‘ஆஸ்திரேலியாவில் பாத்திரம் கழுவினோம்’ – பாகிஸ்தான் ஹாக்கி கேப்டன்

”ஆஸ்திரேலியாவில் தேசிய அணி வீரர்கள் சமையலறைகள், பாத்திரங்கள், துணிகள் மற்றும் கழிவறைகளை தாங்களே சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. உணவை நாங்களே சமைத்தோம் மற்றும் தெருக்களில் வசித்தோம்… பாத்திரங்களைக் கழுவி, சுத்தம் செய்த பிறகு வீரர்கள் போட்டிகளில் எப்படி செயல்படுவார்கள்?”

புரோ ஹாக்கி லீக்கில் ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து தோல்வியடைந்த பாகிஸ்தான் ஹாக்கி அணி புதன்கிழமை காலை நாடு திரும்பியது.

ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய பின்னர் லாகூர் விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் தேசிய ஹாக்கி அணியின் கேப்டன் இமாத் பட் இவ்வாறு கூறினார்.

ஆஸ்திரேலியாவில் நடந்த புரோ ஹாக்கி லீக்கில் அடுத்தடுத்து தோல்வியடைந்த பாகிஸ்தான் ஹாக்கி அணி புதன்கிழமை காலை நாடு திரும்பியது.

விமான நிலையத்தில் பேசிய கேப்டன் இமாத் பட், பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மேலும் தற்போதைய அணி நிர்வாகத்துடன் தன்னால் தொடர்ந்து பயணிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

மறுபுறம், ஹாக்கி அணி பயிற்சியாளர் நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக, ஆஸ்திரேலியாவிற்கு போட்டிக்குச் சென்ற பாகிஸ்தான் ஹாக்கி அணி வீரர்கள் சமைத்துக் கொண்டிருப்பது, பாத்திரங்களை சுத்தம் செய்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Pakistan national hockey team captain Ammad Shakeel Butt talking to the media at the Lahore airport on February 17, 2026. — Geo News/Screengrab

பல புகைப்படங்களில் அவர்கள் தங்கள் பைகளுடன் சாலையோரம் அமர்ந்திருப்பதையும் காண முடிகிறது. முறையற்ற நிர்வாகம் மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆஸ்திரேலியாவில் தங்குமிடம் மற்றும் உணவு விஷயத்தில் பாகிஸ்தான் அணி சிக்கல்களை எதிர்கொண்டது.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானதை அடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த பிரதமர் பாகிஸ்தான் ஷாபாஸ் ஷெரீப் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

ஹாக்கி அணி கேப்டன் என்ன சொன்னார்?

சமூக வலைதளங்களில் வெளியான தங்களின் அவலநிலையைக் காட்டும் படங்கள் மற்றும் வீடியோக்கள் உண்மைதான் என்று கேப்டன் இமாத் பட் கூறினார்..

”ஆஸ்திரேலியாவில் தேசிய அணி வீரர்கள் சமையலறை, பாத்திரங்கள், துணிகள் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாங்கள் எங்கள் உணவை நாங்களே சமைத்தோம் மற்றும் தெருக்களில் வசித்தோம்” என்றார் இமாத் பட்.

The image shows the Pakistan Hockey Team and Pakistan PM Shehbaz Sharif.

தொடர்ந்து பேசிய அவர், “இது குறித்து நான் பாகிஸ்தான் விளையாட்டு வாரியத்திடம் பேசியபோது, எங்கள் அணி ஆஸ்திரேலியாவிற்குப் புறப்படுவதற்கு முன்பே பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பிற்குத் தேவையான நிதியை வழங்கியதாக அவர்கள் கூறினர்.

ஆனால் நான் அணி நிர்வாகத்திடம் பேசியபோது, விளையாட்டு வாரியம் போதுமான மற்றும் முழுமையான நிதியை வழங்கவில்லை என்று அவர்கள் கூறினர்” என்றார்.

செவ்வாய்க்கிழமை பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப் இந்த தவறான நிர்வாகம் குறித்து கவனம் செலுத்தி, விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அணி நிர்வாகத்தை குற்றம் சாட்டிய இமாத் பட்,”நான் யாருக்கும் பயப்படவில்லை. அணி நிர்வாகம் வீரர்களை தனித்தனியாக சந்தித்து, ஒவ்வொரு வீரரிடமும் ‘நீங்கள் கேப்டன் இமாத் பட்டுடன் இருக்கிறீர்களா அல்லது பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்புடன் இருக்கிறீர்களா’ என்று கேட்டது” என்றார்.

பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்போ அல்லது விளையாட்டு வாரியமோ இதுவரை இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Pakistan hockey team

“ஆஸ்திரேலியா சென்ற பிறகு, வீரர்கள் ஓபரா ஸ்ட்ரீட்டில் 13 முதல் 14 மணி நேரம் வீடற்றவர்களைப் போல அலைந்தனர். நிர்வாகம் எந்த உதவியும் வழங்கவில்லை. ஹாக்கி அணி வீரர்கள் சாலையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவை அனைத்தும் உண்மை தான்”என்றார் இமாத் பட்.

மேலும், “ஐந்து நாட்களில் உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடங்க உள்ளது. இது பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்புக்கும் தேசிய அணிக்கும் முக்கியமான ஒன்றாகும். இப்போது எங்களிடம் மிகவும் குறைந்த நேரம் இருப்பதால், தற்போதைய அணி நிர்வாகத்துடன் நாம் தொடர முடியாது” என்றும் தெரிவித்தார்.

“தேசிய அணி வீரர்கள் ஏன் இப்படி நடத்தப்பட்டனர் என்பதை பாகிஸ்தான் பிரதமரும், பீல்ட் மார்ஷல் அசிம் முனீரும் விரைவில் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று இமாத் பட் கூறினார்.

செவ்வாய்க்கிழமை பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதுடன் தவறு செய்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

லாகூர் விமான நிலையத்தில் தேசிய அணி வந்தபோது அவர்களை வரவேற்க யாரும் இல்லை என்பதையும் , போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்பதையும் வெளிப்படுத்தும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

தலைமை பயிற்சியாளர் கூறியது என்ன?

பாகிஸ்தான் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் தாஹிர் ஜமான், ”நேற்று வரை அணி நிர்வாகம் பாராட்டப்பட்டு வந்தது. அணி தொடர்ந்து முன்னேற்றம் கண்டுகொண்டிருந்தது. ஆனால் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ள விஷயங்கள் குறித்து ஊடகங்களின் மூலம் மட்டுமே தகவல் பெற்றேன்” என்றார்.

நிர்வாகத்துடன் பணியாற்ற விரும்பவில்லை என்று கூறுவதற்கு திடீரென என்ன நடந்தது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பயிற்சியாளர்களான முகமது உஸ்மான் மற்றும் ஜீஷான் அஷ்ரப் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய தாஹிர் ஜமான், ”பிரச்னைகளைத் தீர்த்து விஷயங்களை சரியான திசையில் கொண்டு செல்ல, இதன் பின்னணியில் உள்ள சில மறைமுக நோக்கங்களை வெளிக்கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்.

“பாகிஸ்தான் ஹாக்கி முன்னேறிச் செல்கிறது. தோல்விகள் விளையாட்டின் ஒரு பகுதிதான். ஆனால் வீரர்கள் பெறும் சர்வதேச அனுபவத்திற்கு, குறிப்பாக சுய-பயிற்சி முறைக்கு ஈடு இணை ஏதுமில்லை” என்றார்.

“பணம் இல்லை, அணி திசைமாறிச் சென்றது, அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்… என்று கூறுவதெல்லாம் தவறான செய்திகள். அவர்கள் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்துகிறார்கள்” என்றார் தாஹிர் ஜமான்.

நிர்வாகத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட வீரர்கள் மீதான நடவடிக்கை குறித்து கேட்டபோது, சூழல் குறித்த விரிவான அறிக்கை பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து இனி அந்த கூட்டமைப்புதான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் தாஹிர் ஜமான் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் ஊடகங்களுடனான தொடர்புகள் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களுக்கும் முறையான நடத்தை விதிகள் தயார் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஹாக்கி அணியின் பயிற்சியாளர்
பாகிஸ்தான் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் தாஹிர் ஜமான்

‘இது பல ஆண்டு காலமாக நடந்து வருகிறது’

தேசிய ஹாக்கி அணி வீரர்கள் லாகூர் விமான நிலையத்திலிருந்து தங்களது சொந்த வாகனங்கள் மற்றும் டாக்சிகளில் வீட்டுக்குத் திரும்பும் வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகின்றன.

அட்னான் ஜாகிர் என்ற சமூக ஊடகப் பயனர் வீடியோக்களைப் பகிர்ந்து, “பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இதற்காக வருந்தி, பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று நான் நம்புகிறேன். இதுபோன்று பல ஆண்டுகாலமாக நடந்து வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

“அணியின் வெளிநாட்டுப் பயணத்தை ஏற்பாடு செய்ய பாகிஸ்தான் விளையாட்டு வாரியம் பெரும் தொகையை வழங்கியிருக்கும் போது, வீரர்கள் ஏன் அங்கு மோசமான நிலையில் வாழ்கிறார்கள்? அந்தப் பணம் எங்கே போனது?” என்று ஒரு சமூக ஊடகப் பயனர் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Previous Story

ලසන්ත ඝාතනයට යොදාගත් බව සැක අවියේ වීඩියෝව මෙන්න |

Next Story

කෝ වරෙව් බලන්න හෙට රාජපක්ශ කහකඩයෝ කොළඹ - නැගිට්ටොත් තොපිට ෆ්ලැට් වෙන්නම ගහන!වා