இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை?

‘ரஷ்யாவிடம் இருந்து எஸ் – 400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதை நாம் விரும்பவில்லை. அதே நேரத்தில் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை’ என, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இதையடுத்து ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் வாங்கும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கும் வகையில் ‘காட்சா’ என்ற கடுமையான சட்டத்தை 2017ல் அமெரிக்கா அறிமுகம் செய்தது.

இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து எஸ் – 400 ரக ஏவுகணைகள் வாங்க 2017ல் இந்தியா ஒப்பந்தம் செய்தது. தற்போது அந்த ஏவுகணைகளை இந்தியாவுக்கு ரஷ்யா ஒப்படைக்க உள்ளது.

அதனால் நட்பு நாடான இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக அமெரிக்க எம்.பி.,க்களிடையே பொருளாதார தடை கொள்கைக்கான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பிரதிநிதியான ஜேம்ஸ் ஓபிரையன் விளக்கம் அளித்தார்.

அப்போது எம்.பி.,க்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:ரஷ்யாவிடம் இருந்து எஸ் – 400 ரக ஏவுகணைகள் வாங்கியதாக துருக்கி மீது நாம் பொருளாதார தடை விதித்தோம். அதே நேரத்தில் நம் நட்பு நாடான இந்தியா மீதும் தடை விதிக்கப்படுமா என்பது குறித்து எம்.பி.,க்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்ள இந்தியா வலுவாக இருப்பது முக்கியம். சீனா, பாகிஸ்தானுடன் எல்லை பிரச்னைகளை இந்தியா சந்தித்து வருகிறது.

தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக இந்த ஏவுகணைகளை இந்தியா வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா நீண்ட காலமாக ரஷ்யாவிடம் இருந்தே ஆயுதங்களை வாங்கி வருகிறது.

இருப்பினும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஏவுகணைகள் வாங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை. பல விஷயங்களை ஆராய்ந்தே இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Previous Story

அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்க முயற்சி!

Next Story

இலக்கு வைக்கப்பட்டு முஸ்லிம்கள்  மோசமாக நடத்தப் படுகிறார்கள்?