இந்தியாவில்  இருந்து: 40000 ஆயிரம் டன் டீசல் வந்தது; அடுத்து அரிசி

டீசல் இல்லாமல் வரலாற்றில் இல்லாத அளவு மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கைக்கு தக்க தருணத்தில் 40 ஆயிரம் டன்கள் டீசலை  இந்தியா அனுப்பியுள்ளது. இந்த டீசல் தற்போது இலங்கை   வந்துள்ள நிலையில் உடனடியாக மாலையே விநியோகம் தொடங்கும் என அரசு தெரிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு  இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

இதுமட்டுமின்றி இதேபோல் 40 ஆயிரம் டன்கள் அரிசியையும் அனுப்ப  இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த மாதம் இரு நாடுகளும் 1 பில்லியன் டாலர்கள் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன். இதன் தொடர்ச்சியாக பொருளாக உதவி அனுப்பவும்  இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் இருமடங்காக உயர்ந்துள்ள பொருட்களின் விலையை  இலங்கை அரசு குறைக்க முடியும்.

இது குறித்து பட்டாபி அக்ரோ புட்ஸ் நிர்வாக இயக்குனர் பி.வி.கிருஷ்ணா ராவ் கூறுகையில் ‘‘அரிசியை உடனடியாக ஏற்றுமதி செய்வதற்கான கொள்கலன்களை நாங்கள் முதலில் ஏற்றி வருகிறோம், மேலும் சில நாட்களில் கப்பல் ஏற்றும் பணி தொடங்கும்’’ என்றார்.

இந்திய மற்றும்  இலங்கை அரசுகள் இடையே செய்து கொள்ளப்பட்ட கடன் வசதி ஒப்பந்தத்தின் கீழ்  இலங்கை அரசின் வர்த்தக நிறுவனத்துக்கு இந்தியா அரிசியை வழங்குகிறது.

Previous Story

போராட்டத்தில் தீ மூட்டியவர்: பரபரப்பை ஏற்படுத்திய படம்!

Next Story

சமூக ஊடக செயற்பாட்டாளர்  திசர அனுருத்த நேற்றிரவு  கடத்தல்!