இந்தியாவில் புதின்

இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகிறார். இதனால் இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவு மேலும் வலுப்பெறும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெருந்தொற்று தொடங்கிய பிறகு புதின் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு பயணம் இது.ஆப்கானிஸ்தான் பிரச்னையில் இருநாட்டு உறவில் ஏற்பட்டிருந்த விரிசல் இந்த பயணத்தால் சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமாவதையும் ரஷ்யா விரும்பவில்லை. அதேபோன்று சீனா ரஷ்யாவின் கேந்திரிய கூட்டணி நாடு என்பதால், சீனா – இந்தியா எல்லை தொடர்பாகவும் எழும் பிரச்னைகள் குறித்தும் ரஷ்யா கவலை கொள்கிறது.ராணுவ உபகரணங்களுக்கு இந்தியா ரஷ்யாவைதான் பெரிதும் நம்பியுள்ளது. இந்த பயணத்தில் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அது இந்தியாவின் செயல்திறனை மட்டுமல்ல இருநாட்டு உறவையும் புதுப்பிக்கும்.

இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துதல்

கடந்த ஆண்டு நடைபெறவிருந்த இந்திய – ரஷ்ய உச்சி மாநாடு பெருந்தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது.

பெருந்தொற்றுக்கு பிறகு புதின் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு பயணம் இது. முதலாவது பயணம் ஜூன் மாதம் ஜெனிவாவிற்கு சென்று அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்தது. பெருந்தொற்று காரணமாக ஜி20 மாநாடு மற்றும் க்ளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாநாடு ஆகியவற்றை தவித்துவிட்டார் புதின்.

அதேபோன்று சீனாவுக்கான பயணத்திட்டம் ஒன்றையும் மாற்றினார்.

“இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமாகி வரும் தருணத்திலும், இந்த சந்திப்பு என்பது இருநாடுகளுக்கும் இடையில் இருக்கும் சிறப்பான, கேந்திரிய உறவை தக்கவைப்பதற்கு மட்டுமல்லாமல் அதை மேலும் ஆழமாக்குவதற்கும்தான் என்பதை புதின் சூசகமாக சுட்டிக் காட்டுகிறார்,” என டிசம்பர் ஒன்றாம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் ஆய்வாளர் நந்தன் உன்னிகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

“பலதுருவ உலகின் அதிகாரமிக்க மையத்தில் ஒன்றாக இந்தியா உள்ளது. அதன் வெளியுறவு கொள்கை, தத்துவங்கள் மற்றும் கோட்பாடுகள் ரஷ்யாவுடன் ஒத்துபோகிறது,” என புதின் தெரிவித்திருந்தார்.இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் முறையே ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதுவரை இம்மாதிரியான பேச்சுவார்த்தையை இந்தியா அமெரிக்கா உட்பட வெகுசில நாடுகளிடம் மட்டுமே மேற்கொண்டுள்ளது.

ராணுவம் மற்றும் ஆற்றல் ஒத்துழைப்பு

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளும் கூட்டாக 7 லட்சத்து 50 ஆயிரம் ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட ஏகே – 203 துப்பாக்கிகளை உருவாக்க கையெழுத்திடும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அதேபோன்று 2018ஆம் ஆண்டு 5.43பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி S-400 Triumf வான் பாதுகாப்பு அமைப்பை ரஷ்யா இந்தியாவுக்கு வழங்குவது குறித்தும் இதில் பேசப்படும். ஆனால் இந்த S-400 அமைப்புகள் சீனாவிடம் ஏற்கனவே உள்ளது. இது முதன்முறையாக 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இந்தியாவின் சில தேசியவாத ஊடகங்களான சீ நியூஸ் இது குறித்து சீனா வருத்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதேபோன்று இந்தியா ரஷ்யாவுடனான ஆற்றல் கூட்டணியையும் விரிவாக்க திட்டமிட்டுள்ளது.

“ரஷ்யாவின் வளங்கள் மிகுந்த தொலைதூர கிழக்கு பகுதி குறித்து இந்தியா பல்வேறு திட்டங்களை வைத்துள்ளது. அதேபோன்று இந்திய பிரதமர் மோதி 2019ஆம் ஆண்டு வளாடிவோஸ்டோகிலிருந்து இந்தியாவின் கிழக்கு கொள்கை திட்டம் குறித்து அறிவிக்கும்போது, இந்த பகுதியில் 1 பில்லியன் மதிப்பிலான எல்லை கட்டுப்பாடு கோட்டு திட்டங்களை அறிவித்தார்,” என எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகை டிசம்பர் 2ஆம் தேதி தெரிவித்தது.

ஆப்கானிஸ்தான் விஷயத்தில்

இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தான் குறித்து ஆலோசிக்கப்படும். ஆனால் அது அத்தனை எளிதானது அல்ல.ஆப்கானிஸ்தான் குறித்த சந்திப்பிற்கு சீனா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவை அழைத்த ரஷ்யா இந்தியாவை அழைக்கவில்லை.இதற்கு காரணம் தாலிபன்கள் விஷயத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் ஒரே கொள்கையை கொண்டிருக்கவில்லை.

“ரஷ்யா ஆப்கான் விஷயத்தில் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படுகிறது.” என ரஷ்யாவின் அகாதமி ஆஃப் சயின்ஸஸை சேர்ந்த அலெக்சேய் சகோராவ் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவுடன் இந்தியாவின் உறவு வலுப்பெறும்போது ரஷ்யா பாகிஸ்தானுடனான உறவை வளர்த்தது.நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் குறித்து இந்தியா ஒருங்கிணைத்த கூட்டம் ஒன்றில் ரஷ்யா கலந்து கொண்டது. இதனை ரஷ்ய பத்திரிகையான நசாவிசிமயா கசேடா டெல்லியுடன் ரஷ்யா ஒத்துப் போவதை காட்டுகிறது என தெரிவித்திருந்தது.

அமெரிக்க – சீன உறவு

S-400 ஒப்பந்தத்தில் அமெரிக்கா தடை விதிக்கும் என்ற அச்சுறுத்தலையும் மீறி இந்தியா முன்னேறி செல்வது அமெரிக்காவுக்கு சங்கடமான ஒன்றுதான்.இருப்பினும் புதினின் இந்த பயணம் நேர்மறையான பலன்களையே தரும் என பல ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.”இந்தியா தற்போது அமெரிக்காவின் முகாமில் இருப்பது உறுதியாக தெரிந்தாலும், ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவும் வலுவானதாகவே உள்ளது. இந்தியாவின் கேந்திரிய மாற்றத்தின்போது ஏற்பட்ட மாறுபாடுகள் பெரிதாக எடுத்து கொள்ளப்படவில்லை,” என இந்தியாவின் முன்னாள் ராணுவ ஜெனரல் ஹர்ஷா ககர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று மாறும் புவி அரசியல் சூழல் ரஷ்யாவுக்கும் கடினமானதாகவே உள்ளது. ரஷ்யாவின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான ஆய்வுக் கழகத்தின் தலைவர் அந்தேரி, இந்தியா மற்றும் அமெரிக்காவின் உறவு விரிவடைவது குறித்து நாம் அச்சப்பட தேவையில்லை. அது ரஷ்யாவுக்கான நேரடியான அச்சுறுத்தல் இல்லை. அது சீனாவுக்கான சவாலாக உள்ளது.

Previous Story

வாகனம் கையளிப்பு

Next Story

அரபாத் அணிகள் சாதனை