இது இரும்புப் பெண் சிபாயா ரசீடின் கதை

“மாணவர்களின் ஆளுமை என்பது
புத்தகக் கல்வியைப் படித்து
அதில் வருகின்ற பரீட்சைப்
பெறுபேருகள் மட்டுமல்ல.
அதற்கு அப்பால் இருக்கின்ற
செயல்பாடுகளில்தான் சிறந்த
ஆளுமையை உருவாக்க முடியும்.
அதற்கு நல்ல வழிகாட்டல்கள்
மாணவர்களுக்கு அவசியம்.
அதற்குத் தியாகமுள்ள ஆசான்கள்
சமூகத்துக்கு அவசியம் தேவை.”

“காற்றை சுவாசிக்க விடுங்கள்”

சிபாயா ரசீட்

இந்தக் கட்டுரையில் நாம் சொல்ல வருகின்ற செய்திகளை முடியுமான மட்டும் விரைவாக நமது மண்ணுக்கும் சமூகத்துக்கும் சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வமும் வெறியும் நமக்கு இருந்தாலும் எமக்கு அதனை அப்படிச் செய்ய முடியாமல் போனது. காரணம் தொழில் ரீதியில் புதன் வியாழன் வெள்ளி என்பன நமது நிகழ்ச்சி நிரலில் மிகவும் இருக்கமான நாட்கள். இதனை இன்னும் விளங்கும்படி சொல்வதாக இருந்தால் தேசிய ரீதியில் வெளிவரும் வாராந்த பத்திரிகைகளுக்கு வழக்கமாக நாம் கொடுக்கின்ற அரசியல் கட்டுரைகளை வழங்க வேண்டி இருப்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருந்தது. அதுதான் இந்தச் செய்தி தாமதமானமைக்கு அடிப்படைக் காரணம்.

இப்போது தலைப்புக்கு வருவோம். இது இரும்புப் பெண் சிபாயா ரசீட் கதையாக இருந்தாலும் அதற்கு ‘காற்றை சுவாசிக்க விடுங்கள்’ என்ற ஒரு உப தலைப்பையும் நாம் கொடுத்திருக்கின்றோம். அதன் மூலம் சமூகத்துக்கு சில செய்திகளைச் சொல்லவதுதான் எமது நோக்கம். அப்படி ஒரு தலைப்புக் கொடுக்க காரணம், இன்று பெரும்பாலும் மனித நடவடிக்கைகளினால் காற்று மாசடைந்து அதில் நச்சுக் கலந்திருப்பது அனைவரும் அறிவார்கள். ஆனால் இங்கு நாம் பேசுகின்ற விடயம் சமூகம் காற்றை சுவாசிக்க போடுகின்ற தடைகள் தொடர்பான விமர்சனங்களாக இருக்கப் போகின்றது. இந்தக் கதைக்கு நாம் தெரிவு செய்திருக்கின்ற பாத்திரம் துறையில் நிகழ்த்தி இருக்கும் சாதனைகள் இதுவரை இந்த மண்ணுக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் அநேகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் நாம் நம்புகின்றோம்.

இதற்கு முன்னரும் இதே பாணியிலான ஒரு கட்டுரையை நாம் எழுதி இருந்தோம். அந்த நமது செய்தி தேசிய சர்வதேச ஊடகங்களில்கூட மீள்பிரசுரம் செய்திருந்தது செய்தியைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கும். ‘எதிர் நீச்சல்காரி ஜூவைரியாவுக்கு சர்வதேச விருது’ என்பதுதான் அந்த ஆக்கம். இந்தக் கதையை நாம் 20.12.2020ல் சொல்லி இருந்தோம். நமது இணையத் தளத்துக்கு பிரேவேசிப்பவர்கள் அந்தச் செய்தியை இன்றும் பார்த்துக் கொள்ள முடியும். ஏறக்குறைய அப்படியான ஒரு கதைதான் இதுவும். இதன் அளவை நிறுவைகளில் ஏற்றம் இறக்கம் இருக்கலாம்.

கடந்த 12.07.2023 ம் திகதி நமது செய்திச் சேவையில் ஜாமியுல் அஸ்ஹரில் ஒரு வரலாற்றுப் பதிவு என்ற தலைப்பில் ஒரு செய்தியைச் சொல்லி இருந்தோம். அந்தச் செய்தியில் குருளைச் சாரணீயம் பற்றியும் சிபாயா ரசீட் ஆசிரியர் என்ற ஒரு நாமத்தையும் குறிப்பிட்டிருந்தோம். இதில் என்னதான் இருக்கின்றது? இது மனிதன் விண்ணில் போய் இறங்கிப் படைத்த சாதனையா இது என்று சிலர் கேட்கவும் இடமிருக்கின்றது. அவர்களின் கேள்வியிலும் ஒரு நியாயம் இருக்கலாம். என்பதனை நமக்கும் ஜீரணித்துக் கொள்ள முடியும். ஆனால் நமது சமூகத்தில் இப்படியான சாதனையாளர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள். இருக்க முடியும் என்பதால் நம்மைப் பொருத்து இது சாதனை என்பது நமது கருத்து.

நாடுகள் என்று வரும் போது அங்கு வரலாறுகள் என்றும் ஒன்றிருக்கும். ஆட்சியாளர்கள் பலர் அங்கு வந்து போய் இருப்பார்கள். ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் அந்நாடு நினைவில் வைத்திருப்பதில்லை. அவர்களில் ஒரு சிலர்தான் அங்கு வரலாற்று நாயகர்களாக இருப்பார்கள். அதே போன்று நிறுவனங்கள் என்று வருகின்ற போது அங்கு முகாமையாளர்கள் ஊழியர்களும் வந்து போய் இருப்பார்கள். இது நமது கல்லூரிகளுக்கும் சமூகத்துக்கும் கூடப் பொருந்தும். நமது ஊர்களில் இருக்கின்ற பாடசாலைகளை கண்முன்னே நினைத்துக் கொள்ளுங்கள். அவற்றில் சில நூற்றாண்டுகளைக் கூடக் கடந்து இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி அதிபர்  அசாட்  கான்

அதன் வரலாறுகள் என்ன சொல்கின்றன.? அது பற்றிப் பேசும் ஆராயும் போது அங்கு கடமையாற்றிய அதிபர்கள் என்ற ஒரு நீண்ட பட்டியலும் இருக்கும். அவர்களில் எத்தனை பேர் பற்றி வரலாறு இன்று பேசுகின்றது? அதே போன்று அங்கு கடமைக்கென்று பலநூறு அல்லது ஆயிரம் ஆசிரியர்களும் ஊழியர்களும் கூட வந்துபோய் இருப்பார்கள். அன்று கல்லூரியில் படித்த ஆசான்கள் பற்றி மாணவர்கள் நினைவுகளைக் கேட்டால் அதில் எத்தனை பேரை அவர்கள் இன்று தமது இதயங்களில் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள், என்ற பரிசோதனையை ஒவ்வொருவரும் செய்து பார்த்தால் அங்கும் ஒரு சிலர்தான் நமது மனதில் வந்து போவார்கள். நாம் மேற்சொன்ன இந்தப் பட்டியலில் ஆயிரக் கணக்கானவர்கள் இருந்தாலும் ஹீரோக்கள் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர்தான் இருப்பார்கள்-இருக்க முடியும். அவர்களில் சிலர் ஜோக்கர்களாகவும் பெரும்பாலானவர்கள் சம்பளத்துக்காக கடமைகளுக்கு வந்து விட்டுப் போனவர்களாகவும் இருப்பார்கள்.

ஹீரோவும் சீரோவும்

கட்டுரையாளின் தனிப்பட்ட கருத்துப்படி இப்படி வந்து போகின்ற எல்லோரையும் சமூகம் நினைவில் வைத்திருக்கத் தேவையுமில்லை. மறக்கப்பட வேண்டியவர்கள் மறக்கப்பட்டும் நினைவில் வைத்திருக்க வேண்டியவர்களை வரலாறு மறக்கவும் மாட்டாது. எனவேதான் ஹீரோக்கள் என்று சிலர்தான் சமூகத்தில் இருப்பார்கள். அது அவர்கள் சமூகத்தில் புரிகின்ற பணியைப் பொறுத்துத்தான் அந்த ஹீரோவையும் சீரோவையும் சமூகம் தீர்மானிக்கும்.

கதைக்கு வருவதற்கு முன்னர் நாம் ஒரு நீண்ட பீடிகையை முன்வைக்கின்றோம் என்பதும் நமக்கும் நன்றாகப் புரிகின்றது. ஆனால் அதற்கும் காரணங்கள்-நியாயங்கள் இருக்கின்றன. நாம் பேசுகின்ற செய்திகள் மாணவர்களின் கல்வி எதிர்காலம் தொடர்பாக இருப்பதால் இந்த விமர்சனங்களை சொல்லியாக வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.

நாட்டிலுள்ள ஒரு முன்னணி பேரின சமூக கல்லூரி அதிபர் சொன்ன கதை இது. “ஒரு சமூகத்தின் பெயரை உச்சரித்து நாங்கள் அந்த சமூகத்தை சேர்ந்தவர்ளை எமது பாடசாலைக்கு எடுப்பதில்லை. காரணம் அவர்கள் கடமைக்கு மட்டும் வருவார்கள் போவார்கள். கல்லூரியில் பயில்கின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னேற்கு அவர்கள் உதவ மாட்டார்கள். கடைசி மணியடிக்க அவர் நுழைவாயிலுக்கு வெளியே ஓடிவிடுவார்கள். காலம் நேரம் பார்க்காது எங்கள் பிள்ளைகளின் நலன்களில் அக்கரையுடன் செயல்படக்கூடியவர்கள் தான் எமது பாடசாலைகளுக்குத் தேவை. அவர்களால்தான் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” இது அவரது வாதமாக இருந்தது. நமது இந்தக் குறிப்புத் தொடர்பாக விமர்சிக்கவும் பேசவும் சிந்திக்கவும் சமூகத்துக்கு நாம் அழைப்பைக் கொடுக்கின்றோம்.

ஜாமியுல் அஸ்ஹர்

இப்போது கண்டி- உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி குருளைச் சாரணீயம் பற்றியும் சிபாயா ரசீட் ஆசிரியர் பற்றிய நமது கருவுக்கு வருவோம். சில தினங்களுக்கு முன்னர் நமக்கு இப்படியான ஒரு பதக்கம் அணிவிக்கும் வைபவம் கல்லூரியில் நடக்க இருப்பது பற்றி தெரிய வந்தது. நாமும் அவதானத்துடன் இருக்கின்றவர்கள் என்ற வகையில் அது பற்றிய ஒரு குறிப்பை செய்தியாகச் சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சிபாயா ரசீட் ஆசிரியர் அவர்களத் தொடர்பு கொண்ட போதுதான் திரைக்குப் பின்னால் பெரியதோர் கதை இதில் இருப்பது நமக்குத் தெரிய வந்தது. ஏற்கெனவே நாம் சொன்ன ஜூவைரியக் கதைக்கும் இதற்கும் ஒரு சமாந்திரம் இருக்கின்றது. சிபாயா ஆசிரியரின் உடல் ரீதியான உபாதைகள் மற்றும் தனிப்பட்ட விவகாரங்களுடன் சிந்திக்கும் போது இதில் கனதி அதிகம் என்றும் நமக்கு எண்ணத் தோன்றுகின்றது. அதனால்தான் இந்த கட்டுரையும் அதற்கான தேடல்களும். இதற்காக அவரிடம் சில கேள்விகளை நாம் முன்வைத்தோம். அவை பற்றி இப்போது பார்ப்போம்.

No photo description available.

தனிப்பட்ட காரணங்களினால் சிபாயா ஆசிரியர் அனுராதபுரத்துக்கு மாற்றலாகிச் செல்ல வேண்டி வந்தது. அப்படி ரம்பாவை மத்திய கல்லூரிக்குப் போன எனது செல்பாட்டை அவதானித்த அதிபர் ஜெயவர்தன சில நாட்களின் பின்னர் க.பொ.த. உயர்தரப் பிரிவுக்கு என்னைப் பொறுப்பாசியரியராக நியமித்தார். நான் ஒரு ஆங்கில ஆசிரியர். உயர் பிரிவில் எனக்கு இதுரை தொடர்கள் இல்லை. அதுவும் ஒரு சிங்கள மொழிப் பாடசாலை. என்னைவிட சீனியர்கள் இருக்கின்றார்களே என்று நான் சற்றுத் தயங்க அதனை நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று அதிபர் என்னைத் தட்டிக் கொடுத்தார். அங்கு நான் அன்னிய சமூகத்தில் என்னை நன்றாகச் செப்பனிட்டுக் கொள்ள முடிந்தது.

விபத்து!

அனுராதபுரத்திலிருந்து மீண்டும் கண்டிக்கு வந்த எனக்கு கட்டுகாஸ்தோட்டை சாஹிராவில் நியமனம் கிடைக்கின்றது. இந்த சாரணீயத்துக்குள் நீங்கள் எப்படி உள்ளீர்க்கப்பட்டீர்கள் எனக் கேட்க, இது ஒரு விபத்து என்று சொன்ன அவர் கதையை இப்படி நமக்குச் சொன்னார். வழக்கம் போல் ஒரு நாள் காலையில் நான் கடமைக்குச் சென்ற போது அதிபர் அசீஸ், டீச்சர் குருதெனிய ஆசிரிய பயிற்சி நிலையத்தில் ஒரு செமினார் இருக்கின்றது நீங்கள் போய் வருங்கள் என்று சொல்லிக் கடிதத்தை கையில் தந்தார். அதனைப் பார்க்காமலே பேகில் போட்டுக் கொண்டு அங்கு போக, ஏற்கெனவே செமினார் துவங்கி இருந்தது.

அத்தோடு அதற்கு வருகை தந்திருந்தவர்கள் வதிவிட செமினாருக்குத் தயாராகவும் வந்திருந்தார்கள். இருநாள் கருத்தரங்கு அது. முதல் நாள் கருதரங்கு முடிந்ததும் டவுனுக்கு போய் தங்குவதற்குத் தேவையான சில பொருட்களை வாங்கிக் கொண்டு என்னைத் தயார் படுத்திக் கொண்டேன். இருநாள் செமினார் முடிந்து திரும்பவும் கல்லூரிக்குப் போய் தன்னை இக்கட்டில் மாட்டி விட்டதற்காக அதிபருடன் சண்டையும் போட்டேன் என்றார். அதன் பின்னர் சாரணீயத்தில் எனக்கு ஒரு பிடிப்பும் ஏற்பட்டது. அதன் பின்னர் நான் கடமைபுரிந்த கல்லூரியில் 2003ல் சாரணீயத்தை ஆரம்பித்தேன். அங்கு 104 சாரணீயர்களை உருவாக்கி இருக்கின்றேன்.

Aerial View of Vidyartha College - Kandy on Vimeoகண்டி-வித்தியார்த்தக் கல்லூரி ஆசிரியர்

அதன் பின்னர் கண்டி-வித்தியார்த்தக் கல்லூரிக்கு 2011ல் இடமாற்றம் கிடைக்கின்றது. எனது செயல்பாடுகளை அங்குள்ள நிருவாக அறிந்து வைத்திருந்தது. சாரணீத்துக்கு ஒரு பொறுப்பாசியரியர் அப்போது அங்கு இருக்கவில்லை. ஒருவர் வரும் வரை எனக்குப் பொறுப்பாக இருக்கும் படி அதிபர் கேட்டார். அது ஒரு ஆண்கள் பாடசலை அங்கு 4000 மாணவர்கள் கல்வி பயில்கின்றார்கள். எப்படி சமாளிப்பது என்று அச்சம் ஏற்பட்டதா என்று நாம் கேட்க ‘எனக்குத்தான் அச்சம் பயப்படுமே தவிர நான் அச்சத்துக்குப் பயந்த ஆள்கிடையாது’ என்றார் அவர். அந்தப் பாடசாலைக்கு வந்த நான் ஓய்வு பெறும் வரை சாரணீயத்துக்குப் பொறுப்பாக இருந்தேன். ஒரு செல்வாக்கான ஆண்கள் கல்லூரில் பெண்களை பொறுப்பாக சாரணீயத்துக்கு நியமிப்பது கிடையாது.

வித்தியாரத்த அதிபர் மேஜர். எம்.ஆர்.பீ.மாயதுன்ன ஆசிரியரின் ஓய்வு வைபவத்தில் (08.02.2023) பேசும் போது இந்தக் கல்லூரிக்கு எத்தனையோ அதிபர்கள் ஆசிரியர்கள் வந்து போய் இருப்பார்கள். அவர்களை கல்லூரி காலத்தால் மறந்தாலும் இந்த நாட்டிலும் உலகம்பூராவிலும் இருக்கும் நமது மாணவர்கள் சிபாயா மெடம் அவர்களின் நாமத்தை மறக்க மாட்டார்கள். அவர் ஒரு வரலாற்று நாயகி. ஒவ்வெரு மாணவர் இதயங்களிலும் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார். அவர் நமது கல்லூரிக்கு ஒர் வரலாற்றுச் சின்னம். அவர் ஒரு இரும்புச் சீமாட்டி எனவும் அந்த நிகழ்வில் பேசி இருந்தார். பிர சமூகப் பாடசாலை ஒன்றில் இப்படிப் பாராட்டப்பட்ட முஸ்லிம் பெண்கள்  எத்தனைபேர்தான் நாட்டில் இருக்க முடியும்.?

(ஜனாதிபதி விருது பெற்ற சிஹான் மஹ்ரூப் தனது தாயார் சிபாயா ஆசிரியருடன்)

இப்படி அதிபர் பேச நீங்கள் அங்கு என்னதான் செய்தீர்கள் என்று நாம் கேட்க… நான் அங்கு போய் அந்தத் துறையை பொறுப்பேற்கும் வரை சாரணீயம் மட்டுமே அங்கு இருந்தது. அதன் பின்னர் எனது காலத்தில் ஆகாய சாரணீயத்தை உருவாக்கினேன். பின்னர் கடற்படை சாரணீயம் என்ற அனைத்தையும் எனது காலத்தில் அங்கு உருவாக்கினேன். இதற்கு முன்னர் மோற்சொன்ன பிரிவுகள் கொழும்பில் அதுவும் ஒரு சில பாடசாலைகளில் மட்டுமே இருந்தது. அத்தோடு 12 வருடங்களுக்குப் பின்னர் சாரணீயத்தில் மிகவும் உயர் விருதான ஜனாதிபதி விருது 2018 எனது காலத்தில் பாடசாலைக்குக் கிடைத்தது.

நெல்லிகல பிரதம தேரர்

இப்படியாக இந்த சாரணீயத்தை எடுத்துக் கொண்டு அவர் தனது உபாதைகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் ஓடித்திரிந்திருக்கின்றார். குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு வெளியிலும் காலத்தை இதற்காக செலவழித்திருக்கின்றார். இது பற்றிய தகவல்களை நாம் மேலும் திரட்டியபோது போது நமக்கு இப்படியும் ஒரு தகவல் கிடைத்தது. இப்போது அது பற்றிப் பார்ப்போம். ரம்மியமானதும் ஜனரஞ்சகமானதுமான நெல்லிகலை விகாரைபற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு சந்தர்ப்பத்தில் சாரணீய பணிக்காக சிபாயா அங்கு போக வேண்டி வந்தது.

அப்போது இவரது செயல்பாடுகளை அவதானித்த நெல்லிகல பிரதம தேரர் அதிர்ந்து போய், இப்படியான பெண்கள் முஸ்லிம் சமூகத்தில் இருப்பதை தான் முதல் முறையாக கண்பதாகக் கூறி இருக்கின்றார். அதன் பின்னர் புத்தர்களின் புனித தளமான தலதா மாளிகைக்கு ஒரு வைபத்திற்குப் போன நெல்லிகலத் தேரர் இந்த சிபாயா ரசீட் என்ற அசாதாரண இரும்புப் பெண்ணை சுட்டிக் கட்டி அங்கு ஏனைய தேரர்கள் மத்தியில் புகழ்ந்தும் பாராட்டியும் பேசி இருக்கின்றார். இந்த இடத்தில் நமக்கு முஸ்லிம் சமூகத்திடம் கேட்க சில கேள்வி வருகின்றது. இப்படியான ஆளுமை மிக்க எத்தனை பெண்கள் நமது சமூகத்தில் இருக்கின்றார்கள் என்பதுதான். அப்படியானவர்களை உருவாக்குவதில் சமூகத்தில் இருக்கின்ற பலயீனங்கள்தான் என்ன என்று சிந்திக்க வேண்டி இருக்கின்றது.

பேரினச் சமூகம் தம்மீது வைக்கின்ற குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் சில நியாயங்களும் இருக்கின்றது என்பதுற்கு நாம் முன்பு ஓரிடத்தில் சொன்ன கதையும் ஓர் உதாரணம் மட்டுமே. இதனை மாற்றி அமைக்க சமூகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? குறைந்தது இது பற்றி எப்போதாவது சமூகம் யோசித்து இருக்கின்றதா? எனவே அறிவியல் துறையிலும் சமூக செயல்பாடுகளிலும் பெண்களுக்கு காற்றை சுவாசிக்க இடம் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றோம். சமூக முரண்பாடுகளை களையவும் ஆயிரம் ஆயிரம் சிபாயாக்களை சமூகம் உருவாக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.

உங்களுக்கும் ஜாமியுல் அஸ்ஹருக்கும் நிருவாக ரீதியில் எந்த உறவுகளும் இல்லை. நீங்கள் எப்போதாவது இங்கு கடமையாற்றியதும் இல்லை. இப்போது ஓய்வு பெற்று நிம்மதியாக வீட்டில் இருக்க வேண்டிய நீங்கள் இந்தக் குருளைச் சாரணீயத்தை இங்கு கட்டியெழுப்ப எதற்காகத் ஓடித்தரிகின்றீர்கள் என்று கேட்டால். இது எனது ஊர். நமது மொழியில் ‘நமது மண்’ அத்தோடு நான் இந்தக் கல்லூரியில் ஐந்தாம் வகுப்புவரை பயின்றிருக்கின்றேன். தந்தை ஒரு பொலிஸ் அதிகாரி அதனால் அடிக்கடி குடும்பம் புலம் பெயர வேண்டி இருந்தது. இதற்கு மேல் அஸ்ஹரில் அவருக்குள்ள உரிமை, ஆர்வம் தொடர்பாக கேள்வி எழுப்ப எமக்கு உரிமை கிடையாது. இவரது கதையில் சொல்லப்படும் பல செய்திகளை ஆசிரியப் பணியில் இருப்போரும் ஏனையோரும் கூட சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

‘மாற்றங்களுக்கு பெற்றோர் தயார்

ஜாமியுல் அஸ்ஹரில் நடந்த வைபவம் பலராலும் பாராட்டப்படுகின்றது. அதன் வெற்றிக்கு உழைத்தவர் என்று யாரையெல்லாம் நினைவுபடுத்த விரும்புகின்றீர்கள் என்று கேட்க நிறையவே பெயர்களைச் சொல்ல வேண்டும் குறிப்பாக கல்லூரி அதிபர் அசாட்கான், கனிஸ்ட பிரிவு பொறுப்பாசிரியர் பாஹீரா ரமீஸ், பக்க துனையாக நின்ற நௌசாத் ஆசிரியர். அங்கிருந்த ஆசிரிய சமூகம், குருளை சாரணியத்துக்குப் பொறுப்பாக இருந்த ஆசிரியர்கள். குறிப்பாக இதற்காக பெற்றோர் தனக்குக் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாது அது உணர்வுபூர்வமானதாகவும் இருந்தது. நமது பெற்றோரின் செயல்பாடுகளும் ஒத்துழைப்பும் அவர்கள் மாற்றங்களுக்கு தயாரகவே இருக்கின்றார்கள் என்பதனைக் காட்டுகின்றது.

கடந்து வரும் பாதையில் எதிர்நோக்கிய சவால்கள் பற்றிக் கேட்டால் மனிதனுடைய செயல்பாடுகளில் வருகின்ற ஈகோ பிரச்சினைகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றது. அதனை எல்லாம் நான் கண்டு கொள்ள மாட்டேன். அது எனக்கொரு சவாலும் கிடையாது. தங்களுக்குப் பின்னர் இந்த குருளைச் சாரணீத்தை அஸ்ஹரிலும் அதற்கு வெளியிலும் முன்னெடுத்துச் செல்வது நிருவாகிகளும் பாடசாலை சமூகமும் கொடுக்கின்ற ஒத்துழைப்பைப் பொறுத்த விடயம் என்கின்றார் அவர்.

12.07.2023 ல் ஜாமியுல் அஸ்ஹரில் நடந்த வைபவம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் எனக் கேட்டால். தனக்கு மட்டில்லாத திருப்தி. இன்றும் கூட நிகழ்வுக்கு வந்து போனவர்களும் எனது துறைசார்ந்த அதிகாரிகளும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதற்காக ஒத்துழைத்த அனைத்துத் தரப்பினருக்கும் பெற்றோருக்கும் மீண்டும் தனது நன்றிகள் என்னறார் ஆசிரியை சிபாயா ரசீட்.

இந்தத்துறையில் உங்கள் வைபகம் என்ன என்று கேட்க:
மத்திய மாகாண குருளைச் சாரணீயத்துக்குப் பொறுப்பாக என்னை நியமித்திருக்கின்றார்கள்.

சாரணீயம் தொடர்பான சர்வதேச விவகாரங்களுக்கும் அபிவிருத்திகளுக்குமான பொறுப்பான தலைவியாகவும் என்னைவும் நியமனம் செய்திருக்கின்றார்கள்.

வெற்றியின் இரகசியம்

இந்தத் துறையில் உங்கள் வெற்றியின் இரகசியம் பற்றி என்ன சொல்ல நினைக்கின்றீர்கள்.

1.நம்பர் வன். எனது தாயும் தந்தையும். (தந்தை-ரசீட் பொலிஸ் அதிகாரி. தாய் சைதா-ஆசிரியர்.) அவர்கள் எங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதித்திருந்தார்கள். எம்மீது அவர்களுக்கு நம்பகத்தன்மை இருந்தது.

2.அடுத்து கம்பளை சாஹிரக் கல்லூரி. அப்போது இருந்த கல்வி அமைச்சர் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் அன்று சாஹிரா இருந்தது. அது எமக்கு நல்லதெரு ஆளுமைக்கான அடித்தளத்தைப் போட்டுக் கொடுத்திருந்தது.

3.அனுராதபுர ரம்பாவை மத்திய கல்லூரி அதிபர் ஜயவர்தன.

4.நான் கடைசியாக சேவையாற்றிய கண்டி வித்தியார்த்த கல்லூரியும் அதன் அதிபர்களும் குறிப்பாக மேஜர். எம்.ஆர்.பீ. மயாதுன்ன அடுத்து மேஜர். ரஞ்சித் ராஜபக்ஸ அவர் இப்போது கண்டி ரனபிம றோயல் கல்லூரி அதிபராக இருக்கின்றார்.

இன்னும் பலர் இருக்கின்றார்கள் என்றாலும் பட்டியல் நீண்டு போகும். அவர்களை மனதில் நினைத்துக் கொள்கின்றேன்.

ஜாமியுல் அஸ்ஹரில் முதல் முறையாக சாரணீயம் 1973ல் எம்.ஐ.ஜெமால்தீன் அதிபராக இருந்த காலத்தில் ஆரம்பமாகி இருக்கின்றது. அப்போது துறைக்கு பொறுப்பாக சிங்கள பாட ஆசிரியர் கண்டி-ஹாசீம் சேர் இருந்தரிருக்கின்றார்.

அப்போதய கல்வி அமைச்சர் டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத் கல்லூரின் வெள்ளி விழாவுக்கு வந்த போது எடுக்கப்பட்ட படம். இதில் கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜெமால்தீன் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஆதம்பிள்ளை ஜே.பி. தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஜீ. பெர்ணான்டோ. அகுரண டாக்டர் மஹ்ரூப். ஆகியோர் இருக்கின்றார்கள்.

-ஆசிரியர்
Previous Story

குர் ஆன் எரிக்கப்பு ஐ.நா. தீர்மானத்தில் இந்தியா என்ன செய்தது?

Next Story

தீர்க்கமான வரவு செலவு!