இந்தி+தமிழ்-ஏ.ஆர்=சர்ச்சை!

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானை இந்தியில் பேசும்படி வடஇந்திய நெட்டிசன்கள் சிலர் நெருக்கடி கொடுத்த சம்பவம் பெரிய சர்ச்சையாகி உள்ளது.  ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் சர்வதேச அளவில் கவனம் பெற்ற இசையமைப்பாளராக இருந்தாலும் தமிழ் மீது தீராத காதல் கொண்டவர்.

தன்னுடைய தமிழன் என்ற அடையாளத்தை எங்கேயும் விட்டுக்கொடுக்காதவர். பல மேடைகளில் தமிழுக்காக இவர் குரல் கொடுத்து இருக்கிறார். முக்கியமாக தமிழர் பிரச்சனைகள் பலவற்றில் எந்த வித சமரசமும் செய்யாமல் ஏ.ஆர் ரகுமான் குரல் கொடுத்துள்ளார்.

அதிலும் வடஇந்திய விருது வழங்கும் விழாக்கள் பலவற்றில் ஏ.ஆர் ரகுமான் தமிழில் பேசி இருக்கிறார். தன்னிடம் வேண்டுமென்றே ஹிந்தியில் கிண்டலாக பேசும் நபர்களிடம் பதிலுக்கு தமிழில் பேசி பதிலடி கொடுத்துள்ளார்.

அதேபோல் இந்தி திணிப்பு எதிர்ப்பிற்கு எதிராக அவ்வப்போது ஏ.ஆர் ரகுமான் மறைமுக ஆதரவும் வழங்கியது உண்டு. எங்கே தமிழ் பற்றி பேசினால் தனக்கு வடஇந்தியாவில் சினிமா வாய்ப்புகள் பறிபோய்விடுமோ என்று கவலைப்படாமல் பல முறை வெளிப்படையாக ஏ.ஆர் ரகுமான் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் ஏ.ஆர் ரகுமான் பொங்கல் வாழ்த்து சொன்னதை வடஇந்தியர்கள் சிலர் சர்ச்சையாக்கி உள்ளனர். நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏ.ஆர் ரகுமான் தமிழர்களுக்கு வாழ்த்துதெரிவித்தார் .

தமிழில் நீண்ட வாழ்த்து எழுதி. பொங்கல் தினத்தை எல்லோரும் மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்று ஏ.ஆர் ரகுமான் குறிப்பிட்டு இருந்தார். இவர் தமிழில் போஸ்ட் போட்டதை வடஇந்தியர்கள் சிலர் விரும்பவில்லை. அவரின் கமெண்ட் பாக்சில் பலர் கோபமாக இதற்கு பதில் அளித்து வருகிறார்கள்.

அதில் பலர் இந்தியாவில் இருக்கும் எல்லோருக்கும் புரியும்படி போஸ்ட் செய்யுங்கள்.. நீங்கள் இருப்பது இந்துஸ்தானில். இது ஒன்றும் இலங்கை அல்ல. நீங்கள் இந்தியாவின் தாய் மொழியான இந்தியில்தான் பேச வேண்டும் என்று சில வடஇந்திய நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இன்னும் சில நெட்டிசன்கள். நீங்கள் தமிழில் பேசினால் புரியாது. இந்தியில்தான் ட்விட் செய்ய வேண்டும் என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.

தமிழர் திருநாள்

தமிழர் திருநாள் ஒன்றுக்கு.. தமிழில் வாழ்த்து சொல்வதை கூட பொறுத்துக்கொள்ளாமல் வடஇந்தியர்கள் சிலர் இப்படி ட்விட் செய்துள்ளது சர்ச்சையாகி உள்ளது. இதற்கு தமிழர்கள் பலர் கோபமாக பதில் அளித்துள்ளனர்.

இந்தி யாருக்கு தாய்மொழி. இந்தியாவிற்கு தாய்மொழி என்று யார் சொன்னது? அவர் தமிழர்.தமிழர் திருநாளுக்கு தமிழில் வாழ்த்து சொல்கிறார். இதில் என்ன தவறு இருக்க முடியும் என்று பதில் அளித்துள்ளனர்.

 

Previous Story

துபாய்:ஒரே ஓடு தளத்தில் 2 விமானங்கள் கடைசி நேர விபத்து தவிர்ப்பு

Next Story

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இலங்கை புலி வால் நிலை!