இந்தியா vs பாகிஸ்தான்: 6 ஓவர்களில் தலைகீழாக மாறிய ஆட்டம் 

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் ஆறே ஓவர்களில் தலைகீழாக மாறிப் போனது. தொடக்கத்தில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தானுக்கு வழக்கம் போல் கேப்டன் பாபர் ஆசம் – விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஆபாத்பாந்தவன்களாக வந்து காப்பாற்றினர். ஆனால், இந்த ஜோடி பிரிந்த பிறகு ஆட்டம் தலைகீழாக மாறிப் போனது. பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் ஆட்டம் முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

இந்தியா vs பாகிஸ்தான்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கும் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான ஒருநாள் சர்வதேச உலகக்கோப்பை போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி என்றாலே பலத்த எதிர்ப்பார்ப்பு இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் உருவாகிவிடும்.

அத போலவே, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி விளையாட்டு அரங்கில் இன்று மதியம் நடைபெறும் இந்தப் போட்டியும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக்கோப்பை ஒருநாள் போட்டிகளில் இதுவரை ஏழு முறை விளையாடியுள்ளன. ஏழு முறையும் இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது. அந்த சாதனையைத் தக்க வைத்துக் கொள்ளுமா இந்தியா அல்லது பாகிஸ்தான் அதை முறியடிக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

IND VS PAK ICC Cricket World Cup 2023: Babar Azam Booed At Narendra Modi Stadium During Toss Of India-Pakistan World Cup 2023 Cracker - Watch | Cricket News, Times Now

முதல் விக்கெட்டை வீழ்த்திய முகமது சிராஜ்

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற பிறகு பேசிய ரோஹித் சர்மா, “நாங்கள் முன்பு பெற்ற வெற்றிகளிலேயே திளைத்திருக்க விரும்பவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் நன்றாக விளையாட வேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும்,” என்றார்.

ஷுப்மன் கில் இந்த அணியில் இடம் பெற 99% வாய்ப்பு உள்ளது என ஏற்கெனவே தெரிவித்திருந்த ரோஹித் சர்மா, இன்று இஷான் கிஷனுக்கு பதிலாக ஷுப்மன் கில் அணியில் இடம்பெறுவார் எனத் தெரிவித்தார்.

டாஸ் இழந்த பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் , “நாங்கள் டாஸ் வென்றிருந்தால் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்திருப்போம். இந்தியாவில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது,” என்றார்.

முகமது சிராஜ் வீசிய 8வது ஓவரின் 2வது பந்தில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக் கால்காப்பில் வாங்கி 20 ரன்னில் ஆட்டமிழந்தார். லோ-பவுன்ஸராக வந்த பந்தைத் தடுத்து ஆட ஷபீக் முற்பட்டபோது கால்காப்பில் வாங்கினார், மூன்றாவது நடுவரிடம் முறையிடாமல் அப்துல்லா வெளியேறினார்.

பாகிஸ்தான் கேப்டன் அவுட்

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், ரிஸ்வான் இருவரும் 3வது விக்கெட்டுக்கு நங்கூரம் அமைத்து பேட் செய்தனர். பாபர் ஆசமும் நிதானமாக ஆடி இந்திய அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டி அரை சதத்தை பதிவு செய்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் சிராஜ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

மிகவும் முக்கியமான, ஆபத்தான கூட்டணியை சிராஜ் தனது பந்துவீச்சில் பிரித்தார். சிராஜ் வீசிய பந்து தாழ்வாக வந்தது, அந்த பந்தை ஸ்டெம்புக்குள் விட்டு தாமதாக அடிக்க முயன்றபோது,க்ளீன் போல்டாகியது. இருவரும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

இந்தியா vs பாகிஸ்தான்

தலைகீழாக மாறிய ஆட்டம்

இந்தியாவுக்கு எதிராக 7-வது போட்டியில் ஆடிய பாபர் ஆசம் முதல் அரைசதம் அடித்த திருப்தியுடன் அவுட்டாக, அதன் பிறகு அந்த அணி வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

அடுத்த இரண்டாவது ஓவரில் சவுத் ஷகீலை சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் காலி செய்தார். ஷகீல் 10 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்தார். எல்.பி.டபிள்யூ முறையில் அவர் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசிப் பந்தில் இஃப்திகார் அகமதுவை கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார் குல்தீப். இஃப்திகார் 4 ரன்களே எடுத்தார்.

இந்திய அணியை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருந்த முகமது ரிஸ்வான் 34-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். அவர், ஜஸ்பிரித் பும்ரா கிளீன் போல்டாக்கினார். 58 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் சேர்த்திருந்த அவர் ஒரு ரன்னில் அரை சதத்தை தவறவிட்டார். தனது அடுத்த ஓவரில் ஷதாப் கானை 2 ரன்களில் பும்ரா வெளியேற்றினார்.

30-வது ஓவரில் பாபர் ஆசம் மூன்றாவது விக்கெட்டாக ஆட்டமிழக்க, அடுத்த 5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 29 ரன்களை சேர்ப்பதற்குள்ளாக மேலும் 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

இந்தியா vs பாகிஸ்தான்

36 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி 155 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. 30-வது ஓவரில் பாபர் ஆசம் மூன்றாவது விக்கெட்டாக ஆட்டமிழந்ததுமே ஆட்டம் தலைகீழாக மாறிப் போனது. அடுத்து வந்த பாகிஸ்தான் வீரர்களால் களத்தில் நிலைத்து ஆட முடியவில்லை. இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய வண்ணம் இருந்தனர்.

இதனால் பாகிஸ்தான் அணி அடுத்த 32 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஒரு கட்டத்தில் 155 ரன்களுக்கு 2 விக்கெட் என்று வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி பின்னர் 187-க்கு 9 விக்கெட் என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. கடைசி விக்கெட்டுக்கு ஷாகின் ஷா அப்ரிடி – ஹரிஸ் ரஃப் இணை விளையாடியது. இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா எல்.பி.டபிள்யூ முறையில் பிரித்தார்.

பாகிஸ்தான் அணி 191 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணி கடைசி 36 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

இந்தியா vs பாகிஸ்தான்

அசத்திய பந்துவீச்சாளர்கள்

காயத்திற்கு சிகிச்சை பெற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் அசத்தினார். பந்துவீச்சுக்கு அனுகூலமாக இல்லாத ஆடுகளத்தில், 30 ஓவர்கள் வீசப்பட்ட பிறகு பழைய பந்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை அவர் நிரூபித்தார்.

சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தனது ரிஸ்ட் ஸ்பின் மூலம் பாகிஸ்தான் பேட்ஸ் மேன்களை திணறடித்தார். ரவீந்திர ஜடேஜாவும் தன் பங்கிற்கு விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானை வீழ்ச்சியில் இருந்து மீண்டும் நிமிர விடாமல் செய்தார்.

இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகிய 5 பேரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தியா தரப்பில் பந்துவீசிய ஷர்துல் தாகூர் மட்டுமே விக்கெட் வீழ்த்தவில்லை. அவர் 2 ஓவர்களை வீசி 12 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

இந்தியா vs பாகிஸ்தான்

ஷுப்மன் கில் சாதிப்பாரா?

ஷுப்மன் கில் இன்று நடைபெறும் போட்டியில் விளையாடுவாரா எனப் பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை.

ஓய்வுக்குப் பின்னர், தனது பயிற்சிகளை நரேந்திர மோதி விளையாட்டரங்கத்தில் மேற்கொண்ட அவர், இன்று பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

இந்த விளையாட்டரங்கில் அவர் விளையாடப் போகும் முதல் உலகக்கோப்பை ஒருநாள் போட்டி இதுவே. ஆனால் இந்த அரங்கம் அவருக்குப் புதிதல்ல. இதே அரங்கில் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியும் ஆடியுள்ள கில், இரண்டு சதங்களை இந்த மைதானத்தில் அடித்துள்ளார்.

ஆமதாபாத்துக்கு வெளியிலும் ஷுப்மன் கில் சாதனைகளைப் படைத்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 208 ரன்கள் பெற்று அசத்தினார். இதன்மூலம், ஒருநாள் போட்டி வரலாற்றில் இரட்டை சதங்கள் அடித்த இளம் வீரரானர்.

அது மட்டுமல்லாமல் இரட்டை சதங்கள் அடித்த ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அந்தப் போட்டியில் தொடர்ந்து மூன்று சிக்சர்கள் அடித்து அபாரமாக ஆடியிருந்தார் ஷுப்மன் கில்.

கில் 2023இல் 20 போட்டிகளில் 1230 ரன்கள் பெற்று 72.35 சராசரி ரன்ரேட் வைத்துள்ளார். இந்த ஆண்டு ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஐசிசியின் அந்த மாதத்துக்கான சிறந்த ஆட்டக்காரராகத் தேர்தெடுக்கப்பட்டார்.

உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இதுவரை…

இந்தியா பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

இந்த உலகக்கோப்பை போட்டியில் இதுவரை பாகிஸ்தானும் இந்தியாவும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஆஸ்த்ரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை இந்தியா வென்றுள்ளது. அதேபோன்று பாகிஸ்தான் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் 1947இல் தனி நாடாக உருவானது முதலே இரு அணிகளும் களத்தில் போட்டியிட்டு வருகின்றனர். பிரிவினைக்குப் பிறகு 1950களில் நடந்த போட்டிகளில் இந்தியாவுக்கு விளையாடிய வீரர்கள் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்ற சம்பவங்களும் உண்டு.

இன்று நடக்கும் போட்டி பிளாக்பஸ்டர் என விவரிக்கப்படுகிறது. 1,32,000 பேர் அமரக்கூடிய மைதானத்தில், அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததால் இந்தப் போட்டியைக் காண லட்சக்கணக்காண மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

பாகிஸ்தான் அணியில், பாபர் ஆசம், அப்துல்லா ஷபீக், இமாம் உல்-ஹக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இஃப்திகர் அஹ்மத், ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரீதி, ஹாரிஸ் ரௌஃப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி இதுவரை உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருமுறை மட்டுமே சேஸிங் செய்து வெற்றி பெற்றுள்ளது. 2003ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி செஞ்சூரியனில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி சேஸிங் செய்து 6 விக்கெட்டில் வென்றது. அதன்பின் இந்த உலகக்கோப்பையில் சேஸிங் செய்ய இருக்கிறது.

இந்தியா பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

பாகிஸ்தான் ரன்ரேட்டை எப்படி கட்டுப்படுத்துவது?

பாகிஸ்தான் அணி 275 ரன்களுக்கு மேல் சேர்த்துவிட்டாலே ஆட்டம் பரபரப்பாகச் செல்லும். உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை பாகிஸ்தான் அணி 275 ரன்கள் அதற்கு மேல் அடித்து தோற்றது இல்லை, அந்த ரன்களை டிபெண்ட் செய்து வெற்றி கண்டுள்ளது. ஆதலால் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 275 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பாக் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் ரன்ரேட்டை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத் அளித்த ஆலோசனையில், “பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசம், ரிஸ்வான் இருவரும் ஸ்ட்ரைக்கை பெரும்பாலும் ரொட்டேட் செய்வதில்லை.

ரன்களை பவுண்டரி, சிக்ஸர்கள் மூலமே சேர்ப்பார்கள். ஆதலால், இருவரும் பேட்டிங் செய்ய வரும்போது, பவுண்டரிகளை இந்திய அணி கட்டுப்படுத்தினாலே, ரன்ரேட்டை இறுக்கிப் பிடிக்க முடியும்,” எனத் தெரிவித்துள்ளார்.

குறைத்து மதிப்பிடப்படும் பாபர் ஆசம்

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் திறமை எப்போதும் அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசமை சுற்றியே உள்ளது. அவர் திறமையான வீரராக இருந்தாலும், அவர் எப்போதும், குறைத்தே மதிப்பிடப்படுகிறார். அவர் எப்போதும் தனது இன்னிங்ஸை அமைதியாகவும், மெதுவாகவும் நகர்த்துபவர்.

அவர் என்ன செய்கிறார் என்பதை எதிர் அணியினர் உணரும் முன்னரே அவரது ஸ்கோ் 50 அல்லது 60ஐ தாண்டியிருக்கும். பின், அவர் தன் விருப்பப்படி, பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடிக்கத் தொடங்குவார்.

புதன்கிழமை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 63 பந்துகளில் சதம் விளாசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, இடது கை ஆட்டக்காரர் இஷான் கிஷானுடன் இன்னிங்ஸை தொடங்குவார்.

ரோஹித் இதுவரையிலான ஆட்டங்களில் ரன் குவித்ததைப் பார்த்து இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர் தனது தடையற்ற கவர் டிரைவ்கள், சிக்ஸர்கள் மற்றும் அச்சமற்ற புல் ஷாட்கள் மூலம் நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்பது தெரிகிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக ரோஹித் எளிதில் ஆட்டமிழந்தால், பாகிஸ்தான் அடுத்ததாக விராட் கோலியை எதிர்கொள்ள நேரிடும். கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபாரமாக சதம் அடித்து இந்திய அணிக்கு பலம் சேர்த்தார் கோலி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கோலி-ராகுல் இணை 200 ரன்கள் சேர்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

இந்த ஆட்டத்தைப் பல கோடி பேர் ஆன்லைனில் பார்த்தாலும், நேரடியாகவே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் காணவுள்ளனர். எனவே ஆமதாபாத் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நரேந்திர மோதி விளையாட்டு அரங்குக்கு அருகில் உள்ள சாலைகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. வெவ்வேறு ஊர்களிலிருந்து இந்திய ரசிகர்களும், பாகிஸ்தான் ரசிகர்களும்கூட ஆமதாபாத் வந்திருப்பதால் நகரின் ஓட்டல்கள் நிரம்பி வழிகின்றன.

எப்போதும் உணர்வுப்பூர்வமாகவே பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் போட்டி, இன்று ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையில்தான் மிகப்பெரிய மைதானத்தில் நடைபெறப் போகிறது.

Previous Story

ஹமாஸ் தாக்குதலின் மூளைகள்!

Next Story

8 ஊடகவியலாளர்களை படுகொலை செய்த இஸ்ரேல்