரவை வளாக வாக்குச்சாவடியில் வாக்குரிமையை செலுத்த அனுமதிக்கப்படுவார்.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எங்கு எண்ணப்படும்?

தேர்தல் முடிந்தவுடன் வாக்குகள் இடம்பெற்ற பெட்டிகள், பலத்த பாதுகாப்புடன் ஒவ்வோர் மாநிலத்தில் இருந்தும் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்கு கொண்டு வரப்படும். வாக்கு எண்ணிக்கை நாளன்று, தேர்தல் பொறுப்பு அதிகாரி முன்னிலையில் இந்த வாக்குகள் எண்ணப்படும்.

குடியரசு தலைவர் தேர்தலில் யார் போட்டியிடலாம்?

குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர் இந்திய குடிமகனாக வாக்குரிமை பெற்றவராக இருக்க வேண்டும். அவர் குறைந்தபட்சமாக 35 வயதை அடைந்திருக்க வேண்டும்.மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளையும் அவர் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

50 முன்மொழிபவர், 50 வழிமொழிபவரைக் கொண்ட எம்பி, எம்எல்ஏ ஆதரவை பெற்றிருந்தால் மட்டுமே குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பாளரின் மனு ஏற்றுக் கொள்ளப்படும்.

மத்திய அரசாங்கத்தின் நிறைவேற்றுக் கடமைகளை செயல்படுத்துவதே குடியரசு தலைவரின் முக்கிய பொறுப்பாகும். இது தவிர இந்திய முப்படைகளுக்கு தளபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதி, பிரதமருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரத்தையும் குடியரசுத் தலைவர் பெறுகிறார்.

குடியரசு தலைவர்

இரண்டு வேட்பாளர்கள் சம வாக்குகளைப் பெற்றால் என்ன செய்வது?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இதைப் பற்றி எதுவும் கூறவில்லை. 1952இல் இயற்றப்பட்ட இந்திய குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டத்தில் இதுபற்றி தெளிவாக ஏதும் இல்லை. அதேசமயம், நாடு குடியரசு ஆனது முதல் இதுவரை அப்படி ஒரு நிலை வரவில்லை என்பதே உண்மை.

குடியரசு தலைவர் பதவிக்காலம் முடிவடையும் போது அந்த தலைவருக்கு அவரது அரசியல் வாழ்க்கையும் முடிவுக்கு வருவதாக கருதலாமா? அவரால் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாதா?

குடியரசு தலைவர் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு அந்த தலைவரால் பிற தேர்தலில் போட்டியிடலாம். அதனால் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு அந்த தலைவருக்கு அவரது அரசியல் வாழ்க்கை முடிந்து விடுவதாக கருதும் பேச்சுக்கே இடமில்லை. குடியரசு தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் விரும்பினால், தொடர்ந்து முழு நேர அரசியலில் ஈடுபட சட்டம் தடையாக இருக்காது.

ஆனால், நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகித்த பிறகு அந்த தலைவர் ஆளுநராகவோ, எம்பியாகவோ, எம்எல்ஏவாகவோ இருக்க பொதுவாகவே விரும்புவதில்லை என்பதே இந்தியா இதுவரை கண்டு வரும் மரபு.

இந்தியாவில் பிரதமருக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது, அப்படியிருக்க குடியரசு தலைவர் பதவிக்கு ஏன் முக்கியத்துவம் தரப்படுகிறது?

இந்தியாவில் அனைத்து அதிகார உரிமைகளை பிரதமர் மட்டுமே மட்டுமே கொண்டிருக்கவில்லை. அரசியலமைப்பில் ஒவ்வொருவருக்கும் பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

திரெளபதி முர்மூ: பாஜக கூட்டணி அறிவித்துள்ள குடியரசு தலைவர் வேட்பாளர் – யார் இவர்?

குடியரசு தலைவருக்கே அரசியலமைப்பின் முழு நிறைவேற்று அதிகாரமும் உள்ளது, அதை அவர் சுயமாகவோ தனக்குக் கீழ் உள்ளவர்கள் மூலமாகவோ பயன்படுத்தலாம்.

பிரதமரை நியமிப்பது மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பது குடியரசு தலைவரின் முக்கிய பொறுப்பு. இருவரும் தத்தமது பணிகலை தங்களுடைய அதிகார வரம்பை உணர்ந்து செயல்படுத்துவார்கள். இந்த இருவரின் ஒப்புதல் இல்லாமல் எந்த சட்டமும் செயல் வடிவம் பெறாது.

நிதி மசோதா நீங்கலாக வேறெந்த மசோதாவையும் மறுபரிசீலனைக்காக மீண்டும் நாடாளுமன்றத்திற்கே திருப்பி அனுப்ப குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

குடியரசு தலைவர் தேர்தல்
பிரதமர் மோதியுடன் ராம்நாத் கோவிந்த் குடும்பத்தார். (2017ஆம் ஆண்டு)

குடியரசு தலைவரை பதவியில் இருந்து எவ்வாறு நீக்க முடியும்?

பதவி நீக்க நடவடிக்கை மூலம் குடியரசு தலைவரை நீக்க முடியும். இதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 14 நாட்களுக்கு முன்னதாக முறைப்படி நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அதற்கான முன்மொழிவில் நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவையில் தீர்மானம் மீது விவாதிக்க அனுமதி வழங்கப்படும்.

இந்தத் தீர்மானத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால், குடியரசு தலைவர் பதவி வகிப்பவரை அப்பதவியில் இருந்து நீக்கலாம்.

குடியரசு தலைவர் தேர்தலில் யாராவது இதுவரை போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்களா?

இந்தியாவில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி மட்டுமே. அதுபோல இரண்டு முறை குடியரசு தலைவர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மட்டுமே.

தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பற்றி?

குடியரசு தலைவர் தேர்தல்

ராம்நாத் கோவிந்த், 2017ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி, இந்தியாவின் 15வது குடியரசு தலைவராகப் பதவியேற்றார். ராம்நாத் கோவிந்த் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து, நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்புப் பதவியை ஏற்கும் முன், பிகார் மாநில ஆளுநராக இருந்தார்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணியைத் தொடங்கி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய அனுபவத்தையும் அவர் கொண்டவர்.

ராம்நாத் கோவிந்த் 1945ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள பாரௌங்க் கிராமத்தில் பிறந்தார்.

அவரது பள்ளிப்படிப்பு மற்றும் உயர்கல்வியும் கான்பூரில் நடந்தது. முதலில் வணிகவியல் பட்டதாரி தேர்வில் தேர்ச்சி பெற்று பின்னர் கான்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார்.

1977 முதல் 1979 வரை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞராக இருந்தார். 1978Fல் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார். 1980 முதல் 1993 வரை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் நிரந்தர வழக்கறிஞராக இருந்தார்.

ராம் நாத் கோவிந்த் ஏப்ரல் 1994 இல் உத்தர பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தொடர்ந்து இரு முறை தலா ஆறு ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி, அவர் பிகார் ஆளுநராகப் பதவியேற்றார். அதன் பின்னர் நாட்டின் 14வது குடியரசு தலைவராக பதவியேற்றார்.

இதுவரை குடியரசு தலைவராக இருந்தவர்கள்

ராம்நாத் கோவிந்த் – (பிறந்த தினம்: 1945 அக்டோபர் 1)பதவிக்காலம்: 2017 ஜூலை 25 முதல் தற்போதுவரை

பிரணாப் முகர்ஜி (1935-2020)பதவிக்காலம்: 25 ஜூலை, 2012 முதல் 25 ஜூலை, 2017 வரை

பிரதிபா தேவிசிங் பாட்டீல் (பிறப்பு – 1934)பதவிக்காலம்: 25 ஜூலை, 2007 முதல் 25 ஜூலை, 2012 வரை

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (1931-2015)பதவிக்காலம்: 25 ஜூலை, 2002 முதல் 25 ஜூலை, 2007 வரை

கே. ஆர். நாராயணன் (1920 – 2005)பதவிக்காலம்: 25 ஜூலை, 1997 முதல் 25 ஜூலை, 2002 வரை

ஷங்கர் தயாள் சர்மா (1918-1999)பதவிக்காலம்: 25 ஜூலை, 1992 முதல் 25 ஜூலை, 1997 வரை

ஆர் வெங்கட்ராமன் (1910-2009)பதவிக்காலம்: 25 ஜூலை, 1987 முதல் 25 ஜூலை, 1992 வரை

கியானி ஜைல் சிங் (1916-1994)பதவிக்காலம்: 25 ஜூலை, 1982 முதல் 25 ஜூலை, 1987 வரை

நீலம் சஞ்சீவ ரெட்டி (1913-1996)பதவிக்காலம்: 25 ஜூலை, 1977 முதல் 25 ஜூலை, 1982 வரை

ஃபக்ருதீன் அலி அகமது (1905-1977)பதவிக்காலம்: ஆகஸ்ட் 24, 1974 முதல் பிப்ரவரி 11, 1977 வரை

வராஹகிரி வெங்கட கிரி (1894-1980)பதவிக்காலம்: 3 மே, 1969 முதல் 20 ஜூலை, 1969 மற்றும் 24 ஆகஸ்ட், 1969 முதல் 24 ஆகஸ்ட், 1974 வரை

ஜாகிர் உசேன் (1897-1969)பதவிக் காலம்: 13 மே, 1967 முதல் மே 3, 1969 வரை

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888-1975)பதவிக்காலம்: 13 மே, 1962 முதல் 13 மே, 1967 வரை

டாக்டர். ராஜேந்திர பிரசாத் (1884-1963) இரண்டு முறை பதவி வகித்தார்பதவிக்காலம்: 26 ஜனவரி, 1950 முதல் 13 மே, 1962 வரை

Previous Story

TNA ஆதரவை நாடும் வேட்பாளர்கள்!

Next Story

தான் ஜனாதிபதியானால் ரணிலை விரட்டுவேன்-டலஸ்