இந்தியா:முஸ்லிம் சாம்ராஜ்ஜியத்திற்கு அடித்தளமிட்ட குத்புதீன் ஐபக் 

அடிமையாக இருந்தவர் அரசரானது எப்படி?

-மிர்ஸா ஏபி பெய்க்-

இது ஏறக்குறைய 825 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. சுல்தான் மொய்சுதீன் (ஷாஹாபுதீன்) கோரி, ஆப்கானிஸ்தானில் தனது தலைநகரம் கஜினியில் அரசவையை அலங்கரித்த காலம். அப்போது அவர் தனது ஆலோசகர்கள் கூறும் அறிவுரைகளுக்குச் செவி மடுப்பார்.

குத்புதீன் ஐபக்

இதேபோன்ற ஒரு பாரம்பரிய அரசவைக் கூட்டம் நடந்தது. அங்கு கூடியிருந்த அனைவரும் பல்வேறு நிகழ்ச்சிகள், நகைச்சுவை துணுக்குகள் மற்றும் வசனங்கள், கவிதைகள் மற்றும் கஜல்களால் சக்கரவர்த்தியை மகிழ்வித்தனர். பதிலுக்கு அவர்களுக்கு வெகுமதியும் மரியாதையும் வழங்கப்பட்டது.

அன்றிரவு சுல்தான் கோரி, தனது அரசவையினருக்கும் அடிமைகளுக்கும் (பணியாட்கள்) பரிசுகள், விலையுயர்ந்த ரத்தினக் கற்கள், தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றை அளித்தார். அவர்களில் ஒரு அடிமை( பணியாள்) அரசவைக்கு வெளியே வந்த பிறகு, துருக்கியர்கள், காவலர்கள், சுத்தம் செய்யும் வேலை செய்பவர்கள், அடிமைகள் மற்றும் குறைந்த அந்தஸ்துள்ள பிற தொழிலாளர்களுக்குத் தனது வெகுமதியை அளித்துவிட்டார்.

இந்தச் செய்தி சுல்தானின் காதுகளுக்கும் எட்டியது. தாராள மனப்பான்மையுள்ள இந்த மனிதரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை அவரது மனதில் எழுந்தது. இது அவரது அடிமை (குத்புதீன்) ஐபக் என்று சுல்தானுக்குச் சொல்லப்பட்டது.

கோரி பேரரசின் வரலாற்றாசிரியர் மின்ஹாஜ்-உல்-சிராஜ் (அபு உஸ்மான் மின்ஹாஜ்-உத்-தின் பின் சிராஜ்-உத்-தின்) தனது தப்காத்-இ-நாசிரி என்ற நூலிலும் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவர் ஐபக்கின் சகாப்தத்தைப் பார்த்தது மட்டுமல்லாமல், அவருக்குப் பிறகு சுல்தான் ஷம்ஷூதீன் இல்துமிஷ் மற்றும் கியாஸ்-உத்-தின் பல்பன் ஆகியோரின் காலத்தையும் கண்டவர்.

முகமது கோரி, ஐபக்கின் பெருந்தன்மையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு தனது நெருங்கிய நண்பர்களின் வட்டத்தில் ஐபக்கை சேர்த்துக் கொண்டார். மேலும் ஆட்சி மற்றும் அரசவையின் முக்கியப் பணிகளை அவருக்கு ஒதுக்கினார் என்றும் சிராஜ் எழுதுகிறார். ஐபக், பேரரசின் பெரிய தலைவராகவும் ஆனார். அவர் தனது திறமையால் பெரிதும் முன்னேறினார். அவர் அமீர் அக்கோர் ஆக்கப்பட்டார்.

அந்த நேரத்தில் அமீர் அக்கோர் என்பது அரச குதிரை லாயத்தின் பொறுப்பதிகாரி பதவியாகும். அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. என்சைக்ளோபீடியா ஆஃப் இஸ்லாம் (இரண்டாம் பதிப்பு) இதை ‘ஆயிரம் பேரின் தலைவர்’ என்று அழைக்கிறது. இவரின் கீழ் மூன்று தலைவர்கள் இருந்தனர். அவர்கள் ’40 பேரின் தலைவர்’என்று அழைக்கப்பட்டனர்.

குத்புதீன் ஐபக் இந்தியாவில் ஒரு பேரரசை நிறுவிய முஸ்லிம் ஆட்சியாளர் ஆவார். அடுத்த 600 ஆண்டுகளுக்கு அதாவது 1857 புரட்சி வரை, முஸ்லிம் ஆட்சியாளர்கள் பேரரசை ஆண்டனர்.

ஐபக் ஸ்லேவ் டைனாஸ்டி அதாவது அடிமை வம்ச பேரரசை நிறுவியவர் என்று கூறப்படுகிறது. ஆனால் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இடைக்கால வரலாற்றின் வரலாற்றாசிரியரான பேராசிரியர் நஜாஃப் ஹைதர், அவரையோ அல்லது அவருக்குப் பின் வந்த பேரரசர்களையோ, அடிமை மன்னர்கள் என்று அழைக்க முடியாது. அவர்களை துருக்கியர்கள் அல்லது மம்லுக்கள் என்று அழைக்கலாம் என்று கூறுகிறார்.

முஸ்லிம் ஆட்சியின் கீழ் அடிமைகள் என்ற கருத்து பைசண்டைன் அடிமைகளின் கருத்தாக்கத்திலிருந்து மிகவும் வேறுபட்டது. அதனால்தான் முஸ்லிம் காலத்தில் அடிமைகளின் நிலை சில சமயங்களில் வாரிசுகள் போல் இருந்தது என்று டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் வரலாற்று உதவி பேராசிரியர் ரஹ்மா ஜாவேத் ரஷீத் கூறுகிறார்.

எனவே நாம் வரலாற்றைப் பார்க்கும்போது, மஹ்மூத் மற்றும் அயாஸையும் காண்கிறோம். முகமது கஸ்னி தனது குழந்தைகளை விட இவர்களை அதிகமாக நேசித்தார். அல்லாமா இக்பாலின் புகழ்பெற்ற கவிதையான ‘ஷிக்வா’வில் இருந்து ஒரு கவிதை இஸ்லாத்தில் அடிமைகளின் நிலையைக் குறிக்கிறது.

மஹ்மூத் மற்றும் அயாஸ் தொழுகைக்காக ஒரே வரிசையில் நின்றனர்.

இங்கு அடிமைக்கும் அரசனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

குத்புதீன் ஐபக்

ரஸியா சுல்தானா, பாகுபலி அல்லது துருக்கிய நாடகத் தொடர் எர்துக்ருல் காஃஜி ஆகியவற்றைப் பார்த்தவர்களுக்கு அடிமைகளின் நிலை மற்றும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது எளிது.

‘ரஸியா சுல்தானா’வில் ரஸியாவின் காவலாளியான யாகுத் ஒரு அப்ஷி (அபிசீனிய) அடிமை. அவன் தியாகத்தால் ராணியின் இதயத்தில் இடம் பிடிக்கிறான். அதேநேரம் ‘பாகுபலி’யில் ‘கட்டப்பா’ தன் ‘அடிமைக் கடமையின்’ காரணமாக இளவரசரைக் கொல்லத் தயங்குவதில்லை.

எர்துக்ருல் காஃஜியில், பைசான்டியன் அடிமை மற்றும் தங்கச் சுரங்க நிபுணரான ஹாஜா டோரியனின் வாங்கல் மற்றும் விற்பனை, எர்த்துக்ருல்லின் அடிமைகள் விற்பனையை சுதந்திரத்துடன் செய்யும் சிம்கோவின் கையில் அவர் சிக்கிக்கொள்வது, பின்னர் எல்லா அடிமைகளையும் விடுவிப்பது ஆகியவையும் காட்டப்படுகிறது.

“முகமது கோரியிடம் ஒருவர், வரும் காலங்களில் உங்கள் வம்சம் விளங்கும்படியாக உங்களுக்கு ஆண் குழந்தை இல்லையே என்று கேட்டபோது, எனக்கு நிறைய ஆண் குழந்தைகள் உள்ளனர். என் பெயரை விளங்க வைக்க அவர்கள் போதும் என்று மன்னர் பதில் கூறினார்,” என்று நஜாஃப் ஹைதர் கூறுகிறார்.

தனது சிறப்பு அடிமைகளான யில்டோஸ், ஐபக் மற்றும் கபாச்சாவை பற்றி அவர் குறிப்பிட்டதாக பேராசிரியர் நஜாஃப் ஹைதர் விளக்குகிறார்.

கோரி அவர்களுக்கு இடையே உறவை ஏற்படுத்தியதாகவும் யில்டோஸின் மகள்களில் ஒருவர் ஐபக்கை மணந்ததாகவும் ஒரு மகள் கபாச்சாவை மணந்ததாகவும் அதனால் அவர்கள் ஆழமான உறவைப் பேணவும், அவர்கள் ஒருவரையொருவர் எதிர்ப்பதற்குப் பதிலாக, உறவின் கீழ் இருந்ததாகவும் ரஹ்மா ஜாவேத் கூறுகிறார்.

ஐபக், குலாம் சுல்தானகத்தின் நிறுவனராக அல்ல, மாறாக இந்தியாவில் துருக்கிய அல்லது மம்லுக் சுல்தானகத்தை நிறுவியவராக நினைவுகூரப்பட வேண்டும் என்று இஸ்லாமிய ஆய்வுகளுக்கான ஆக்ஸ்போர்டு மையத்தின் தெற்காசிய இஸ்லாத்தின் பேராசிரியர் மொயின் அகமது நிஜாமி பிபிசியிடம் கூறினார்.

ஆரம்ப கால வாழ்க்கை

குத்புதீன் ஐபக் துருக்கியின் ஐபக் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது குழந்தைப் பருவத்தில் அவர் தனது குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டதாகவும், அடிமைச் சந்தையில் விற்க நேஷாபூர் கொண்டு வரப்பட்டதாகவும் மொயின் அகமது நிஜாமி கூறினார்.

கல்வியில் சிறந்தவரான காஜி ஃபக்ருதீன் அப்துல் அஜீஸ் கூஃபி என்பவர் அவரை விலைக்கு வாங்கித் தனது சொந்த மகனைப் போல நடத்தினார். அவருடைய கல்வி மற்றும் ராணுவப் பயிற்சியை நன்றாகக் கவனித்துக் கொண்டார்.

ஐபக்கின் புதிய பாதுகாவலர் காஜி ஃபக்ருதீன் அப்துல் அஜீஸ் வேறு யாருமல்ல, இமாம் அபு ஹனிஃபாவின் வழித்தோன்றல் என்றும் அவர் நேஷாபூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் ஆட்சியாளர் என்றும் புகழ்பெற்ற வரலாற்று புத்தகமான ‘தப்காத்-இ- நாசிரி’ இல் மின்ஹாஜ்-உல்-சிராஜ் எழுதுகிறார்.

“குத்புதீன், காஜி ஃபக்ருதீனுக்கு சேவை செய்வதோடு கூடவே அவரது மகன்களைப் போலவே, குர்ஆனைப் படித்தார். மேலும் குதிரை சவாரி மற்றும் வில்வித்தையிலும் பயிற்சி பெற்றார். எனவே அவர் சில நாட்களில் திறமையானவராகி பாராட்டப்பட்டார்,” என்று அவர் எழுதுகிறார்.

“ஃபக்ருதீனின் மரணத்திற்குப் பிறகு, அவரது மகன்கள் ஐபக்கை மீண்டும் ஒரு வணிகரிடம் விற்றதாகக் கூறப்படுகிறது. அவர் ஐபக்கை கஜினியின் சந்தைக்குக் கொண்டு வந்தார்.

சுல்தான் காஜி மொய்சுதீன் சாம் (சுல்தான் முகமது கோரி), அவரை அங்கிருந்து வாங்கினார்.”

“ஐபக் போற்றுதலுக்குரிய மற்றும் சிறப்பு வாய்ந்த குணங்களைக் கொண்டிருந்தாலும், அவரது பலவீனம் ஒன்றின் காரணமாக, அவர் ‘ஐபக் ஷால்’ அதாவது பலவீனமான விரல் கொண்டவர் என்று அழைக்கப்பட்டார். உண்மையில் அவரது ஒரு விரல் உடைந்திருந்தது,” என்று தப்காத்-இ-நாசிரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குத்புதீன் ஐபக்

துருக்கிய ஐபக் பழங்குடி மற்றும் அதன் பொருள்

குத்புதீன் துருக்கியின் ஐபக் பழங்குடியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரது தந்தை மற்றும் குலத்தைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. அவர் பிறந்த தேதி 1150 என்று வரலாற்று புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எதையும் உறுதியாகக் கூற முடியாது.

துருக்கிய மொழியில் ஐபக் என்றால் “சந்திரனின் இறைவன் அல்லது எஜமானர்” என்று பொருள். மேலும் இந்தப் பழங்குடி அதன் அழகு காரணமாக, இந்தப் பெயரைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. அதாவது, இந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே மிகவும் அழகாக இருந்தனர். ஆனால் குத்புதீன் அவ்வளவு அழகானவர் அல்ல என்று கூறப்படுகிறது.

இருப்பினும் பிரபல உருது கவிஞரான அசதுல்லா கான் காலிப், தனது பாரசீக கஜல் ஒன்றில், துருக்கியரான ஐபக், சந்திரனை விட அழகாக இருப்பதை உறுதி செய்துள்ளார்.

“நாங்கள் துருக்கியர்களின் ஐபக் பழங்குடியிலிருந்து வந்தவர்கள். எனவே நாங்கள் சந்திரனை விட பத்து மடங்கு அழகாக இருக்கிறோம்,” என்று அவர் கஜலில் கூறியுள்ளார்.

காலிபின் பாரசீக கவிதை எழுத்தில் ஐபக் பற்றிய குறிப்பு மற்றும் அதன் பொருள்.
காலிபின் பாரசீக கவிதை எழுத்தில் ஐபக் பற்றிய குறிப்பு மற்றும் அதன் பொருள்.

அதேபோல, தில்லியில் நிஜாமுதீன் அவுலியாவின் சீடரான, சிறந்த கவிஞரும் சிந்தனையாளருமான அமீர் குஸ்ரோவும் அவரைப் பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளார். இது ஐபக்கின் தனித்துவத்தைக் காட்டுகிறது.

ஐபக் என்பது வேறு பல அர்த்தங்களிலும் பயன்படுத்தப்படுகிறது என்று சிலர் நம்புகிறார்கள். அதில் ஒன்று அடிமை.

இது தவிர, ஐபக் என்பது அன்பான அல்லது லட்சியவாதியான அல்லது செய்தியைச் சுமக்கும் நபருக்கும் பயன்படுத்தப்படுகிறது. 13ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற சூஃபி கவிஞரான மௌலானா ஜலாலுதீன் ரூமி இந்த சொல்லை ஒரு தூதருக்கும் பயன்படுத்தினார். இதன் பொருள் விசுவாசமானவர் என்பதாகவும் உள்ளது.

“‘பு-அல்-ஹசனுக்கு நான் பதில் சொல்வதற்காக அந்தத் தூதரை அழைத்து வாருங்கள்,” என்று அவருடைய அந்தக் கவிதை குறிப்பிடுகிறது.

ஐபக் வேகமாக உயர்ந்தார். மேலும் தனது புத்திசாலித்தனம் மற்றும் திறமை காரணமாக அவர் விரைவில் மொய்சுதீனின் கவனத்தை ஈர்த்தார் என்று மொயின் அகமது நிஜாமி குறிப்பிடுகிறார்.

குத்புதீன் ஐபக்

கோரியின் இந்தியா மீதான படையெடுப்பு மற்றும் தராயன் போர்

ஐபக் ஏற்கனவே அமீர் அகோர் ஆக்கப்பட்டார். ஆனால் முகமது கோரி இந்தியாவை நோக்கி படைஎடுத்து வந்தபோது, ஐபக் தனது போர்த் திறமையை இரண்டாம் தராயன் போரில் காட்டினார். இது சுல்தான் கோரியின் வெற்றிக்கு வழிவகுத்தது. மேலும் ஐபக் இரண்டு முக்கியமான ராணுவ பதவிகளான ‘கஹாரம்’ மற்றும் ‘சமானா’ ஆகியவற்றின் தளபதியாக ஆக்கப்பட்டார்.

முகமது கோரி முதல் தராயன் போரில் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் இரண்டாவது போர் பல வழிகளில் முடிவைத் தருவதாக இருந்தது. இதில் ராஜபுத்திர மன்னன் பிருத்வி ராஜ் செளஹான் தோற்கடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதல் தோல்விக்குப் பிறகு ஒரு வருடம் கழித்து கோரி, ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆப்கானியர்கள், தாஜிக்குகள் மற்றும் துருக்கியர்களைக் கொண்ட ஒரு பெரிய படையுடன் முல்தான் மற்றும் லாகூர் வழியாக தராயன் பகுதியை வந்தடைந்தார் (தற்போது இது டெல்லியை ஒட்டியுள்ள ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தில் உள்ள தரோரி என்று அழைக்கப்படுகிறது).

அங்கு பிருத்வி ராஜின் மூன்று லட்சம் குதிரைப்படை மற்றும் மூவாயிரம் யானைகள் கொண்ட படை அவரைத் தடுத்தது. இரண்டு தரப்புக்கும் இடையே கடுமையான போர் மூண்டது.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பிரபல பேராசிரியர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களான முகமது ஹபீப் மற்றும் காலிக் அகமது நிஜாமி ஆகியோர் தங்கள் புத்தகமான ‘எ காம்ப்ரஹென்ஸிவ் ஹிஸ்டரி ஆஃப் இந்தியா’ (தொகுதி 5) இல், இந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளனர். ஏனெனில் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக மிகைப்படுத்துவது என்பது அந்தக் காலகட்டத்தின் வழக்கமாக இருந்தது.

இரண்டாம் தராயன் போரில் (1192), முகமது கோரி தனது படையை ஐந்து பிரிவுகளாகப் பிரித்து வெவ்வேறு நிலைகளில் நிறுத்தும் உத்தியைக் கடைப்பிடித்தார். அதே நேரத்தில் 12,000 பேர் கொண்ட படையை போரில் இறக்கினார். திட்டமிட்டபடி அவர்கள் பின்வாங்கத் தொடங்கினர்.

குத்புதீன் ஐபக் கல்லறை
குத்புதீன் ஐபக் கல்லறை

பிருத்விராஜின் படை தாங்கள் வெற்றி பெற்றதாக எண்ணி அனைவரையும் கொல்வதற்குத் துரத்தியது.

ஆனால் வெவ்வேறு தளபதிகளின் தலைமையில் நான்கு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த படைகள், பிருத்வி ராஜின் படையை எல்லா பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைத்தன, பின்வாங்கிய படையும் திரும்பிச் சென்று சண்டையிடத் தொடங்கியது. பிருத்வி ராஜ் செளஹான் யானையிலிருந்து இறங்கி குதிரையில் ஏறி போர்க்களத்தில் இருந்து பின்வாங்கினார் என்று கூறப்படுகிறது.

இந்தப் போர், துணைக் கண்டத்தில் ஐபக்கின் அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தைக் குறித்தது என்று மொயின் அஹ்மத் நிஜாமி கூறுகிறார். இறுதியாக அவர் மொய்சுதீன் கோரியின் மரணத்திற்குப் பிறகு 1206 இல் டெல்லியின் அரியணை ஏறினார்.

லாகூரில் முடிசூட்டு விழா

சுல்தான் மொய்சுதீன் முகமது கோரி திடீரென்று மரணமடைந்ததால் அவர் வாரிசாக யாரையும் நியமிக்க முடியாமல் போனது. எனவே அவரது வாழ்நாளின்போது எந்த உயர் பதவிகளில் அவருடைய அடிமைகள் இருந்தனரோ, அவர்கள் அந்த இடத்தின் ஆட்சியாளர்கள் ஆனார்கள். ஆனால் ஐபக் தனது புத்தி சாதுர்யம் மற்றும் அரசியல் உத்தி மூலம், உண்மையான வாரிசு பதவியைப் பெறுவதில் வெற்றி அடைந்தார்.

கோரியின் மரணத்திற்குப் பிறகு, அவரது மூன்று வாரிசுகளான டெல்லியின் ஆட்சியாளர் குத்புதீன் ஐபக், முல்தானின் ஆட்சியாளர் நசிருதீன் கபாச்சா மற்றும் கஜினியின் ஆட்சியாளரான தாஜுதீன் யில்தோஸ் ஆகியோருக்கு இடையே அதிகாரத்திற்கான சண்டை வெடித்தது. அவரது நான்காவது அடிமை பக்தியார் கில்ஜி அதிகாரத்திற்கான இந்தச் சண்டையில் ஈடுபடவில்லை என்றும் அவர் பிகார் மற்றும் வங்காளத்தை நோக்கிச் சென்று அங்கு தன்னை ஆட்சியாளராக அறிவித்துக் கொண்டார் என்றும் ரஹ்மா ஜாவேத் கூறுகிறார்.

ஐபக், மற்ற இருவரையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். 1206 ஜூன் 25 ஆம் தேதி லாகூர் கோட்டையில் அவருக்கு முடிசூட்டப்பட்டது. ஆனால் அவர் சுல்தான் என்ற பட்டத்தை ஏற்கவில்லை. அவரது பெயரில் எந்த நாணயத்தையும் வெளியிடவில்லை மற்றும் அவரது பெயரில் எந்த குத்பாவும் (மத பிரசங்கம்) ஓதப்படவில்லை.

குத்புதீன் ஐபக், போலோ விளையாடும் போது குதிரையில் இருந்து கீழே விழுந்து இறந்தார் என்று வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அவரது கல்லறை லாகூரில் உள்ள அனார்கலி பஜார் அருகே உள்ளது.
குத்புதீன் ஐபக், போலோ விளையாடும் போது குதிரையில் இருந்து கீழே விழுந்து இறந்தார் என்று வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அவரது கல்லறை, லாகூரில் உள்ள அனார்கலி பஜார் அருகே உள்ளது.

தான் அடிமையாக இருந்ததால் தனக்கு சுதந்திரம் கிடைக்காததால் தன்னை சுல்தானாக ஏற்றுக்கொள்வது அவருக்குக் கடினமாக இருந்தது என்று இது குறித்து மொயின் அகமது நிஜாமி கூறுகிறார்.

அவர் 1208 ஆம் ஆண்டில் கஜினிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து அவர் 40 நாட்களுக்குப் பிறகு திரும்பினார். இந்த நேரத்தில் கஜினியில் முகமது கோரியின் ஒரு வாரிசு, ஐபக்கின் சுதந்திரத்தை அறிவித்தார். பின்னர் ஐபக், 1208-09 ஆம் ஆண்டில் சுல்தான் என்ற பட்டத்தை ஏற்றுக் கொண்டார். இதற்குப் பிறகுதான் அவர் குத்புதீன் (மதத்தின் அச்சாணி) என்ற பெயரை வைத்துக்கொண்டார் என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.

முன்னதாக, ஐபக் தனது எஜமானர் முகமது கோரியின் விரிவாக்க உத்தியைப் பின்பற்றினார். இதன் போது அவர் 1193 இல் அஜ்மீரையும், பின்னர் சரஸ்வதி, சமானா, கஹ்ராம் மற்றும் ஹன்சி ஆகிய நான்கு இந்து ராஜ்யங்களையும் கைப்பற்றினார். பின்னர் சந்த்வார் போரில் கன்னௌஜ் ராஜா ஜெய்சந்தை தோற்கடித்து டெல்லியைக் கைப்பற்றினார். ஒரு வருடத்திற்குள், முகமது கோரியின் ஆட்சி ராஜஸ்தானிலிருந்து கங்கை-யமுனை சங்கமம் வரை விரிவடைந்தது.

ஐபக்கின் மேலும் பல வெற்றிகளைப் பற்றி மின்ஹாஜ்-உல்-சிராஜ் இவ்வாறு எழுதினார். “கஹ்ராமிலிருந்து, குத்புதீன் மீரட் நோக்கி அணிவகுத்துச் சென்று, ஹிஜ்ரி ஆண்டு 587 இல் அதைக் கைப்பற்றினார். மீரட்டை விட்டு வெளியேறிய பிறகு, ஹிஜ்ரி 588 இல் டெல்லியைக் கைப்பற்றினார். 590 இல், அவர் சுல்தானுக்கு மிகவும் நெருங்கியவராக இருந்தார். பனாரஸின் ராஜா ஜெய்சந்திடம் போரிடச்சென்றார். 591 இல், தங்கரை வென்றார். இஸ்லாமிய சுல்தானகம் கிழக்குப் பகுதியில் சீனாவின் எல்லையை அடைந்தது.”

குத்புதீன் ஐபக்

டெல்லியில் குதுப்மினார் கட்டினார்

மத்திய காலத்தின் மற்ற முஸ்லிம் ஆட்சியாளர்களைப் போலவே ஐபக்கும் கட்டடக்கலையை விரும்பினார். எனவே அவர் இந்தியாவில் கோரி ஆட்சியின் சாதனைகளை நினைவுகூரும் வகையில் 1199 ஆம் ஆண்டில் டெல்லியில் ஒரு மினாரை (கோபுரம்) கட்டத் தொடங்கினார். கஜினியில் இதே போன்ற மினார்கள் உள்ளன. கோர் மாகாணத்தில் ஹரி ஆற்றின் கரையில் ஜாம்-இ-மினார் முன்பே கட்டப்பட்டது.

அவர் குதுப் மினாருடன் கூடவே குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதிக்கு அடித்தளம் அமைத்தார். அஜ்மீரைக் கைப்பற்றிய பிறகு ஒரு மசூதியை கட்டினார். அது ‘டாய் தின் கா சோப்டா’ என்று அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மசூதி இது என்று கூறப்படுகிறது. இது இன்றுவரை உள்ளது. உண்மையில், இது அவசர அவசரமாக இரண்டரை நாட்களில் கட்டப்பட்டது. ஆனால் பின்னர் இது இன்றைய ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட்டில் வசித்த கட்டடக் கலைஞர் அபு பக்கரால் வடிவமைக்கப்பட்டது. இது இந்தியாவில் கட்டப்பட்ட இஸ்லாமிய கட்டடக்கலை பாணியின் முதல் மாதிரி என்று கூறப்படுகிறது.

இதேபோல், குத்புதீன் குதுப்மினாரையும் கட்டினார். இது ஷம்ஷூதீன் இல்துமிஷ் காலத்தில் அவருக்குப் பிறகு கட்டி முடிக்கப்பட்டது. செங்கற்களால் கட்டப்பட்ட, ஐந்து மாடிகளைக் கொண்ட உலகின் மிக உயரமான இந்த மினாரில், குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், ஐபக் குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதியைக் கட்டினார். அதன் எச்சங்கள் குதுப் மினார் அருகே இன்னும் காணப்படுகின்றன.

அனைத்து பாரசீக ஆதாரங்களிலும் இது ஜம்மா மசூதி என்று அழைக்கப்படுகிறது என்று வரலாற்றாசிரியர் ரஹ்மா ஜாவேத் பிபிசியிடம் தெரிவித்தார். இது கபத்-உல்-இஸ்லாம் அல்லது இஸ்லாத்தின் குவிமாடம் என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய மசூதி என்று அவர் கூறினார், ஆனால் சர் சையத் அகமது கான் தனது ‘ஆஷார்-உஸ்-சனதித்’ புத்தகத்தில் அதை குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி என்று குறிப்பிட்டுள்ளார்.

குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதியின் எச்சங்கள்.
குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதியின் எச்சங்கள்.

மங்கோலியர்கள் இஸ்லாமிய உலகை ஆக்கிரமித்தபோது, இந்தியாவின் முஸ்லிம் பேரரசு இதனால் பாதிக்கப்படவில்லை என்றும் உலகம் முழுவதிலுமிருந்து அறிஞர்கள் மற்றும் திறமைசாலிகள் இங்கு வந்ததாகவும் அதனால்தான் மின்ஹாஜ்-உல்-சிராஜ் டெல்லியை ‘ குவ்வத்-உல்-இஸ்லாம்’, அதாவது இஸ்லாத்தின் புகலிடம் என்று அழைத்தார் என்று சுட்டிக்காட்டுகிறார் ரஹ்மா ஜாவேத் ரஷீத்.

இந்த மசூதியில் இந்தோ-இஸ்லாமிய கட்டடக்கலை பாணி ஆதிக்கம் செலுத்துகிறது. அரபு எழுத்துகளை அறியாத, ஆனால் கல் செதுக்குவதில் திறமையான இந்திய கைவினைஞர்களால் இது கட்டப்பட்டது. சில சமணக் கோயில்களின் எச்சங்கள் இங்கு உள்ளன. இவை தூண்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன.அவற்றில் சிற்பங்களும் உள்ளன. ஆனால் அவற்றின் வடிவம் அழிக்கப்பட்டுவிட்டன. இந்த மசூதியும் ஷம்ஷூதீன் இல்துமிஷ் ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டது.

போலோ போன்ற செளகன் என்ற விளையாட்டு மற்றும் மரணம்

1208-09 இல் சுல்தான் ஆன பிறகு ஐபக் தனது பெரும்பாலான நேரத்தை லாகூரில் கழித்தார். மழைக்காலத்திற்குப் பிறகு, லேசான குளிர்காலம் வந்தபோது, அவர் தனது துணிச்சலான வீரர்கள் மற்றும் தளபதிகளுடன் போலோ போன்ற செளகன் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது குதிரையின் சேணம் உடைந்து அவர் தரையில் விழுந்தார்.

மின்ஹாஜ்- உல்-சிராஜ் இதைப் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார். “ஹிஜ்ரி 607இல் (கி.பி. 1210) போலோ விளையாடும் போது, அவர் குதிரையிலிருந்து விழுந்தார். குதிரை அவர் மீது விழுந்தது. சேணத்தின் உடைந்த கூர்பகுதி குத்புதீனின் மார்பைத் துளைத்தது. இதன் காரணமாக அவர் காலமானார்.”

குத்புதீன் லாகூரில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது கல்லறை லாகூரில் உள்ளது. அங்கு ஒவ்வோர் ஆண்டும் உர்ஸ் கொண்டாடப்படுகிறது.

குத்புதீன் ஐபக் போலோ விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென குதிரையில் இருந்து கீழே விழுந்து, குதிரை அவர் மீது விழுந்ததால் அவரது இறப்பு ஏற்பட்டது என்று வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
குத்புதீன் ஐபக் போலோ விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென குதிரையில் இருந்து கீழே விழுந்து, குதிரை அவர் மீது விழுந்ததால் அவரது இறப்பு ஏற்பட்டது என்று வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

லட்சங்களைக் கொடுப்பவர்

“அவரது சகாப்தத்தின் எல்லா ஆதாரங்களும் அவரது ராணுவ வலிமையைத் தவிர ஐபக்கின் விசுவாசம், தாராள மனப்பான்மை, தைரியம் மற்றும் நீதி போன்ற அவரது பண்புகளைப் பாராட்டியுள்ளன,” என்று மொயின் அகமது நிஜாமி கூறுகிறார். அவரது தாராள மனப்பான்மை அவருக்கு லாக் பக்ஷ் (லட்சங்களைக் கொடுப்பவர்) என்ற பெயரை அளித்தது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தக்காணத்தில் அவரது கொடைத்தன்மை மிகவும் புகழ் பெற்றதாக இருந்தது. புகழ்பெற்ற பிரயாணி ஃபரிஷ்தா, ‘தாராளமனப்பான்மை உள்ள அக்கால மக்கள் ஐபக் என்று அழைக்கப்பட்டனர்’ என்று கூறுகிறார்.

அவரது தாராள மனப்பான்மையால் பலன் அடையாதவர்கள் டெல்லியில் இல்லை என்று கூறப்பட்டது. அவர் குர்ஆனின் ஹாபிஸ் அதாவது அவர் குர்ஆனை மனப்பாடம் செய்தவர் என்று சொல்லப்பட்டது. குரானை ஓதுபவர் என்று அழைக்கப்படும் அளவுக்கு இனிமையான குரலில் அவர் குர்ஆனை வாசித்தார்.

ஐபக்கின் கொடைத்தன்மைக்கு யாருமே நிகரில்லை. அதனால்தான் ஐபக், கொடைக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறார். உண்மையில் வேறு எந்த ஆட்சியாளருக்கும் கிடைக்காத மரியாதை இது என்று மொயின் அகமது நிஜாமி கூறுகிறார். போர்கள் மற்றும் முற்றுகை அவரது வாழ்க்கையின் முக்கிய அம்சங்களாக இருந்தபோதிலும், வரலாற்றிலும் எதிர்கால சந்ததியினருக்கும் அவர் விட்டுச்சென்ற முத்திரை, அவரது நீதி மற்றும் கொடை குணம் ஆகும்.

Previous Story

USA சவூதி தூதரகத்திற்கு முன்னால் உள்ள வீதிக்கு ஜமால் கசோக்கியின் பெயர்

Next Story

கட்டாய ராணுவ சேவை உள்ள நாடுகள்!